(ஸ்ரீகிருஷ்ண ஸமீபே ஷி²வாக³மநம்)
The associates of Shiva | Bhavishya-Parva-Chapter-60 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: சிவனின் தொண்டர்கள் குறித்த விவரிப்பு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பூதங்களின் முகங்களைக் கொண்டவர்களும், நீண்ட விழிகளுடன் கூடியவர்களும், ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தவர்களும், விளையாட்டாக ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தவர்களுமான கண்டாகர்ணன், விரூபாக்ஷன், குண்டதாரன், குமுத்வஹன்,{1} தீர்க்கரோமன், தீர்க்கபுஜன், தீர்க்கபாஹு, நிரஞ்சனன், உருநேத்ரன், ஷதமுகன், ஷதக்ரீவன், ஷதோதரன்,{2} குண்டோதரன், மஹாக்ரீவன், ஸ்தூலஜிஹ்வன், துவிபாஹு, பார்ஷ்வவக்த்ரன், சிம்ஹமுகன்,{3} {திரிபாஹு, பஞ்சபாஹு, தீர்க்காஸ்யன்},{3} வியாக்ர வக்தரன், சிதானனன் ஆகிய கோர ரூபம் கொண்ட அனைவரும் அந்தச் சிவனுடன் இருந்தனர்.{4}
இவர்களைத் தவிர, ஊனுண்ணும், சடலங்களைச் சுமக்கும், குருதியைக் குடிக்கும் எண்ணற்ற பிசாசுகளும் அங்கே இருந்தன.{5} அங்கேயும், இங்கேயும் கிட்டும் சடலங்களைக் கைப்பற்றி உண்ணுந்தொழில் ஒன்றே அவர்களுடையதாகத் தோன்றியது.{6} இந்தப் பிசாசுகள் அனைத்தும் நெடியவையாகவும், பருத்தவையாகவும், குலைந்த வடிவம் கொண்டவையாகவும், நரம்புகள் புடைத்துத் தெரிபவையாகவும் இருந்தன. அவற்றின் சூல நுனிகளில் பல சடலங்கள் தொங்கின.{7} அவற்றில் பலவும் மனிதத் தலைகளை {கபாலங்களை} மாலைகளாக அணிந்திருந்தன, வேறு சில மனிதக் குடல்களால் தங்களை மறைத்திருந்தன.{8}(1-8)
சில டிண்டிமங்களை {உடுக்கைகளை} இசைத்தன, சில திக்குகள் அனைத்தும் எதிரொலிக்கும்படி உரக்கச் சிரித்தன. இந்தப் பிசாசுகளில் கபாலிகர்கள், பைரவர்கள், ஜடிலர்கள், முண்டிகள் ஆகியவை முக்கியமானவையாகத் திகழ்ந்தன.{9} பரமேஷ்வரனை நினைவுகூர்ந்த பெரும் முனிவர்கள் பலரும் வேத மந்திரங்களை ஓதிக் கொண்டே அங்கே வந்தனர். அவர்களில் சிலர் கமண்டலங்களைச் சுமந்து வந்தனர், சிலர் தரையில் குசப்புற்களை விரித்தனர், மேலும் பலர் இடைக்கச்சையை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தகுந்த ஜபங்களால் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறே பெரும் முனிவர்கள் பலரும், பிசாசுகளும், சித்தர்களும், கந்தர்வர்களும் தங்கள் மனைவியரோடு அங்கே வந்தனர்{10-13}.(9-13)
கந்தர்வர்களின் மகள்கள் அனைவரும் திறன்பெற்ற நர்த்தகர்களாகவும், பாடகர்களாகவும் அங்கே ஆடிக்கொண்டிருந்தனர். சங்கரனான சிவனைத் துதிக்கும் வித்யாதரர்களும் அங்கே வந்தனர்.(14) முன்னணியில் அப்சரஸ்கள் ஆடிக் கொண்டிருந்தனர். இவ்வாறே, பிசாசுகள், பூதங்கள், முனிவர்கள், கின்னரர்கள்,{15} பிரமதர்கள் ஆகியோருடன் கூடிய சிவன், விஷ்வேஷ்வரனான விஷ்ணு {கிருஷ்ணன்} தவமியற்றி வரும் இடத்திற்கு வந்தான்.{16} தேவர்களும், லோக பாலர்களும் அங்கே இருந்தனர். சிவன் உமையுடனும், புனித கங்கையுடனும் அங்கே இருந்தான்.{17}(15-17) சர்வலோக பிரபுவான பவன் {சிவன்}, பிரணவ மகத்துவத்தின் அடையாளமாகத் திகழ்ந்தான். தன்னிறைவடைந்தவனும், சடாமுடி தரித்தவனும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனுமான அவன் தன் தொண்டர்களின் துணையுடன் ஹரியான விஷ்ணுவைக் காண அங்கே வந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(18)
பவிஷ்ய பர்வம் பகுதி – 61ல் உள்ள சுலோகங்கள் : 18
மூலம் - Source |