Monday 21 June 2021

பிருதுவின் பதவியேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 26

(பிருதுராஜ்யாபிஷேககதநாதி)

An account of Prithu and the churning of the ocean | Bhavishya-Parva-Chapter-26 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருது அரியணையில் நிறுவப்பட்டது; பெருங்கடலைக் கடையும் திட்டம் உருவானது...

churning-of-milk-ocean

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உலகம் முழுவதிலும் அகங்காரமும், அறியாமையும் இவ்வாறு நீடித்திருந்தபோது மக்கள் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், "ரிஷிகளுடன் கூடிய பிரஜாபதி, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வேனனின் மகனான பிருதுவை அரியணையில் நிறுவினான்.(2) திரேதா யுகம் தொடங்கிய போது, மக்கள் தங்களுக்குள், "இதுவரை பிறந்தவர்களில் இவனே நமது மிகச் சிறந்த மன்னனாவான்.(3) தலைவன் தன்னிடம் ஒப்படைத்த கடமைகளில் நிறைவடைந்தவனாக நமக்கு வாழ்வாதாரங்களை வழங்கி, பிராமணர்களையும், அனைத்து உயிரினங்களையும் இவன் பாதுகாப்பான்" என்றனர்.(4)

அதே வேளையில், பல்வேறு அறவிதிமுறைகளில் சோர்ந்து போன தேவர்கள், கந்தமாதன மலையின் மேட்டுச் சமவெளியில் ஓய்ந்திருந்தனர்.(5) வசந்த காலம் வந்ததும் தேவர்களும், தானவர்களும் அனைத்துப் புறங்களிலும் நறுமணத்தை நுகர்ந்து பெரிதும் நிறைவடைந்தனர்.{6} அவர்கள், "காற்றில் பரவும் மலர்களின் நறுமணம் இனிமைமிக்கதாக இருப்பதால் பூமிசார்ந்த ஒவ்வொரு பொருளின் மணமும் சிறப்பாகவே இருக்கும்" என்று நினைத்தனர்.{7} அந்த நறுமணத்தை நுகர்ந்ததும் தைத்தியர்கள் தொடக்கத்தில் சற்றே ஆச்சரியமடைந்தனர். அதன் பிறகு பெரும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் மிகச் சிறந்த இன்ப நிலையை அடைந்தனர்.{8}(6-8)

அதன் மணத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அனைவரும் ஒருசேர, "ஒவ்வொரு மலரின் சக்தியும் இவ்வாறே இருக்கிறது; இதன் கனி {பயன்} என்னவென்பதை நாம் அறியோம்.(9) ஊகத்தின் மூலமே பல்வேறு செயல்முறைகளும் கண்டறியப்பட வேண்டும். இந்தப் புத்தியின் சக்தியால் மனிதர்கள் மங்கலச் செயல்களையும், மங்கலமற்ற செயல்களையும் {நன்மை தீமைகளைச்} செய்கிறார்கள்.(10) விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லதும், சக்திமிக்கதுமான மந்தர மலையைக் கொண்டு, நீரில் மூலிகைகளை இட்டு நாம் அரைப்போம்[1].(11) பெருஞ்சக்தியுடன் நாம் பெருங்கடலைக் கடைந்து, அமுதத்தைப் பருகி, அவித்யை அல்லது அறியாமையை அழிப்பதற்காக ஒருசேர நம்மை ஆயத்தம் செய்து கொள்வோம்.(12) நாம் வழிபடும் பெருஞ்சக்தியான விஷ்ணு, (யோகத்தில்) நமது வழிகாட்டியாக இருப்பான். ரிபுக்களுடன் (ஆசைகளுடன்) நாம் வாழ்ந்து வந்தாலும், அவற்றை வென்று தியுலோகத்தையும், பூர்லோகத்தையும் அனுபவிப்போம்.(13) வேர்கள், இலைகள், கிளைகள், மலர்கள், கனிகள்[2] ஆகியவற்றுடன் நாம் பூமிக்கு அமுதத்தைக் கொண்டு செல்வோம்" என்றனர்.(14)

[1] "இதன் மறைபொருள்: மந்தர மலை என்பது உண்மையான புத்தி என்ற பொருளைக் கொண்டதாகும்; பாயாஸம் என்பது ஞானம் அல்லது அறிவைக் குறிக்கும், ஔஷதிகள் என்பது உடல்சார்ந்த பற்றைக் குறிக்கும். உண்மையான புத்தியின் மூலம் உண்மை ஞானத்தில் உடல்சார்ந்த பற்றுகளை நாம் மூழ்கடிப்போம் என்பது இங்கே பொருளாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] "தந்தை, மனைவி, சகோதரர்கள், பிள்ளைகள் முதலியவர்களுடன் சேர்ந்திருப்பதை இது குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

மந்தர மலையைப் பெயர்ப்பதைக் குறித்து இவ்வாறு பேசிய தைத்தியர்கள், கந்தமாதன மலையில் விளைந்த மூலிகைகள் அனைத்தையும் பிரித்தெடுத்தனர். பிறகு, மந்தர மலையைப் பெயர்த்தெடுக்க ஓடி பூமியை நடுங்கச் செய்தனர். தனுவின் குலத்தில் பிறந்த தானவர்களால் மந்தர மலையைப் பெயர்க்க முடியவில்லை. அவர்கள் தங்கள் முழங்கால்கள் நொறுங்கி மலையின் வெற்றிடங்களில் விழுந்தனர்.(15-17)

அதன்பிறகு அவர்கள், தவங்களின் மூலம் தங்கள் பாவங்களைச் சிதறடித்து, உரிய புத்தியின் மூலம் தங்கள் சுயத்தைக் கட்டுப்படுத்தி, ஈஷ்வரனிடம் தலைவணங்கி அவனது புகலிடத்தை நாடினர்.(18) எல்லாம் வல்லவனும், தற்கட்டுப்பாடுடையவனும், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக எங்கும் செல்லவல்லவனுமான பிரம்மன், அவர்களின் மனத்தில் உள்ள ஆசையை அறிந்து, புலப்படாத குரலில் {அசரீரியாக},(19,20) "ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், மருத்துகள், தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்கள், கின்னரர்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து மந்தர மலையைப் பெயர்த்தெடுத்து, இமயத்தின் சாரமாக இருக்கும் மூலிகைகளை அடையட்டும்" என்றான்.(21-23)

கரவலிமையுடன் கூடியவர்களான தைத்தியர்கள், அனைவரின் முன்னிலையில் சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்கள், தானவர்களென அனைவராலும் நிறுவப்பட்ட புஷ்கரம் இருக்கும் உப்புநீர் பெருங்கடலின் அருகில் மனத்தாலும், சொற்களாலும் தங்களைப் பலராகப் பெருக்கிக் கொண்டனர். (24,25) அவர்கள், மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை வடமாக்கி மூலிகைகளுடன் கூடிய உப்புநீர் பெருங்கடலை ஆயிரக்கணக்கான வருடங்கள் கடைந்தனர். நீர் மற்றும் மூலிகைகளின் கலவையுடன் அமுதமானது பாலின் வடிவில் உண்டானது.(26,27)

அதன் பிறகு, தன்வந்தரி, ஸ்ரீதேவி, தெளிந்த சந்திரன் ஆகியோர் எழுந்தனர், மது, கௌஸ்துப மணி, உச்சைஷ்ரவமெனும் அழகிய குதிரை ஆகியவையும், பாலும் எழுந்தன. பேராசையாலும், கோபத்தாலும் பீடிக்கப்பட்ட அசுரர்கள் அமுதத்தைக் கொள்ளையடித்தனர்.{28,29} அதை எடுப்பதற்காகத் தேவர்கள் ராஹுவிடம், "தைத்தியர்களிலும், தானவர்களிலும் எவரும் அமுதத்தைப் பருகவில்லை" என்று சொன்னார்கள்.{30} அதன்பிறகு ஹரி தன்னுடைய சக்கரத்தால் ராகுவின் தலையை அறுத்தான். பித்ருக்களாலும், முனிவர்களாலும் கூட நிரந்தரமாக அனுபவிக்க முடியாத அமுதம் போன்ற ஞானத்தை இந்திரனின் கைகளில் இருந்து பூமி பறித்துக் கொண்டது.{31} வேத சொற்றொடர்களால் தூண்டப்பட்டும், சீடத்துவத்தை {இந்திரனை குருவாக} ஏற்றுக் கொண்டும் ஞானமெனும் அமுதத்தைப் பூமி அபகரித்துக் கொண்டது" என்றார் {வைசம்பாயனர்}{32}.(28-32).

பவிஷ்ய பர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 32

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்