Sunday 19 December 2021

சிவனின் விஷ்ணுத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 65

(புநரபி ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)

Shiva 's Hymn to Krishna | Bhavishya-Parva-Chapter-65 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனைத் துதித்த சிவன்...

Shiva offering prayer to Krisha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதன்பிறகு முனிவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ருத்திரன், விஷ்ணுவும், விஷ்வேஷ்வரனுமான ஹரியை மீண்டும் துதிக்கத் தொடங்கினான். முனிவர்களும் குவிந்த கவனத்துடனும், நிறைவுடனும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.(1)

அப்போது மகேஷ்வரன், "நான் நித்தம் தியானிக்கும் பகவனான வாசுதேவனை வணங்குகிறேன். பெரும்பிரகாசம் கொண்ட தேவா, உன் பேரொளியின் பிரதிபலிப்பாலேயே மொத்த அண்டத்திற்கும் ஒளியூட்டுபவன் நீயே.{2} உன் பிரகாசத்தின் பிரதிபலிப்பை மீண்டும் பிரதிபலிக்கும் சந்திரனின் குளிர்ந்த கதிர்களைத் தருபவனும் நீயே.{3} நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணு நீயே. உலகின் ஜடப் பொருள்களை இயக்கம் கொண்டவையாகச் செய்பவன் நீயே.{4} அவற்றின் இதயங்களைத் தூண்டி, அதனதன் தொழில்களிலும், கடமைகளிலும் ஈடுபடுத்தி, அந்தந்த சூழலுக்குத் தகுந்த இன்பத்தை அவற்றுக்கு அளிப்பவனும் நீயே.{5}

அனைத்துமாக இருப்பவன் நீயே, இருப்பினும் அனைத்தில் இருந்தும் வேறுபட்டவன் நீயே. வேதங்களைப் பாதுகாக்கும் பிரம்மனைப் போலவே, வாக்கை உன் வடிவங்களில் ஒன்றாகக் கொண்டவன் நீயே.{6} கைகளில் குசப் புற்களையும், ஆடையையும், வேள்விப் பொருள்கள் பிறவற்றையும் தரித்திருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{7}

மொத்த அண்டத்தையும் பாதுகாப்பவன் நீயே, நிர்ணயிக்கப்பட்ட காலம் வந்ததும் உன் கோப வடிவமான பயங்கர முகம் படைத்த ருத்திர வடிவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துபவனும் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{8} பிறப்பற்றவன் நீயே, தேவதேவேசன் நீயே, அண்டத்தின் உண்மைப் படைப்பாளன் நீயே. படைப்பின் போது உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரூட்டுபவன் நீயே.{9} பிரம்மனின் வடிவில் கோள்களையும், அவற்றில் வசிப்பனவற்றையும் வெளிப்படுத்துபவன் நீயே. தேவதேவேசா, மஹத் தத்துவத்தின் உட்பொருள் திரளாக மாற்றமடைவது உன் சக்தியே. பொருள் இயல்பானவள் {பிரகிருதியானவள் / இயற்கையானவள்} ஐந்து பூதங்களை வெளிப்படுத்தும் வகையில் உன் பார்வையால் அவளைக் கலங்கடிப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{10}

பக்தர்களின் பாவங்களை அழிப்பவன் நீயே, பூமியின் உண்மை மணம் நீயே. ஜகத்பதியே, அனைத்து வடிவங்களையும் வெளிப்படுத்தும் மூல வடிவம் நீயே. சூரியனைப் போன்று பிரகாசமிக்கவன் நீயே.{11} உயிரினங்கள் அனைத்தையும் பராமரிப்பதற்கான வெப்பத்தையும், ஒளியையும் அளிக்கும் அந்தச் சூரியனை வெளிப்படுத்தியவனும் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, வெப்பம், குளிர், இன்பம், துன்பம் ஆகியவற்றை உணரச்செய்யும் காற்றாக இருப்பவன் நீயே.{12} தீண்டல் உணர்வை அந்தக் காற்றே உண்டாக்குகிறது. உன்னை நான் வணங்குகிறேன்.

விஷ்ணுவே, ஆகாயத்தில் உண்டாகும் ஒலி பிரதிபலிப்பது உன்னையே.{13} நுட்பமான ஆன்மாக்கள் அனைத்தும் உன் அங்கங்களாகத் திகழ்வதால் அனைத்து உயிரினங்களின் உயிராகவும், ஆன்மாவாகவும் இருப்பவன் நீயே.{14}

ஜகந்நாதா, மனித வடிவை ஏற்றிருந்தாலும், மொத்த அண்டத்தையும் தாங்கி நீடிக்கச் செய்பவன் நீயே. மாயா சக்தியின் தலைவன் நீயே. மாயையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவன் நீயே. இருப்பின் பொருள் பற்றில் இருந்து விடுதலை அளிப்பவன் {மோக்ஷம் அருள்பவன்} நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

இருப்பில் உள்ள அனைத்தின் உண்மைக் காரணன் நீயே, எல்லையற்ற ஆழ்நிலை குணங்களைக் கொண்டவனாக இருந்தாலும், குணமற்றவனாகத் திகழ்பவன் நீயே. சிந்தனைக்கப்பாற்பட்டவன் நீயே. அனைவரின் முயற்சிகளிலும் நோக்கமாகத் திகழ்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, ஹரனாகத் திகழ்பவன் நீயே.{15,16} படைப்பின் தொடக்கத்தில் பிரம்மனின் இதயத்திற்கு ஞானத்தை ஊட்டியவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் நீயே. பரப்ரம்மன் நீயே. வேள்வியின் வடிவம் நீயே. ஆயிரம் தலைகளையும், வாய்களையும்,{17} கண்களையும் கொண்ட அண்ட வடிவன் நீயே. கோடிக்கணக்கான கதிர்களின் பிரகாசத்தால் அமைந்தவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன். அண்ட வடிவம் நீயே, அண்டத்தைப் படைத்தவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே.{18} அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, உடல் படைத்த ஆன்மாக்களின் புலன்களாகத் திகழ்பவன் நீயே. புலன் நுகர் பொருட்களாக இருப்பவனும் நீயே. புலன்களின் தலைவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{19}

வேத வடிவம் நீயே, வேதங்களைக் காக்கும் ஹயக்ரீவனாக அவதரித்தவன் நீயே. நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. நட்சத்திரங்களையும், கோள்களையும் அதனதன் நிலைகளில் நிலைக்கச் செய்யும் சக்தி நீயே.{20} சூரியன் நீயே, சூரிய புத்திரன் நீயே, சூரியனின் தலைவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, குளிர்ந்த கதிர்களைத் தருபவனும், மயக்கம் தருபவனுமான சோமன் நீயே.{21} [வஷட்காரமாக, ஸ்வாஹாவாக, ஸ்வதாவாக இருப்பவன் நீயே]. வேள்வியின் வடிவம் நீயே, வேள்வியின் மூலம் வழிபடப்படுபவன் நீயே, வேள்விப் பொருட்கள் அனைத்தையும் படைத்தவன் நீயே. வேள்விகளில் சொல்லப்படும் புனித மந்திரங்களாக வெளிப்படுபவன் நீயே. வேள்விக்குடம், வேள்விக் கரண்டி மற்றும் வேள்விக்குரிய பிற பொருட்கள் அனைத்துமாக இருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(2-22)

ஓம் என்ற புனித எழுத்து, உன்னுடைய சூக்ஷும உடலிலிருந்து வேறுபட்டதல்ல. தவறும் இயல்புடைய, தவறாத இயல்புடைய அனைத்தின் தலைவன் நீயே. வேதமானவன் நீயே, வேத வடிவானவன் நீயே, பகைவரை அழிக்கும் ஆயுதங்களை இருப்புக்கு அழைப்பவன் நீயே, அந்த ஆயுதங்களின் உடல்வடிவம் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(23) சிறந்த ஆசிகளை அருள்பவன் நீயே, கதாயுதம், கட்கம், சங்கு, சக்கரம், திரிசூலம், கேடயம் ஆகியவற்றைத் தரித்தவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(24)

சர்வாத்ம குருவே, ஞானத்திற்கும், இன்பத்திற்கும் கொள்ளிடமாகத் திகழ்வதால் புத்திமான்களுக்குப் பிடித்தமானவன் நீயே. அனைத்து உயிரினங்களிலும் பரமாத்மாவாக இருப்பவன் நீயே. பக்தர்களின் பாவங்களை அழிக்கும் விஷ்ணுவே, உன்னை நான் வணங்குகிறேன்.(25) சர்வலோகேசா, இருப்பில் உள்ள அனைத்தையும் படைத்தவனே, முற்றான தூய்மையின் வடிவமாகத் திகழ்பவனே, யஜ்ஞ வராஹனாக அவதரித்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(26) விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், ஹரியே உன்னை வணங்குகிறேன், என் தியானப் பொருளாகத் திகழும் வாசுதேவா உன்னை நான் வணங்குகிறேன்.(27) கரிய வண்ணனும், நீக்கமற நிறைந்தவனுமான கிருஷ்ணனை நான் வணங்குகிறேன். கிருஷ்ணனான உன்னை உண்மையில் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். ஜனார்த்தனா, அண்டத்தில் உள்ள நல்லோரைக் காப்பாயாக" {என்றான் சிவன்}.(28)

ஜகந்நாதனை இவ்வாறு துதித்த சிவன், முனிவர்களிடம் திரும்பி, "நீங்கள் கேசவனிடம் சரணடைந்து, இந்தத் துதியை தினமும் சொல்வீராக. அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவன் இவனே. இந்தத் தலைவனைச் சரணடைந்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாப்பான். அனைத்து வகைப் பாவங்களையும் அழிக்கவல்ல இந்தத் துதியைச் சொல்பவன், தன் இதயத்துக்குள் ஹரியின் பேரின்பத்தை அடைவான். இந்தத் துதியைக்[1] கேட்டோ, சொல்லியோ ஹரியை நிறைவடையச் செய்பவர்களால் அடையப்படமுடியாததுதான் ஏது?(29-31) நீங்கள் உங்கள் வாழ்வை வெற்றிகரமானதாக்க விரும்பினால், சிறந்த விரதங்களை நோற்று, பக்தர்களிடம் அன்பு கொண்ட கேசவனை எப்போதும் நினைப்பீராக" {என்றான் சிவன்}.(32)

[1] இந்த அத்தியாயத்தின் 2ம் சுலோகம் முதல் 28ம் சுலோகம் வரையுள்ளதே மேற்படி சிவன் சொன்ன விஷ்ணு துதியாகும்.

பூதகணங்களுக்கு நன்மை செய்யும் ருத்ரனான பகவான் சங்கரன், இதைச் சொல்லிவிட்டு, உமையுடனும், தன் தொண்டர்களுடனும் அங்கேயே அப்போதே மறைந்தான்.(33) முனிவர்கள் அனைவரும் இதயத்தில் நிறைவடைந்து ஹரியை வணங்கினர். அவர்கள் நாராயணனே பரம தத்துவம் {முற்றான உண்மை} என்பதை உணர்ந்து, தங்கள் வாழ்வு வெற்றியடைந்ததாக {பிறவிக்கடன் தீர்ந்ததாகக்} கருதினர்.(34) மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அங்கே இருந்த தேவர்கள் அனைவரும் புறப்படுவதற்கு முன்னர், ஹரியை வணங்கிவிட்டுத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(35)

அதன்பிறகு அந்தப் புண்டரீகாக்ஷன் {தாமரைக் கண் கிருஷ்ணன்}, முன்பு சங்கு, சக்கரம், கதை, கட்கம் {வாள்}, வில், கணைகளுடன் கருடனில் ஏறி வந்ததைப் போலவே, பெரும் முனிவர்களால் நித்தம் தொண்டாற்றப்படும் பதரிகாசிரமத்திற்கு மாலை வேளையில் திரும்பிச் சென்றான்.(36,37) ஈசுவரனான அந்த ஹரி, பதரிகாசிரமத்தை அடைந்ததும் முனிவர்கள் அனைவரையும் வணங்கிவிட்டு, அவர்களால் வழிபடப்பட்டவனாக ஓர் ஆசனத்தில் சுகமாக அமர்ந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(38) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 65ல் உள்ள சுலோகங்கள் : 38

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்