Wednesday, 16 June 2021

மது அசுரன் - விஷ்ணு போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 24

(மோஹவிவேகயோர்யுத்தம்)

The fight between Madhu and Vishnu | Bhavishya-Parva-Chapter-24 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : இந்திரனைக் கட்டிப்போட்டு விஷ்ணுவை எதிர்த்துச் சென்ற அசுரன் மது; இசையில் மயங்கிய மது; விஷ்ணுவுக்கும் மதுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; மது விஷ்ணு எனும் உருவகம்; விஷ்ணுவின் பெருமை; விஷ்ணு துதி...

Pranayama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பயங்கர சக்தியும் பேராற்றலும் மிக்கத் தைத்தியன் மது, கூரிய வடங்களைக் கொண்டு அந்த மலையில் மகேந்திரனைக் கட்டிப்போட்டான்.[1](1) இந்திரனின் கௌரவத்தை அடைய விரும்பிய மது, பிரஹ்லாதனுடைய சொற்களின்படியும், உண்மையான புத்தியின் வீழ்ச்சியாலும் திடீரென அவனை {இந்திரனை} வெல்லப்பட முடியாத இரும்பு வடங்களால் கட்டிப்போட்டான்; அதன் பிறகு தன் படைக்குத் தலைமையேற்று வெளியே வந்த அவன் {மது}, காலனால் தூண்டப்பட்டவனாகப் பேராற்றல் வாய்ந்த விஷ்ணுவைப் போருக்கு அழைத்தான்.(2-4)

[1] "இந்தப் பத்தியின் மறைபொருள் என்னவென்றால், அரக்க உணர்வான மயக்கத்தின் வடிவமாக {அறியாமையாக} இருந்த அந்த மது, ஆன்மாவை (மகேந்திரனை) உடலுக்குள் {மலையில்} கட்டிப்போட்டான் என்பதாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

கசியபரின் மகன்கள், தங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு மதுவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். அவர்கள் பெரும் தண்டங்களை எடுத்துக் கொண்டு போரிடுவதற்காக விரைந்து சென்றனர். பாடும் கலையிலும், ஆடற்கலையிலும் தேர்ந்திருந்த கந்தர்வர்களும், கின்னரர்களும், அனைத்துப் பக்கங்களிலும் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தனர். தந்தி இசைக்கருவிகளின் இனிய இசையால் அவர்கள் போரிட்டுக் கொண்டிருந்த மதுவை {மது அசுரனை} நிறைவடைச் செய்து அவனது கவனத்தைச் சிதறடித்தனர். தானவர்களும், தேவர்களும் ஒருவரையொருவர் கண்ட போது, மது பாடுவதில் தன் மனத்தை நிலைநிறுத்திக் கதறிக் கொண்டிருந்தான். மரத்திற்குள் கமுக்கமாக வாழும் நெருப்பைப் போல விஷ்ணுவும் தன் யோகக் கண்களால் மதுவின் மனத்தைப் புலன் நுகர் பொருட்களில் ஈர்த்து மந்தர மலையில் மறைந்தான். {தீ போல} எரியும் புத்தியைக் கொண்ட ரிஷிகள் சற்றே மனம் வருத்தமுற்றுப் பெரும்பாட்டனைத் தங்கள் முன்னிலையில் கொண்டு ஒரு கணத்தில் மறைந்தனர்.(5-11)

கோபத்தால் தூண்டப்பட்டவனும், {இசை எனும்} போதையால் கண்கள் சுழல்பவனுமான மது, தன் கைகளால் விஷ்ணுவின் நெற்றியைத் தாக்கினாலும் அவன் ஒரேயொரு அடியைக் கூட விட்டு நகரவில்லை.(12) விஷ்ணுவும் தன் விரலின் நுனியால் தைத்தியன் மதுவின் மார்பில் தாக்கியபோது அவன் குருதியைக் கக்கி பூமியில் விழுந்தான். நினைத்தற்கரிய ஆற்றலைக் கொண்டவனும், போரில் திறன்மிக்கவனுமான விஷ்ணு, மற்போருக்கான நேரத்துக்காகக் காத்திருந்தாலும், அந்தத் தைத்தியன் வீழ்ந்தபோதும் அவனைத் தாக்கவில்லை. தரையைத் தன் முழங்காலால் தீண்டித் தன்னைத் தாங்கிக் கொண்ட தைத்தியன் மது இந்திரனின் கொடிக்கம்பத்தைப் போல எழுந்து நின்றான். கோபத்தில் நிறைந்த மனத்தைக் கொண்டவனான அவன், தன் கண்களால் திக்குகள் அனைத்தையும் எரித்தான். அதன் பிறகு அவர்கள், கடுஞ்சொற்களைச் சொல்லி முழங்கி, ஒருவரையொருவர் கொல்லவிரும்பி மற்போரில் ஈடுபட்டனர்.(13-16) அவ்விருவரும் கைகளின் பலத்தையும், போரில் திறத்தையும் கொண்டவர்களாகவும், பெரும் தவசிகளாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும் இருந்தனர். அந்தப் பெரும் வீரர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பாறைகளைச் சிறகுகளாகக் கொண்ட இரு மலைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதைப் போல அது தெரிந்தது. போர்வெறிக் கொண்ட அவ்விருவரும் நிலத்தில் ஒருவரோடொருவர் போரிட்டனர். இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடுவதைப் போலவே அவர்கள் தங்கள் நகங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கினர்.(17-19)

கோடை காலம் நிறைவடைந்து, மழைக்காலத் தொடக்கத்தில் வேறு கனிமப் பொருட்களுடன் கலந்த தங்கம் மலைகளில் இருந்து வெளியேறுவதைப் போலவே குருதியும் காயங்களில் இருந்து ஏராளமாக வெளியேறிற்று. வெளியேறும் குருதியுடன் கூடிய அவர்கள் தங்கள் கால்களால் பூமியின் பரப்பைக் கிழிக்கத் தொடங்கினர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், ஊனுண்ண விரும்பும் பறவைகள் தங்கள் சிறகுகளால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலப் போரிட்டனர். விஷ்ணுவின் மகிமைகள் எனும் வாய்மையையும், ஆன்ம சக்திகள் அனைத்தையும் சித்தர்கள் பாடிக் கொண்டிருப்பதை உயிரினங்கள் கேட்டன[2].

[2] மது அசுரனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் நடைபெறும் போரானது, மனிதனின் யோக நிலையில் அறியாமைக்கும் விவேகத்திற்கும் இடையில் நடைபெறும் போராக இங்கே உருவகப்படுத்தப்படுகிறது.

நெருப்பு, நீர், நிலம் {பூமி} என்ற பூதங்களால் இந்த உடல் அமைந்திருக்கிறது. அதன் பிறகு நனவுநிலையானது அந்த உடலில் நிறுவப்படுகிறது. நனவுநிலையில் உடலும், புலன்களும் கலந்த பெரும்பிரம்மமே ஜீவன் என்று அழைக்கப்படுகிறது. நுட்பமான அந்தக் காரணம் {ஜீவன்} அழியும்போது, அடிப்படை பூதங்கள் அனைத்தும் அதில் இருக்கத்தான் செய்கின்றன, அதே நுண்சாரப் பொருட்களே பலவடிவங்களில் மீண்டும் தோன்றுகின்றன. நுண்ணாத்மாவானது உடலின் தொடர்பில் இருந்து பிரிந்தாலும், நனவுநிலையாக மூவுலகங்களில் பொருட்கள் அனைத்திலும் படர்ந்தூடுருவி அவற்றை அனுபவிக்கிறது. தீயோரை ஒடுக்குவதற்காகவும், நல்லோரைப் பாதுகாப்பதற்காகவும் யோகமாகவும், தியு லோகத்தின் பாதுகாவலனாகவும் இருக்கும் ஈஷ்வரனானவன், மனிதன், சேஷன், ஆமை என்றும், இன்னும் பல வடிவங்களையும் ஏற்று, பூமியைத் தாங்கும் அனந்தனையும், நான்கு வேதங்களாக இருக்கும் தன்னையும் ஒருசேர ஆதரிக்கிறான். வேதங்களாகப் பிராமணர்களில் இருப்பதைப் போலவே க்ஷத்திரியர்களில் போர்க்கலையாகவும், வைசியர்களில் வணிகமாகவும், சூத்திரர்களில் தொண்டாகவும் தலைவன்  நீடித்திருக்கிறான்.(20-29)

பசுக்களில் வாழும் தலைவன் உங்களுக்கு மத்தியில் பாலைப் பகிர்ந்தளித்து உங்களை நீடித்திருக்கச் செய்கிறான். வேள்விப் பொருட்களில் நிலைத்திருக்கும் அவன் கனிகளால் உங்களையும், ஹவியின் புகையால் பித்ருக்களையும், ஹிவர்பாகத்தால் தேவர்களையும் பாதுகாக்கிறான்.(30) தலைவன், பித்ருக்களுடன் கூடியவனாக நான்கு பூதங்களையும், ஏழு வகை உணவுகளையும் கொண்டு மூவுலகங்களையும் பாதுகாக்கிறான்.(31) வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கும் சூரியனும் சந்திரனும், தங்கள் சக்தியின் மூலம் அந்த ஏழுவகை உணவுகளின் வடிவமாகின்றன.(32) மனம், சொற்கள், உயிர்மூச்சுகள் ஆகிய மூன்றும் தொடர்ந்து சூரியனைப் பெருகச் செய்கின்றன; எஞ்சிய நான்கும் சந்திரனைப் பெருகச் செய்கின்றன.(33) மூவகையினராக இருக்கும் பித்ருக்கள் தங்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் உணவுப் பிண்டங்களைக் கெடுக்கின்றனர், எஞ்சிய நால்வகையினர் அவற்றை ஏற்கின்றனர்.(34)

பொன்னானது காதுகுண்டலமாவதைப் போல நீ ஐம்புலன்களில் மறைந்திருக்கிறாய்; நீ அகந்தையிலும் பிற கோட்பாடுகளிலும் வாழ்கிறாய்; நித்தியமானதும், அழிவற்றதுமான பிரம்மத்தில் இருந்து நீ வெளிப்பட்டாய்.(35) நெருப்பும், காற்றும் உன்னிலிருந்தே சக்தியைப் பெறுகின்றன; ஏனெனில், ஆதித்யன் என்றழைக்கப்படும் உன்னிலிருந்த தங்கள் சக்திகளை அவை பெறுகின்றன.(36) யுக முடிவின்போது நீ உன் கதிர்களால் அண்டத்தை விழுங்கிவிடுபவனைப் போல அதை எரிக்கிறாய்; அதன் மூலமே நீ உயர்ந்த ஆன்ம சக்தியை அடைகிறாய்.(37) அமாவாசையிலும் (நிலவு முற்றாகப் புலப்படாதபோதும்), பௌர்ணமியிலும் {நிலவு முழுமையாகப் புலப்படும்போதும்}, சூரியன், சந்திரன், வசுக்கள் ஆகியோரின் மூலம் உதித்த ரிஷிக்களுடன் கமுக்கமாக நீ திரிகிறாய்.(38) ஊட்டத்தைக் கொடுக்கும் வேள்விகளைச் செய்யும் நீ, அறத்திற்குக் கேட்டை விளைவிக்காமல் சொர்க்கத்தைக் கொடுக்கிறாய். அமாவாசை, பௌர்ணமிகளில் நீ மரங்களிலும், மூலிகைகளிலும், செடிகொடிகளிலும், பூமியிலும் சந்திரனைப் போலத் தோன்றுகிறாய். மீண்டும் பிறவியை அடைவதற்காக நீ ஒவ்வொரு பக்ஷத்திலும் பிறப்பை எடுக்கிறாய்.(39,40) ஓ! பூதங்களின் தலைவா, நீயாகவே இருப்பவையும், சென்றவையும், மீண்டும் வருபவையுமான உயிரினங்களின் ஊட்டத்திற்காகவே பூமியில் எவையும் நீடித்திருக்கின்றன.(41) பூமியில் நிலவும் தினசரி கடமைகள் அனைத்தும் நீயே. நீயே யஜ்ஞம், நீயே கர்மன், நீயே மந்திரம், நீயே சொற்கள், நீயே ஆத்மா.(42) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் சூரியன், தெளிந்த சந்திரன் என்ற இரு வழிகள் இருக்கின்றன. சந்திரன் பித்ரு லோகத்திற்குச் செல்லும் வழியாகவும், சூரியன் தேவலோகத்திற்குச் செல்லும் வழியாகவும் இருக்கின்றன.(43)

உயிரினங்களின் வடிவிலும், அழியும் விதிமுறைகளால் வழிநடத்தப்பட்டும் நீ இந்த அண்டத்தில் இருக்கிறாய்; உன் வடிவில் புலன்களை அழித்து எவருக்கும் புலப்படாதவனாக நீ வாழ்ந்து வருகிறாய். தனியாகப் பிறந்தவன் நீயே; புராதனனும், அண்டப் புருஷனும் நீயே; சிதைவற்றவனும், ஒப்பற்றவனும் நீயே; தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாக இருந்தாலும் நீ விளையாடிக் கொண்டிருக்கிறாய். சக்தியில் நெருப்பைப் போன்றவன் நீயே; காற்றின் வடிவில் திரிபவன் நீயே. நுட்பமான ஐம்பூதங்களால் எப்போதும் சூழப்பட்டவன் நீயே. மனம் மற்றும் புறப் புலன்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஜீவனாக இருப்பவன் நீயே; முக்திக்கான பணியில் தூய புத்தியாக இருப்பவன் நீயே; தினசரி அழிவுக்கான பணியின் ருத்ரனின் வடிவில் இருப்பவன் நீயே. விஷ்ணுவாக இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் நீயே. பல்வேறு வகையினரும், வர்ணத்தினரும் நீயே; கண்கள் மற்றும் புலன்களின் நனவுநிலை நீயே. தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பாவமற்றவர்களும், தங்கள் செயல்களின் மூலம் பெரும்பிரம்மத்தை அடைந்தவர்களும், நண்பரையும், பகைவரையும் ஒன்றாகக் கருதுபவர்களுமான முனிவர்கள் எப்போதும் உனக்குத் தொண்டு புரிகின்றனர்.(44-48)

பல்வேறு சித்தர்களாலும், முனிவர்களாலும் இவ்வாறு துதிக்கப்பட்ட பெரும் விஷ்ணு, ஹயசிர வடிவை நினைத்தான். வேத வடிவையும், தேவ உடலையும் அந்தத் தலைவன் ஏற்றபோது, சிவன் அவனது தலையிலும், பிரம்மன் அவனது இதயத்திலும் இருந்தனர். சூரியக் கதிர்கள் அவனது குண்டலங்களில் இருந்தன, சந்திரனும், சூரியனும் அவனது இரு விழிகளாகினர். வசுக்கள் அவனது ஜங்கங்கள் {தொடைகள்} இரண்டில் இருந்தனர், சித்தர்களும், தேவர்களும் அவனது மூட்டுகளில் இருந்தனர். வேதங்கள் அவனது சொற்களாகவும், மருத்துகளும், வருணனும் அவனது கால் மூட்டுகளாகவும் இருந்தனர். தேவர்களுக்கும் பேரற்புதமாகத் திகழும் இந்தப் பெரும் வடிவை ஏற்ற தலைவன் ஹரி, கோபத்தில் கண்கள் சிவந்தவனாக, மயக்கத்தின் {மோகத்தின்} அடையாளமாகத் திகழும் அந்த அசுரனைத் தாக்கத் தொடங்கினான். வெள்ளாடை உடுத்திய இளங்காரிகையைப் போன்ற பூமியானவள், மதுவின் கொழுப்பு மற்றும் இறைச்சியால் நிறைந்திருந்தாள்.(49-54) எனவே, ஓ! மன்னா, பூமியானவள் மேதினி என்றழைக்கப்பட்டாள், {இது போன்ற} ஆயிரக்கணக்கான அசுரர்களுக்காகவே அவள் தரணி என்ற பட்டப்பெயரையும் பெற்றாள்" என்றார் {வைசம்பாயனர்}.(55)

பவிஷ்ய பர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 55

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்