(பௌண்ட்ரகயுத்தம்)
Four heroes fight with clubs | Bhavishya-Parva-Chapter-74 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையிலும், பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையிலும் நடந்த கதாயுதப் போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த இரவில் ஊனுண்ணும் பல வகை உயிரினங்கள் போர்க்களத்திற்கு வந்து பயங்கரமாகச் சிரித்தபடியே கொல்லப்பட்ட போர்வீரர்களின் சடலங்களை உண்டன.(1) பச்சை மாமிசம் உண்பவர்களும், சடலங்களில் இருந்து குருதியைப் பருகுபவர்களுமான பிசாசங்களும், ராட்சசர்களும் அங்கிருந்தனர்.(2) மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, காக்கைகள், பருந்துகள், கழுகுகள், வல்லூறுகள், நரிகள் உள்ளிட்ட ஊனுண்ணும் பலவகைப் பறவைகளும், விலங்குகளும் கூட அந்தப் போர்க்களத்திற்கு வந்து, கொல்லப்பட்ட போர்வீரர்களையும், தேரோட்டிகளையும் உண்டு மகிழ்ந்தன. அந்தப் பெரும் விழாவில் அவை பிசாசங்களுடனும், ராட்சசர்களுடனும் சேர்ந்து மெய்மறந்து கூத்தாடின.
போர் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், ஏகலவ்யன் நினைவு மீண்டான். அவன் தன் படை வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு பெருஞ்சீற்றம் அடைந்து, தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பலராமனை நோக்கி ஓடினான்.(3-5) மன்னா, அந்த ஏகலவ்யன் தன் கதாயுதத்தைக் கொண்டு பலராமனின் தோள்களைத் தாக்கினான். அதற்குப் பதிலடியாக, கதாயுதம் தரித்திருந்தவனும், ஆற்றல் செருக்கில் மிதந்து கொண்டிருந்தவனுமான பலராமன், பாவம் நிறைந்த அந்த நிஷத மன்னனை {ஏகலவ்யனை} பலமாகத் தாக்கினான்.
அதன்பிறகு ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையில் பயங்கரமான கதாயுதப்போர் தொடங்கியது. அவர்கள் சீற்றத்துடன் மோதிக் கொண்ட போது, கதாயுதங்கள் மோதும் ஒலிகளால் வானம் நிறைந்திருந்தது.(6-8) அச்சத்தை ஏற்படுத்தும் அந்த ஒலிகள் அண்ட அழிவின் போது பொங்கும் கடலின் ஒலியை ஒத்திருந்தது. இதன் விளைவாகப் பாம்புகளின் மன்னன் அனந்த சேஷனும், திக்பாலர்களும் கலக்கமடைந்தனர்.(9) வானமெங்கும், நிலமெங்கும் அந்த ஆரவார ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.
அதே வேளையில் மன்னன் பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையில் தொடர்ந்து வந்த போரில் அவர்கள் ஒருவரையொருவர் பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தனர்.(10,11) அந்தப் போரிலும் பயங்கர ஒலிகள் எழுந்தன. ஒருவரை ஒருவர் கொல்வதற்கு முயற்சி செய்த அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் நால்வர் ஏற்படுத்திய ஒலிகளால் மொத்த அண்டமும் உண்மையில் கலக்கமடைந்தது.
அந்தப் பயங்கர இரவானது, அடிவானில் சூரியன் எழுந்து நட்சத்திரங்கள் மறைந்து படிப்படியாக முடிவுக்கு வந்தது. சூரிய பகவான் உதித்ததும் இரவின் இருள் அகன்று சந்திரனின் ஆதிக்கம் குறுகியது. பகல் தொடங்கியதும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த நான்கு வீரர்களின் போர், பழங்காலத்தின் தேவாசுரப் போரை நினைவுப்படுத்தும் வகையில் உக்கிரமடைந்தது" என்றார் {வைசம்பாயனர்}.(12-15)
பவிஷ்ய பர்வம் பகுதி – 74ல் உள்ள சுலோகங்கள் : 15
மூலம் - Source |