(கிருஷ்ணதபோவர்ணநம்)
The penance of Krishna | Bhavishya-Parva-Chapter-59 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: சிவனை நிறைவடையச் செய்யப் பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, மஹாத்மாவான அந்தப் பிசாசின் {கண்டாகர்ணனின்} கதையை முனிவர்களிடம் விரிவாகச் சொன்னான்.(1) இந்நிகழ்வைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் பேராச்சரியம் அடைந்தனர். அவர்கள், "ஓ! தலைவா, காரணமற்ற உன் கருணையாலேயே அந்தப் பிசாசானவன் முக்தியை அடைந்தான்" என்றனர்.(2)
அன்பு கொண்ட பக்தர்களிடம் பெரும் பற்றுக் கொண்ட அந்த விஷ்ணுவை முனிவர்கள் அனைவரும் மதிப்புடன் வழிபட்டனர். அவனும் அந்த முனிவர்களிடம் நிறைவடைந்தான். அடுத்த நாள் அதிகாலையில் சூரியன் அடிவானில் உதித்த போது, அவன் முனிவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கருடன் மீதேறி கைலாச மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(3,4)
அண்ட காரியங்கள் அனைத்தையும் நிர்வகிப்பவர்களும், கடும் நோன்புகளை நோற்பவர்களுமான சித்தர்கள் எங்கிருப்பார்களோ, வைஷ்ரவணன் {குபேரன்}, சங்கரனை எங்கே வழிபட்டுக் கொண்டிருப்பானோ,{5} அன்னங்கள் மகிழ்ச்சியுடன் வசிப்பதும், மானஸம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான பெருந்தடாகம் எங்கிருக்கிறதோ, சிவனின் தொண்டனான பிருங்கீரிடி மனிதர்களின் தலைவனாவதற்காகத் தன் தலைவனை எங்கே வழிபட்டானோ,{6} சிங்கங்கள், பன்றிகள், யானைகள், புலிகள், மான்கள் ஆகியனவும் பகையின்றி ஒற்றுமையுடன் எங்கே வாழுமோ, கங்கையினால் தலைமை தாங்கப்படும் ஆறுகள் எங்கே பாயுமோ,{7,8} அண்டத்தின் தலைவனான சம்பு {சிவன்} பிரம்மனின் தலையை எங்கே கொய்தானோ, உயிரினங்களைத் தண்டிக்கும் தண்டங்கள் எங்கே உண்டாகுமோ,{9} நீலலோஹிதனான {செந்நீல வண்ணனான} சங்கரன் உமையுடன் எங்கே வசிக்கிறானோ, பழங்காலத்தில் முனிவர்களின் வேண்டுகோளின் பேரில் மலைகளின் அரசனான ஹிமவான் தன் மகளை மஹாதேவனுக்கு எங்கே மணமுடித்துக் கொடுத்தானோ,{10} ஹரியானவன் தாமரை மலர்களால் சிவனை வழிபட்டு சுதர்சனச் சக்கரத்தை எங்கே அடைந்தானோ,{11} மதுவை {தேனைப்} பருகிக் கொண்டே சித்தர்களும், கின்னரர்களும் தங்கள் மனைவியருடன் இன்புற்றிருக்கும் மலைக்குகைகள் எங்கிருக்கிறதோ,{11,12} வலிமைமிக்கப் பௌலஸ்தியன் {ராவணன்} தன் வலிமைமிக்கக் கைகளால் எதை உயர்த்தினானோ, அவன் உலக வெற்றிப்பேற்றில் எங்கே நிறைவடைந்தானோ அந்தக் கைலாச மலைக்குக் கிருஷ்ணன் சென்றான். யது குலத்தின் பெருமைமிகு தேவகிநந்தனன் அங்கே மானஸ ஸரோவரின் வடகரையை அடைந்தான்.{13,14}(5-14)
மங்கலமிக்கவனான தலைவன் ஹரி, தவம் செய்யும் நோக்கத்தில் அங்கே வந்திருந்தான். அந்த ஜகந்நாதன் {கிருஷ்ணன்}, அந்தப் புனிதத் தலத்தில் உறுதியான தீர்மானத்துடன் தவம் செய்ய அமரும் முன், சடாமுடி தரித்து, எளிய உடைகளை உடுத்திக் கொண்டான்.{15} தலைவன் ஹரி, பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்யத் தீர்மானித்து வேத வடிவேயான கருடனின் முதுகில் இருந்து இறங்கினான்.{16} ஜகத்பதியான ஹரி, இலைதழைகளை மட்டுமே உண்பவனாகப் பங்குனி மாதத்தில் தவம் செய்யத் தொடங்கி,{17} அதைத் தொடர்ந்து மந்திரங்களை ஓதி, வேதங்களையும் படித்தான்.
ஓ! மன்னா, அண்டத்தின் தலைவன் மனித வடிவை ஏற்ற பிறகும் அவன் தவம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.{18} உண்மையில் பரமாத்மாவின் நோக்கங்களைச் சின்னஞ்சிறு உயிரினங்களால் புரிந்துகொள்ள முடியாது.
கைலாச மலையில் கிருஷ்ணன் தொடர்ந்து தவம் செய்து வந்தபோது, கசியபரின் மகனான கருடன் அவனுக்குத் தேவையான விறகுகளைக் காடுகளில் இருந்து திரட்டி வந்தான்.{19,20}(15-20) {சுதர்சனச்} சக்கரமானவன், ஹரிக்காக மலர்களைத் திரட்டி வந்தான். {பாஞ்சஜன்ய} சங்கானவன் அனைத்துத் திசைகளில் இருந்தும் அவனுக்குப் பாதுகாப்பளித்தான். கட்கமானவன் {நந்தக வாளானவன்} அந்தத் தலைவனுக்குக் குசப்புற்களைக் கொண்டு வந்தான். கௌமோதகி {கதாயுதமானவன்} பல்வேறு வகைகளில் அவனுக்குத் தொண்டாற்றினான்.(21,22) தானவர்களின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்துபவனும், கொண்டாடப்படுபவனும், விற்களில் சிறந்தவனுமான சாரங்க வில்லானவன், பணியாளனாக எப்போதும் தலைவனின் முன்பு நின்றிருந்தான்.(23)
பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, தன் வேள்விகளைச் செய்வதற்காக ஏராளமான விறகுகளை எரித்தான். அவன் ஏராளமான நெய்யையும் பிற உட்பொருள்களையும் {வேள்வித்தீயில்} ஊற்றினான்.{24} உண்மையில் அவன் சிறிய, பெரிய யஜ்ஞங்கள் பலவற்றைச் செய்து முடித்தான். தொடக்கத்தில் தவம் செய்து வந்தபோது கவனமாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாதம் ஒரு முறை மட்டுமே உண்டான்.{25} அதன் பிறகு அந்தக் கேசவன், இரு மாதங்களுக்கு ஒருமுறை உண்டான். இறுதியாக அவன் வருடத்திற்கு ஒரு முறை உண்ணும் நிலையை அடைந்தான்{26}.(24-26)
ஜகத்பதியான அந்த ஜனார்த்தனன், இவ்வாறே பதினோரு வருடங்களும், பதினோரு மாதங்களும் தவம் செய்து வந்தான். {பன்னிரெண்டு வருடங்களுக்கு} இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவன், வேள்வி நெருப்பை மூட்டிவிட்டு சிவனைத் தியானித்தபடியே ஆரண்யக மந்திரங்களையும், {ஓம் என்ற} உத்தம பிரணவத்தையும் சொல்லத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(27,28)
பவிஷ்ய பர்வம் பகுதி – 59ல் உள்ள சுலோகங்கள் : 28
மூலம் - Source |