(ஸாத்யகிபௌண்ட்ரகயோர்யுத்தம்)
Satyaki and Paundraka engage in hand to hand combat | Bhavishya-Parva-Chapter-72 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: பௌண்டரகனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடைபெற்ற போர்; ஆச்சரியமடைந்த இருதரப்பு வீரர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா {ஜனமேஜயா}, அதன்பிறகு விருஷ்ணி குல நந்தனனான சாத்யகி கோபத்துடன் கதாயுதத்தை எடுத்து வீசி {பௌண்டரக} வாசுதேவனைப் பலமாகத் தாக்கினான்.(1) அதற்குப் பதிலடியாகப் போலி வாசுதேவனும் சாத்யகியைத் தன் கதாயுதத்தால் தாக்கினான். உறுதிமிக்கக் கதாயுதங்களைக் கொண்டிருந்த அந்த வீரர்கள் இருவரும் காட்டில் ஒன்றோடொன்று மோதும் செருக்குமிக்கச் சிங்கங்கள் இரண்டைப் போலத் தோன்றினர். சாத்யகி இடது புறத்தில் இருந்து போலி வாசுதேவனின் மார்பில் தாக்கினான். அதே வேளையில் வாசுதேவனும் வலதுபுறத்தில் இருந்து சாத்யகியைத் தாக்கியதால் இருவரும் தங்கள் பகைவரிடம் இருந்து பலமான அடிகளைப் பெற்றனர்.(2-4)
சாத்யகியின் வலுவான கதாயுதத்தால் தாக்கப்பட்ட வலிமைமிக்கப் பௌண்டரகன் முழங்காலிட்டு விழுந்தான். எனினும் அவன் எழுந்த பிறகு, தன் கதாயுதத்தால் சாத்யகியின் நெற்றியில் தாக்கினான். அதன்விளைவாகச் சாத்யகி கலக்கமடைந்தான். விரைவாக மீண்டெழுந்த சாத்யகி, தன் கதாயுதத்தால் பௌண்டர தேச மன்னனைத் தாக்கி பதிலடி கொடுத்தான்.(5,6)
மரணத் தூதன் போலத் தெரிந்த அந்தப் போலி வாசுதேவன், பெரும் பலம்வாய்ந்த போர்வீரனாகத் திகழ்ந்தான். அவன் சாத்யகியை சாம்பலாக எரித்துவிடுவதைப் போலப் பார்த்து தன் கதாயுதத்தால் அவனைத் தாக்கினான்.(7) சாத்யகி உயிரற்றவனைப் போல நனவிழந்து தரையில் விழும் வகையில் அந்த அடி பலமானதாக இருந்தது.(8) மன்னா, இருப்பினும் சாத்யகி ஒரு கணத்தில் குதித்தெழுந்து, பௌண்டரகன் வீசிய கதாயுதத்தைக் காற்றிலேயே பிடித்தான். இரும்பாலான அந்தப் பெரிய கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் முறித்து அதை வீசியெறிந்தான். வீரமிக்கச் சாத்யகி இந்த அற்புத சாதனையைச் செய்துவிட்டுச் சிங்கம் போல் முழங்கினான்.(9,10)
கதாயுதத்தை இழந்த போலி வாசுதேவன், இடது கையால் சாத்யகியைப் பிடித்துத் தன்னுடைய வலது கையால் அவனது மார்பில் மீண்டும் மீண்டும் குத்தினான்.(11,12) விருஷ்ணி குலத்தின் சிறந்த வீரன் {சாத்யகி}, தன் கதாயுதத்தைப் போர்க்களத்தில் வீசியெறிந்துவிட்டு போலி வாசுதேவனைப் பலமாக அறைந்தான்.(13) போலி வாசுதேவன் சாத்யகியை அறைந்து பதிலடி கொடுத்தான். இவ்வாறு இருவரும் கடுமையான துவந்த யுத்தம் செய்தனர்.(14) மன்னா, இரு பகைவர்களும் ஒருவரையொருவர் முட்டிகளிலும், முஷ்டிகளிலும், கைகளிலும், தலையிலும் தாக்கிக் கொண்டனர். காட்டில் இரு பனை மரங்கள் மோதும்போது உண்டாகும் உரத்த ஒலிக்கு ஒப்பாகவே இந்தப் போராளிகள் இருவரும் மோதும்போதும் உண்டானது. கொண்டாடப்பட்ட போர்வீரர்களான பௌண்டரகனும், சாத்யகியும் அந்த நள்ளிரவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு மற்போர் அரங்கில் விளையாடும் புகழ்பெற்ற மல்லர்களைப் போலப் போரிட்டனர்.(15-18)
அந்தப் போரைப் பார்த்துக் கொண்டிருந்த உக்கிரசேனன் தரப்பு, பௌண்டரகன் தரப்புப் படை வீரர்கள் அனைவரும் சாத்யகி, போலி வாசுதேவனால் கொல்லப்படுவானா, போலி வாசுதேவன் சாத்யகியால் கொல்லப்படுவானா என்று நினைத்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள், "இந்தப் பெரும் வீரர்கள் இருவரும் இன்று ஒருவரையொருவர் கொன்று தெய்வீக உலகங்களை அடையப் போகிறார்கள், அல்லது களைத்துப் போகும் வரை தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்" என்று நினைத்தனர்.(19-21)
பிறகு அவர்கள், "ஐயோ, இந்த வீரர்கள் இருவரின் பலமும், பொறுமையும் எவ்வளவு அற்புதமானவை? மொத்த உலகிலும் இவர்கள் இருவரும் நிச்சயம் பெரும் பலமிக்கவர்களே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கூட இவ்வளவு கோரமான யுத்தம் நடந்ததில்லை. இத்தகைய போர் இதற்கு முன்பு கேட்கப்பட்டதுமில்லை, காணப்பட்டதுமில்லை" என்றனர்.(22,23)
மொத்த வானமும் கரிய மேகங்களால் மறைக்கப்பட்ட அந்த நள்ளிரவில் இவ்வாறே இரு படைகளின் வீரர்களும் தாங்கள் கண்டு கொண்டிருந்த துவந்த யுத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.(24) அதன் பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும் தொடர்ந்து கொஞ்ச நேரம் போரிட்டுக் கொண்டிருந்தனர். சாத்யகி தன் முஷ்டியால் பௌண்டரகனை பத்து முறை தாக்கினான்.(25) பிறகு வலிமைமிக்கப் பௌண்டரகன் தன் முஷ்டியால் சாத்யகியை ஐந்து முறை தாக்கினான். அவர்கள் ஒருவரையொருவர் குத்திய ஒலிகள் மொத்த உலகையும் கலக்கமடையச் செய்தன. எங்கும் இந்த ஒலிகளைக் கேட்ட மக்கள் அதன் காரணத்தை அறிந்து ஆச்சரியமடைந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(26)
பவிஷ்ய பர்வம் பகுதி – 72ல் உள்ள சுலோகங்கள் : 26
மூலம் - Source |