(தக்ஷயஜ்ஞவிநாஷம்)
Siva obstructs Daskha's Sacrifice and Hari fights with him | Bhavishya-Parva-Chapter-28 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : குதிரைவேள்வி செய்த தக்ஷன்; ருத்திரனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போர்; அவிர்ப்பாகம் பெற்ற ருத்திரன்; பௌஷ்கரப் புராணம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, அதன் பிறகு அவர்கள் அனைவரும் அமைதியுடன் வாழ்ந்தனர், செழிப்பான அரசும் நிலைநாட்டப்பட்டது. அந்நேரத்தில் ஆன்ம அறிவியலின் அறிவைப் பொறுத்தவரையில் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாததால் அவர்கள் ஒன்றாகவே ஆத்ம ஞானத்தை விளைவித்தனர். மறுபுறத்தில் பலர் அழுதனர்; மனிதர்களால் அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றனர்.(1,2)
தெய்வீக பிருஹஸ்பதி, தக்ஷ பிராசேதஸிடம் குதிரை வேள்வி செய்யுமாறு அறிவுறுத்திவிட்டு, ரிஷிகள் சூழ அங்கே வந்தார்.{3} தக்ஷன் அனைவருக்கும் தாய்வழி தாத்தன் ஆவான். எனவே, ஆன்ம அறிவற்ற தக்ஷனின் யஜ்ஞத்தில் ருத்திரன் நந்தியுடன் சேர்ந்து தன்னாலான தடைகளை ஏற்படுத்தினான்.{4} ருத்திரன் தானே விரும்பி தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டான். {இதன் மூலம்} பெரும் தர்மாத்மாவான நந்தி புருஷனாகப் பிறந்தான்.{5} வேதங்களில் சிறப்பாகப் பாடப்பட்டுள்ள நித்திய பிரம்மத்தை ருத்திரன் தன் யோக சக்தியின் மூலம் வெளிப்படுத்தினான்.{6}(4-6)
ஸ்வரூபன், அரூபன் {சாப்யரூபன்}, விரூபாக்ஷன், கடோதரன், ஊர்த்வநேர்தன், மஹாகாயன், விகடன், வாமனன்,{7} ஷிகி, ஜடி, திரிலோசனன் {திரையக்ஷன்}, சங்குகர்ணன், சீரதாரி, சர்மி முதலிய பல்வேறு கணங்களும், பாசக்கயிறுகளைத் தரித்தவர்களும், தண்டபாணிகளும் {முத்கரபாணிகளும்},{8} மணிகளைத் தரித்தவர்களும் {ஸகண்டாதாரிகளும், முஞ்ஜமேகலதாரிகளும்}, குண்டலங்களையும், கடகங்களையும் அணிந்தவர்களும் {கடககுண்டலதாரிகளும்},{9} டிண்டிகள், பேரிகைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றைச் சுமந்தவர்களும் சூழ தக்ஷனின் வேள்வியைத் தடுக்க ருத்திரன் விரைந்து சென்றான்.{10}
பூதகணங்கள் தங்கள் கைகளில் சங்கையும், முரஜத்தையும் {முரசையும்}, தாலபலத்தையும் கொண்டிருந்தனர். திரிசூலத்தையும், கடும் ஆயுதங்கள் பிறவற்றையும் தரித்தவனும், வேள்வி செய்பவர்களால் வழிபடப்படுபவனுமான ருத்திரன், அந்த வேள்வியில் எரியும் தழலைப் போல ஒளிர்ந்தான். அழிவை ஏற்படுத்த எரியும் நெருப்பானது {காலாக்னியானது}, அண்டத்தையே விழுங்கிவிடப் போவதாகத் தெரிந்தது.{11,12} யுகமுடிவில் காலாக்னியானது மொத்த அண்டத்தையும் உடனே எரித்துவிடுவதைப் போல, நந்தியும், பிநாகபாணியும் {சிவனும்} அந்தச் சிறந்த வேள்வியை அழிக்க இருந்தனர்.{13} இரவுலாவிகள் {கணங்கள்}, மரவுரி தரித்த முனிவர்களை அச்சுறுத்தும் வகையில் வேள்வியூபங்களைப் பிடுங்க விரைந்து சென்றன.{14} தாமிரக் கண்களைக் கொண்ட பிரமதர்கள், தங்கள் நாவுகளால் வேள்விக் காணிக்கைகளை {ஹவிஸுகளைப்} பருகினர்.{15} யானைகளின் துதிக்கைகளைப் போன்ற நீண்ட நாவுகளைக் கொண்ட பிறர், விலங்குகளை விழுங்கத் தொடங்கினர். சிலர் யூபங்களைப் பிடுங்கி விலங்குகளைத் தாக்கினர்.{16} சிலர் நெருப்புக்குள் நீரை வீசிச் சிரித்தனர்; ஜவா மலர்களைப் போல ஒளிரும் சிவந்த கண்களுடன் கூடிய சிலர் சோமச் சாற்றை அபகரித்துச் சென்றனர். சிலர், தாமரைத் தண்டுகளுக்கு ஒப்பான தங்கள் கைகளால் தர்ப்பை புற்களை வெட்டினர்.{17} சிலர், வேள்விஸ்தம்பங்களை நொறுக்கினர், வேறு சிலர் கலசங்களை வீசி எறிந்தனர். வேள்விக்களத்தை அழகூட்ட நிறுவப்பட்ட பொன்மரங்களை {காஞ்சநாந்விருக்ஷங்களைச்} சிலர் வீழ்த்தினர்.{18} சிலர், கணைகளைக் கொண்டு பொன் பாத்திரங்களை நொறுக்கினர். சிலர் பாத்திரங்களை அழித்தனர், வேறு சிலர் அரணியைப் பிடுங்கினர்.{19} சிலர் வேள்விப் பீடங்களை நொறுக்கினர், சிலர் அரிசிப் பிண்டங்களை உண்டனர், சிலர் தங்கள் நகங்களால் பல்வேறு பொருட்களை அழித்தனர்.{20} இவ்வாறு பகலும், இரவும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வியானது,பெருங்கடலைப் போல முழங்கத் தொடங்கியது.{21}
மறுபுறம் பெருஞ்சக்திவாய்ந்த மஹாதேவன், சுயம்புவான பிரம்மனால் முன்பு தனக்கு வழங்கப்பட்டதும், கீசக மூங்கிலாலானதுமான வில்லை எடுத்துக் கொண்டு, அதில் கணைகளைப் பொருத்தினான்.{22} பிறகு அவன், தனது முழங்கால்களால் வில்லை வளைத்து அந்தப் பெரும் யஜ்ஞத்தைத் தாக்கினான்.{23} கணைகளால் காயமடைந்த அந்தப் பெரும் வேள்வி வானத்தில் தாவிக் குதித்தது; பிறகு ஒரு மானின் வடிவை ஏற்று உரக்க கதறியபடியே பிரம்மனை அடைந்தது.{24} கணைகளால் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட வேள்வியானவன், பூமியில் எங்கும் உறைவிடத்தையோ, அமைதியையோ அடையாதவனாகப் பிரம்மனின் புகலிடத்தை நாடினான்.{25}(7-25)
பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம், இனிமையான, மங்கலமான, அடக்கமான, சக்திமிக்க, அழுத்தமான சொற்களில், "ஓ! பெரும் மானே, இவ்வாறே நீ வானத்தில் நிலைத்திருப்பாயாக.{26} பல்வேறு வண்ணங்களையும், வளைந்த முடிச்சுகளையும் கொண்ட கணையால் நீ வீழ்த்தப்பட்டாய். எனவே நீ சோமனுடன் சேர்ந்து கிரகங்களுக்குத் தலைமையாக இருக்கும் நித்தியனான ருத்ரனுடன் வாழ்வாயாக. வானத்தில் இயக்கத்தை அடைந்து நட்சத்திரங்களுடன் சேர்வாயாக.{27,28} ஒளியமைப்புகளில் {ஜோதிகளில்} நீ துருவனாக இருப்பாயாக. உன் காயத்தில் இருந்து வெளியேறுவதும், நீ ஓடிக் கொண்டிருப்பதன் விளைவால் வானத்தில் வழிந்து கொண்டிருப்பதுமான இந்தத் தெய்வீகக் குருதி பல்வேறு வண்ணங்களை ஏற்றுக் கேது லோகமாகக் கொண்டாடப்படட்டும். மழைக்காலத்தில் உயிரினங்களுக்கு அது மழைக்கான அடையாள வடிவமாகட்டும்.{29,30} உயிரினங்கள் அதைக் கண்டு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அடையட்டும். புலன்களில் அஃது ஓய்ந்திருப்பதன் காரணமாக வானத்தில் இந்திர வில் {வானவில்} என்ற பெயரில் அழைக்கப்படும்" என்றான் {பிரம்மன்}.{31}
ஓ! மன்னா, மேலும் அவன் {பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம்}, "மனிதர்களின் கண்கள் அதை ஆச்சரியத்துடன் பார்க்கும். அஃது அற்புதமானதாக, பல வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும். மேலும் அது மனத்தால் சரியாக வகுக்கப்பட்டதாக இருக்கும்.{32} பிரம்மத்தை உணரும் இதய வானில் அது பெயரால் மட்டுமே அறியப்படும். அஃது இரவில் புலப்படாது. இந்த அற்புத நிகழ்வு பகலின் முதல் பகுதியிலேயே குறிப்பாகக் காணப்படும்.{33} அது பூமியில் இருந்து மேலே எழுந்து வானில் மறையும். அந்த நேரத்தில் வில் தரித்த ருத்திரனிடம் கொண்ட அச்சத்தில் நூற்றுக்கணக்கான தக்ஷ பிரசேதஸ்கள் ஒரே நேரத்தில் தப்பி ஓடுவார்கள்" என்றான் {பிரம்மன்}.{34}
யுகமுடிவில் தோன்றும் பிரம்மதண்டம் போல எரியும் பினாகையுடன் கூடிய நந்தி மற்ற ருத்திரர்களுடன் சேர்ந்து நின்றான்.{35} பெருந்தோள்களைக் கொண்ட விஷ்ணு, ஒரு கையில் பெரும் வில்லுடனும், மறு கையில் சக்கரத்துடனும் அங்கே நின்றான்.{36} ருத்திரனுடன் போரிட விரும்பும் அனைவருக்கும் முன்பு, மற்றொரு கையில் சங்கு மற்றும் கதாயுதத்துடனும், நான்காவது கையில் வாளுடனும் விஷ்ணு நின்று கொண்டிருந்தான்.{37}(26-37) அதன் பிறகு விஷ்ணு, தன் சாரங்க வில்லையும், உலகில் ஒப்பற்ற சங்கையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, தன் படைவீரர்களுடன் சேர்ந்து போரக்களத்தின் முகப்பில் நின்றான்.{38} அவன், தன் கையுறைகளையும், கவசங்களையும் அணிந்து கொண்டு சந்திரனுடன் கூடிய பெருங்கடலைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{39}
பிரகாசமிக்க ஆதித்யர்களும், வசுக்களும் தங்கள் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றுடன் நாராயணனைச் சுற்றி நின்றனர்.{40} மருத்துகளும், விஷ்வர்களும் ருத்திரனின் பக்கம் நின்றனர். கந்தர்வர்கள், கின்னரர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும்,{41} தண்டக்கோலைப் புறந்தள்ளிய முனிவர்களும் இரு தரப்புக்கும் நன்மையை விரும்பினர். உலகங்கள் அனைத்தின் நன்மையை விரும்பிய அவர்கள், அண்ட அமைதிக்காகத் தலைவனின் பெயரைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தனர்.{42}
போர்க்களத்தின் முன்னணியில் நின்ற ருத்திரன், கூரிய கணைகளைக் கொண்டு விஷ்ணுவின் மார்பையும், மூட்டுகளையும் தாக்கினான்.{43} அனைவரின் ஆன்மாவாகவும், பிறப்பிடமாகவும் இருக்கும் விஷ்ணு இதனால் கலக்கமேதும் அடையவில்லை. அவன் ஆறு புலன்களையும் கொண்டிருந்தாலும் அவனது மனம் கோபத்தால் பீடிக்கப்படவில்லை.{44} அப்போது விஷ்ணு, கணைகளைப் பொருத்தி தன் வில்லை வளைத்தான். பிரம்மாயுதத்தைப் போன்ற அந்தக் கணையைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் ருத்திரனின் மார்பில் ஏவினான். வஜ்ரத்தால் மந்தர மலை அசைந்தாலும் அந்தக் கணையால் காயமடைந்த மஹாதேவன் நடுங்கினானில்லை.{45,46} நித்தியனான விஷ்ணு திடீரெனக் குதித்தெழுந்து ருத்திரனின் தொண்டையைப் பற்றினான், அதன் விளைவாகவே அந்தத் தேவன் நீலத்தொண்டை கொண்டவன் {நீலகண்டன்} என்ற பட்டப்பெயரைப் பெற்றான்.{47}(38-47)
விஷ்ணு, "பிறப்பும், இறப்பும் அற்றவன் நீ. என்னைப் பொறுத்துக் கொள்வாயாக. அனைத்து உயிரினங்களுக்கும், சாத்திரங்களுக்கும் ஆசான் நீ. உன்னை நான் அறிவேன்" என்றான்.(48)
ஓ! பரதனின் வழித்தோன்றலே, செயல்கள் அனைத்தின் காரணனாகவும், எல்லையற்ற தன்மையால் பூதங்கள் அனைத்திலும் மிகச்சிறந்தவனாகவும் அந்தத் தலைவனே இருக்கிறான்.{49} அவனே அண்டத்தின் பொருள் காரணனாகவும், அதை விளைவிக்கும் காரணனாகவும் இருக்கிறான், அவன் மிக மங்கலமான பணிகளைச் செய்தவன் ஆவான்.{50} அப்போது வானத்தில் இருந்து, சித்தர்களின் வாயில் வெளிவந்த "ஓ! நித்திய தேவா, உன்னை வணங்குகிறோம்" என்ற மிக அற்புதமான சொற்களை நாங்கள் கேட்டோம்.{51}(49-51)
அதன் பிறகு, கிட்டத்தட்ட அருகில் இருந்த ருத்திரனால் பெறப்பட்டவனும், சக்திவாய்ந்தவனுமான நந்தி, தன் பினாகையை உயர்த்திக் கோபத்துடன் விஷ்ணுவின் தலையில் தாக்கினான்.{52} எல்லாம்வல்லவனான தலைவன் ஹரி, தேவர்களில் முதன்மையான நந்தியைக் கண்டு தன் புன்னகையால் அவனைக் கலங்கடித்தான்.{53} சக்தியில் எரிந்து கொண்டிருப்பவனும், வாழ்வின் உயர்ந்த பொருளைக் கொடுப்பவனும், பொறுமையுடன் கூடியவனுமான விஷ்ணு, ஒரு மலையைப் போல உறுதியாக நின்றான்.{54}
வெல்லப்பட முடியாதவனும், ஒப்பற்றவனும், செயலற்ற ஆன்மாவைக் கொண்டவனும், நித்தியனுமான அந்த ஹரி, காலாக்னியைப் போன்ற சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும், அமைதிப்படுத்தப்பட்டதால் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பகுதியை நுண்ணறிவுமிக்க ருத்திரனுக்குப் பங்கிட்டு அளித்தான். தேவர்களில் முதன்மையான விஷ்ணு எப்போதும் வெற்றியாளனாகவும், ஆசைகள் அற்றவனாகவும் இருக்கிறான்,{55,56} அவனால் வேள்வி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஓ! மன்னா, விஷ்ணுவுக்கும், ருத்திரனுக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரப்போரில் கணங்கள் முறையே தாங்கள் சார்ந்த தரப்புகளை விட்டு விலகவில்லை.{57} தக்ஷனின் வேள்வி அழிக்கப்பட்ட நேரத்தில் ஒரு நியாயமான போர் நடந்தது. அந்த நேரத்திலேயே வேள்விகளை அழித்தல் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.{58} ஓ! மன்னா, ஆன்ம ஞானமற்றவனாக இருந்த தக்ஷப்ரஜாபதி, தான் செய்த வேள்வியின் பலனாகப் பரமாத்ம ஞானத்தை அடைந்தான்[1].{59}
[1] இந்த தக்ஷ வேள்வி மஹாபாரதத்தின் சாந்தி பர்வம் 283ம் அத்தியாயத்திலும் சொல்லப்படுகிறது. அங்கே வேறொரு கோணத்தில் இஃது உரைக்கப்படுகிறது.
பெரும் விஷ்ணுவின் இந்தத் தாமரை அவதாரமானது, துவைபாயன ரிஷியால் {வியாசரால்} பௌஷ்கரப் புராணத்தில் பதியப்பட்டும், மஹாரிஷிகளால் மேலும் முறையாக மேம்படுத்தப்பட்டும் இருக்கிறது. இந்தப் புராணத்தைக் கவனத்துடன் கேட்பவன், இம்மையில் {இவ்வுலகில்} தான் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்; மேலும் மறுமையில் துன்பமற்றவனாக மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும் இருக்கும் அந்தப் பேரறிவாளன், பிராமணர்கள் அனைவரையும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளைக் கேட்கச் செய்து, ஆன்மக் கருத்துகள் அனைத்தையும் கற்றுணர்ந்து, தேவலோகத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறான்" என்றார் {வைசம்பாயனர்}.{60-63}(52-63).
பவிஷ்ய பர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 63
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |