(பௌண்ட்ரகவதம்)
Paundraka Killed | Bhavishya-Parva-Chapter-76 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த போர்; பௌண்டரகன் கொல்லப்பட்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பரம்பொருளான வாசுதேவன் தன் வில்லை எடுத்துக் கணைகளைப் பொருத்தி அவற்றைப் பௌண்டரகன் மீது ஏவத் தொடங்கினான்.(1) பௌண்டரகன் தன் பங்குக்குப் பத்துக் கணைகளை ஏவி கிருஷ்ணன் மீது எதிர்த் தாக்குதல் தொடுத்தான்.(2) பிறகு அந்தப் போலி வாசுதேவன் தாருகன் மீது இருபத்தைந்து கணைகளையும், குதிரைகள் மீது பத்தையும், யதுவின் சிறந்த வழித்தோன்றலான கிருஷ்ணன் மீது எழுபது கணைகளையும் தொடுத்தான்.(3)
கேசிசூதனனான {கேசியைக் கொன்றவனான} கேசவன், "பௌண்டரகன் பேராணவம் கொண்டவனாக இருக்கிறானே" என்று நினைத்து மெல்லச் சிரித்தான்.(4) கொண்டாடப்படும் சாரங்க வில்லைத் தரித்தவனான அந்தக் கேசவன், கணைகளாலான ஓடையைப் பொழிந்து பௌண்டரகனின் கொடியை அறுத்தான்.(5) பிறகு அவன் பௌண்டரகனுடைய தேரோட்டியின் தலையைக் கொய்து, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் கொன்றான். அவன் பௌண்டரகனின் மெய்க்காவலர்களைக் கொன்று தேரை நொறுக்கி, தன் சக்கரத்தால் தேரின் சக்கரத்தை எள்ளளவு துண்டுகளாக்கினான். இவ்வளவையும் செய்துவிட்டுத் தாக்குதலை நிறுத்திப் புன்னகைத்தான்.(6,7)
போலி வாசுதேவனான பௌண்டரகன், தன் வாளை எடுத்துக் கொண்டு நொறுங்கிய தேரில் இருந்து கீழே குதித்துத் தரையில் நின்றபடியே அதை {அந்த வாளைக்} கேசவன் மீது வீசினான்.(8) கேசவன், தன் தேரில் அமைதியாக அமர்ந்திருந்தபடியே அந்த வாளை நூறு துண்டுகளாக்கினான். வலிமைமிக்கப் பௌண்டரகன் ஒரு பரிகத்தை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையில் அதைக் கிருஷ்ணன் மீது வீசினான்.(9,10) மன்னா {ஜனமேஜயா}, ஜகந்நாதன் அலட்டிக் கொள்ளாமல் அந்தப் பரிகத்தைப் பாதியாக முறித்தான். பகைவரைக் கொல்பவனான மன்னன் பௌண்டரகன், அடுத்ததாக ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், முப்பது பாரங்கள்[1] எடை கொண்டதும், பிரகாசமிக்கதுமான ஓர் இரும்புச் சக்கரத்தை இருப்புக்கு அழைத்தான். பிறகு அவன் கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(11,12)
[1] 1 பாரம் என்பது 68 கிலோகிராமாகும் என்று விக்கிபீடியா சொல்கிறது. அதுவே 96 கிலோகிராம் என்று விஸ்டம்லிப் (wisdomlib.org) வலைத்தளம் சொல்கிறது. அஃதாவது அந்தச் சக்கரம் 2000 கிலோகிராம் முதல் 2900 கிலோகிராம் வரை எடை கொண்டதாகும்.
பௌண்டரகன், "கோவிந்தா, கர்விகளில் முதன்மையானவனே, உன் சக்கரத்தை அழிக்கக்கூடியதும், பீதியை ஏற்படுத்துவதுமான என் சக்கரத்தைப் பார். விருஷ்ணியின் வழித்தோன்றலே, இப்போது உன் செருக்கை நான் தகர்க்கப் போகிறேன். வெல்லப்பட முடியாத இந்தச் சக்கரத்தை உனக்காவே நான் வரவழைத்தேன். உனக்கு ஆற்றலிருந்தால் என் முயற்சியை வீணடிப்பாயாக" என்றான்.
