(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய ஸமாதி கோலாஹலம்)
Samadhi of Krishna | Bhavishya-Parva-Chapter-53 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: தியானத்தில் ஆழ்ந்த கிருஷ்ணனின் சமாதி நிலை; பயங்கரமான பேரொலிகளைக் கேட்ட கிருஷ்ணன்; தியானம் கலைந்தது; கிருஷ்ணன் அடைந்த ஆச்சரியம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "எவனுடைய நோக்கங்களை அறிந்து கொள்வது கடினமோ அந்தப் பிரபுவும், பகவானும், விஷ்ணுவுமான யாதவேஷ்வரன் {யாதவர்களின் ஈஷ்வரன்/ கிருஷ்ணன்}, ஏற்கனவே தான் தவம் செய்து வந்ததும், கங்கையின் வடதீரத்தில் அமைந்திருப்பதுமான இடத்திற்குச் சென்றான். அந்த ஹரி அங்கே இருக்கும் புனிதமான தபோவனத்திற்குள் பிரவேசித்தான்.(1,2) மனோஹரமானதும், மிக அழகானதுமான அவ்விடத்தை அவன் சுற்றிப் பார்த்தான். பிறகு புண்ணியவரதனான அந்தப் பிரபு அந்த ஆசிரமத்திற்குள் அமர்ந்தான்.(3) தாமரைக் கண்ணனான அவன் மெய்மறந்த நிலையில் {சமாதியில்} தன் மனத்தை நிலைக்கச் செய்தான். தேவேஷ்வரனான {தேவர்களின் ஈஷ்வரனான} அந்த ஜகந்நாதன் விவரிக்கமுடியாத பொருளைக் குறித்துத் தியானிக்கத் தொடங்கினான்.(4)
தேவகுருவான அவன், காற்றற்ற இடத்தில் உள்ள விளக்கைப் போல, அலைபாயாத மனத்துடன் தியானத்தில், தன்னிலை இழந்த நிலையில் {சமாதியில்} ஈர்க்கப்பட்டிருந்தபோது, திடீரெனத் திசைகள் அனைத்திலும் மஹாகோரமான ஒலிகள் கேட்டன.(5) "உண்பீர், உண்வீராக. சாரங்கனின் அருளால் மான்கள் அனைத்தையும் கொண்டு வருவீராக.(6) இதோ விஷ்ணு, இதோ கிருஷ்ணன், இதோ ஹரி இங்கே அமர்ந்திருக்கிறான். அச்யுதனே, மாதவனே, கேசவனே, தேவேசா, நாங்கள் உன்னை வணங்குகிறோம்" என்ற ஒலி கேட்டது.(7)
இவ்வாறே அவ்விரவில் பெருங்குழப்பமும், கலவரமும் நேர்ந்தது. மான்களின் மிகப் பெரிய பகைவரான சிங்கங்கள் திடீரென உரக்க முழங்கத் தொடங்கின.(8) ஓ! மன்னா, பிறகு சிங்கங்கள் மான்களை விரட்டும் ஒலிகளும், நாய்கள் குரைக்கும் ஒலிகளும், அச்சமடைந்த மான்கள், கரடிகளின் ஒலிகளும், உறுமும் புலிகள், பிளிறும் யானைகள் ஆகியவற்றின் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டன. இந்த மொத்த ஒலிகளின் கலவையானது, பெருங்காற்றால் கலங்கிப் பெருகும் சமுத்திரத்தின் பயங்கர ஒலியைப் போன்றிருந்தது.(9,10)
இரவில் நேர்ந்த அந்த ஆரவார ஒலி, மூவுலகில் உள்ள அணைவரையும் உண்மையில் அச்சுறுத்தியது. அந்தக் கலவரத்தின் மூலம் ஹரி தேவனின் சமாதி கலைந்தது. புறநினைவு மீண்ட ஜகத்பதி {எழுந்து நின்று}, "செவிடாகச் செய்யும் இவ்வொலியென்ன?(11,12) என்னைத் துதித்துக் கொண்டே இத்தகைய ஒலியை உண்டாக்குவது யார்? ஐயோ, நாய்கள், மான்கள், இரைதேடும் விலங்குகளிடம் இருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடும் பிற விலங்குகள் ஆகியவற்றின் ஒலிகளும் கேட்கின்றனவே. இது மிக ஆச்சரியமானது. இருப்பினும் இவ்வொலிகள் அனைத்தும் சேர்ந்து என்னைத் துதித்து வேண்டுகின்றனவே" என்று நினைத்தான்.(13,14) இவ்வாறு சிந்தித்த ஹரி, கலவரத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் திக்குகள் அனைத்திலும் தன் பார்வையைச் செலுத்தினான். பிறகு, கீழே அமர்ந்து அமைதியடைந்தான்.(15)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, கேசவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கித் திடீரென மான்கூட்டம் ஒன்று ஓடிவந்தது. நாய்கள் அவற்றை விரட்டி வந்தன.(16) ஓ! மன்னா, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பந்தங்கள் மூட்டப்பட்டதால் இரவின் இருள் விலங்கி அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.(17) அப்போது அங்கே பூதகணங்கள் தென்பட்டன. கோணல் வாய்களுடன் கூடியவையும், பயங்கரத் தோற்றம் கொண்டவையுமான பிசாசுகள், பச்சை இறைச்சியை உண்டபடியும், குருதியைப் பருகியபடியும் அச்சுறுத்தும் வகையில் மஹாகோரமாக முழங்கின.(18,19) ஓ! மன்னா, எண்ணற்ற மான்கள் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தன, அல்லது படுகாயமடைந்து தரையில் கிடந்தன. மேலும் எண்ணற்ற மான்களும், யானைகளும் கணைகளால் துளைக்கப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தன.(20)
ஓ! பாரதா, ஆயிரக்கணக்கான மான்கள் அந்தத் தேவேசன் அமர்ந்திருந்த இடத்திற்கு ஓடிவந்து அவனைச் சூழ்ந்து கொண்டன என்று நான் என் குருவிடம் இருந்து கேள்விப்பட்டேன். பிறகு சிதைந்த அங்கங்களைக் கொண்ட பிசாசுகள் பலவும் கேசவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தன. புத்திரர்களுடன் கூடிய அவை அனைத்தும், காண்பவனுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. ஓ! ராஜேந்திரா, பிறகு நாய்க்கூட்டமும் அங்கே வந்தது. அப்போது கேசவன், தன்னைச் சூழ்ந்திருக்கும் இந்த உயிரினங்கள் அனைத்தையும் கண்டு பேராச்சரியம் அடைந்தான்.(21-24)
அவன், "என்ன நடக்கிறது? இவ்வுயிரினங்கள் அனைத்தும் ஏன் இங்கே வந்திருக்கின்றன? பக்தியுடன் என்னைத் துதித்தவர்கள் யார்? நான் யாரிடம் நிறைவடைவது?(25) என் அருளால் இன்று முக்தியடையப் போவது யார்?" இவ்வாறு நினைத்தபடியே பகவான் அங்கே அமர்ந்திருந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(26)
பவிஷ்ய பர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 26
மூலம் - Source |