(வாமநப்ராதுர்பாவ꞉)
Vishnu's birth as dwarf | Bhavishya-Parva-Chapter-45 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : வாமனனாகப் பிறந்த விஷ்ணு; இந்திரனின் வேண்டுதல்; பலியின் வேள்விக்கு வாமனானை அழைத்துச் சென்ற பிருஹஸ்பதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்தத் தேவன் பிறந்த போது ஏழு குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகளும்}, மரீசியும் பிறரும், சப்தரிஷிகளும் அவனை வணங்கினர்.{1} பரத்வாஜர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்ரர், ஜமதக்னி, வசிஷ்டர், முழுமையாக மேகத்தால் மறைக்கப்படும்போது தோன்றும் சூரியன், தலைவர் அத்ரி ஆகியோர் அங்கே வந்தனர்.{2} மரீசி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, குடிமுதல்வன் தக்ஷன் ஆகியோர் அவனை வணங்கினர்.{3} ஔர்வர், வசிஷ்டரின் மகனான ஸ்தம்பர், காசியபர், கபீவான், அகபீவான், தத்தோநி, சியவனர்,{4} வாசிஷ்டர்கள் என்ற பெயரைக் கொண்ட வசிஷ்டரின் பிற மகன்களான எழுவர், ஹிரண்யகர்பனின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவருமான ஔர்வஜாதர்,{5} கார்க்கியர், பிருது, அகிரயர், ஜன்யர், வாமனர், தேவபாஹு, யதுதரர், சோமஜர், பர்ஜன்யர்,{6} ஹிரண்யரோமர், வேதசிரஸ், சத்யநேத்ரர் {சப்தநேத்ரர்}, நிம்பர், அதிநிம்பர், சியவனர், சுதாமர், விரஜர்,{7} அதிநாமர், ஸஹிஷ்ணு ஆகியோர் அவனை வணங்கினர்.
பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் மேனியைக் கொண்ட அப்சரஸ்கள்,{8} நாராயணனின் முன்பு நடனம் புரிந்தனர். கந்தர்வர்கள் வானில் எக்காளமிசைத்தனர்.{9}(1-9) தும்புரு, பிற கந்தர்வர்களுடன் சேர்ந்து பாடத் தொடங்கினான். மஹாஸ்ருதி, சித்திரசிரன், ஊர்ணாயு, அநகன்,{10} கோமாயு, சூர்யவர்சாஸ், சோமவர்சாஸ், யுகபன், திருணபன், கார்ஷ்ணி, நந்தி, சித்திரரதன்,{11} {திரிசிரஸ், திரயோதஸ்}, சாலிஷிரன், பர்ஜன்யன், கலி,{12} நரேந்திரன், ஹாஹா, ஹுஹூ, பெரும்பிரகாசம் கொண்ட கந்தர்வனான ஹம்சன் ஆகியோர் கேசவனின் முன்பு பாடத் தொடங்கினர்.{13}
நீண்ட விழிகளைக் கொண்டவர்களும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவர்களும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அழகிய அப்சரஸ்கள் அங்கே நடனமாடத் தொடங்கினர்.{14,15} சுமத்யை, சாருமத்யை, பிரியமுக்கியை, அழகிய அநூகை, ஜாமீ, மிஷ்ரகேசி, அலம்புசை,{16} மரீசி, சூசிகை, வித்யுத்பர்ணை, திலோத்தமை, அத்ரிகை, லக்ஷ்மனை, ரம்பை, {மநோரமை},{17} அழகிய அசிதை, சுபாஹு, சுபாகை, ஊர்வசி, சித்திரலேகை, சுக்ரீவை, சுலோசனை,{18} புண்டரிகாஸுகந்தை,{19} சுரதை, பிரமாதினி, நந்தை, சாரஸ்வதி,{19} மேனகை, ஸஹஜன்யை, பர்ணிகை, புஞ்ஜிகஸ்தலை ஆகியோரும் இன்னும் ஆயிரக்கணக்கான பிற அப்சரஸ்களும் அங்கே நடனம் புரிந்தனர்.{20}
காசியேபர்களும், சூரியப்பிரகாசம் கொண்டவர்களுமான தாதன், ஆர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பாகன், இந்திரன், விவஸ்வான், பூஷன், துவஷ்டா, சவிதன், விஷ்ணு ஆகிய பனிரெண்டு ஆதித்யர்களும் அந்த உயரான்ம தேவர்களின் தலைவனை வணங்கினர்.{21,22} ஓ! மன்னா {ஜனமேஜயா}, மிருகவியாதன், சர்ப்பன், பெருஞ்சக்திவாய்ந்த நிர்ருதி, அஜைகபாத், அஹிர்புத்நியன், பினாகி, அபராஜிதன், தஹனன், ஈஷ்வரன், கபாலி, ஸ்தாணு, பர்கன் ஆகிய ருத்திரர்கள் அங்கே இருந்தனர். அசுவினி இரட்டையரும், அஷ்டவசுக்களும், பெருஞ்சக்திவாய்ந்த மருத்துகளும்,{23-25} விஷ்வேதேவர்களும், சாத்தியர்களும் என அனைவரும் கரங்களைக் கூப்பியபடி அவன் முன்பு நின்றனர்.
