(துவாரகாயாம் ப்ரத்யாகதஸ்ய ஸ்ரீகிருஷ்ணஸ்ய பௌண்ட்ரகேண ஸஹ யுத்தம்)
Krishna returns to Dwaraka | Bhavishya-Parva-Chapter-75 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த விவாதம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நாள் தொடங்கியதும் தேவகியின் மகனான பகவான் ஜகந்நாதன், பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகை திரும்பத் தீர்மானித்தான்.(1) மன்னா {ஜனமேஜயா}, முதலில் அவன் அங்கு வசித்திருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு அதன் பிறகு கருடன் மீதேறி துவாரகைக்குப் புறப்பட்டான்.(2) மனிதர்களின் மன்னா, கிருஷ்ணன் துவாரகாபுரியை நெருங்கியபோது, அங்கே நடந்து கொண்டிருக்கும் போரினால் ஏற்படும் பெருங்கலவரத்தின் ஒலியைக் கேட்டான்.(3)
அதைக் கேட்ட கிருஷ்ணன், "இஃதென்ன கலவரம்? போர் ஏதும் நடக்கிறதா? என் அண்ணன் பலராமனின் குரலையும், சாத்யகியின் குரலையும் என்னால் கேட்க முடிகிறது.(4) பௌண்டரகன் துவாரகையைத் தாக்கியிருக்கக் கூடும். தீய மனம் கொண்ட அந்த மன்னனுடன் யாதவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். போர் நடப்பதே இந்தக் கலவரத்திற்கான காரணம் என்பது திண்ணம்" என்று நினைத்தான்.(5,6)
இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த ஹரி, தன் பாஞ்சஜன்ய சங்கை உரக்க முழக்கி விருஷ்ணி குல வீரர்களை நிறைவடையச் செய்தான்.(7) கேசவனின் சங்கு முழக்கம் வானத்தையும், பூமியையும் நிறைத்தது. ஆழ்நிலை ஒலி அதிர்வைக் கேட்ட யாதவர்களும், விருஷ்ணிகளும் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்: "கிருஷ்ணன் வந்திருக்கலாம். இவ்வொலி அவனுடைய பாஞ்சஜன்ய சங்கின் ஒலிதான்" {என்றனர்}. மன்னா {ஜனமேஜயா}, யாதவர்களும், விருஷ்ணிகளும் கிருஷ்ணன் வந்துவிட்டதை உணர்ந்து அச்சமற்றவர்களானார்கள். பிறகு அவர்கள் திடீரெனக் கருடனையும், தேவகியின் மகனான கிருஷ்ணனையும் கண்டனர். செய்தி பரவியதும் சூதர்களும், மாகதர்களும் அங்கே வந்தனர்.(8-11) நீக்கமற நிறைந்திருக்கும் அண்டத்தின் தலைவனும், ஈசுவரனும், தாமரைக் கண்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை நோக்கி விரைந்து சென்ற யாதவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(12)
யதுவின் மிகச்சிறந்த வழித்தோன்றலான கிருஷ்ணன், கருடனின் முதுகில் இருந்து இறங்கி, அவனிடம் {கருடனிடம்}, "நீ தேவலோகம் திரும்பலாம்" என்றான். அவன், கருடனை அனுப்பிவிட்டுத் தாருகனிடம், "என் தேரைக் கொண்டு வருவாயாக" என்றான். தாருகன், "ஆணை" என்று மறுமொழி கூறிவிட்டு ஒரே கணத்தில் கிருஷ்ணனின் முன்னிலையில் தேரைக் கொண்டு வந்து, "இதோ உன் தேர். இனி நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டான். தாருகன் இதைச்சொல்லி வணங்கிவிட்டு கைகளைக் கூப்பியபடியே அந்தத் தலைவனின் முன்னிலையில் நின்றான்.(13-15)
கருடன் சென்றதும் கிருஷ்ணன் தன் தேரில் ஏறி போர்க்களத்தை நோக்கிச் சென்றான்.(16) மன்னா, போர்க்களத்தை நெருங்கிய போது அந்தத் தலைவன் கிருஷ்ணன், தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கி, கூடியிருக்கும் போர் வீரர்களுக்குத் தன் வரவை அறிவித்தான்.(17)
போரில் அதியாவல் கொண்ட கிருஷ்ணன் எவ்வாறு போர்க்களத்திற்கு வந்தான் என்பதைக் கண்ட பௌண்டரகன், சாத்யகியுடனான போரில் இருந்து விலகி இவனை {கிருஷ்ணனை} எதிர்க்கத் திரும்பினான்.(18) மன்னா {ஜனமேஜயா}, பௌண்டரகன் புறப்படுவதைக் கண்ட சாத்யகி அவனைத் தடுக்க முயலும் வகையில், "மன்னா, போரை விட்டு விலகாதே. இது முறையான நெறியல்ல.(19) முதலில் நீ என்னை வீழ்த்த வேண்டும். அதன் பிறகே பிறருடன் போரிட நீ செல்ல முடியும். நீ ஒரு க்ஷத்திரியன். போருக்கான ஆவலுடன் நான் நீடிக்கும் வரையில் நீ என்னையே எதிர்க்க வேண்டும். இந்தப் போர்க்களத்தில் நான் உன் செருக்கை எவ்வாறு நொறுக்கப் போகிறேன் என்பதைப் பார்" என்றான். சினியின் பேரனான சாத்யகி இதைச் சொல்லிவிட்டு, பௌண்டரகனின் வழியை அடைத்துக் கொண்டு அவனது முன்னிலையில் நின்றான். அப்போதும் பௌண்டரகன் சாத்யகியைப் புறக்கணித்துவிட்டுக் கிருஷ்ணனை நோக்கியே சென்றான்.(20-22)
கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாத்யகி தன் கதாயுதத்தால் மீண்டும் பௌண்டரகனைத் தாக்கினான்.(23) பௌண்டரகனுடனான போரில் சாத்யகி தன் கதாயுதத்தைப் பெருந்திறனுடன் தரித்திருப்பதைக் கண்ட கிருஷ்ணன், பெரும் நிறைவடைந்தவனாக அவனைப் பெரிதும் புகழ்ந்தான்.(24) சிறிது நேரம் கடந்ததும் கிருஷ்ணன், சாத்யகியைப் போரில் இருந்து விலகச் செய்யும் வகையில், "அவன் விரும்பியதனைத்தையும் செய்யட்டும். விடுவாயாக" என்றான். வலிமைமிக்கச் சாத்யகி அப்போதுதான் போரில் இருந்து விலகினான்.(25)
அதன்பிறகு மன்னன் பௌண்டரகன், தலைவன் கிருஷ்ணனிடம், "யாதவா, இடையா, எங்கே சென்றிருந்தாய்?(26) கிருஷ்ணா, உன்னுடன் போரிட விரும்பியே நான் இங்கே வந்தேன். பெரும்படையைக் கொண்டிருக்கும் நானே கொண்டாடப்படும் உண்மையான வாசுதேவன். என் படையின் துணையுடன் உன்னைக் கொன்று இவ்வுலகில் சச்சரவுக்கிடமில்லாமல் வாசுதேவனாக இருப்பேன். கோவிந்தா, நீ சக்கரபாணியெனப் புகழ்பெற்றிருந்தாலும் அந்தச் சக்கரம் என் சக்கரத்தால் இப்போது அழிவடையப் போகிறது. மாதவா, "சக்கரத்தைக் கொண்டிருப்பதால் நான் வெல்லப்பட முடியாதவன்" என்ற உன் செருக்கை இனி நீ விடுவாயாக. இன்று க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் உன்னுடைய நன்மதிப்பை அழிப்பேன். ஜனார்த்தனா, உண்மையான சாரங்கபாணியாக என்னை அறிவாயாக. நீயோ ஒரு போலி. சங்கு, சக்கரக் கதாதாரியாக என்னை அறிந்து உன் மாயச் செருக்கைக் கைவிடுவாயாக.(27-31)
உலகின் கல்விமான்களும், செல்வந்தர்கள் அனைவரும் என்னையே சங்கு, சக்கர, கதாதாரியெனக் குறிப்பிடுவார்கள். கடந்த காலத்தில் கம்சனின் மூத்த சேவகர்களையும், {பூதனை போன்ற} சில பெண்களையும், சில குழந்தைகளையும் {கம்சனால் கொல்லப்பட்ட தேவகியின் ஆறு மகன்களையும்}, சில மாடுகளையும் நீ கொன்றிருக்கிறாய். இதற்கே நீ உன் பலத்தில் செருக்கடைந்தாய். நீ என் எதிரில் நின்றால் நான் இன்று உன் செருக்கை அழிப்பேன்.(32,33) கோவிந்தா, நீ போரிட விரும்பினால் உன் ஆயுதங்களை எடுத்துக் கொள்வாயாக" என்றான். பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டு தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனின் முன்னிலையில் நின்றான்.(34)
கிருஷ்ணன், அந்தப் போலி வாசுதேவனின் சொற்களைக் கேட்டுச் சிரித்துவிட்டு, "மன்னா, விரும்பியதேதும் நீ பேசலாம். பசுக்களையும், குழந்தைகள், மற்றும் பெண்களையும் கொன்றவன் என என்னை நீ பழிக்கலாம்.(35,36) மன்னா, நீ உன் சக்கரத்தையும், கதாயுதத்தையும் போலச் சாரங்க வில்லையும் சுதந்திரமாகக் காட்டலாம். நீ விரும்பினால் உன்னை நீ வாசுதேவன் என்றும் அழைத்துக் கொள்ளலாம்.(37) நீ விரும்பினால் என் சங்கு, சக்கரம், கதாயுதத்தைத் தரிப்பவன் என்றும் உன்னை நீ குறிப்பிட்டுக் கொள்ளலாம். எனினும், நீ கேட்க விரும்பினால் நான் உனக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.(38)
பிரபுவே, இவ்வுலகில் நான் இருக்கும்போதே உன்னை என் பெயரால் அழைக்கும் க்ஷத்திரியர்கள் பலர் இருக்கின்றனர்.(39) என் சக்கரம் எல்லையற்ற சக்தியுடன் மஹாகோரமாக அசுரர்களை வதைக்கக் கூடியது. உன் சக்கரம் வடிவத்தில் என்னுடையதைப் போல இருந்தாலும் ஆற்றலில் வேறானது. உன் ஆயுதங்கள் பெயரால் மட்டுமே என்னுடையவை போன்றிருந்தாலும் பலத்தால் அவ்வாறில்லை.(40) மன்னா, உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் பாதுகாக்கும் இடையன் நான். நல்லோரைக் காத்து, அல்லோரைத் தண்டிப்பவனும் நான்.(41) மன்னர்களில் இழிந்தவனே, உன் பகைவரை வென்ற பிறகு நீ கொக்கரிக்கலாம். கையில் ஆயுதங்களுடன் நான் உன் முன்னிலையில் நிற்கும்போது என்னை வீழ்த்தாமலேயே உன்னால் எவ்வாறு கொக்கரிக்க முடிகிறது?(42) பௌண்டரகா, உனக்குச் சக்தி இருந்தால் என்னைக் கொல்வாயாக. அந்த வீரச் சாதனையைச் செய்த பிறகு உன் இதயம் நிறைவடையுமட்டும் தற்புகழ்ச்சி செய்து கொள்வாயாக. எனினும் இப்போது நான் கையில் வில், கதை, வாள், சக்கரம் ஆகியவற்றுடன் உன் முன்னிலையில் என் தேரில் அமர்ந்திருக்கிறேன்.(43) வேத நெறிகளை நோற்பவனே, தேரில் ஏறி போரிட ஆயத்தமாவாயாக" என்றான் {கிருஷ்ணன்}. இதைச் சொல்லிவிட்டுச் சிங்கத்தைப் போலக் கிருஷ்ணன் முழங்கினான்" என்றார் {வைசம்பாயனர்}.(44)
பவிஷ்ய பர்வம் பகுதி – 75ல் உள்ள சுலோகங்கள் : 44
மூலம் - Source |