(ஸாத்யகிபௌண்ட்ரகயோர்யுத்தம்)
Battle between Satyaki and Paundraka | Bhavishya-Parva-Chapter-71 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: பௌண்டரகனை நிந்தித்த சாத்யகி; பௌண்டரகனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடைபெற்ற போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையான சாத்யகி, கிருஷ்ணனை நினைவுகூர்ந்து, கோபத்துடன் பின்வரும் சொற்களைச் சொன்னான்:(1) "பௌண்டரகா, மன்னர்களில் இழிந்தவனே, வஞ்சகனால் மட்டுமே நீ சொன்னது போல் வாசுதேவனை விமர்சிக்க முடியும். வாழ விரும்பும் எவன்தான் உன்னைப் போல அந்த ஜகத்பதியை நிந்திப்பான்?(2) நீ செய்வதைப் போலவே சொல்வதால் உன் மரணம் மிக அருகில் இருப்பதை உணர்கிறேன். உன்னைப் போன்ற மனிதனின் நாவை நூறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.(3) பௌண்டரகா, உன் தலையை உன் உடலில் இருந்து துண்டிப்பேன். உன் தலை உன் உடலில் இருக்கும் வரை வாசுதேவன் என்ற பெயரை நீ பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் இந்த உலகம் போலி வாசுதேவன் அற்றதாகும்.(4,5)
துராத்மாவே, நீக்கமற நிறைந்திருப்பவனும், அனைத்தின் பிறப்பிடமுமான ஜகந்நாதன் மட்டுமே வாசுதேவன் என்ற பெயருக்குத் தகுந்தவன். இதில் ஐயமேதுமில்லை.(6) மன்னர்களில் இழிந்தவனே, நான் இப்போது உன் தலையைக் கொய்யப் போகிறேன். அதுவரையோ, பகவானான கிருஷ்ணன் திரும்பி வரும் வரையோ போர்க்களத்தில் உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக. எஞ்சியிருக்கும் கொஞ்ச காலத்தைப் பயன்படுத்திக் கொள்வாயாக.(7,8) என்னுடைய வாள், கதாயுதம், வில், கணைகள் ஆகியவற்றைக் கொண்டு உன்னுடன் போரிடத் தயாராக இருக்கிறேன். நீ உன் ஆற்றலின் எல்லையைக் காட்டுவாயாக.(9) உண்மையில் எங்கள் நகரத்தில் உன் வரவு, போலி வாசுதேவனை அகற்றி வாழ்வை வெற்றிகரமானதாக்கும் வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறது.(10) மன்னர்களில் இழிந்தவனே, நான் உன்னை எள்ளளவு சிறு துண்டுகளாக்கி நாய்களுக்குப் பரிமாறப் போகிறேன்" என்றான் {சாத்யகி}.
சாத்யகி, வாசுதேவன் என்று அழைத்துக் கொள்ளும் பௌண்டரக மன்னனிடம் இதைச் சொல்லிவிட்டு, நாண்கயிற்றில் கணையொன்றைப் பொருத்தித் தன் காது வரை இழுத்து எதிரியை நோக்கி ஏவினான். அந்தக் கணை பௌண்டரகனைத் துளைத்து ஆழமான காயத்தை உண்டாக்கியதால் அவனது கண்களில் இருந்தும் மற்ற அங்கங்களிலிருந்தும் குருதி பெருகியது. விரைவாக மீண்டு, சீற்றமடைந்த பௌண்டரகன், சிங்கம் போல் கர்ஜனை செய்து கொண்டே ஒன்பது, அல்லது பத்து கணைகளை ஏவி சாத்யகியைக் காயப்படுத்தினான்.(11-14) அந்தப் போலி வாசுதேவன், சாத்யகியின் நெற்றியில் காயத்தையும், தன் தொண்டர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் உண்டாக்கி தன்னுடைய பயங்கரக் கணைமாரியைத் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தான். இதனால் பெரும் ஆளுமைகளில் சிறந்தவனும், விருஷ்ணி குல வீரர்களில் உறுதிமிக்கவனுமான அவன் {சாத்யகி}, தன் தேருக்குப் பின் சென்று மயக்கத்துடன் அமர்ந்தான்.(15-17)
அப்போது பௌண்டரக மன்னன் பத்துக் கணைகளை ஏவி சாத்யகியின் தேரோட்டியைக் காயப்படுத்தி, இருபத்தைந்து கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் காயப்படுத்தினான்.(18) பௌண்டரகனின் கடுந்தாக்குதலின் விளைவாக உண்மையில், அந்தத் தேரோட்டியும், குதிரைகளும், குருதியில் நனைந்து, மயக்கமடைந்தனர்.(19) மன்னா {ஜனமேஜயா}, தேரில் அமர்ந்திருந்த பௌண்டரகன் சிங்கம் போல் கர்ஜித்தான். அந்த ஆரவாரத்தைக் கேட்ட சாத்யகி மீண்டும் சுய நினைவை அடைந்தான்.(20) வலிமைமிக்கச் சாத்யகி, தன் தேரோட்டியும், குதிரைகளும் கடுங்காயம் அடைந்திருப்பதைக் கண்ட கோபத்தில் வெறி கொண்டவனானான்.(21)
அப்போது அவன் {சாத்யகி}, "இனி உன் ஆற்றலின் எல்லையைப் பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு, பௌண்டரகனின் மார்பைக் கணைகளால் துளைத்து அவனுக்குத் துன்பத்தை உண்டாக்கினான்.(22) மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கணைகளால் தைக்கப்பட்ட பௌண்டரகனின் மார்பில் இருந்து சூடான குருதி பாய்ந்ததால் அவனது உடல் திடீரெனத் துடித்தது. அவனுடைய மூச்சுப் பாம்பின் மூச்சு போல ஒலித்தது. சுய நினைவை இழந்த அவன், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தமால் தன் தேரில் அமர்ந்தான்.(23,24)
அப்போது சாத்யகி, பத்துக் கணைகளால் பௌண்டரகனின் தேரைத் துண்டுகளாக நொறுக்கினான். மேலும் அவன் தன் பல்லத்தைக் கொண்டு அவனது கொடிக்கம்பத்தையும் அறுத்தான்.(25) சாத்யகி, தொடர்ந்து கணைகளை ஏவி பௌண்டரகனின் குதிரைகளைக் காயப்படுத்தி அவனது தேரோட்டியையும் கொன்றான். பிறகே அவன், அந்தக் குதிரைகளைக் கொன்று பௌண்டரகனின் தேரை நொறுக்கினான்.(26,27) மன்னா, அவன் பத்துக் கணைகளால் பௌண்டரகனின் தேர்ச்சக்கரங்களைக் கடுகளவுள்ளவையாக வெட்டிவிட்டு உரக்கச் சிரித்து நின்றான்.(28)
விருஷ்ணி குலத்தின் வலிமைமிக்க வீரனான சாத்யகி, சிங்கத்தைப் போல முழங்கினான். க்ஷத்திரியர்கள் அனைவரும் பார்வையாளர்களாக நின்றிருந்தனர். பிறகு அவன் எழுபது கணைகளால் போலி வாசுதவேனின் முதுகையும், தலையையும், விலாப்புறங்களையும், மார்பையும் துளைத்தான். இவ்வாறு பௌண்டரகன் தன் மொத்த உடலும் கணைகளால் துளைக்கப்பட்டுப் போர்க்களத்தில் ஆதரவற்றவனாக நின்று கொண்டிருந்தான். ஓர் ஈகையாளன் வறுமையடைந்ததும் ஈகையேதும் செய்ய முடியாததைப் போலவே, தற்பெருமை செய்பவனும், கர்வம் கொண்டவனுமான பௌண்டரகன், மறுமொழியேதும் சொல்ல இயலாதவனாக அமைதியாக நின்றிருந்தான். சிறிது நேரம் கடந்ததும், பௌண்டரகன் அமைதி நிலைக்கு மீண்டு அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கோபத்துடன் சாத்யகியைத் துளைத்தான். சாத்யகி தன்னை நோக்கி விரைந்து வந்த போது அந்தப் போலி வாசுதேவன் அவனை ஏழு கணைகளால் துளைத்தான். இதற்குப் பதிலடியாகச் சாத்யகி ஏவிய சக்திமிக்க ஐந்து கணைகள் பௌண்டரகனின் வில்லை முறித்ததால் அவன் நிறைவுடன் உரத்த கர்ஜனை செய்தான்.(29-34)
பௌண்டரகன் தன் கதாயுதத்தை எடுத்து அதைச் சில முறை சுழற்றி சாத்யகியின் மார்பில் வீசினான்.(35) எனினும் அந்த யது குல வீரன் அந்தக் கதாயுதத்தைத் தன் இடது கையால் பிடித்துக் கொண்டான். இந்த அற்புதச் செயலைச் செய்த பிறகு அவன் பௌண்டரகனைத் தன் கணைகளால் மீண்டும் தாக்கினான்.(36) போலி வாசுதேவன் பத்து சக்தி ஆயுதங்களால் சாத்யகிக்குப் பதிலடி கொடுத்தான். இவ்வாறே போர் தொடர்ந்து கொண்டிருந்தது.(37) சாத்யகி இவ்வாறு சக்தி ஆயுதத்தால் தாக்குண்ட பிறகு, தன் வில்லை வைத்து விட்டு இன்னும் வலிமையான ஒன்றை எடுத்துக் கொண்டான். அதன் பிறகு அந்த முதன்மையான விருஷ்ணி குலப் போர்வீரன், பகைவரின் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(38)
பவிஷ்ய பர்வம் பகுதி – 71ல் உள்ள சுலோகங்கள் : 38
மூலம் - Source |