(யாதவாநாம் யுத்தோத்யோகம்)
The might of Ekalavya | Bhavishya-Parva-Chapter-69 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: யாதவர்களுக்கும், பௌண்டரப் படைகளுக்கும் இடையில் நடந்த போர்; ஏகலவ்யனின் வலிமை; சாத்யகியை அறைகூவியழைத்த ஏகலவ்யன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதேவேளையில் {துவாரகையின்} நகரவாயிலில் முகாமிட்டிருக்கும் பெரும்படையைக் குறித்து யாதவர்கள் அறிந்தனர்.{1} பிரளய காலத்தில் பொங்கும் கடலைப் போலத் தோன்றும் பகைவனின் படையை அவர்கள் கண்டனர்.{2} அப்போது அந்த யாதவர்கள் விரைவாகத் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டும், தீப்பந்தங்களை ஏற்றிக் கொண்டும் எதிர்த்தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தனர். சாத்யகி, பலராமன், கிருதவர்மன், நிசடன்,{3} நுண்ணறிவுமிக்க உத்தவர், வலிமைமிக்க உக்கிரசேனன் ஆகியோரும், யாதவப் போர்வீரர்கள் பிறரும் கவசங்களைப் பூண்டு கொண்டு பிற ஆயத்தங்களை ஏற்பாடு செய்தனர்.(1-4) அவர்கள் அனைவரும் வலிமைமிக்கவர்களாகவும், சாதனைகளுடன் கூடிய போர்வீரர்களாகவும், இரவு நேரப்போர் தந்திரங்களை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் வாள்களையும், பிற ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பகைவருடன் போரிட ஆயத்தமாக இருந்தனர்.(5)
வலிமைமிக்க எண்ணற்ற யாதவர்கள், தங்கள் படையின் தேரோட்டிகள், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை வீரர்களால் ஆதரிக்கப்பட்டவர்களாகவும், முழுமையாக ஆயுதந்தரித்தவர்களாகவும் போரிட ஒன்றுகூடினர்.(6) மனிதர்களில் சிறந்தவர்களும், மஹாத்மாக்களுமான அந்த யாதவர்கள், தங்கள் தீப்பந்தங்களை எடுத்துக் கொண்டு நகரத்தை விட்டு விரைந்து சென்றனர்.(7) அவர்கள் நகரத்தைவிட்டு வெளிவரும்போதே ஒருவருக்கொருவர், "பௌண்டரகன் எங்கே?" என்று கேட்டுக் கொண்டனர். எண்ணற்ற தீப்பந்தங்களால் மொத்த நகரமும் பிரகாசமாக ஒளியூட்டப்பட்டது.(8) அஃது இரவாக இருந்தாலும் கிட்டத்தட்ட பகலைப் போலவே பிரகாசமாக இருந்தது. அதன் பிறகு விருஷ்ணி குலத்தவருக்கும், அவர்களின் பகைவருக்கும் இடையில் போர் உண்டானது.(9)
அந்தப் போர் மிகக் கடுமையானதாகவும், அனைவருக்கும் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. குதிரை வீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானை வீரர்கள், யானை வீரர்களுடனும் மோதினர், தேர்கள் தேர்களோடு மோதின. இவ்வாறே அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்தது. இரு படைகளும் கலந்து குழப்பமடைவதற்கு முன்னர் வாள்வீரர்கள் வாள்வீரர்களுடனும், கதாயுத வீரர்கள் பகைவரின் படையைச் சார்ந்த கதாயுத வீரர்களுடனும் போரிட்டனர். இரு தரப்பிலும் இருந்த போர்வீரர்களின் கூச்சல்களும், அறைகூவல்களும் பிரளய காலத்தில் பொங்கும் கடலுக்கு ஒப்பான ஒலியுடன் இருந்தது.(10-12)
பகைப்படைப் போர்வீரர்கள், தங்கள் ஆயுதங்களால் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியவாறே ஒருவரோடொருவர் போர் புரிந்தனர். திசைகள் எங்கும், "பெரும் வாளைத் தாங்கிய இவன் எவ்வாறு தரையில் விழுந்து கிடக்கிறான் பார்", "என்னுடைய வலிமைமிக்கக் கூரிய கணைகளைப் பார்", "கதாயுதத்தைச் சுழற்றும் இந்த வலிமைமிக்கப் போர்வீரனைப் பார்" என்ற ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன.(13,14) கவசம் தரித்தவர்களும், பாதுகாப்பைத் தரும் பிற கவசங்களையும் அணிந்து கொண்டு அங்கேயும் இங்கேயும் திரிபவர்களும், விற்கள், கணைகள், கதாயுதங்கள், ஈட்டிகள் ஆகியவற்றுடன் கூடியவர்களுமான வலிமைமிக்கப் போர்வீரர்களால் அந்தப் போர்க்களம் நிறைந்திருந்தது.(15) சூலங்களைச் சுழற்றிக் கொண்டு ஓடும் போர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் தென்பட்டனர். தந்தங்களையே ஆயுதங்களாகக் கொண்ட எண்ணற்ற யானைகள் பிளிறிக் கொண்டே அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தன.(16)
வேகமாகச் செல்லக்கூடிய போர்வீரர்கள் சிலர், காற்றைப் போல நகர்ந்து சென்றதால், ஒரே நேரத்தில் பல இடங்களில் போரிடுபவர்களைப் போலத் தோற்றமளித்தனர்.(17) படைவீரர்கள் பலர் தங்கள் பகைவரின் சூலங்களைத் தங்கள் சூலங்கள், கதாயுதங்கள், பரிகங்கள், தோமரங்கள் ஆகியவற்றால் முறித்தனர்.(18) மன்னா, இவ்வாறே அந்தப் போர் உக்கிரமாகத் தொடர்ந்தது. திடீரெனப் போர்க்களத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டது.(19) எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான பெரும் விலங்குகள் கதறிக் கொண்டும், அலறிக் கொண்டும் போர்க்களத்திற்குள் நுழைந்தன. சங்கு முழக்கங்களுடன் சேர்ந்த இவ்வொலிகள் பொறுத்துக் கொள்ளமுடியாதவையாகின.(20)
நடுராத்திரியில் அந்தப் பெரும்போருக்கான ஒரு முடிவு ஏற்படப்போவதாகத் தெரியவில்லை. விருஷ்ணி குலத்தவரும், அவர்களின் பகைவருக்கும் இடையில் மங்காத உற்சாகத்துடன் போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, போர்க்களத்தில் உண்டான ஒலிகள் செவிடாக்குபவையாக இருந்தன. கணக்கிலடங்கா சடலங்கள் தரையில் சிதறிக் கிடந்தன. உண்மையில், வலிமைமிக்கப் போர்வீரர்கள் பலர் தங்கள் பகைவருடன் சேர்ந்து, கேசம் கலைந்தவர்களாகத் தரையில் விழுந்து கிடந்தனர். படைவீரர்கள் பலர் தங்கள் கவசங்கள் சிதறடிக்கப்பட்டுத் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தனர். போர்வீரர்கள் பலர் இவ்வாறு யமராஜனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டபோது, மரணத் தேவனின் பணிச்சுமை அதிகரிப்பதாகத் தெரிந்தது.(21-25)
பெரும் போர்வீரனும், வேடர்களான நிஷாதர்களின் தலைவனுமான ஏகலவ்யன், தன் ஆயிரக்கணக்கான கணைகளால் யாதவர்களைத் துன்புறுத்தியபடியே போர்க்களத்தில் இரண்டாம் யமராஜனைப் போலத் தோற்றமளித்தான். அந்தப் போரில் அவன் தன் கணைமாரியால் விருஷ்ணி குல க்ஷத்திரியர்கள் எண்ணற்றோரைக் கொன்றான்.(26-28) ஏகலவ்யன், தன்னுடைய அர்த்தச்சந்திரக் கணைகள் இருபத்தைந்தால் நிசடனையும், பத்தால் சாரணனையும், ஐந்தால் கிருதவர்மனையும், தொண்ணூறால் உக்கிரசேனனையும், ஏழால் வசுதேவரையும், பத்தால் உத்தவரையும், ஐந்தால் அக்ரூரரையும் துளைத்தான்.(29,30) இவ்வாறே ஏகலவ்யன் ஒருவர் பின் ஒருவராகக் கிட்டத்தட்ட யாதவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் துளைத்தான்.
யாதவப் படையை விரட்டிய பிறகு ஏகலவ்யன் பின்வருமாறு அறைகூவல் செய்தான்:(31) "வலிமைமிக்க ஏகலவ்யன் நானே. கையில் கதாயுதத்துடன் கூடிய சாத்யகி இன்று என் கோபத்திலிருந்து எவ்வாறு தப்பப் போகிறான்?" {என்றான் ஏகலவ்யன்}.{32} இவ்வாறே யது குலத்தின் வீரப் போர்வீரர்கள் அனைவரையும் ஏகலவ்யன் அறைகூவியழைத்தான். அப்போது, சிங்கங்களே பீதியடையும் வகையில் அவன் கர்ஜனை செய்து கொண்டிருந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(32,33)
பவிஷ்ய பர்வம் பகுதி – 69ல் உள்ள சுலோகங்கள் : 33
மூலம் - Source |