சேஷனின் தம்பியான பெரும் வாசுகி,{26} {தக்ஷகன்}, அபுகுஞ்ஜன், திருதராஷ்டிரன், வலாஹன் ஆகியோரும், இன்னும் பெருஞ்சக்திவாய்ந்த, கோபக்கார, பிரகாசமிக்க நாகர்கள் அனைவரும் அவன் முன்பு கைகளைக் கூப்பியபடி நின்றனர். தார்க்ஷன், அரிஷ்டநேமி, பெருஞ்சக்திவாய்ந்த கருடன்,{27,28} அருணன், அருணி ஆகியோர் அனைவரும் கைகளைக் கூப்பியபடி அவன் முன்பு நின்றனர். உலகத்தின் படைப்பாளன் {பிரம்மன்}, பெரும் குடிமுதல்வர்கள் அனைவருடன் அங்கே வந்து பேசினான்.{29}(10-29)
பிரம்மன், "உலகங்கள் அனைத்தும் எவனிடம் இருந்து வெளிப்பட்டனவோ அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த நித்திய தலைவனான விஷ்ணு இவன்" என்றான்.{30} தலைவன் பிரம்மன் இதைச் சொல்லி, தேவரிஷிகளுடன் சேர்ந்து அந்தத் தேவர்களின் மன்னனை வணங்கிவிட்டு, தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.{31}
தலைவன் {விஷ்ணு}, கசியபரின் மகனாகப் பிறந்த போது, பயங்கரநாளின் மேகங்களைப் போலக் குருதிச் சிவப்பான கண்களுடன் குள்ள {வாமன} வடிவில் இருந்தான்.{32} அவனுடைய மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறி இருந்தது. அப்சரஸ்கள் விழிகள் விரிய அவனைக் கண்டனர்.{33} ஒரே நேரத்தில் வானில் எழுந்த ஆயிரஞ்சூரியர்களைப் போல அவன் பிரகாசித்தான்.{34} அந்த அழகிய தலைவன், பூர், புவ லோகங்களையும், பிற லோகங்களையும் ஆதரிப்பவனாக இருந்தான். அவன் உயர்ந்த தோள்களையும், தூய தலைமுடியையும் கொண்டிருந்தான்.{35} அவன் நல்லோரின் புகலிடமாகவும் {கதியாகவும்}, கொடூரர்களுக்கு உறைவிடமேதும் அளிக்காதவனாகவும் இருந்தான். பெரும் யோகிகள் அவனையே மிகச் சிறந்த யோகமாகக் கருதுகின்றனர்.{36} அவன் எட்டு வகைத் தலைமைத்துவ சக்திகளை {அஷ்டகுணங்களைக்} கொண்டிருந்தான். மக்கள் அவனைத் தேவர்களில் முதன்மையானவன் என்று அழைப்பார்கள்.{37} அந்த நித்திய புருஷனின் மூலம் முக்தியை அடைய ஏங்கும் விப்ரர்களும், உலகத்துக்கு அஞ்சுபவர்களும், பிறப்பு இறப்பில் இருந்து விடுபடுகிறார்கள்.{38} அனைத்து ஆசிரமங்களும் {வாழ்வுமுறைகளும்} அவனையே தபம் எனக் கொள்கின்றன. கடுந்தவம் பயின்றும், உணவைக் குறைத்தும் மக்கள் அவனுக்குத் தொண்டாற்றுகின்றனர்.{39}
ஆயிரந்தலைகளையும், சிவந்த கண்களையும் கொண்ட அனந்தனைப் போலச் சேஷனும், நாகலோகத்தைச் சேர்ந்த பிற நாகர்களும் அவனை வழிபடுகின்றனர்.{40} தேவலோகத்தை அடைய விரும்பும் விப்ரர்கள் அவனை யஞ்ஜமாக வழிபடுகின்றனர். எங்கும் இருந்தாலும் அவன் ஒருவனாகவே இருக்கிறான். மிகச் சிறந்த கவியான அவனை வேள்வி காணிக்கைகளை விதிப்பவனாக வேதங்கள் பாடுகின்றன. அறமே அவனது ஒளியாகத் திகழ்கிறது.{41} சூரியனும் சந்திரனும் அவனது கண்களாகவும், ஆகாயம் அவனது உடலாகவும் இருக்கின்றன.
எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன் தேவர்களில் மிகச் சிறந்த சொற்களில்,{42}(30-42) "அறிந்தும் என் யோக சக்தியின் மூலம் நான் இந்தச் சிறுவனின் நிலையை அடைந்திருக்கிறேன். தேவர்களே, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நான் வரமென்ன கொடுக்க வேண்டும்? நீங்கள் வேண்டுவதைச் சுகமாகக் கேட்பீராக" என்றான்.{43}
இந்திரனும், பிற தேவர்களும், அந்த உயரான்ம குள்ளனின் {சிறுவனின் / வாமனனின்} சொற்களைக் கேட்டு, அந்தக் கசியபரின் மகனிடம் கூப்பிய கைகளுடன்,{43} "அனைத்தையும் அறிந்தவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான தைத்திய மன்னன் பலி, பிரம்மனால் அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தினாலும், செய்த தவத்தின் பலனாலும் விளைந்த ஆற்றல், தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மொத்த அண்டத்தையும் அடைந்திருக்கிறான். அவனை எங்கள் எவராலும் கொல்ல முடியாது. நீ மட்டுமே அவனை வெல்லவல்லவனாக இருக்கிறாய். வேறு எவராலும் அவனை வீழ்த்த முடியாது.{44-47} எனவே, ஓ! தலைவா, தேவர்களின் அச்சங்களை விலக்குபவனும், பக்தர்கள் விரும்புகிறவனும், வரங்களை அளிப்பவனுமான உன்னிடம் நாங்கள் அனைவரும் புகலிடம் நாடுகிறோம்.{48} ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, தேவர்களின் பெரும் மன்னா, ரிஷிகளின் நன்மைக்காகவும், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காகவும், கசியபர், அதிதி ஆகியோரின் நிறைவுக்காகவும்,{49} பித்ருகள் கவ்யத்தையும், தேவர்கள் ஹவ்யத்தையும் முறையாக உண்ணட்டும்.{50} தேவர்களின் பெரும் மன்னனான மஹேந்திரனிடம் மீட்டளிக்க மூவுலகங்களையும் மீண்டும் அடைவாயாக.{51} அந்தத் தானவன் ஒரு குதிரை வேள்வியைச் செய்து வருகிறான். எனவே, நீ உலகங்களை மீண்டும் அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக" என்றனர்".{52}(43-52)
வைசம்பாயனர், "தேவர்கள் இவ்வாறு சொன்னதும் குள்ள வடிவில் இருந்த விஷ்ணு, தேவர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் வகையில் அவர்களிடம் பேசினான்.(53)
விஷ்ணு, "பேரொளி படைத்த ரிஷியும், அங்கிரசின் மகனும், வேதங்களை நன்கறிந்தவருமான பிருஹஸ்பதி, என்னை அவனது {மஹாபலியின்} வேள்விக்கு அழைத்துச் செல்லட்டும். நான் அவனுடைய வேள்விக்களத்திற்குச் சென்று மூவுலகங்களையும் மீட்பதற்குரிய வழிமுறையைச் சிந்திக்கிறேன்" என்றான்.(54,55)
