Saturday 18 December 2021

கிருஷ்ணனைத் துதித்த சிவன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 63

(ஸ்ரீ ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)

Shiva's Hymn to Vishnu | Bhavishya-Parva-Chapter-63 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனைத் துதித்த சிவன்...

siva-pracetas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "காளைக்கொடி கொண்டவனும், சூலபாணியும், சாக்ஷாத் உமாபதியுமான அந்த தேவன், கருடக்கொடி கொண்ட விஷ்ணுவின் கைகளைப் பற்றிக் கொண்டு, தேவர்கள் அனைவரும், பெரும் முனிவர்களும் கேட்கும் வகையில் பின்வருமாறு பேசினான்:(1,2) "தேவதேவேசா, சக்கரபாணியே, ஜனார்த்தனா, என்ன காரணத்திற்காக நீ இங்கே தவம் செய்து கொண்டிருக்கிறாய்? நான் செய்ய வேண்டியதென்ன? உனது பிரார்த்தனை என்ன?(3) நீயே நேரடியாக நித்தியனான விஷ்ணு எனும்போது அனைத்து வகைத் தவங்களின் இலக்காக நீயே இருக்கிறாய். ஜனார்த்தனா, ஜகத்பதியே, மகத்தான மகனை அடையும் விருப்பத்தில் நீ இந்தத் தவத்தைச் செய்கிறாய் என்றால் அத்தகைய மகனை நான் உனக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டேன் என்று அறிவாயாக. பகவானே அதன் காரணத்தை இப்போது கேட்பாயாக.(4,5)

பூர்வத்தில் கிருத யுகத்தில், ஏதோவொரு காரியத்திற்காக நான் பத்தாயிரம் வருடங்கள் மஹாகோர தவம் இருந்தேன்.(6) தேவேசா, அந்த நேரத்தில் என் மனைவி பவானி {பார்வதி}, தன் தந்தையின் ஆணையின் பேரில் தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றி வந்தாள்.(7) தேவா, என் தவத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், என் கவனத்தைச் சிதறடிக்கக் காமதேவனை அனுப்பினான். காமதேவனும், தன் நண்பன் வசந்தனுடன் என் எதிரில் வந்தான்.(8) ஹரியே, மலர்களைத் திரட்டியும், பிற பணிகளைச் செய்தும் பார்வதி எனக்குத் தொண்டாற்றி வரும்போது என் முன் வந்த காமதேவன், தன் கணையில் குறி பார்த்தான்.(9) தேவேசா, இதைக் கண்ட நான் என் நெற்றியில் இருந்த மூன்றாம் கண்ணில் நெருப்பு வெளிப்படும் அளவுக்குச் சீற்றமடைந்தேன்.(10)

விஷ்ணுவே, அவ்வாறே காமதேவன் சாம்பலாக எரிக்கப்பட்டான். அதன்பிறகுதான் காமன், இந்திரனின் ஆணையின் பேரில் அந்தக் காமன் என் முன் வந்தான் என்பதை அறிந்தேன்.(11) தேவேசா, ஜனார்த்தனா, பிறகு நான் காம தேவன் மேல் கருணை கொண்டேன். இதை அறிந்த பிரம்மன் அவனுக்குப் புதிய உடலை வழங்கும்படி என்னைத் தூண்டினான்.(12) ஜகத்பதியே, அந்தக் காமதேவன் உன் மகனாகப் பிறக்கும் ஏற்பாட்டை நான் செய்திருக்கிறேன். அவன் பிரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படுவான். இந்த மகனைப் பெற்றுக் கொண்ட பிறகு அவனே காம தேவன் என்பதை நீ அறிவாயாக" என்றான் {சிவன்}.

இதைச் சொன்னபிறகு மஹாதேவனும், உமாதேவியும் தங்கள் கரங்களைக் குவித்துக் கொண்டு, அங்கே கூடியிருந்தவர்களும், தலைவனின் மகிமைகளை அறிய ஆவலுடன் இருந்தவர்களுமான முனிவர்கள் அனைவரிடமும் கிருஷ்ணனின் ஆழமான குண இயல்புகளையும், அவனது உண்மையான அடையாளத்தையும் சொல்லத்தொடங்கினர். குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மஹாதேவன் கரங்குவிப்பதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், கின்னரர்களும், தேவதேவஷ்வரனும், விஷ்ணுவுமான ஸ்ரீ கிருஷ்ணனின் எதிரில் தங்கள் கைகளைக் கூப்பியபடியே நின்றனர்.(13-17)

அப்போது மஹேஷ்வரன், "சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த ஞானிகள், மஹாதத்வத்தின் மூலக்காரணமாக முற்றான உண்மையையும், இரண்டாம் காரணமாகப் பொருளின் இயல்பையும் {பிரகிருதியையும்} சொல்கின்றனர்.(18) நுட்பமான பொருளியல்பு பிரதானம் என்று அறியப்படுகிறது. அதுவே வெளிப்பட்டிருக்கும் அண்டத்திற்கான உடனடி காரணமாகும். பொருளியல்பு {பிரகிருதி} என்பது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதாகும். சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த அறிஞர்கள், நீயே பொருளியல்பின் மூலக்காரணன் என்பதை அறிவார்கள். விஷ்ணுவே, உன் சக்தியின் மாற்றமே பொருளியல்பாகும் {பிரகிருதியாகும்}, நீயே பொருள் சக்தியின் தேவனுமாவாய்.(19,20) மகத் தத்துவத்தில் இருந்து போலியான அகங்காரம் உண்டானது. ஜகந்நாதா, படைப்பின் தொடக்கமான பிரதானத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் மஹத் தத்துவத்தின் காரணன் நீயே ஆவாய்.(21)

பிரபுவே, தேவா, அகங்காரத்தில் இருந்து ஐந்து பூதங்களும் உண்டானதைப் போலவே, புலன்நுகர் பொருட்களும், {சுவை, ஒளி [காட்சி], ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய} ஐந்து தன்மாத்திரைகளும் உண்டாகின.(22) ஜகத்பதியே, ஐம்பூதங்களும் உன் சக்தியின் வெளிப்பாடே ஆகும். நீயே அவற்றைக் கட்டுப்படுத்துபவனாக இருக்கிறாய். பிருத்வி {நிலம்}, வாயு {காற்று}, ஆகாசம் {ஆகாயம்}, அப்பு {நீர்}, ஜ்யோதி {ஒளி / நெருப்பு} ஆகியவை பஞ்சபூதங்களாகும்.(23) கண்கள், மூக்கு, தோல், நாக்கு, காதுகள் ஆகியன ஐந்தும் அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஆகும். மனம், ஐம்புலன்களையும் அதனதனுக்குரிய பொருள்களுடன் தொடர்புகொள்ளத் தூண்டுவதால் ஆறாவது புலனாக அழைக்கப்படுகிறது.(24) ஜனார்த்தனா, வாக்கு முதலிய ஐந்து செயற்புலன்களும் {வாய், கை, கால், மலவாய், கருவாய் என்ற கர்மேந்திரியங்களும்} இருக்கின்றன. ஒவ்வொருவரின் இதயத்திலும் பரமாத்மா இருப்பதால், நீயே அந்தப் புலன்களை அதனதனுக்குரிய செயல்பாடுகளில் மன இயக்கத்தின் கீழ் ஈடுபடுத்துகிறாய். தேவேசா, ஒவ்வொரு புலனுக்கும் தகுந்த கடமைகளை நீயே பரிந்துரைக்கிறாய்.(25,26)

ரஜஸ் குணத்தில் ஈடுபட்டு நீ அண்டத்தைப் படைக்கிறாய். சத்வ குணத்தில் ஈடுபட்டு அதைப் பராமரிக்கிறாய், தமஸ் குணத்தில் ஈடுபடுவதன் மூலம் அண்ட வெளிப்பாட்டை அழிக்கிறாய். இவ்வாறே அனைத்தையும் கட்டுப்படுத்தும் உயர்ந்தவனாக, சத்வ, ரஜஸ், தமஸ் குணங்கள் என்ற பொருளியல்பின் {பிரகிருதியின்} முக்குணங்களின் மூலம் அண்ட வெளிப்பாட்டை உண்டாக்கி, பராமரித்து, அழிக்கிறாய். மாதவா, பண்பட்ட ஆன்மாக்களின் இதயங்களில் இருந்தபடியே அவர்களை நீ புலன்களில் இன்புற்றிருக்கச் செய்கிறாய். எனவே, நீயே அனைத்து வகை இன்பங்களுக்கும் காரணனாக இருக்கிறாய்.(27-30)

பிரபுவே, பிரம்மாவின் வடிவில் நீயே படைக்கிறாய், விஷ்ணுவின் வடிவில் நீயே பராமரிக்கிறாய், ருத்திரனின் வடிவில் நீயே அழிக்கிறாய். இவ்வாறே முக்குணங்களின் அவதாரங்களாக நீயே வெளிப்பட்டிருக்கிறாய்.(31) பூமி {நிலம்}, அப்பு {நீர்}, அனலம் {நெருப்பு}, வாயு {காற்று}, வானம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டும் உன்னிடமுள்ள தனித்தனி பொருள் சக்திகள் ஆகும்.(32) ஆயிரக்கணக்கான தலைகளும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கைகளும், கால்களும் கொண்ட அண்ட வடிவில் நீ வெளிப்படுகிறாய். இந்திரனின் தலைமையிலான தேவர்களின் வடிவங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வடிவங்களிலும் நீ வெளிப்படுகிறாய்.(33) ஏழு த்வீபங்களும் {கண்டங்களும்}, ஏழு கடல்களையும் கொண்ட உலகில் நீ நீக்கமற நிறைந்திருக்கிறாய். வெளிப்படாத வடிவில் நீ எங்கும் இருக்கிறாய். எனினும், அண்டத்தின் மேலே பத்து அங்குலத்தில் இருப்பதாக உருவகமாகச் சொல்லப்படுகிறாய்.(34)

வெளிப்பட்டோ, வெளிப்படாமலோ உள்ள பொருள் இயல்புகளின் காரணன் நீயே. ஜனார்த்தனா, உன் புறவடிவம் அண்ட வெளிப்பாட்டைக் கொண்டதாகும்.(35) ஜகந்நாதா, அந்த அண்ட வடிவின் வாயில் இருந்து, வேத கல்வியை முதலாகக் கொண்ட ஆறு தொழிற்கடமைகளில் ஈடுபட்டு உலகத்தைப் பாதுகாக்கும் பிராமணர்கள் தோன்றினார்கள்.(36) க்ஷத்திரியர்கள் உன் தோள்களில் இருந்து உண்டானார்கள், வைசியர்கள் உன் வயிற்றில் இருந்தும், சூத்திரர்கள் உன் கால்களில் இருந்தும் உண்டானார்கள்.(37)

தேவேசா, இவ்வாறே நான்கு வர்ணங்களும் உன் உடலில் இருந்து உண்டானவை. குளிர்ந்த கதிர்களுடன் உயிரினங்கள் அனைத்திற்கும் இன்பத்தை அளிப்பவனான சந்திரன், உன் மனத்தில் இருந்து தோன்றினான். உயிரினங்கள் அனைத்தின் கண்களாகக் கருதப்படுபவனான சூரியன், உன் கண்களில் இருந்து தோன்றினான். அவனுடைய கதிர்களாலேயே மொத்த உலகமும் ஒளியூட்டப்பட்டது. இந்திரனும், அக்னியும் உன் வாயில் இருந்து உண்டானார்கள், வாயு உன் உயிர் மூச்சில் இருந்து உண்டானான்.(38-40) ஜனார்த்தனா, உன் உந்தியில் இருந்து வெளி உண்டானது. கோபதியே, மஹாகோரமான தியுலோகம் உன் தலையில் தோன்றியது.(41) ஜகத்பதியே, உன் கால்களில் இருந்து பூமி வெளிப்பட்டது, உன் காதுகளில் இருந்து திசைகள் உண்டாகின. இவ்வாறே நீயே மொத்த அண்டத்தைப் படைத்து அதில் படர்ந்தூடுருவி நீக்கமற நிறைந்தாய்.(42)

கேசவா, அண்டம் முழுவதும் நீயே நீக்கமற நிறைந்திருப்பதால் {வியாபித்திருப்பதால்} விஷ்ணு என்று அறியப்படுகிறாய்.(43) முக்காலத்தையும் அறிந்தவனே, நீரில் (நாரா) கிடப்பதால் {அயண}, நீ நாராயணன் என்று அறியப்படுகிறாய்.(44) தேவா, உயிரினங்களின் துன்பங்களை அழிப்பதால் {ஹரம் செய்வதால்} நீ ஹரி என்ற பெயரைப் பெற்றாய். பிறருக்கு நன்மை செய்வதால் நீ சங்கரன் என்றும் கொண்டாடப்படுகிறாய்.(45) எப்போதும் பெருகும் பெரியவனாக இருப்பதால் நீ பிரம்மன் என்று குறிப்பிடப்படுகிறாய். மதுவை (புலன்களை) அடக்கியதால் நீ மதுசூதனன் என்று கொண்டாடப்படுகிறாய்.(46) விஷ்ணுவே, கேசவா, புலன்களை {இந்திரியங்களை / ரிஷிகங்களை} நீ வென்றவனானதால் ரிஷிகேசன் என்று அழைக்கப்படுகிறாய்.(47) "க" என்பது பிரம்மனைக் குறிக்கும், "ஈசன்" என்பது உடல்படைத்த ஆன்மாக்களைக் கட்டுப்படுத்துபவனான என்னைக் குறிக்கும். நாங்கள் இருவரும் உன் உடலில் இருந்து உண்டாக்கப்பட்டதால் நீ கேசவன் என்று அறியப்படுகிறாய்.(48) பகவானே, "மா" என்றால் வித்யை {அறிவு} ஆகும். நீ அதன் தலைவனான "தவன்" ஆவாய் என்பதால் நீ மாதவன் என்று அழைக்கப்படுகிறாய். தவன் என்ற சொல் தலைமைத் தன்மையைக் குறிக்கும்.(49) "கௌ" என்பது வேத தீர்மானங்களைக் குறிக்கும். அவற்றை நீ நன்றாக அறிந்தவன் என்பதால் கோவிந்தன் என்றழைக்கப்படுகிறாய்.(50) முனிவர்களில் முதன்மையானவர்கள் மூன்று வேதங்களை "திரி" என்று குறிப்பிடுவார்கள். நீ வேத அறிவைக் கடந்தவனாக இருப்பதால் திரிவிக்கிரமன் என்று அறியப்படுகிறாய்.(51) நீ நுட்பமானவனாக இருப்பதால் வாமனன் என்று அறியப்படுகிறாய். சிந்திப்பவர்களில் நீ முதன்மையானவனாக இருப்பதால் முனி என்று அழைக்கப்படுகிறாய். மனத்தைக் கட்டுப்படுத்தியவன் என்பதால் யதி என்று அழைக்கப்படுகிறாய்.(52) தவங்களைச் செய்வதால் நீ தபஸ்வி என்றழைக்கப்படுகிறாய். பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்தும் உன்னில் வசிப்பதால் பூதவாசன் என்று அழைக்கப்படுகிறாய்.(53) பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்திற்கும் நீ ஈசனாகத் திகழ்வதால் ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறாய். பிரபுவே, வேத மந்திரங்கள் அனைத்திலும் ஓங்காரம் உன்னைப் பிரதிபலிக்கிறது. சந்தஸ்களில் நீ காயத்ரியாக இருக்கிறாய்.(54)

அக்ஷரங்களில் {எழுத்துகளில்} நீ அகரமாக இருக்கிறாய். உண்மையில் எழுத்துகள் அனைத்தின் நித்திய பொருளாக நீயே இருக்கிறாய். ருத்திரர்களில் நீ சங்கரனாகவும், வசுக்களில் நீ பாவகனாகவும் இருக்கிறாய்.(55) மரங்களில் நீ புனித அசுவத மரமாக இருக்கிறாய். உயிரினங்களின் ஆன்ம குருவாகப் பிரம்மனாக இருக்கிறாய். மலைகளில் நீ மேருவாக இருக்கிறாய். தேவ முனிவர்களில் நீ நாரதனாக இருக்கிறாய்.(56) தைத்திய தானவர்களில் நீ பெரும்பக்தனான பிரகலாதனாகவும், சர்ப்பங்களில் நீ வாசுகியாகவும் இருக்கிறாய்.(57) குஹ்யகர்களில் தேவர்களின் கருவூல அதிகாரி குபேரனாக இருக்கிறாய். நீர் வாழ் உயிரினங்களில் அவற்றின் தலைவனான வருணனாக நீ இருக்கிறாய். புனித ஆறான கங்கை உன்னையே பிரதிபலிக்கிறாள்.(58) இருப்பின் தொடக்கமாகவும், நடுப்பகுதியாகவும், முடிவாகவும் நீயே இருக்கிறாய். இந்த அண்டம் உன்னில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. முடிவில் அது மீண்டும் உன்னில் கலந்து விடும்.(59)

ஜனார்த்தனா, ஜகத்பதியே, நான் உன்னில் இருந்து வேறுபட்டவனல்ல, நீயும் என்னில் இருந்து வேறுபட்டவனல்ல. நமக்கிடையில் எந்த வேறுபாட்டையும் ஒருபோதும் காணமுடியாது.(60) கோவிந்தா, இவ்வுலகில் துதிக்கப்படும் உன்னுடைய புனிதப் பெயர்கள் அனைத்தும் என் பெயர்களுமாகும். எவருக்கும் வேறு வகையில் சிந்திக்கக் காரணமில்லை.(61) தேவேசா, கோபதியே, உன்னை வழிபடுவதும், என்னை வழிபடுவதும் ஒன்றே. உன்னிடம் பகை கொண்டவர் எனக்கும் பகையாளி என்பதில் ஐயமில்லை.(62) தேவா, நான் உன் விரிவாக இருப்பதால் நானும் உயிரினங்களின் தலைவனாகக் கருதப்படுகிறேன். உன்னைக் கடந்ததோ, உன்னில் காணப்படாததோ ஏதுமில்லை.(63) ஜகத்பதியே, தேவேசா, முக்காலங்களில் இருக்கும் எதுவும் நீயின்றி வேறில்லை. உன்னையன்றி இருப்பில் வேறொன்றும் இல்லை.(64)

பிரபுவே, தேவர்கள் எப்போதும் உன் ஆழ்ந்த குணங்களைத் துதிக்கிறார்கள். நித்தியமான ரிக், யஜூர், சாம வேதங்களாக நீயே இருக்கிறாய்.(65) அனைத்தின் பிறப்பிடமாகத் திகழ்பவனே, இன்னும் வேறு என்ன சொல்ல? ஒரு வகையில் நீ அனைத்துமாக இருக்கிறாய், இருப்பினும் நீ அனைத்தில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறாய். விஷ்ணுவே, மாதவா, கேசவா, அனைத்து வகையிலும் நான் உன்னை வணங்குகிறேன்.(66) ஈசுவரனே, நான் உன்னை வணங்குகிறேன். ஹரியே நித்தியம் நான் உன்னை வணங்குகிறேன். உந்தியில் தாமரை மலரைக் கொண்டவனே, சர்வாத்மனே உன்னை நான் வணங்குகிறேன்" {என்றான் சிவன்}".(67) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 63ல் உள்ள சுலோகங்கள் : 67

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்