Saturday 3 July 2021

நரசிம்ம அவதாரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37

(ந்ருஸிம்ஹாவதாரம்)

The man-lion incarnation of Vishnu: Hiranyakashipu's prayer to Brahma | Bhavishya-Parva-Chapter-37 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அரிய வரங்களைப் பெற்ற ஹிரண்யகசிபு; நரசிங்க அவதாரம்; ஹிரண்யகசிபுவின் அரண்மனை வர்ணனை...

Hiranyakashipu Threatens Prahlada

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, நான் இதுவரை விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறித்து உனக்கு விளக்கிச் சொன்னேன். இனி அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிங்க அவதாரத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(1) முன்னர், கிருத யுகத்தில் தைத்திய குலத்தை நிறுவிய மன்னன் ஹிரண்யகசிபு பெருந்தவங்களைச் செய்து வந்தான்.(2) அவன் அசையாமல் இருக்கும் பொருளென ஐயாயிரத்து ஐநூறு {5500} ஆண்டுகள்[1] மௌன விரதம் நோற்று, நீருக்கடியில் வாழ்ந்து வந்தான்.(3) அவனுடைய தற்கட்டுப்பாடு, புலனடக்கம், ஓழுங்குமுறைகள் ஆகியவற்றில் பிரம்மன் பெரும் நிறைவடைந்தான்.(4)

[1] சித்திரசாலை பதிப்பில் பதினோராயிரத்து ஐநூறு {11500} ஆண்டுகள் என்றிருக்கிறது. மூலத்தில் "தஷ வர்ஷஸஹஸ்ராணி ஷதாநி தஷ பஞ்ச ச" என்றிருக்கிறது. அதாவது தசம் என்றால் பத்து வர்ஷஸஹஸ்ராணி என்றால் ஆயிரம் வருடங்கள், சதம் என்றால் நூறு, பஞ்ச என்றால் ஐந்து.

தலைவன் பிரம்மன், அன்னங்களால் இழுக்கப்படும் தன்னுடைய வெண் சூரியத் தேரில் அங்கே வந்தான்.(5) {ஆதித்யர்கள், வசுக்கள், சாத்யர்கள், மருத்துகள், தேவகணங்கள், ருத்திரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னர்கள் ஆகியோருடனும்,(6) திசைகள், துணைத்திசைகள், ஆறுகள், பெருங்கடல்கள், நட்சத்திரங்கள், கணங்கள், வானுலாவிகள், பெருங்கோள்கள்,(7) தேவர்கள், பிரம்மரிஷிகள், சித்தர்கள், சப்தரிஷிகள், புனிதப்பணிகளைச் செய்யும் ராஜரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோருடன் பிரம்மன் அங்கே வந்தான்.(8) அசைவனவற்றுக்கும், அசையாதனவற்றுக்கும் ஆசானும், மங்கலத் தலைவனுமான பிரம்மன், தேவகணங்களும், பிரம்மத்தை அறிந்தோரில் சிறந்தோரும் சூழ பின்வரும் சொற்களை அந்தத் தைத்தியனிடம் சொன்னான்.(9)}[2] அவன் அந்தத் தைத்திய மன்னனிடம் {ஹிரண்யகசிபுவிடம்}, "ஓ! உறுதியான நோன்புகள் நோற்றவனே, நீ என்னிடம் பற்றும், ஆர்வமும் கொண்டவனாக இருக்கிறாய். உன்னுடைய தவம், துறவு ஆகியவற்றில் நான் நிறைவடைந்திருக்கிறேன். உனக்கு நன்மை விளையட்டும். நீ விரும்பும் வரத்தை வேண்டுவாயாக" என்று கேட்டான்.(10)

[2] 6 முதல் 9ம் ஸ்லோகம் வரை { } என்ற அடைப்புக்குறிக்குள் உள்ள செய்தி மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இவை சித்திரசாலை பதிப்பில் உள்ளவை.