அதன்பிறகு, பெரும்பிரகாசம் கொண்டவரும், நுண்ணறிவுமிக்கவருமான பிருஹஸ்பதி, எல்லாம்வல்லவனான அந்தக் குள்ளனை {வாமனனை}, பேரறிவுசார்ந்த சக்திகளைக் கொண்ட தைத்திய மன்னன் பலியின் வேள்விக் களத்திற்கு அழைத்துச் சென்றார்.{56} சிறுவனின் வடிவை ஏற்ற அந்தக் குள்ளன் {வாமனன்}, புகைபோன்ற கண்களைக் கொண்டிருந்தான், பளபளக்கும் பூணூலையும், மான்தோலையும் அவன் அணிந்திருந்தான். அவன் {வாமனன்}, ஒரு கையில் குடையையும், மறு கையில் தண்டத்தையும் கொண்டிருந்தான்.{57} சிறுவனாக இருந்தாலும் அவன் முதிய மனிதனைப் போலத் தோற்றமளித்தான்.{58} பிரம்மனாலும், பிற தேவர்களாலும் தியானிக்கப்படுபவனும், குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} தலைவனும், சூரர்களில் முதன்மையானவனுமான அவன், தைத்திய மன்னன் விரோசனனுடைய மகனான பலியின் வேள்விக் களத்திற்கு இவ்வாறே சென்றான்.{59,60}(56-60) ஆயுதமும், கவசமும் தரித்த தைத்தியர்களால் உரிய முறையில் வாயில் காக்கப்பட்டாலும் அவன் திடீரென அங்கே நுழைந்தான்.(61) பெருஞ்சக்திவாய்ந்தவனான அந்தக் குள்ளன் {வாமனன்}, மந்திரங்கள் ஓதுவதை நன்கறிந்த புரோஹிதர்களால் முற்றும் சூழப்பட்ட தைத்திய தானவன் மன்னன் பலியின் முன்பு தோன்றினான்.(62) அந்தத் தலைவன், பிரம்மரிஷிகளால் நிறைந்த வேள்விக்களத்தை அடைந்து, யஞ்ஜத்தோடு அடையாளங்காணப்படுபவனாகத் தன்னை விளக்கிக் கொண்டான்.{63} யஞ்ஜமே ஆனவனும், வேள்விச் சடங்குகளின் தலைவனுமான அந்த நித்திய புருஷன், வேள்வியைக் குறித்து விரிவாக விளக்கிவிட்டு, பல்வேறு மேற்கோள்களையும் சொல்லி சுக்ரரையும் {சுக்ராச்சாரியாரையும்}, பிற புரோகிதர்களையும் வென்றான்.{64} அவர்கள் எவராலும் எந்தப் பதிலையும் முன்வைக்க முடியவில்லை. எல்லாம் வல்ல தலைவன், வேதங்களில் விதிக்கப்பட்ட காரணங்களையும், வாதங்களையும் அற்புதம் நிறைந்த வாக்கால் எடுத்து வைத்து, தன்னையே அந்த வேள்வியாகப் பலியிடம் விளக்கிச் சொன்னான்.{65,66}
விரோசனின் மகனான பலி, குள்ளவடிவில் இருந்தவனும், பெரும்பிரகாசம் கொண்டவனுமான அந்தச் சிறுவனின் வாதத்தைக் கேட்டு பெரியோரான ரிஷிகளும், உபாத்யாயர்கள் {ஆசான்களும்} அமைதியடைந்ததைக் கண்டு அதை அற்புதமென நினைத்தான்.{67,68} ஆச்சரியத்தால் நிறைந்த அவன், தலைவணங்கி கைகள் கூப்பியவனாக, "எங்கிருந்து வருகிறீர்? நீர் யார்? நீர் யாருடைய மகன்? இங்கே உமக்கு என்ன தேவை? இத்தகைய நுண்ணறிவுமிக்க, அழகான, நல்ல தோற்றமுடைய, ஆன்மப் பண்பாட்டைக் கொண்ட,{69,70} வேதங்களை நன்கறிந்த அழகிய பிராமணச் சிறுவனை இதற்கு முன்பு ஒருபோதும் நான் கண்டதில்லை. தேவர்கள், ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ராட்சசர்கள்,{71} பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோரில் எவரும் இத்தகைய மகனைக் கொண்டிருக்கவில்லை. நீர் யாராக இருந்தாலும் உம்மை நான் வணங்குகிறேன். நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான் {பலி}.(63-72)
பலியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், உகந்த வழிமுறைகளை அறந்தவனும், எவராலும் உணரமுடியாத இயல்பைக் கொண்டவனுமான அந்தக் குள்ளன், சற்றே புன்னகைத்துப் பேசத் தொடங்கினான்.(73)
பவிஷ்ய பர்வம் பகுதி – 45ல் உள்ள சுலோகங்கள் : 73
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |