(மஹாதேவேந கிருஷ்ணஸ்வரூபவர்ணநம்)
Krishna Swaroopa | Bhavishya-Parva-Chapter-64 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனின் ஸ்வரூபத்தை முனிவர்களிடம் விளக்கிச் சொன்ன சிவன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சிவன், அந்தத் தேவதேவேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர்களிடம் திரும்பி, "விப்ரர்களே, ஹரியைக் காண வந்திருக்கும் பக்தர்களான நீங்கள் அனைவரும் இவனைக் குறித்த இந்த உண்மையை அறிய வேண்டும்.(1) இந்தத் தேவனே பரம்பொருளாவான். இவனுக்கு இணையாகவோ, மேன்மையாகவோ வேறெவரும் இல்லை. இவனே நீங்கள் செய்யும் தவங்களின் இறுதி இலக்காவான். இந்த உண்மையை நீங்கள் அறிவீராக.(2) விப்ரர்களே, சிதறாத கவனத்துடன் இவனைத் தியானிப்பதையே வழக்கமான பயிற்சியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இவனை அறிந்து கொள்வதே உங்களுக்கு முழுமையை அளிக்கும், அதுவே உங்கள் பரம தனமாகவும் இருக்கும்.(3)
இவனை அறிந்து கொள்வதே உங்கள் பிறப்பின் இறுதி வெற்றியாகவும், உங்கள் தவங்களின் பலனுமாக இருக்கும். உண்மையில் இவனை அறிந்து கொள்வதே உங்கள் புண்ணியங்களின் கொள்ளிடமும், உங்கள் சநாதன தர்மமுமாகும்.(4) இவனே உங்களுக்கு மோட்சத்தை அருள்வான். இவனே எடுத்துக்காட்டாக இருந்து இதை உங்களுக்குக் கற்பிப்பான். இவனே புண்ணியத்தை அருள்வான், இவனே உங்கள் நற்செயல்களில் பலனாகவும் இருப்பான்.(5)
ஆன்ம அறிவியலைக் கற்றறிந்த அறிஞர்கள் இவனையே துதிக்கின்றனர். இவனே மூன்று வேதங்களின் இறுதி இலக்காவான். பிரம்மத்தை அறிந்த பிரம்மவாதிகள் இவனது தாமரைப் பாதங்களை அடைய இவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர்.(6) சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றி மாயா யோகத்தை நித்தம் பயிலும் கல்விமான்களும் இவனையே துதிக்கின்றனர். வேதங்களை நன்கறிந்த கல்விமான்கள், தன்னை அறிந்து கொண்ட ஆன்மாக்கள் அனைத்தின் இறுதி இலக்காக இவனையே ஏற்கின்றனர்.(7) இது சச்சரவில்லா உண்மை என்பதால், இக்காரியத்தை மேலும் கருத்தில் கொள்ள ஏதுமில்லை. எப்போதும் சத்வ குணத்துடன் இருக்கும் உங்களைப் போன்ற பக்தர்கள் ஹரியையே நித்தம் தியானிக்க வேண்டும்.(8)
நீக்கமற நிறைந்திருக்கும் நாராயணனுக்கு மேலானவன் எவனுமில்லை. விப்ரர்களே, நீங்கள் எப்போதும் ஓங்காரத்தைச் சொல்லி கேசவனைத் தியானிப்பீராக.(9) அவ்வாறு செய்வதால் நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதி இலக்கை அடைவீர்கள். இதில் ஐயமேதும் இல்லை. ஒரு பக்தன் ஹரியைத் தியானித்தால் இவன் எளிதில் நிறைவடைகிறான்.(10) விப்ரர்களே, விஷ்ணு உங்களிடம் நிறைவடைந்தால், உங்களைப் பொருள் பற்றில் இருந்து விடுவிப்பான். அச்யுதனின் தொடர்பை அடைய நீங்கள் விரும்பினால் இடையறாமல் இவனைத் தியானிப்பீராக.(11)
விஷ்ணுவை உங்கள் ஆன்ம குருவாகக் கருதுவீராக. இவன், பொருள் பற்றின் காரண வேரான உங்கள் அறியாமையை அகற்றுவான். எனவே, முக்குண அவதாரங்களெனப் பிரம்மன், விஷ்ணு, சிவனை ஏற்கும் நீங்கள் எப்போதும் ஹரியை நினைத்துத் துதிக்க வேண்டும்.(12) விப்ரர்களே, தவப்பயிற்சியால் சக்தியூட்டப்பட்ட நீங்கள் எப்போதும் கவனமாக உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் மனமும், புலன்களும் உங்களுக்குக் கட்டுப்படுவதன் மூலம் தூய்மையடைந்துவிட்டால் உங்களிடம் விஷ்ணு நிறைவடைவான்.(13)
விப்ரர்களே, நீங்கள் என்னை நினைத்தால், நான் கேசவனைக் குறித்த ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பேன். இவனை வழிபடுவதால், தானாகவே நானும் வழிபடப்பட்டவனாவேன்.(14) இவனை அடையும் உபாயங்களை விளக்கிச் சொன்ன என்போதனைகளில் நீங்கள் ஐயமேதும் கொள்ளாதீர். பாவம் நிறைந்த உணர்வுகள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பிரபுவே மாயையின் தலைவனாவான். எனவே நீங்கள் அனைவரும் இவனது தாமரைப் பாதங்களை அடைய முயற்சி செய்ய வேண்டும்.(15) விப்ரேந்திரர்களே, உங்கள் நற்புத்தி சுட்டும் வழியில் செயல்படுவீராக, அவ்வாறு செயல்படுவதால் நீங்கள் தூய்மையடைவீர்கள். அவ்வாறே தேவனும் உங்களிடம் நிறைவடைவான்" {என்றான் சிவன்}".(16)
வைசம்பாயனர் சொன்னார், "மன்னா {ஜனமேஜயா}, சங்கரன் பேசியதைக் கேட்ட அந்தப் புண்ணியச் சீலர்கள் அனைவரும், அவனது போதனைகளை ஏற்றுத் தங்கள் மனங்களில் இருந்த ஐயங்கள் அனைத்திலிருந்தும் தெளிவடைந்தனர்.(17)
அந்த விப்ரர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் மஹாதேவனிடம் {சிவனிடம்}, "ஹரனே, நீ சொன்னது அனைத்தும் உண்மையே. எங்கள் ஐயங்கள் மறைந்தன. உன் தீர்மானங்களை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.(18) தேவா, இந்தக் காரியத்திற்காகவே உன்னுடைய வசிப்பிடத்திற்கு இன்று நாங்கள் வந்தோம். உங்கள் இருவரையும் சந்தித்ததால், எங்கள் மாயைகள் விலகின.(19) தேவேசா, உன் போதனைகளைப் பின்பற்றுவதிலேயே எங்களுக்கான உண்மையான நன்மை இருக்கிறது. உன்னால் பரிந்துரைக்கப்பட்டபடியே நாங்கள் எப்போதும் ஹரியை நிறைவடையச்செய்ய முயற்சிப்போம்" என்றனர் {முனிவர்கள்}. பகவான் ருத்திரனிடம் இவ்வாறு சொன்ன அந்த முனிவர்கள் அனைவரும் கேசவனின் தாமரைப் பாதங்களில் விழுந்து வணங்கினர்" {என்றார் வைசம்பாயனர்}.(20)
பவிஷ்ய பர்வம் பகுதி – 64ல் உள்ள சுலோகங்கள் : 20
மூலம் - Source |