(ஈஷபக்திமாஹாத்ம்யம்)
The beginning of fight between Devas and Daityas | Bhavishya-Parva-Chapter-23 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : கசியபரையும், அவரது மகன்களையும் வேள்வி செய்யத் தூண்டிய பிரம்மன்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் தொடங்கிய போர்; விஷ்ணு கொடுக்கும் சத்வ குணம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வேதங்களை நன்கு அறிந்தவர்களும், சடங்குகளை {செயல்களைத்} தவிர்த்ததால் பாவங்கள் அண்டாதவர்களும், நாரதரின் தலைமையிலானவர்களுமான ரிஷிகளும், கந்தர்வர்களும், அந்தப் பிராமணர்களின் முன்னிலையில் சூரியனையும், சந்திரனையும் நிறுத்தி அவர்களை வழிபட்டனர். மேலும் அவர்கள் தந்தையைத் துதிக்கும் ஒரு மகனைப் போல எப்போதும் பெரும்பாட்டனை {பிரம்மன்} வழிபட்டனர்.
ஐம்புலன்களையும் அடக்கிய அந்தப் பிராமணர்களின் இனிய சொற்களால் துதிக்கப்பட்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் எப்போதும் நன்மையைச் செய்பவனும், அவை நன்றாக இருக்க வேண்டுமென எப்போதும் விரும்புகிறவனுமான தலைவன் பிரம்மன், "(நீங்கள் அந்த வேள்விகளை மேற்கொண்டது) நற்பேற்றினாலேயே" என்றான்.(1-4)
அப்போது எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன் {பிரம்மன்}, கசியபரிடம், "நீயும், உன் மகன்களும் பூமியில் வேள்விகளைச் செய்வீர்களாக. யக்ஷர்கள், மற்றும் அசுரர்கள் அனைவரும் ஏராளமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்வார்கள்" என்றான்.{5,6}
பலத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த தைத்தியர்களும், தேவர்களும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, "நாங்களே முதலில் வேள்விகளைச் செய்வோம், நாங்களே வழிபடுவோம்" என்று சொல்லி, ஒருவரோடு ஒருவர் போரிட இருந்தனர்.{7,8}
தவங்களாலும், துறவுகளாலும் பாவம் கழுவப்பட்டவர்களான ரிஷிகளும், வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கறிந்த பிராமணர்களும் அவர்கள் அனைவரையும் தடுத்தனர். அவ்வாறு தடுக்கப்பட்டாலும், கோகுலத்தில் உள்ள காளைகளைப் போல அவர்கள் ஒருவரோடு ஒருவர் போரிடத் தொடங்கினர்.{9,10}
அவர்கள் வேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு பேராவலுடன் போரிடத் தொடங்கினர். போர் தொடங்கியபோது அவர்கள் தங்கள் உயிர் மூச்சை வெல்லும் விருப்பங்கொண்டு உயிரினங்கள் அனைத்தின் முன்னிலையில் மாண்டனர்.{11} அதன் பிறகு, அந்த அசுரர்களும், சுரர்களும் {தேவர்களும்} தங்கள் புத்தியினாலும், உண்மை ஞானத்தில் விளைந்த பற்றின்மையாலும் புற புலன்களைக் கட்டுப்படுத்தி, சிறகுகளுடன் கூடிய பறவைகளைப் போலத் தங்கள் மனங்களைக் கட்டுப் படுத்தினர்.{12}
அப்போது, மனித கனத்தின் அழுத்தத்தால் மூழ்கும் படகைப் போலவே வேள்விக் களங்களும் உலகம் சார்ந்த நோக்கங்கள் எனும் தழல்களால் கலங்கடிக்கப்பட்டன. முழங்கும் காளைகளைப் போல யோகத்தோற்ற அமைவுகள் உடைக்கப்பட்டு, உயிர் மூச்சுகளால் குழாய்கள் கலங்கடிக்கப்பட்டன.{13,14}
அதன் பிறகு, அறிவுசார் புலங்கள் கலங்கிய {புத்தி கலங்கிய} மதுவும், சத்வ குணத்தை ஒத்தவனான விஷ்ணுவும் ஒரு யுக சுழற்சியைக் கிட்டத்தட்ட புரட்டியதும், அனைத்து, உயிரினங்களுக்கும் அச்சத்தை உண்டாக்கியதுமான ஒரு பயங்கரப் போரில் ஈடுபட்டனர்.{15} அப்போது, தீப்பற்றி எரியும் காட்டைத் தணிக்கும் மேகத்தைப் போல விஷ்ணு மனோசக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தினான். அந்தத் தலைவனின் {விஷ்ணுவின்} பெயரைச் சொல்பவன், தன் மனத்தைக் கட்டுப்படுத்திய பிறகு சத்வ குணத்துடன் தோன்றுகிறான்" என்றார் {வைசம்பாயனர்}[1].{16}(15-16)
[1] இந்த அத்தியாயம் முழுமையும் பிராணாயாம / யோகச் செயல்முறையையே பூடகமாகச் சொல்கிறது. பவிஷ்ய பர்வம் 21ம் பகுதியில் உள்ள 1ம் அடிக்குறிப்பைப் பார்க்கவும்.
பவிஷ்ய பர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 16
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |