(கண்டாகர்ணஸ்ய முக்தி)
Ghantakarna's liberation | Bhavishya-Parva-Chapter-58 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: பிராமண மாமிசத்தை கிருஷ்ணனுக்குப் படைத்த கண்டாகர்ணன்; கிருஷ்ணன் மறுத்தது; கண்டாகர்ணன் முக்தியடைந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அனைத்தையும் கைவிட்டு பொருத்தமில்லாமல் சிறிது நேரம் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்த அந்தப் பிசாசானவன், அங்கிருந்து சென்று ஒரு பிராமணனின் சடலத்தை அவ்விடத்திற்குக் கொண்டு வந்தான்.(1) அவன் அந்தச் சடலத்தை இரண்டாக வகுந்து, அதில் ஒன்றை சுத்தம் செய்தான். பிறகு அந்த மாமிசத்தை ஓர் அழகிய தட்டில் வைத்து, ஜனார்த்தனன் முன்பு வைத்து, தன் வணக்கத்தைச் செலுத்திப் பணிவுடன் கைக்கூப்பிப் பின்வருவனவற்றைப் பேசினான்:(2,3) "ஓ! ஜகந்நாதா இந்த உணவு உனக்கே என்பதால் இதை ஏற்பாயாக. ஓ! ஜகந்நாதா, ஹரியே, பக்தனால் உனக்கு அளிக்கப்படும் எதையும் நீ ஏற்க வேண்டும்.(4) ஓ! விஷ்ணுவே, நான் உன்னைச் சரணடைந்தேன். நீ வேறு வகையில் நினைக்காதே. பணியாளால் பக்தியுடன் கொடுக்கப்படும் உணவைத் தலைவன் ஏற்க வேண்டும்.(5) பண்பட்ட பிராமணன் ஒருவனின் இந்த உடல் மிகச் சமீபத்தில் கொல்லப்பட்டது என்பதால் உண்பதற்குத் தகுந்தது. சாத்திரங்களின்படி எங்களைப் போன்ற பிசாசுகளுக்கு இது தகுந்த உணவாகும்.(6) எனவே, ஓ! பகவானே, இதில் நீ குறை காணவில்லையெனில் இந்தக் காணிக்கையை ஏற்பாயாக" {என்றான் கண்டாகர்ணன்}.
பிசாசானவன் இதைச் சொல்லிவிட்டு அந்தத் தலைவனுக்கு மனித மாமிசத்தை அளிக்க முயற்சித்தபடியே மீண்டும் உரக்கச் சிரித்தான். கிருஷ்ணன் அந்தப் பிசாசிடம் நிறைவடைந்தவனாகத் தன் மனத்திற்குள் அவனைப் புகழும் வகையில், "ஐயோ, இந்தப் பிசாசானவன் என்னிடம் பேரன்பும், பெரும் பக்தியும் கொண்டிருக்கிறான்" என்று நினைத்தவாறே பின்வருவனவற்றைப் பேசினான்:(7-9) "பச்சை மாமிசம் உண்ணும் பிசாசே, எந்தச் சூழ்நிலையிலும் இத்தகைய இறைச்சியைப் படைப்பது தகாது. இந்தப் பிராமண மாமிசம் உன்னளவில் மிகச் சிறந்ததே என்றாலும் என்னைப் போன்றவர்களால் தீண்டத்தகாதது.(10) அறக் கோட்பாடுகளைப் பின்பற்றுவோருக்கு ஒரு பிராமணன் எப்போதும் வழிபடத் தகுந்தவனாவான். அனைத்து வகைப் பாவச் செயல்களையும் செய்யும் பிசாசுகள் மட்டுமே ஒரு பிராமணனைக் கொல்வார்கள்.(11) எவனும் ஒருபோதும் விப்ரர்களைக் கொல்லக்கூடாது. ஏனெனில் இந்தச் செயல் அவனை நரகத்திற்கே வழிநடத்தும். எனவே, அனைத்து வகைகளிலும் இந்தச் சடலம் என்னால் தீண்டத்தகாதது. இதற்கு முரணான வேறு எதையும் நினைக்க வேண்டியதில்லை.(12) ஓ! மாமிசம் உண்ணும் பிசாசே, களங்கமுள்ள மனத்தைத் தூய்மைப்படுத்தும் உன் பக்தியில் நான் நிறைவடைந்தேன். நீ மங்கலமாக இருப்பாயாக. நீ உன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முயல்கிறாய் என்ற காரணத்தினாலேயே நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.(13) எப்போதும் நீ என் பெயர்களைச் சொல்லி உன் இதயம் தூய்மை அடைந்திருக்கும் காரணத்தாலேயே நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்" {என்றான் கிருஷ்ணன்}.(14)
இதைச் சொல்லிவிட்டு அந்த விஷ்ணு தன் கைகளை அந்தப் பிசாசின் மீது வைத்து பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் அவனை விடுவித்தான்.(15) கிருஷ்ணன் அவனைத் தொட்ட உடனேயே அவன் காமனைப் போன்ற அழகை அடைந்தான். அவன், சுருள் முடியும், நீண்ட கைகளும், அழகிய கண்களும் கொண்டவனானான்.(16) அவனுடைய விரல்களும், அதிலுள்ள நகங்களும் மிக அழகியவையாக இருந்தன. அவன் தாமரை போன்ற கண்களையும், தாமரையைப் போன்ற மேனி நிறத்தையும் கொண்டிருந்தான், மேலும் தாமரை இதழ்களுக்கு ஒப்பான ஆபரணங்களை அணிந்திருந்தான்.(17) அவன் கேயூரமும் கைவளைகளும் அணிந்திருந்தான். மேலும் மஞ்சள் பட்டாடைகளை உடுத்தியிருந்தான். அவன் இரண்டாம் இந்திரனைப் போலப் பிரகாசமிக்கவனாகவும், புத்திசாலியாகவும் தெரிந்தான்.(18) அவன் ஒரு கந்தர்வனைப் போலத் திறன்மிக்கப் பாடகனானான். மேலும் ஒரு யோகியைப் போல அவன் மாயாசக்திகள் அனைத்தையும் பெற்றிருந்தான். விஷ்ணுவின் தாமரைக் கைகளால் தீண்டப்பட்ட அந்தப் பிசாசாவன் மிக அழகிய தன்மைகளை அடைந்தான். மேனி ஒளியில் அவன் மஹாமுனிவர்களையும் விஞ்சியிருந்தான்.(19,20)
ஓ! மனிதர்களின் ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பிசாசானவன் செய்த கடுந்தவத்தின் விளைவாகவே அவனுக்கு இந்தத் தெய்வீக வடிவம் என்ற வெகுமதி கிடைத்தது.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஜகந்நாதனைச் சரணமடைந்தவன் எவ்வாறு துன்பங்களை அனுபவிப்பான்? அத்தகைய மனிதன் மங்கல அனுபவங்களை மட்டுமே பெறுவான். விஷ்ணுவைத் தொடர்ந்து தியானித்து, அவனது மகிமைகளைத் துதிக்கும் ஒருவனால் அடையப்பட முடியாதது தான் ஏது?
பிறகு அந்தப் பகவான், இரண்டாம் இந்திரனைப் போலத் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் கண்டாகர்ணனிடம் பேசினான்: "தேவ மன்னனின் {இந்திரனின்} ஆட்சியுள்ளவரை அவனுடைய உலகத்தில் உன் வாசம் உறுதியானதாகும். இனி மகிழ்ச்சியாகச் சென்று அங்கே வசிப்பாயாக.(22-24) இந்திரனின் ஆட்சிக்காலம் முடியும்போது நீ சாயுஜ்ய முக்தியை[1] அடைவாய். இந்திரன் ஆளும்வரை உன் தம்பியும் தேவலோகங்களில் இன்புற்று வாழ்வான்.(25) நீ மங்கலமாக இருப்பாயாக. உன் இதயம் விரும்பும் வரத்தை நீ என்னிடம் கேட்பாயாக. எதையும் கொடுப்பேன், அனைத்தையும் கொடுப்பேன். இதில் ஐயமில்லை" {என்றான் கிருஷ்ணன்}.(26)
[1] தமிழ் இந்து வலைத்தளத்தில் "அறியும் அறிவே அறிவு" எனும் கட்டுரைத் தொடரில் முக்தி குறித்த விளக்கம் பின்வருமாறு அளிக்கப்பட்டுள்ளது: "முக்தி இச்சை உள்ளவனின் மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு நான்கு வகையாகும் என்பர். அவை முறையே சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம், மற்றும் சாயுஜ்யம் எனப்படும். சாலோக்ய முக்தியாவது ஒருவன் தான் எந்த தெய்வத்தைப் பூசிக்கிறானோ அந்த தெய்வலோகத்தின் பிரஜையாகத் தானும் வாசம் செய்வது. அந்த உலகத்தில் இறைவனை விட்டுத் தூர இல்லாமல் அவர் அருகிலேயே இருந்து சேவை செய்வது சாமீப்ய முக்தி ஆகும். இறைவனிடம் கொண்டுள்ள பக்திப் பெருக்கினால் இறைவனது உருவம் போலவே தானும் வடிவத்தைப் பெறுவது சாரூப்ய முக்தியாகும். தான் பெற்ற அந்த இறை வடிவத்தை அந்த நாமரூபத்தில் கலந்து தானும் அந்த நாமரூபமாகவே ஆவது சாயுஜ்ய முக்தி ஆகும். இவை நான்குமே வெவ்வேறு படிகள் எனக் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
கண்டாகர்ணன், "ஜனார்த்தனா, கட்டுப்பாடுள்ள மனம் கொண்ட ஒருவன் நமது சந்திப்பையும், உரையாடலையும் நினைவு கூர்ந்தால் உன்னிடம் தளராத பக்தியை அடையட்டும்.(27) ஓ! ஹரியே, அவன் மனத்தூய்மையை அடைந்து களங்கங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, அவனது இதயத்தில் உள்ள மாசுகள் அனைத்தும் விலகட்டும். இதுவே நான் விரும்பும் வரமாகும்" {என்றான் கண்டாகர்ணன்}.(28)
இதைக் கேட்ட தேவேசன், "அவ்வாறே ஆகட்டும். இப்போதே தேவலோகம் சென்று இந்திரனால் மதிக்கப்படும் விருந்தினன் ஆவாயாக. அவன் உனக்காகக் காத்திருக்கிறான்" என்றான் {கிருஷ்ணன்}.(29)
கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு, இறந்து கிடந்த அந்தப் பிராமணனுக்கு உயிரளித்தான். உயிர்மீண்டதைக் கண்ட அந்தப் பிராமணன் அந்தத் தலைவனை நல்ல முறையில் துதித்துவிட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றான். பிறகு அந்தத் தலைவன், முனிவர்கள் வேள்விகளைச் செய்து கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(30,31)
முற்பிறவியில் சுவர்க்கவாசியாக இருந்த கண்டாகர்ணன், கிருஷ்ணனின் ஆணையின் பேரில் தேவலோகம் சென்றான். ஓ! மன்னா, உன் மனத்தையும் புலன்களையும் தூய்மைப்படுத்த விரும்பினால் இந்த உரைகளைத் தொடர்ந்து கேட்பாயாக. இந்தப் பிசாசின் கதையைச் சொல்வதால் உன் மனம் நிச்சயம் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையும்" என்றார் {வைசம்பாயனர்}.(32)
பவிஷ்ய பர்வம் பகுதி – 58ல் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source |