பெரும்பலவானும், செல்வாக்குள்ள மன்னனுமான பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டுத் தன் சக்கரத்தை ஓராயிரம் முறை சுழற்றிக் கிருஷ்ணன் மீது ஏவினான். பலவான்களில் உயர்ந்தவனான கிருஷ்ணன், அந்தச் சக்கரம் காயத்தை ஏற்படுத்தாமல் தன்னைக் கடந்து செல்லும் வகையில், தன் தேரில் இருந்து விரைவாக இறங்கி சிங்கம் போலக் கர்ஜித்தான். முதலில் கிருஷ்ணன், அவனது துணிவையும், வீரத்தையும் கண்டு ஆச்சரியமடைந்து, "ஐயோ, பௌண்டரகனின் உள்ளச் சமநிலையும், பொறையும் {நீடித்து நிற்கும் திறனும்} எவ்வளவு அற்புதமானது" என்று நினைத்தான். இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த ஜகந்நாதன் தன் அற்புதத் தேரில் இருந்து குதித்தான். முயற்சி வீணடிக்கப்பட்ட பௌண்டரகன், பெரும் பாறை ஒன்றை எடுத்துக் கிருஷ்ணன் மீது வீசினான். எனினும் அவன், சிந்தனைக்கு அப்பாற்பட்ட தன்னுடைய அசாத்திய ஆற்றலைப் பயன்படுத்தி அந்தப் பாறையைப் பௌண்டரகன் மீதே திருப்பிவிட்டான்.(13-19) இவ்வாறே அந்த ஹரி நீண்ட நேரம் பௌண்டரகனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியில் அவன், அசுரர்களின் குருதியைப் பருகும் தன் சக்கரத்தை இருப்புக்கு அழைத்தான்.(20)
தங்கத்தலான அந்தச் சக்கரம், தைத்திய மாமிசத்தால் ஊட்டம் பெற்றதாகவும், அவர்களுடைய {தைத்தியர்களுடைய} மனைவிகளின் கர்ப்பங்களை அழிக்கக்கூடியதாகவும் இருந்தது. சில நேரங்களில் அந்தச் சக்கரம் ஆயிரம் ஆரங்களைக் கொண்டதாகவும், வேறு சில நேரங்களில் நூறாயிரம் {ஒரு லட்சம்} ஆரங்களைக் கொண்டதாகவும் தெரிந்தது. உயர்ந்ததும், செழுமையானதும், தேவர்களால் வழிபடப்படுவதுமான அந்தத் தெய்வீக ஆயுதம், தைத்தியர்களின் இதயங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.(21,22) பாவங்களில் இருந்து பக்தர்களைக் காப்பவனும், சாரங்கபாணியுமான விஷ்ணுவின் நித்தியப் பயன்பாட்டுக்குரிய அந்தச் சக்கரத்தால் அந்தக் கோவிந்தன் பௌண்டரகனைக் கொன்றான்.(23) இறைச்சியுண்ணும் அந்தச் சக்கரம், பௌண்டரகனின் உடலைத் துண்டித்துவிட்டுக் கிருஷ்ணனின் கைகளுக்குத் திரும்பியது.(24) அப்போது பௌண்டரகனின் உயிரற்ற உடல் போர்க்களத்தில் விழுந்தது. பிரதாபவானும், ஹரியுமான பகவான் விஷ்ணு, பொருள்முதல்வாதிகளுக்குப் புரியாத ஆழ்நிலை இயல்பைக் கொண்ட பௌண்டரகனை இவ்வாறு கொன்றுவிட்டு, யாதவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனாகச் சுதர்மம் என்று அறியப்படும் தன் சபா மண்டபத்திற்குத் திரும்பிச் சென்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(25)
பவிஷ்ய பர்வம் பகுதி – 76ல் உள்ள சுலோகங்கள் : 25
மூலம் - Source |