(ஸ்ரீகிருஷ்ணஸமீபே இந்த்ராதிதேவ ஆநாமாகமநம்)
Lord Shiva arrives | Bhavishya-Parva-Chapter-60 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: சிவனை நிறைவடையச் செய்ய பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இந்திரன், தன் வாகனமான உத்தம கஜத்தில் {ஐராவதத்தில்} ஏறி சர்வேஷ்வரனான விஷ்ணு தவத்தில் இருப்பதைக் காண அங்கே வந்தான்.(1) அடுத்ததாக யம பகவானும், எருமை வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, தன் தொண்டர்களுடன் அங்கே வந்தான்.(2) ஹம்சவாகனத்தில் அமர்ந்தவனும், தலைக்கு மேல் வெண்குடை ஏந்தியவனும், தொண்டர்களால் வெண்சாமரம் வீசப்படுபவனுமான வருணனும் அங்கே வந்தான்.(3) கைலாச சிகரத்தில் கேசவன் எவ்வாறு தவம் செய்கிறான் என்பதைக் காண அவனும், ஆதித்யனும் அங்கே வந்தனர்.{4} ஓ! மன்னா {ஜனமேஜயா}, ருத்திரர்கள், வசுகள், சித்தர்கள், பெரும் முனிவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள்,{5} ஆடல் பாடல்களில் திறன் பெற்ற அப்சரஸ்சகள் பலரும், தேவகணங்களும் கேசவனைக் காண கைலாச மலைக்கு வந்தனர்.{6}
பர்வதர், நாரதர் ஆகியோரின் தலைமையிலான பெரும் முனிவர்களும், சர்வ தேவகணங்களும் ஆச்சரியமடைந்தவர்களாக,{7} "இது பேராச்சரியம் வாய்ந்தது. இத்தகைய நிகழ்வேதும் கடந்த காலத்தில் நடந்ததுமில்லை, வருங்காலத்தில் நடக்கப் போவதுமில்லை. அண்டத்தின் ஆன்ம ஆசானும், யோகிகளின் தவப்பொருளுமான கிருஷ்ணன் தவத்தில் ஈடுபட்டு வருகிறான்" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்தத் தலைவன் தவம் செய்யும் நோக்கத்தைக் குறித்துத் தேவர்களும், முனிவர்களும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக்கொண்டனர்{8}.(4-8)
உலகத்திற்கு நன்மையைச் செய்யும் பிரபுவான அந்த ஹரியின் தவக் காலம் நிறைவடைந்ததும், சகலேஷ்வரனான சிவன், தன் மனைவியுடனும் {பார்வதியுடனும்}, தன் தொண்டர்களுடனும் அந்த ஜகத்பதியின் செயல்களைக் காண அங்கே வந்தான்.(9) நண்பனான குபேரனும், குஹ்யர்களும் அவனுடன் {சிவனுடன்} வந்தனர். ஜடாதாரியான அவன் {சிவன்}, எண்ணற்ற பூதங்களாலும், பிசாசுகளாலும் சூழப்பட்டிருந்தான். அவன் ஒரு வில்லையும், கணைகளையும், திரிசூலத்தையும் ஏந்தியிருந்தான். மேலும் அவன் தன் சிரத்தின் அழகை அதிகரிக்கும் பிறை நிலவையும் தரித்திருந்தான்.(10) அவன் ஒரு கரத்தில் கமண்டலத்தையும், குச புற்களையும், மறு கரத்தில் எரி கொள்ளியையும், மூன்றாம் கரத்தில் திந்திமத்தையும் {உடுக்கையையும்}, நான்காம் கரத்தில் திரிசூலத்தையும் ஏந்தியிருந்தான். ருத்ராக்ஷ மாலை அவன் கழுத்தைச் சூழ்ந்திருந்தது. செந்நீல நிறத்தவனும், ஜடாதாரியும், சந்திரசேகரனுமான அந்தச் சிவன், வெண் காளை வாகனனாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தான்(11,12)
உமையின் ஸ்தனங்களில் பார்வையைக் கொண்டிருந்த அவனை அவள் அணைத்து முத்தமிட்டாள். அவனது நெற்றி பிறைமதியால் அலங்கரிக்கப்பட்டு, கங்கையின் நீரால் கழுவப்பட்டது. அந்தத் தலைவனின் பார்வை எப்போதும் தன் மனைவின் மேலே விழுந்திருந்தது.(13) அவனது முகம் சாம்பலால் {பஸ்மத்தால்} பூசப்பட்டிருந்தது. அவனது சடாமுடியானது பெரும்பாம்புகளால் கட்டப்பட்டிருந்தது. அவன் மனிதத்தலை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான். இவ்வாறே சிவன், ஹரியான கேசவனைக் காண வந்திருந்தான்.(14)
அண்ட வெளிப்பாடுகளும், அவற்றின் உள்ளடக்கமான பூதங்களும் வெளிப்புற ஆற்றலை ஆள்வதால் அவை சிவனின் வடிவங்கள் என்று சொல்லப்படுகின்றன. சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த அறிஞர்களால் அவன் மிகப்பெரியவன் என்றும், இருபத்துநான்கு தத்துவங்களை வெளிப்படுத்தும் ஆற்றலான பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறான். கணாதன் என்றும், மஹாதேவன் என்றும் அழைக்கப்படும் சிவபெருமான் தேவர்களை விரட்டி தக்ஷனை அழித்தவனாவான். தன்னை உணர்ந்த ஆத்மாக்களின் குறிக்கோளாகவும், அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்பவனாகவும் அவனே இருக்கிறான். கடுங்கண்களைக் கொண்ட அந்த மஹாதேவன் நித்தியமானவன்; பழைமையானவன், எல்லையற்றவன், தன்னிறைவடைந்தவன், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன், பேரமைதியில் இருப்பவன். சில சமயங்களில் ஆயிரங்கண்ணனாகவும், சில சமயங்களில் நான்கு கரத்தோனாகவும் அவன் வெளிப்படுகிறான். அவனே மிருத்யுவின் உருவமாகவும், ருத்திரன், ரோதனன் என்றழைக்கப்படும் அண்டத்தின் தலைவனாகவும் திகழ்கிறான்.(15-20)
பூமி, நீர், நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன் ஆகியவற்றை இயக்குபவர்களான எண்மரும் {அஷ்டதிக்பாலர்களும்} மஹாதேவனின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றனர்.(21) மஹாயோகத்தின் மஹாதேவனும், செந்நீல வண்ணனும், மஹாதேவன் என்றும், கிரீசன் என்றும் அழைக்கப்படுபவனும், இயற்கையை ஆள்பவனும், உமையின் வடிவமாகத் திகழ்பவனும், கையில் சூலந்தரித்தவனுமான அந்தச் சிவன், ஜகத்பதியான கிருஷ்ணனைத் தரிசிக்கத் தன் பூதகணங்களுடன் சேர்ந்து அங்கே வந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(22)
பவிஷ்ய பர்வம் பகுதி – 60ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source |