(பிஷாசாகமநம்)
Pisachas | Bhavishya-Parva-Chapter-54 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: பிசாசுகளின் கூட்டம்; இரண்டு பிசாசுகளுக்கிடையிலான பேச்சு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது அச்சந்தரக் கூடியவையும், மஹாகோரமானவையுமான பிசாசுகள் இரண்டு, தங்கள் கூட்டங்களுடன் அங்கே தோன்றின. அவை அனைத்தும் நெடியவையாகவும், கோணலான வாய்களையும், அகன்ற தாடைகளையும், நீண்ட நாவுகளையும் கொண்டவையாக இருந்தன.(1) நீண்ட தலைமுடியையும், அச்சந்தரும் கண்களையும் கொண்ட அவை இறைச்சியை உண்டபடியும், குருதியைப் பருகியபடியும் பயங்கரமாகச் சிரித்தன.(2) அவற்றின் உடல்கள் முழுவதும் உயிரினங்களின் குடல்களால் மறைக்கப்பட்டிருந்தன. அவை பேருடல் படைத்தவையாக இருந்தாலும் அவற்றின் வயிறுகள் மெலிந்திருந்தன. அவை, மண்டையோடுகள் தொங்கும் திரிசூலங்களைத் தரித்திருந்தன.(3)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவற்றில் இரு பிசாசுகள் பல சடலங்களை இழுத்துக் கொண்டிருந்தன. அவை தங்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்த மிக இழிந்த சொற்களைப் பேசிக் கொண்டும், உரக்க சிரித்துக் கொண்டும் இருந்தன.(4) அவை நடந்து சென்ற போது பெரும் மரங்களை உலுக்கி தங்கள் தொடைகளாலும், கால்களாலும் அவற்றை இழுத்தன.(5) அவை தங்கள் பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டிருந்தன. அவற்றின் உடல் முழுவதும் எலும்புகளாலும், மஜ்ஜைகளாலும், குருதியாலும் மறைக்கப்பட்டிருந்தது.(6) அவை, "கிருஷ்ணா, கிருஷ்ணா, மாதவா" என்றும், அந்தத் பிரபுவின் பல்வேறு புனிதப் பெயர்களையும் சொல்லிக் கொண்டிருந்தன. அவை, "தலைவன் விஷ்ணுவின் தரிசனம் எப்போது நமக்குக் கிடைக்கும்? இப்போது அவன் எங்கிருக்கிறான்? பிரபுவான ஹரி எங்கே வசிக்கிறான்? அவனது தரிசனத்தை நாம் பெறுவது எவ்வாறு? இந்த ஆசிரமத்தில் எங்கோ இருக்கிறான் என்று கேள்விப்பட்டோமே.(7,8)
இந்திரனின் தம்பியும், மலரும் தாமரை மலர்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தலைவன் ஹரியை நாம் எங்கே சந்திப்பது? பக்தர்களால் புண்டரீகாக்ஷன் என்றும், அகங்காரமற்றவர்களால் பிரம்மம் என்றும் அழைக்கப்படுபவனுமான விஷ்ணுவைக் காணும் ஆவல் தணியவில்லையே.(9) அண்டத்தின் தலைவனும் {ஜகந்நாதனும்}, அண்ட அழிவின் போது அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவனும், பிறப்பற்றவனுமான தலைவன் ஹரியை நாம் எவ்வாறு காண்போம்?(10) உயிரினங்கள் அனைத்திற்கும் உறைவிடமாக இருப்பவனும், அண்டத்தில் வெளிப்படும்போது பேராற்றலை வெளிப்படுத்துபவனுமான அந்தத் தலைவனைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது.(11)
வாழ்வின் மிக அருவருப்பான நிலை என்று உயிரினங்கள் அனைத்தாலும் வெறுக்கப்படும் இந்தப் பிசாசு நிலையை அடைவதற்குக் கடந்த காலத்தில் {முற்பிறவியில்} நாம் என்ன செய்தோம் என்பதை அறிவோமில்லை. நாம் மனித ஊனுண்டு, களங்கமடைந்து அனைவரின் மனங்களிலும் அச்சத்தை உண்டாக்கி வருகிறோம்.(12,13) ஐயோ, நம் முற்பிறவிகளில் பாவச் செயல்கள் பலவற்றை நாம் இழைத்திருக்கிறோம். நம்முடைய இந்த இழிநிலை அதன் விளைவே. இந்த இழிவாழ்விலும் ஏதோ ஒரு மகிழ்ச்சியை நாம் அடைகிறோம்.(14) முற்பிறவி தீச்செயல்களின் விளைவுகள் தீரும்வரை, அனைவராலும் வெறுக்கப்படுவதும், பிறருக்குத் தொல்லை தருவதுமான இந்தப் பிசாசு வடிவம் நீங்காது.(15) முற்பிறவிகள் பலவற்றிலும் செய்த கணக்கற்ற பாவங்களை நாம் சேர்த்திருக்க வேண்டும். இன்றுவரை பாவ விளைவுகள் தீராததன் காரணம் இதுவே.(16)
பல்வேறு உயிரினங்களைக் கொன்று, இந்த நாய்க்கூட்டத்துடனும், நமது படைவீரர்களுடனும் பூமியில் திரிந்து கொண்டிருக்கிறோம். இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும், எது செய்யப்படவேண்டும், எது தவிர்க்கப்பட வேண்டும் என்பது புரியாத பால பருவத்தில் அறியாமையில் மறைந்திருக்கின்றனர்.(17) அவர்கள் சற்றே வளர்ந்ததும் {யௌவனத்தில் / இளமையில்} அவர்களது புத்தி, புலனின்பத்தின்பால் கொண்ட ஈர்ப்பில் களங்கமடைகிறது. அந்நேரத்தில் அவர்கள், புலன்களை நிறைவடையச் செய்யப் பயன்படும் செல்வத்தை மேலும் மேலும் திரட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(18) புலன் நிறைவிலேயே முழுமையாக ஈடுபடும் அவர்கள், உயர்ந்த நன்மைக்காகச் செய்ய வேண்டியதைப் புரிந்து கொள்ள ஒருபோதும் முயல்வதில்லை. புலனின்பத்தில் முழுமையாக ஈர்க்கப்பட்ட மனத்தைக் கொண்டவனால், எது உயர்ந்த நன்மை என்பதையும், எது {நன்மை} இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.(19)
அவர்கள் முதிரும்போது தங்களைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கும் பல்வேறு பிணிகளின் கொள்ளிடங்களாகத் திகழ்கின்றனர். இருப்பினும் கட்டுப்பாடற்ற தங்கள் புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களால், தங்களுக்கான உயர்ந்த நன்மையை அடைய எது செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இறந்த பிறகு அவர்கள் மலமும், ஜலமும் சூழ்ந்த ஓர் அன்னையின் கருவறைக்குள் மீண்டும் புகுந்து, தொடர்ச்சியாகப் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். அதன்பிறகு அவர்கள் அந்தப் பயங்கரக் கருவறையைவிட்டு வெளியேறி மீண்டும் பிறப்பு, இறப்பு என்ற சுழற்சிக்குள் நுழைகின்றனர்.(20-22)
அவர்கள் வாழ்ந்து வரும்போதும் பிறரைத் துன்புறுத்துவதன் மூலம் மேலும் மேலும் பாவங்களைத் திரட்டுகின்றனர். இவ்வாறே அவர்கள் மூவகைத் துன்பங்களைக் கொண்ட இவ்வுலகில் அறியாமையின் காரணமாகப் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.(23)
இருப்புக்கான {வாழ்க்கைக்கான} இந்த விளக்கம் பண்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட அனைவருக்கும் பொருந்தும். ஆயுதத்தின் மூலமோ, பிற கருவிகளின் மூலமோ இந்த இருப்பை விலக்குவது சாத்தியமில்லை. உடலை சுயமெனக் கருதுவோர் ஒருபோதும் இந்த இருப்புக்கு முடிவைக் கொண்டு வருவதில்லை.(24,25)
அத்தகைய மனிதர்கள், "நான் என் பகைவனைக் கொன்று, அவனுடைய செல்வங்கள் அனைத்தையும் அபகரிப்பேன். அவனுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு அதை என் புலன் நிறைவுக்காகப் பயன்படுத்துவேன். அவன் பலவீனன், நானோ பலமிக்கவன். எனவே நான் பலவந்தமாக அவனது செல்வங்கள் அனைத்தையும் அபகரிப்பேன்" என்று நினைக்கிறார்கள். இத்தகைய எண்ணங்களில் ஈடுபடும் மூடர்களே எப்போதும் பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறார்கள்.(26,27)
சங்கு, சக்கர, கதாதரனும், ஆதிதேவனும், புராணாத்மாவும், பிரம்மவாதிகள் அனைவரின் ஆத்மாவாகத் திகழ்பவனுமான ஹரியால் மட்டுமே, துன்பங்கள் அனைத்துக்கும் வேர்க்காரணமான இருப்பு எனும் வியாதிக்கான தீர்வை வழங்க முடியும்.(28) இதையறிந்தே நாம் ஹரியின் தரிசனத்தை வேண்டுகிறோம்" என்றன. அவ்விரு பிசாசுகளும் இவ்வாறு பேசிக்கொண்டே ஹரியின் {கிருஷ்ணனின்} முன்பு தோன்றின" {என்றார் வைசம்பாயனர்}.(29)
பவிஷ்ய பர்வம் பகுதி – 54ல் உள்ள சுலோகங்கள் : 29
மூலம் - Source |