(ஹிரண்யகஷிபோ ராஜஸூயவர்ணநம்)
Destruction of Bali | Bhavishya-Parva-Chapter-27 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பலியின் வரம்; விஷ்ணு பெற்ற பிச்சை; இந்திரனின் அரசுரிமை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தைத்தியர்கள் விஷ்ணுவின் சக்தியால் கொல்லப்பட்டனர்; ஆனால் அவர்கள் பெருஞ்சக்தியுடன் வளர்ந்தபோது என்ன செய்ய விரும்பினார்கள்?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர், "பெருஞ்சக்திவாய்ந்த தானவர்கள், தங்கள் ஆற்றலின் விளைவால் அரசை {உலகை ஆளும் அரசுரிமையை} வேண்டினர், வாய்மை நிறைந்த சூரர்கள் {தேவர்கள்} கடுந்தவங்களைச் செய்ய விரும்பினார்கள்.(2)
ஜனமேஜயன், "ஹிரண்யகசிபு குலத்தில் பிறந்த பலி, பழங்காலத்தில் தலைமைத்துவ சக்திகளை அடைந்து, கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட நிலத்தில் நீண்ட நாள் நீடித்த வேள்வியை ஏன் செய்தான்?" என்று கேட்டான்.(3)
வைசம்பாயனர், "ஓ! பாரதக் குலத்தில் பிறந்த பெரும் மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்திமிக்கவனும், தானவர்களில் முதன்மையானவனுமான பலி, கங்கைக்கும், யமுனைக்கும் இடையில் அமைந்த நிலத்தில் ஏராளமான பொன்னுடன் ராஜசூய வேள்வியைச் செய்தான். அஃது அவனுக்குப் பெருந்தவமாக இருந்து. அந்தப் பேரசுரன் யஜ்ஞம் {வேள்வி} செய்ய முனைந்தபோது, துறவையும் நோன்புகளையும் நோற்றுவந்தவர்களும், வேதங்களை நன்கறிந்தவர்களுமான பிராமணர்கள் பலரும், திறன்மிகு யதிகளும், வாலகில்ய முனிவர்களும், அறச்சடங்குகள் பலவற்றைத் தினமும் செய்து வந்த இருபிறப்பாளர்கள் பலரும் ஒரு சேர அங்கே வந்து சேர்ந்தனர். அந்த வேள்வியில் ஆடம்பரக் கொடைகள் வழங்கப்பட்டன. பிராமணர்களுக்கு மத்தியில் நெருப்பைப் போன்றவரான ஆசான் சுக்ரர் {சுக்ராச்சாரியர்}, பலியின் சார்பாகப் புரோஹிதராகச் செயல்படத் தமது மகனுடன் அங்கே வந்து சேர்ந்தார்.
தைத்தியர்களில் ஹிரண்யகசிபுவைப் போன்ற பலி, சரஸ்வதியிடம், "எனக்கு வரமளிப்பதாக நீயே சொல்லியிருக்கிறாய். அதை இப்போது தருவாயாக" என்றான்.(4-10)
குள்ளனின் வடிவில் இருந்த விஷ்ணு, தன்னுடைய மூன்று அடிகளை வைக்கும் நிலத்தை ஹிரண்யகசிபுவின் வழித்தோன்றலிடம் {பலியிடம்} இருந்து பிச்சையாகப் பெற்றான்.(11) அதன்பிறகு நித்தியனான விஷ்ணு, தனது காலடிகள் மூன்றால் மூவுலகங்களையும் அளந்து ஒரு தெய்வீக வடிவை ஏற்றான். தங்கள் அரசை இழந்த தைத்தியர்கள், தங்கள் படைவீரர்கள், பராசங்கள், வாள்கள், தோமரங்கள், தண்டங்கள், கொடிகள், கொடிக்கம்பங்கள், தேர்கள், கவசங்கள், உறைகள், கோடரிகள் ஆகியவற்றுடனும், பிற ஆயுதங்களுடனும் பாதாள லோகத்தில் நுழைந்தனர்.
மறுபுறம், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த தேவர்கள், விஷ்ணுவுடன் சேர்ந்து உடனே எழுந்து, மூவுலகங்களிலும் தங்கள் அரசுரிமையை நிலைநாட்ட இந்திரனைத் தங்கள் மன்னனாக நிறுவினர். பலி, அமுதம் கொடுத்து அவர்களை {தேவர்களை} நிறைவடையச் செய்தான். பிரம்மன் அந்த அமுதத்தை மஹேந்திரனிடம் கொடுத்தான். இந்தச் செயலால் பலி தன் பாவங்களை அழித்து இறவாதவனாக {தேவனாக} ஆனான்.(12-16)
தேவர்கள் அனைவரிலும் முதல்வன் {இந்திரன்}, பிரம்மனின் கைகளில் இருந்து எழுந்த சங்கை முழக்கினான். அந்த முழக்கம் பகைவருக்கு மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அந்தச் சங்கின் முழக்கத்தைக் கேட்டு மூவுலகத்தினரும் கட்டுப்பட்டு, இந்திரனைத் தங்கள் மன்னனாக அடைந்து பேரமைதியை அனுபவித்தனர். மூவுலகங்களும், நெருப்பாலும், ஒளியாலும் அமைந்த ஆயுதங்கள் தரித்து மந்தர மலைக்கு முன்பாக நின்றன" என்றார் {வைசம்பாயனர்}.(17-19).
பவிஷ்ய பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 19
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |