(வாமநஸ்ய பலியஜ்ஞே கமநம் த்ரிபாதபூமிலாப꞉ த்ரிவிக்ரமமூர்திதாரணம் ச)
Bali promises to give lands to the dwarf | Bhavishya-Parva-Chapter-46 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : மூன்றடி நிலம் கேட்ட வாமனன்; பலியைத் தடுத்த சுக்ரரும், பிரகலாதனும்; கொடையளித்த பலி; வாமனனின் திரிவிக்கிரம விஷ்வரூபம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது விஷ்ணு {குள்ள வடிவில் இருந்த வாமனன்}, "அசுரர்களின் மன்னனால் {மஹாபலியால்} மேற்கொள்ளப்படும் இந்த வேள்வி அற்புதம் நிறைந்ததாக இருக்கிறது. நன்கு தயாரிக்கப்பட்ட பல்வேறு வகை உணவுப்பொருட்கள் இங்கிருக்கின்றன. ஓ! பெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னா, பெரும்படைப்பாளனான பிரம்மன், தேவர்களின் மன்னனான சக்ரன், யமன், வருணன் ஆகியோர் செய்த வேள்விகளை எல்லாம் உன் வேள்வி விஞ்சிவிட்டது.(1-2) பாவங்களை அழிக்க உன்னால் மேற்கொள்ளப்படுவதும், சொர்க்கத்தை அடைய வழிவகுப்பதும், வேள்விகள் அனைத்திலும் சிறந்ததுமான இந்தக் குதிரைவேள்வி, பிரம்மவாதிகளால் அங்கீகரிக்கப்படுபவையும், விருப்பத்திற்கு உரியவையுமான அனைத்துப் பொருள்களாலும் நிறைந்திருக்கிறது.{3,4}
வேள்விகளில் சிறந்தது அஷ்வமேதமே என ஸ்ருதி சொல்கிறது. பொற்கொம்புகளுடனும், இரும்புவளையங்களுடனும் கூடியதும், மனம் போன்ற வேகமான நடையைக் கொண்டதுமான பன்றியின் வடிவில் இருப்பதும், ஏராளமான தங்கத்தைக் கொண்டதுமான இந்தப் பெரும் வேள்வி அண்டத்தின் பிறப்பிடமாகவும், புனிதம் நிறைந்ததாகவும் இருக்கிறது.{5} இந்த வேள்வியைச் செய்து வேள்வி குதிரையைச் செலுத்தும் மனிதனின் பாவங்கள் அழிகின்றன. வேதங்களை நன்கறிந்த விப்ரர்கள், இந்த வேள்விக் குதிரையை நெருப்பென அழைக்கிறார்கள்.{6} ஆசிரமங்கள் அனைத்திலும் இல்லற ஆசிரரமே {கிருஹாஸ்ரமமே} சிறந்ததாக இருப்பதைப் போலவும், மனிதர்களில் சிறந்தவர்களாகப் பிராமணர்கள் இருப்பதைப் போலவும், அசுரர்களில் முதன்மையானவனாக நீ இப்போது இருப்பதைப் போலவும் வேள்விகளில் சிறந்த இந்தக் குதிரை வேள்வியும் இருக்கிறது" என்றான் {வாமனன்}".{7}
வைசம்பாயனர், "தைத்திய மன்னன் பலி, குள்ளனின் {வாமனனின்} சொற்களைக் கேட்டுப் பெரும் நிறைவடைந்தான்.{8}(3-8) அப்போது பலி, "ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்? நான் உமக்கு என்ன கொடுக்க வேண்டும்? உமக்கு நன்மை நேரட்டும். நீ விரும்பிய பொருளை வேண்டினால் அதை நீர் அடைவீர்" என்றான்.(9)
குள்ளன் {வாமனன்}, "ஓ! தானவா, அரசையோ, வாகனங்களையும், ரத்தினங்களையோ, பெண்களையோ நான் வேண்டவில்லை. நீ நிறைவடைந்தால், உன் மனம் அறத்தில் நிலைத்திருந்தால், என் ஆசானின் வேள்வி இல்லத்தைக் கட்டுவதற்காக மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படக்கூடிய} நிலத்தை நான் உன்னிடம் வேண்டுகிறேன். நான் வேண்டும் உயர்ந்த பொருளை எனக்கு அளிப்பாயாக" என்று கேட்டான்.(10,11)
பலி, "ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படும்} நிலத்தால் நிறைவேறும் உமது நோக்கமென்ன? நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அடிகளைக் கொண்ட நிலத்தை வேண்டுவீராக" என்று சொன்னான்.(12)
சுக்கிரர் {மஹாபலியிடம்}, "ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! பேரசுரா, இவனுக்குக் கொடையேதும் உறுதியளிக்காதே; இவனை நீ அறியமாட்டாய். இவனே பெருந்தலைவன் ஹரியாவான்.{13} இவன் தன் மாயையின் மூலம் குள்ள வடிவை ஏற்று, உன்னைக் கொண்டு தேவர்களின் மன்னனுக்கு நன்மை விளைவிக்கவே இங்கு வந்திருக்கிறான். எல்லாம் வல்ல தலைவனால் பல்வேறு வடிவங்களை ஏற்க முடியும்" என்றார்.{14}(13,14)
சுக்கிரரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் தியானித்த பலி, பிறகு தன் மனத்தில் ஒரு தீர்மானத்தை அடைந்து, "இவரைவிடத் தகுதியானவரை என்னால் வேறெங்கு பெற முடியும்" என்று சொல்லி பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். பிறகு பொன்னாலான புல்லை எடுத்து அசைவற்றவனாக அங்கே நின்றான்.{15}
பிறகு பலி, "ஓ! தாமரைக் கண்களைக் கொண்ட விப்ரர்களில் முதன்மையானவரே, அமர்வீராக. இதோ கிழக்கு நோக்கி நான் நிற்கிறேன். "கொடுப்பாயாக" என்று சொல்லி என் கொடையை ஏற்பீராக.{16} எந்த நிலங்களை நீர் எடுத்துக் கொள்ளப் போகிறீர். உமது மூன்று காலடியின் பரப்பு எவ்வளவு? அதை நான் கொடுப்பேன். நீரை எடுப்பீராக. உமது ஆசானின் சொற்கள் பொய்க்காதிருக்கட்டும்" என்றான்.{17}(15-17)
சுக்கிரர், "ஓ! தைத்திய மன்னா, இவனுக்குக் கொடையேதும் அளிக்காதே. நிச்சயம் இவன் விஷ்ணுவே என்பதை நான் அறிவேன். அற்புதமான பக்தி இங்கே பொருந்தி அமைவதேன்?" என்றார்.{18}
பலி, "நான் வஞ்சிக்கப்படவில்லை. தலைவன் விஷ்ணுவே என் வேள்விக்கு வந்திருக்கிறான். இந்தத் தேவதேவன் என்னிடம் கேட்பவை எதையும் நான் கொடுப்பேன்.{19} நான் கொடையளிக்க விஷ்ணுவை விடத் தகுந்தவன் வேறு எவன்?" என்று சொன்னான். பலி இதைச் சொல்லிவிட்டு உடனேயே நீரை எடுத்துக் கொண்டான்.{20}(18-20)
குள்ளன் {வாமனன்}, "ஓ! தானவர்களில் பாவமற்ற மன்னா, என் மூன்று காலடிகளில் மறையும் நிலம் எனக்குப் போதுமானதாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது உண்மைதான். அஃது ஒருபோதும் வேறுவகையாகாது" என்றான்".(21)
வைசம்பாயனர், "பகைவரைக் கொல்பவனும், விரோசனின் மகனும், தைத்தியர்களின் மன்னனுமான பலி, பெரும்பிரகாசமிக்கக் குள்ளனின் சொற்களைக் கேட்டு அவனது மேனியில் ஒரு மான்தோலைப் போர்த்தினான்.{22} பிறகு "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி நீர் நிறைந்த குடுவையொன்றைத் தீண்டினான்.{23} குள்ளனும் {வாமனனும்}, அசுர மன்னனின் அழிவை விரும்பி, அழிவைத் தரும் தன் கைகளை நீட்டினான்.{24} தானவர்களின் மன்னன் கிழக்கு நோக்கி நின்று, அவனிடம் நீரைக் கொடுக்க எத்தனித்தபோது பிரஹ்லாதன் அவனைத் தடுத்தான்.{25}
பெரும் ஞானியான பிரஹ்லாதன், அசுரர்களின் செழிப்பைக் கொள்ளையடிக்க விரும்பும் பெரும் ஹரியின் எதிர்பாராத வடிவைக்கண்டு,{26} "இந்தக் குள்ள பிராமணனுக்கு கொடையேதுமளிக்காதே.{27} இவனே முன்பு உன் பெரும்பாட்டனை {ஹரிண்யகசிபுவைக்} கொன்றவன். பெரும் ஞானியான இந்த விஷ்ணு உன்னைப் பழிதீர்க்கவே வந்திருக்கிறான்" என்றான்.{28}(22-28)
பலி, "இந்தத் தேவனுக்குக் கொடைகளை அளிக்கவல்லவனாக நான் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.{29} அண்டத்தின் தலைவனும், பிரம்மனுக்கும் மேலானவனும், இத்தகைய ஆதரவைக் காட்டுபவனுமான இவனை என் கொடைகளின் இலக்காகவே நான் அடைந்திருக்கிறேன். ஓ! அசுரர்களில் முதன்மையானவரே, வேள்விக்கான தீக்ஷை பெற்றவன் நிச்சயம் கொடைகளை அளிக்க வேண்டும்" என்றான்.{30}
அசுரர்களின் மத்தியில் இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விரோசனன் மகன் பலி, தலைவன் நாராயணனுக்கு மூன்றடி நிலத்தைக் கொடையாக அளித்தான்.{31}
பிரஹ்லாதன், "ஓ! தானவர்களின் மன்னா, இந்த விப்ரனுக்கு கொடையேதுமளிப்பதாக உறுதியளிக்காதே. இவனை விப்ர இளைஞனாக நான் கருதவில்லை. ஒரு பிராமணன் இவ்வாறு இருக்க மாட்டான்.{32} இவனது வடிவைக் கண்டு நரசிங்கமே மீண்டும் திரும்பிவிட்டதாக உண்மையாகவே நான் நம்புகிறேன்" என்றான்.{33}
பலி, எல்லையற்ற ஆற்றல் கொண்ட பிரஹ்லாதனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவனை நிந்திக்கும் வகையில்,{34}(29-34) "பிச்சை வேண்டுபவரின் கெடுபேறானது {துரதிர்ஷ்டமானது}, அவனை ஏமாற்றத்துடன் அனுப்பும் அரசனை வந்தடையும்.{35} ஒரு பிராமணனுக்கு உறுதிமொழியளித்த மனிதன், அதை நிறைவேற்றவில்லை என்றால், பாவியான அவன் தன் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நரகத்தை அடைவான்.{36} வறுமையில் வாட அஞ்சியே நான் இந்த நிலத்தை இவருக்குக் கொடையளிக்கிறேன்; இவரை விட வேறு யார் தகுந்த பிராமணர்? இவரைவிட மேலான எவரும் இல்லாதபோதே நான் இந்த நிலத்தை இவருக்குக் கொடுக்கிறேன்.{37} குள்ள வடிவில் என்னிடம் பிச்சை வேண்டும் இருபிறப்பாளரைக் கண்டு நான் பெரிதும் நிறைவடைகிறேன். எனவே நான் இவருக்குக் கொடையளிக்கப் போகிறேன். என்னைத் தடுக்காதீர்" என்றான்.{38}
மீண்டும் பலி அந்தக் குள்ள பிராமணனிடம், "ஓ! அற்ப புத்தி கொண்டவரே, மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைக் கொண்டு நீர் என்ன செய்வீர்? பெருங்கடல்களால் சூழப்பட்ட மொத்த உலகையும் நான் உமக்கு அளிப்பேன்" என்றான்.{39,40}
குள்ளன் {வாமனன்}, "ஓ! தானவர்களின் முதன்மையானவனே, நான் மொத்த பூமியை வேண்டவில்லை. மூன்று காலடிகளில் மறையும் நிலத்தில் நான் நிறைவடைகிறேன். இதுவே நான் விரும்புவதும், வேண்டுவதுமாகும்" என்றான்".{41}(35-41)
வைசம்பாயனர், "தானவ மன்னன் பலி, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, அளவற்ற ஆற்றல் படைத்த தலைவன் நாராயணனின் மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைத் தீண்டச் செய்தான்.{42} அவனுடைய கை நீரில் நுழைந்தபோது, குள்ளனான அந்தத் தலைவன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி தன் அண்ட வடிவை வெளிப்படுத்தினான்.{43}
பூமி அவன் பாதங்களானது, வானம் அவனது தலையானது, சூரியனும், சந்திரனும் அவனது கண்களாகினர், பிசாசங்கள் அவனுடைய பாதங்களின் விரல்களாகின, குஹ்யர்கள் அவனது கைகளின் விரல்களாகினர்.{44} விஷ்வேதேவர்கள் அவனுடைய தொடைகளில் இருந்தனர், சாத்யர்கள் அவனுடைய கால்மூட்டுகளில் இருந்தனர், யக்ஷர்களும் அப்சரஸ்களும் அவனது நகங்களில் இருந்து வெளிப்பட்டனர்.{45} மின்னல் அவனது பார்வையானது, சூரியனின் கதிர்கள் அவனது தலைமுடியானது, நட்சத்திரங்கள் அவனது மேனியில் உள்ள முடிகளின் துளைகளாகின {ரோம்பாணிகளாகின}, மஹாரிஷிகள் அந்த முடிகளாகினர் {ரோமங்களாகினர்}.{46} அசுவினி ரெட்டையர்கள் அவனது கால்கள் இரண்டாக இருந்தனர், பெருஞ்சக்திவாய்ந்த வாயு அவனது மூக்கானான். திசைகள் அவனது கைகளாகின, துணைத்திசைகள் அவனது காதுகளாகின.{47} சந்திரன் அவனது மகிழ்ச்சியானான் {பிரசாதமானான்}, அறம் அவனது மனமானது {மனோதர்மம்}, வாய்மை அவனது வாக்கானது, ஸரஸ்வதி தேவி அவனது நாவானாள்,{48} பெருந்தேவி அதிதி அவனது கழுத்தானாள், பிரகாசமிக்கச் சூரியன் அவனது தொண்டையானான், சொர்க்கவாசல் அவனது உந்தியானது, மித்ரர்களும், துவஷ்டாவும் அவனது புருவங்கள் இரண்டாகினர்,{49} நெருப்பு {வைஷ்வாநரன்} அவனது முகமானான், பிரஜாபதி அவனது விரைகளானான் {விருஷணங்களானான்}, பிரம்மன் அவனது இதயமானான், கசியபர் அவனது ஆண்குறியானார்.{50} வாசவன் அவனது பின்பகுதியானான் {பிருஷ்டமானான்}, மருத்துகள் அவனது கைமூட்டுகளாகினர். வேதங்கள் அவனது இருப்பாகவும், ஒளி அவனது பிரகாசமாகவும்,{51} ருத்திரன் {மஹாதேவன்} அவனது மார்பாகவும், பெருங்கடல் அவனது பொறுமையாகவும் ஆனார்கள், பெருஞ்சக்திவாய்ந்த கந்தர்வர்களும், நாகர்களும் அவனது வயிறாகினர்,{52} லக்ஷ்மி அவனது புத்தியானாள் {மேதைமையானாள்}, திருதி அவனது காந்தியானாள், கல்வி {வித்யை} அவனது இடையானது, ஆன்மாவின் இருக்கை அவனது நெற்றியானது.{53} ஒளிக்கோள்கள் அனைத்தும் {ஸர்வஜ்யோதிகள்} அவனது தபமாக அமைந்தன, தேவர்களின் மன்னனான சக்ரன் {தேவவ்ராட்} அவனது சக்தியானான், தேவர்கள், வேள்விகளின் இஷ்டி சடங்குகள், இருபிறப்பாளர்களின் பணிகள், விலங்குகள் ஆகியன அவனது மார்பாகவும், இருபுறங்களாகவும் ஆகின.{54,55} பேரசுரர்கள், விஷ்ணுவின் அந்த அண்ட வடிவைக் கண்டு பெருங்கோபத்தால் தூண்டப்பட்டனர். அவர்கள் நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அவனை அணுகினர்" என்றார் {வைசம்பாயனர்}.{56}(42-56)
பவிஷ்ய பர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 56
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |