(ஸாத்யகிபௌண்ட்ரகயோ꞉ ஸம்வாதம்)
Satyaki | Bhavishya-Parva-Chapter-70 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: பௌண்டரகன் கட்டளை; யாதவர்களைக் காக்க வந்த சாத்யகி; பௌண்டரகன், சாத்யகி உரையாடல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, யாதவப் படை வீரர்கள், தங்கள் பகைவர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்டு, தங்கள் தீப்பந்தங்கள் அணைந்து போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினர். இஃது அந்தப் படையின் தலைவர்களுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. யாதவர்கள் தப்பிச் செல்வதைக் கண்ட பௌண்டரகன்: "அன்புக்குரிய கூட்டாளிகளே, விரைந்து சென்று நம் பகைவரின் நகரத்தைத் தரைமட்டமாக்குவீராக.(1-3) பூமியின் தலைவர்களே, கோடரிகள், கயிறுகள் என உங்கள் கைகளில் இருக்கும் எந்த ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு நகரத்தைச் சூழ்வீராக.(4) முதலில் நகரத்தின் சுற்றுச் சுவர் மதில்களை உடைத்து, மாளிகைகள் அனைத்தையும் நொறுக்கி, யாதவர்களின் இளம்பெண்கள் அனைவரையும், அவர்களின் பணிப்பெண்களையும் கடத்திச் செல்வீராக.(5) மதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தையும், நீங்கள் காணும் செல்வம் எதனையும் அபகரித்துச் செல்வீராக" என்று ஆணையிட்டான்.
இதற்கு மறுமொழியாக மன்னர்கள் அனைவரும், "அவ்வாறே செய்கிறோம்" என்று சொல்லிவிட்டு, தங்கள் கோடரிகளால் சுற்றுச்சுவர் மதில்களையும், மாளிகைகளையும் நொறுக்கத் தொடங்கினர்.(6,7) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் மதில்களின் மீது கற்பாறைகளை வீசியபோது பேராரவார ஒலி உண்டானது.(8) மன்னா, நகரத்தின் கிழக்குப்புறச் சுற்றுச் சுவர் கிட்டத்தட்ட முழுமையாகத் தகர்க்கப்பட்டது. மதில் நொறுங்கிவிழும் ஒலிகளைக் கேட்ட சாத்யகி பெருஞ்சீற்றம் அடைந்தான்.(9)
அவன் {சாத்யகி}, "யதுகுலத் தலைவன் கேசவன், நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை என் தோள்களில் சுமத்திவிட்டுச் சங்கரனைக் காண கைலாச மலைக்குச் சென்றிருக்கிறான். எனவே, நான் எவ்விலை கொடுத்தேனும் இப்போது நகரைப் பாதுகாக்க வேண்டும்" என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த சாத்யகி, தன் வில்லை எடுத்துக் கொண்டு, உறுதிமிக்கதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தாருகனின் மகனால் செலுத்தப்பட்டதுமான தேரில் ஏறினான்.(10-12)
வலிமைமிக்கவனான சாத்யகி, கிருஷ்ணன் சொன்னவற்றை நினைத்துப் பார்த்து காதுகுண்டலங்களாலும், கைவளைகளாலும் தன்னை அலங்கரித்து, கவசம் பூண்டு, விற்கள், கதாயுதங்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டான். பிறகு அவன், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற பயங்கரமானதும், சிறந்ததுமான தன் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். சாத்யகி தன் வில்லின் நாண்கயிற்றைச் சுண்டி நாணொலி எழுப்பியது பகைவரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது.(13,14)
சாத்யகி விரைவாகத் தன் தேரில் ஏறிக் கொண்டு, தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட போர்க்களத்திற்குச் சென்றான். போரிடும் ஆவல் கொண்டவனும், கதாயுதம், வில், அம்பறாதூணிகள் ஆகியவற்றைக் கொண்டவனுமான தலைவன் பலராமன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான். சாத்யகியின் படையைச் சேர்ந்த போர்வீரர்கள், போர்க்களத்தை நோக்கிச் செல்லும்போதே சிங்கங்களைப் போலக் கர்ஜித்தனர்.(15,16) ஆலோசகர்களில் முதன்மையானவரும், வலிமைமிக்கவருமான உத்தவர், மதங்கொண்ட யானையின் மீது ஏறி, போர்வியூகங்களைச் சிந்தித்தபடியே போர்க்களத்தை நோக்கிச் சென்றார். விருஷ்ணி குல வீரர்கள் பலரும் பகைவருடன் போரிடும் ஆவலுடன் புறப்பட்டுச் சென்றனர்.(17,18)
பலமிக்கவனான கிருதவர்மனும், முன்னணி வீரர்கள் பிறரும், கிருஷ்ணன் சொன்னதை நினைவுக்கூர்ந்து தேர்களிலும், யானைகளிலும் ஏறி, தீப்பந்தங்களை ஏந்தி சங்கங்களைப் போலக் கர்ஜித்தபடியே போரிடப் புறப்பட்டுச் சென்றனர். யாதவப் போர்வீரர்களில் முதன்மையானோரான இவர்கள் அனைவரும், பகைவரை எதிர்க்கும் பேராவலில் நகரின் கிழக்கு வாயிலில் ஒன்று கூடினர். மன்னா {ஜனமேஜயா}, படைவீரர்களின் தீப்பந்தங்களால் திசைகள் அனைத்திலும் ஒளியூட்டப்பட்டிருந்த கிழக்கு வாயிலில் படை திரண்ட பிறகு, கவசம் பூண்டவனும், பல்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு சென்றவனுமான சாத்யகி உறுதிமிக்கத் தன் வில்லை எடுத்து, நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, காற்றைப் போன்ற வேகம் கொண்ட தெய்வீகக் கணையொன்றை எதிரிகள் மீது ஏவினான்.(19-23)
இதன்விளைவாக ஒடுக்கப்பட்ட எதிரி வீரர்கள் வீழ்வதை உணர்ந்து தங்கள் தலைவனான பௌண்டரகனின் உறவிடம் தேடித் தப்பிச் சென்றனர்.(24) சாத்யகியின் கணை உண்டாக்கிய சூறாவளி, பகைவீரர்கள் தங்கள் தலைவனின் உதவியை நாடும் தேர்வு ஒன்றே இருக்கும் வகையில் அவர்களைச் சிதறடித்தது.(25) அதன்பிறகு, சினி குலத்தைச் சேர்ந்த சாத்யகி நகரின் கிழக்கு வாயிலில் நின்றபடியே மற்றொரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துப் பின்வருமாறு பேசினான்:(26) "நுண்ணறிவுமிக்கப் பௌண்டரகனின் தலைமையிலான மன்னர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நான் சாத்யகி. உங்கள் தலைவனுடன் போரிடும் ஆவலில் வில்லுடனும், கணைகளுடனும் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். அவனை நான் ஒரே முறை கண்டாலும், அவன் இறக்கும் வரையில் ஓயமாட்டேன். கேசவனின் பணியாளான நான் பௌண்டரகனைக் கொல்லவே இங்கே வந்திருக்கிறேன்.(27,28) கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தப் பாவியின் தலையைக் கொய்து, நாய்களுக்கும், நரிகளுக்கும் அதை உணவாய் அளிப்பேன்.(29) நாங்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நடு ராத்திரியில் இங்கே வருபவன் கள்வனல்லாமல் வேறு எவன்? பௌண்டரகன் ஒரு மன்னனல்ல அவன் கள்வன். அந்த இழிந்தவனுக்கு உண்மையில் துணிவிருந்தால் அவன் கள்வனைப் போலச் செயல்பட்டிருக்க மாட்டான்.(30,31) ஐயோ, மன்னனாக அழைக்கப்படும் கள்வன் போர்க்களத்தில் என் முகத்திற்கு நேரே ஏன் வரவில்லை? போரிடும் அறைகூவலை அவன் விடுத்திருந்தாலும் என் முன்னால் அவனைக் காணமுடியவில்லை" {என்றான் சாத்யகி}.(32)
சாத்யகி இதைச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான். பிறகு அவன், ஒரு தெய்வீகக் கணையை நாண்கயிற்றில் பொருத்தி அதைக் காதுவரை இழுத்தான்.(33) சாத்யகியின் இந்தச் சொற்களைக் கேட்டதும் பௌண்டரகன், "கோழையான அந்தக் கிருஷ்ணன் எங்கே? பெண்களையும், விலங்குகளையும் கொல்லும் அந்தக் கிருஷ்ணன் எங்கே? பெண்களின் பணியேற்கும் என் பகைவன் எங்கே? என் பெயரைக் களவு செய்த அவன் எங்கே ஒளிந்திருக்கிறான்?(34,35) என்னுடைய நல்ல நண்பனும், மஹாத்மாவுமான நரகனை அவன் கொன்றான். அந்தப் பாவியைப் போரில் கொன்ற பிறகே என் கோபம் தணிவடையும்.(36) பலமிக்க வீரா, என்னுடன் போரிடத் தகாதவனான நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லலாம். மாறாக நினைத்தால், முன்மாதிரியற்ற என் ஆற்றலைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்து கொள்ள ஒருக்கணம் காத்திருப்பாயாக.(37) வீழ்த்தப்பட முடியாத என் கணைகளால் நான் உன் சிரத்தை விரைவில் கொய்யப் போகிறேன். உன்னையும், உன் தொண்டர்கள் அனைவரையும் நான் போரில் கொன்ற பிறகு பூமி உன் குருதியைப் பருகுவாள்.(38) சாத்யகி கொல்லப்பட்டான் என்பதை அந்த இடையன் விரைவில் அறிவான். யது குலத்தில் முதன்மையானவனே, செருக்கில் மிதக்கும் அந்த இடையன் நீ கொல்லப்பட்டதும் தானாக வீழ்வான். மஹாத்மாவே, கைலாச மலைக்குப் புறப்படும் முன்னர் நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்த இடையன் உனக்கு அளித்தான் என்று கேள்விப்பட்டோம். சாத்யகி, உனக்குத் துணிவும், உன் ஆற்றலில் நம்பிக்கையும் இருந்தால் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்கு ஆயத்தமாவாயாக" {என்றான் பௌண்டரகன்}.
பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டுப் போருக்கு ஆயத்தமாகும் வகையில் தன் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டான்.(39-41)
பவிஷ்ய பர்வம் பகுதி – 70ல் உள்ள சுலோகங்கள் : 41
மூலம் - Source |