(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய பதரிகாஷ்ரமே ஆதித்யஸ்வீகாரம்)
Krishna welcomed at Badarikashrama | Bhavishya-Parva-Chapter-52 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனை வரவேற்ற பதரிகாசிரமவாசிகள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருந்த முனிகணங்கள் {முனிவர்க்கூட்டம்}, தேவதேவன் {கிருஷ்ணன்} வந்ததைக் கண்டு அவனை வரவேற்க விரைந்து சென்றனர்.(1) இந்த முனிவர்கள் அங்கே {பதரிகாஷ்ரமத்தில்} நீண்ட காலம் வேள்விகளைச் செய்து தியானம் பயின்று வந்தவர்களாவர். அவர்களில் சிலர் சடை தரித்திருந்தனர், வேறு சிலர் முழுமையாக மழித்த தலையுடன் இருந்தனர், வேறு சிலர் நரம்புகள் புடைத்துத் தெரியுமளவுக்கு மெலிந்திருந்தனர்.(2)
சிலர், உடலைப் பராமரிக்கும் நாட்டத்தைக் கைவிட்டவர்களாகவும், சிலர் வேதாளங்களைப் போலவும் தெரிந்தனர். சிலர் கற்களால் நசுக்கப்பட்ட தானியங்களை உண்டனர், வேறு சிலர் இலைகளை மட்டுமே உண்டு தங்கள் உயிரைத் தாங்கி வந்தனர்.(3) அவர்கள் வேதங்களை முழுமையாக அறிந்தவர்களாகவும், கடும் விரதங்களை மேற்கொண்டு தவமியற்றுபவர்களாகவும் இருந்தனர். விஷ்ணுவின் பக்தர்களான அவர்கள் அனைவரும் எப்போதும் அவனையே நினைத்து வழிபட்டு வந்தனர்.(4)
அந்த முனிவர்களில் பலர் இருப்பில் இருந்து முக்தியடையும் நிலையில் இருந்தனர். பலர் காலம் கடப்பதை அறியாத நிலையில் தியானத்தில் மூழ்கியிருந்தனர். மேலும் பலர் தங்கள் இதயங்களில் விஷ்ணுவை நேரடியாகக் காணும் அளவுக்குத் தவமுழுமையை அடைந்திருந்தனர்.(5) அந்த முனிவர்களில் சிலர் வருடம் ஒருமுறை உண்டனர். வேறு சிலர் நீருக்குள் வசித்திருந்து நீரை மட்டுமே பருகி உயிரைத் தாங்கி வந்தனர். இன்னும் சிலர் ஷ்ருதிஸ்ம்ருதிகளில் பரிந்துரைக்கப்படும் நற்காரியங்களைச் செய்து இந்திரனின் இதயத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தனர்.(6)
ஓ! மன்னா, வசிஷ்டர், வாமதேவர், ரைப்பியர், தூம்ரர், ஜாபாலி, காசியபர், கண்வர், பரத்வாஜர், கௌதமர்,(7) அத்ரி, அஷ்வசிரஸ், பத்ரர், சங்கரர், சங்கநிதி, குணி, பாராசர்யர், பவித்ராக்ஷர், யாஜ்ஞவல்கியர்,(8) கக்ஷீவான், அங்கிராஸ் முனி, தீப்ததபாஸ், அஸிதர், தேவலர், மஹாதபஸ்வியான வால்மீகி ஆகியோர்(9) தங்கள் கைகளைக் கூப்பியபடியே தங்கள் குடில்களில் இருந்து வெளிப்பட்டு ஈஷ்வரனை {கிருஷ்ணனை} தரிசிக்கும் ஆவலுடன் வெளியே வந்தனர்.(10) அவர்கள், பக்திமான்களிடம் கருணை கொண்டவனும், பாவங்களை அழிக்கும் ஹரியும், நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவும், ஜனார்த்தனனுமான கிருஷ்ணனைப் பணிந்து வணங்கினர்.(11) அவர்கள், "கிருஷ்ணா, தேவதேவா, கேசவா, பிரணவாத்மாவே, ஜகந்நாதா, ஹரியே, நாங்கள் தலை வணங்கி உன்னை வழிபடுகிறோம்.(12) கிருஷ்ணா, விஷ்ணுவே, ரிஷிகேசா, கேசவா, ஓயாமல் நாங்கள் உம்மை வழிபடுகிறோம்" என்றனர்.
அந்தப் பிராமணர்கள், ஜகத்பதியான கிருஷ்ணனை இவ்வாறு வணங்கிவிட்டு,(13) "ஜகத்பதியே, இதோ அர்க்கியம், இதோ பாத்யம், இதோ சுகமாக அமரும் ஆசனம். தேவா, உன் தரிசனத்தால் நாங்கள் நித்திய அருளை அடைந்தோம். எங்களிடம் நிறைவடைவாயாக.(14) உன்னை மகிழ்விக்க நாங்கள் செய்ய வேண்டியதென்ன? பிரபுவே, நாங்கள் தொண்டு செய்வதெவ்வாறு? ஹரியே, உன் பாத கமலங்களுக்குத் தீங்கேதும் செய்தோமா?" என்று கைகளைக் கூப்பிக் கொண்டு பணிவுடன் கேட்டனர்.(15)
கிருஷ்ணனும், தேவர்களும் அந்த முனிவர்கள் செய்த பூஜையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பிறகு கிருஷ்ணன், "உன்னத முனிவர்களே, நீங்கள் உத்தம பூஜையைச் செய்தீர்கள். உங்கள் தவங்களின் விளைவால் நீங்கள் அனைவரும் உயர்வடைவீராக" என்றான்.(16)
புராணாத்மாவான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, இவ்வாறு சொல்லிவிட்டுத் தன் வாகனமானக் கருடனுடன் சேர்ந்து ஓரிரவு மகிழ்ச்சியான மனத்துடன் தங்கினான்.(17) அவ்வாறு தங்கியிருந்தபோது அவன் அங்கே இருந்த முனிவர்களின் வேள்விகள், தவங்கள் ஆகியவற்றையும், அவர்கள் தங்கள் சீடர்களைப் பராமரிப்பது குறித்தும் விசாரித்தான்.(18)
கிருஷ்ணனின் விசாரணைகளுக்கு மறுமொழியாக அவர்கள், "ஜகந்நாதா, உன் கருணையால் அனைத்துச் செயல்களையும் நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம்" என்றனர்.(19)
பிறகு, பதரிகாசிரமத்தைச் சேர்ந்த முனிவர்கள் அனைவரும் கனிகள், கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றைக் கிருஷ்ணனுக்கும், தேவர்களுக்கும் கொடுத்தனர். கிருஷ்ணன் அவர்களின் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவர்களின் தொண்டில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(20)
பவிஷ்ய பர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 20
மூலம் - Source |