அப்போது தானவத் தலைவன் ஹிரண்யகசிபு, மகிழ்ச்சியான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும்,(11) "ஓ! தலைவா, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பிசாசங்கள் ஆகியோரில் எவரும் என்னைக் கொல்லாதிருக்கட்டும்.(12) ரிஷிகள் கோபமடைந்து என்னைச் சபிக்காதிருக்கட்டும். {இதுவே என் தவத்திற்குத் தகுந்த வரமென நான் வேண்டுகிறேன்}.(13) ஆயுதம், மலை, மரம் ஆகியவை எவற்றினாலோ, உலர்ந்த, அல்லது ஈரமான பொருட்களாலோ எனக்கு அழிவு நேராதிருக்கட்டும்.(14) என் மரணம் சொர்க்கத்திலோ, பாதாளத்திலோ, வானத்திலோ, பகலிலோ, இரவிலோ நேராதிருக்கட்டும்.(15) தொண்டர்கள், பணியாட்கள், உற்றார் உறவினருடன் கூடிய என்னை உள்ளங்கையின் ஒரே அடியால் எவன் கொல்லவல்லவனோ அவனே எனக்கு மிருத்யுவாகட்டும்.(16) சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, நீர், வானம், நட்சத்திரங்கள், பத்துத் திக்குகள் ஆகியவற்றின் பணிகளை நானே மேற்கொள்வேனாக. நானே காமனும், குரோதனும், வருணனும், வாசவனும் {இந்திரனும்}, யமனும்,(17) குபேரனும், கிம்புருஷர்களின் மன்னனும் ஆவேனாக. போரில் என் முன்னால் பேராயுதங்கள் உடல்வடிவம் கொண்டு தோன்றட்டும்" என்றான் {ஹிரண்யகசிபு}.(18)

பிரம்மன், "ஓ! மகனே, அற்புதம் நிறைந்த இந்தத் தெய்வீக வரங்களை நான் உனக்குத் தருகிறேன். இந்த வரங்கள் மனிதர்கள் அடைவதற்கு அரிதானவை. நீ விரும்பும்பொருட்கள் அனைத்தையும் என் தயவால் நீ நிச்சயம் அடைவாய்" என்றான்".(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பிரம்மன் இதைச் சொல்லிவிட்டு ஆகாய வழியில் {பிரம்ம ரிஷிகணங்கள் இருந்த} வைராஜ உலகத்திற்குச் சென்றான்.(20) இதன் பிறகு இந்த வரம் அருளப்பட்டதைக் கேள்விப்பட்ட தேவர்களும், நாகர்களும், கந்தர்வர்களும் {முனிவர்களுடன் கூடியவர்களாக} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று,(21) "ஓ! தலைவா, இந்த வரத்தால் அந்த அசுரன் எங்களை ஒடுக்கப் போகிறான். அவனது அழிவுக்கு நீர் வழிவகுப்பீராக" என்று கேட்டனர்.(22)

{அனைத்து உயிரினங்களைப் படைத்தவனும், வேள்வி ஹவ்யகவ்யங்களையும், பித்ருக்களுக்கான ஹவ்யகவ்யகளையும் படைத்தவனும், வெளிப்படாதவனும், நித்தியனும்,(23) உயிரினங்களின் தலைவனுமான பிரம்மன்}, உலக உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை விளைவிப்பவையான அவர்களின் சொற்களைக் கேட்டு, {அந்த தேவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இனிய சொற்களில்},(24) "ஓ! தேவர்களே, அவன் தன்னுடைய தவங்களின் பலன்களை அடைய வேண்டும். அவற்றை அவன் அனுபவித்த பிறகு, தலைவன் விஷ்ணு அவனைக் கொல்வான்" என்றான்.(25) தாமரையில் உதித்த அந்தத் தேவன் {பிரம்மன்} சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த தேவர்கள், தங்கள் தங்கள் உலகங்களுக்குத் திரும்பிச் சென்றனர்".(26)

வைசம்பாயனர், "தைத்தியத் தலைவன் ஹிரண்யகசிபு தான் அடைந்த வரத்தால் உண்டான சக்தியில் செருக்கடைந்து உயிரினங்களை ஒடுக்கத் தொடங்கினான்.(27) பெருஞ்சக்திவாய்ந்தவனான அந்தத் தைத்தியன் ஆசிரமங்களில் வாழும் முனிவர்களுக்கும், வாய்மைநிறைந்தவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான பிராமணர்களுக்கும் தீங்கிழைத்தான்.(28) அவன், மூவுலகங்களிலும் இருந்த தேவர்கள் அனைவரையும் வென்று, அவர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சொர்க்கத்தில் வாழ்ந்திருந்தான்.(29) விதியால் தூண்டப்பட்டவனும், வரம் கொடுத்த செருக்கில் மிதந்தவனுமான அவன், வேள்விகளில் உள்ள உரிமையைத் தேவர்களிடம் இருந்து பறித்துத் தைத்தியர்களுக்குக் கொடுத்தான். {வேள்விகள் தைத்தியர்களின் பெயர்களிலேயே செய்யப்பட்டன}.(30) அப்போது ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், வசுக்கள், ருத்திரர்கள், {தேவகணங்கள், யக்ஷர்கள்} தேவரிஷிகள்,(31) பிராமணர்கள் ஆகியோர் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவனும், நித்தியனும், உலகால் துதிக்கப்படுபவனுமான விஷ்ணுவை அடைந்து அவனது புகலிடத்தை நாடினார்கள் {அவனைச் சரணடைந்தார்கள்}.(32)

தேவர்கள் {விஷ்ணுவிடம்}, "ஓ! நாராயணா, {ஐசுவரியங்களைக் கொண்ட தேவா}, தேவர்கள் உன் புகலிடத்தை நாடுகிறார்கள். தைத்தியத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொன்று நீ எங்களைப் பாதுகாப்பாயாக.(33) பாதுகாவலன் நீயே, பேராசான் நீயே, மஹாதேவன் நீயே. {பிரம்மனைப் போன்ற தேவர்களில் நீ எங்கள் பரமத்தலைவனாக இருக்கிறாய்.(34) ஓ! தாமரை இதழ்களைப் போன்று அகன்றிருக்கும் அழகிய விழிகளைக் கொண்டவனே, ஓ! பகைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் தலைவா,} பகைவரை அழித்து நண்பர்களை நிறைவடையச் செய்வாயாக. திதியின் சந்ததியைக் கொன்று எங்களுக்கு உதவுவாயாக." என்று கேட்டனர்.(35,36)

விஷ்ணு, "தேவர்களே, உங்கள் அச்சத்தைக் கைவிடுங்கள் {பயம் வேண்டாம்}. உங்கள் பாதுகாப்புக்கு நான் உறுதி கூறுகிறேன் {அபயம் தந்தோம்}. நீங்கள் முன்பு போலவே தேவலோகத்தை விரைவில் அடைவீர்கள்.(37) வரத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருப்பவனும், தேவர்களாலும் கொல்லப்பட முடியாதவனுமான அந்தத் தானவ மன்னனையும், அவனது மக்களையும் நான் விரைவில் கொல்வேன்" என்றான்".(38)

வைசம்பாயனர், "எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன், இதைச் சொல்லி தேவர்களை அனுப்பிவிட்டு, ஹிரண்யகசிபுவின் அழிவைச் சிந்தித்தான்.(39) {தலைவன் விஷ்ணு தாமதமேதும் செய்யாமல் இமய மலையின் சாரலுக்குச் சென்று, "எந்த வடிவை ஏற்று அந்த மஹாசுரனை (ஹிரண்யகசிபுவை) கொல்வது?(40) தேவர்களின் பகைவனைக் கொல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று சிந்தித்தான். அதன் பிறகு விஷ்ணு, முன்னர் ஒருபோதும் தோன்றாத ஒரு வடிவை ஏற்றான்.(41) தைத்தியர்களைக் கொல்வதற்கு ஒருபோதும் காணாத நரசிம்ம வடிவை அவன் ஏற்றான். பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட அவன், தன் துணைக்கு ஓங்காரத்தை எடுத்துக் கொண்டான்.(42) தாழ்வில்லாதவனும், பரமதேவனுமான தலைவன் விஷ்ணு, ஓங்காரத்தின் துணையுடன் ஹிரண்யகசிபுவின் அரண்மனைக்குச் சென்றான்.(43) அவன் காந்தியுடன் கூடிய சூரியனைப் போலவும், மற்றொரு சந்திரனைப் போலவும் தெரிந்தான். தலைவனின் பாதியுடல் மனிதனாகவும், மறுபாதி சிங்கத்தின் உடலாகவும் இருந்தது.(44) நரசிங்கத்தின் உடல்வடிவை ஏற்றுக் கொண்ட அவன், தன் கைகளை ஒன்றோடொன்று உரசினான். பாதி சிங்க உடலையும், பாதி மனித உடலையும் ஏற்றுச் சென்ற அவன், மனத்தின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவடையச் செய்வதும், பெரியதும், தெய்வீகமானதும், அழகானதும், மனத்தைக் கொள்ளையிடுவதுமான ஹிரண்யகசிபுவின் சபையைக் கண்டான்}.(45) நூறு யோஜனைகள் நீளமும், அதில் பாதி அளவு {ஐம்பது யோஜனைகள்} அகலமும் கொண்ட அந்தச் சபை பேரழகுடன் திகழ்ந்தது. {வானத்தில் ஐந்து யோஜனை நீளவல்லதாகவும் அஃது இருந்தது}.(46) அங்கே முதுமையோ, கவலையோ, களைப்போ இல்லாதிருந்தது. {அது நடுங்காமல் இருந்தது. அந்த இடம் நற்பேறு பெற்றதாகவும் மங்கலமானதாகவும் இருந்தது. அந்தச் சபா மண்டபம், காந்தியால் சுடர்விடுவதைப் போலத் தெரிந்த அழகிய மங்கல இருக்கைகளைக் கொண்டதாக இருந்தது.(47) விஷ்வகர்மனால் விதிக்கப்பட்ட அந்தச் சபாமண்டபம், உள்ளே நீர்த்தடாகங்களைக் கொண்டிருந்தது. மேலும் அது தெய்வீக ரத்தினங்களாலும் நிறைந்திருந்தது}.[3] அது பல்வேறு மலர்களாலும், சிறந்த இருக்கைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. {மலர்களையும், கனிகளையும் கொண்ட மரங்கள் அந்தச் சபாமண்டபத்தில் இருந்தன}" என்றார் வைசம்பாயனர்.(48)

[3] 40 முதல் 47ம் ஸ்லோகம் வரை { } என்ற அடைப்புக்குறிக்குள் உள்ள செய்திகள் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இவை சித்திரசாலை பதிப்பில் உள்ளவை. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயம் இத்துடன் நிறைவடைகிறது. சித்திர சாலை பதிப்பில் 76ம் ஸ்லோகம் வரை நீள்கிறது. 49 முதல் 76ம் ஸ்லோகம் வரை சித்திரசாலை பதிப்பில் உள்ள உரை பின்வருமாறு.

அந்தச் சபாமண்டபத்தில் நீலம், வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் விரிப்புகளும், மரம் போன்ற தோரணங்களும், நூற்றுக்கணக்கான மலர் தோரணங்களும் இருந்தன.(49) நீருண்ட வெண்மேகம், நீரில் அசைந்து மிதப்பதைப் போன்று அந்தச் சபாமண்டபம் காணப்பட்டது. அந்த அழகிய சபாமண்டபம், ஒளியுடன் மின்னும் தோற்றத்தில் அருளப்பட்ட இருக்கைகளுடன் இருந்தது. அந்தச் சபை காந்தியால் பளபளத்தது.(50) தெய்வீக மணங்கமழும் அந்தச் சபை காண்போர் கண்களைக் கொள்ளைக் கொண்டது. அந்தச் சபாமண்டபத்தை அடைந்தவர்களை இன்பதுன்பங்களும், குளிர்வெப்பமும், பசி, தாகம், களைப்பு ஆகியனவும் பீடிக்கவில்லை.(51) (சபா மண்டபத்தின் சுவர்களில்) பேரொளியுடன் திகழும் அழகிய சித்திரங்கள் பல தீட்டப்பட்டிருந்தன. அந்தச் சபாமண்டபத்தின் தூண்கள் நிரந்தரமாகக் குறைவேதும் ஏற்படாத தெய்வீக ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(52) சந்திரன், சூரியன், அக்னியின் ஒளியைத் தன்னொளியால் விஞ்சிய அந்தச் சபாமண்டபம், சூரியனைப் பழிப்பது போலச் சொர்க்கத்தின் பின்புறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(53) அந்தச் சபா மண்டபம், தெய்வீக விருப்பங்களையும், மனித விருப்பங்கள் அனைத்தையும் நிறைவடையச் செய்வதாக இருந்தது.(54) அந்தச் சபாமண்டபத்தில், மெல்லும் வகையிலும், மெல்லாமல் உண்ணும் வகையிலும் எல்லையற்ற வகைகளில் சுவைமிக்க உணவுகள் இருந்தன. எப்போதும் தெய்வீக மணங்கமழும் மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவதுமான மரங்கள் அங்கிருந்தன.(55) அங்கே கோடை காலத்தில் குளிர்ந்த நீரும், குளிர் காலத்தில் வெண்ணீரும் இருந்தன. மொட்டுகள், இளந்தளிர்கள், மலர்கள் ஆகியவற்றால் நிறைந்த பெருங்கிளைகளுடன் கூடிய மரங்கள் அங்கிருந்தன.(56)

அங்கே அந்தச் சபாமண்டபத்தில் ஏராளமான செடிகொடிகளால் மறைக்கப்பட்ட தடாகங்களையும், மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகிய ஆறுகளையும் அந்தத் தலைவன் {நரசிங்கம்} கண்டான்.(57) அந்த மிருகேந்திரன் {நரசிம்மம்}, நறுமணமிக்க மலர்களையும், சுவைமிக்கக் கனிகளையும் கொண்ட பல வகை மரங்களை அந்தச் சபாமண்டபத்தில் கண்டான்.(58) அந்தத் தலைவன், நீராடுவதற்கேற்ற நூற்றுக்கணக்கான புனிதத்தலங்களையும், குளிர்ந்த நீரைக் கொண்ட தடாகங்களையும் அங்கே கண்டான்.(59) அந்தத் தடாகங்களிலும், நீராடும் இடங்களிலும் வெண்தாமரைகளும், செந்தாமரைகளும், நீலோத்பல மலர்களும், அல்லி மலர்களும், நூறு இதழ்களைக் கொண்ட தாமரைகளும் இருந்தன.(60) அதில் தார்தராஷ்டிரப் பறவைகளும் (வாத்துகளும்), தேவர்களுக்குப் பிடித்தமான ராஜஹம்சங்களும் (பூநாரைகள்), காதம்பங்களும் (சாம்பல் நிற சிறகுகள் கொண்ட வாத்துகளும்), சக்கரவாகங்களும் (செங்கிளுவைகளும்), ஸாரஸங்களும் (நாரைகளும்), குரர (அன்றில்) பறவைகளும் இருந்தன.(61) எட்டு இதழ்களைக் கொண்ட வெண்தாமரை மலர்களைக் கொண்ட அந்தத் தடாகங்களில் பளிங்கு போன்ற தெளிந்த நீர் நிறைந்திருந்தது. அன்னங்கள் பாடும் ஒலிகளாலும், ஸாரிகப் பறவைகள் கூவும் ஒலிகளாலும் அந்தச் சூழல் நிறைந்திருந்தது.(62)

அங்கே இருந்த மரங்களின் நுனிகளில், நறுமணமிக்க மங்கல மலர்களைக் கொண்ட கொடிகள் நிறைந்திருப்பதைத் தலைவன் கண்டான்.(63) கேதகம் (தாழை), அசோகம், ஸரலம் (தேவதாரு), புந்நாகம், திலகம் (தழுதாரை), அர்ஜுனம் (மருதம்), சூதம் (மா), நீபம் (கடம்பு), நாகபுஷ்பம் (சண்பகம்), கதம்பம், பகுலம் (வகுளம்), தவம் (தாதிரி),(64) பிரியங்கு, பாடலி (பாதிரி), சால்மல்யம், ஹரித்ரகம் (சந்தனம்), சாலம் (குங்கிலியம்), தாலம் (பனை), பிரியாலம், சம்பகம் போன்ற மரங்கள் அங்கே மனத்துக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தன.(65) இன்னும் பல மரங்கள் அந்தச் சபாமண்டபத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. காட்டுத் தீயைப் போன்ற பிரகாசத்துடன் அந்த மரங்களின் வரிசைகள் பளபளத்தன.(66)

அஞ்சனத்தைப் போன்ற கரிய பருத்த தண்டுகள், நல்ல கிளைகள் ஆகியவற்றைக் கொண்ட நெடிய மரங்களும், அசோகம், வஞ்ஜுலகம் (இம்பூறல்) ஆகிய மரங்களும் அங்கே பளபளத்தன.(67) வரணம் (கூவிரம்), வத்ஸநாபம் (கருநாபி), பநஸம் (பலா), சந்தனம், நீலம் (கடம்பு), ஸுமநஸம், பீதம் (குசும்பா), ஆம்லம் (நெல்லி), அஷ்வதம் (பூவரசு), திந்துகம் (தும்பிலி),(68) பிராசீநாமலகம் {லூபிகம்), லோத்ரம், மல்லிகம் (கொகுடி), பத்ரம் (வச்சிரம்), தாரவம், ஆம்ராதகம் (புளிமா), ஜம்பூ (நாவல்), லகுசம் (புளிசக்கை), சைலவாலுகம் (சுக்கம்),(69) ஸர்ஜார்ஜுனம் {வெண்மருது), கந்துரவம், பதங்கம், குடஜம் (குண்டுமுல்லை), சிவந்த குரபகம் (செம்முள்ளி), நீபம் (கடம்பம்), ஆகரு,(70) கதம்பம், தாடிமம் (மாதுளை), பீஜபூரகம் (நார்த்தங்காய்), காலீயகம் {கஸ்தூரி மஞ்சள்), துகூலம், ஹிங்கவம், தைலபர்ணிகம் (சந்தனம்),(71) கர்ஜூரம் (ஈச்சை), நாலிகேரம் (தென்னை), பூகம் (பாக்கு), ஹரீதகி (நெல்லி), மதூகம் (இலுப்பை), ஸப்தபர்ணம் (ஏழிலைப்பாலை), வில்வம், பாராவதம் (தும்பிலி),(72) பநசம் {சீமைப்பலா), தமாலம் (பச்சிலை) ஆகிய மரங்கள் அங்கே இருந்தன. அந்த இடம் அடர்த்தியான இலைகளுடன், மலர்களுடனும், கனிகளுடனும் இருந்த பல வகைக் கொடிகளால் மறைக்கப்பட்டிருந்தது.(73) இவையும் தவிரப் பலவகை மலர்களையும், கனிகளையும் கொண்ட பல்வேறு வகைக் காட்டு மரங்கள் அந்தச் சபாமண்டபத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(74) சகோர பறவைகள் (கௌதாரிகள்), சதபத்ரங்கள், கோகிங்கள் (குயில்கள்), சாரிகப் பறவைகள் (மைனாக்கள்) ஆகியன, மலர்களும், கனிகளும் நிறைந்த அந்தப் பெரும் மரங்களில் அமர்ந்திருந்தன.(75) சிவப்பு, மஞ்சள், செம்பழுப்பு நிறங்களில் உள்ள பறவைகள் அந்த மரங்களின் நுனிகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தன" என்றார் {வைசம்பாயனர்}.(76)

பவிஷ்ய பர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 76

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்