(கர்மபலபரிச்சேதாய யோகவர்ணனம்)
The creation of rivers | Bhavishya-Parva-Chapter-17 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஆறுகள் படைக்கப்பட்டது குறித்தும், ஆசிரமங்களைக் குறித்தும் ஜனமேஜயனுக்கு விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்...
வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, "பெருகும் சூரியனால் பூமியின் பரப்பில் உண்டாக்கப்பட்ட துளையில் மைநாக மலை நிலைநிறுத்தப்பட்டது.(1) ஆசையானது பெருங்கடலை நிறைத்ததால் அது பர்வதம் என்றும், நிலை நிறுத்தப்பட்டதால் அஃது அசலம் என்றும் அழைக்கப்பட்டது; எனினும் இயல்பாகவே அது மேரு என்றே அழைக்கப்பட்டது.(2)
பரந்திருக்கும் சுமேரு மலையின் உச்சியில், பிரகாசத்தால் பெறப்பட்டவனும், தலை, கால் முதலியவற்றுடன் வெளிப்பட்டவனும், பெருஞ்செழிப்பைக் கொண்டவனுமான புருஷன் வாழ்கிறான். அவன் இயற்கையின் மூலம் பரமாத்மாவால் படைக்கப்பட்டான்.(3) தலையில் கிடக்கும் பிரம்ம சக்தியானது, அந்தப் புருஷனின் எரியும் ஒளி வடிவை ஏற்றது.(4) அவனுடைய வாயில் இருந்து நான்கு வாய்களுடன் கூடியதும், பிரம்ம அறிவைக் கொண்டோரில் முதன்மையானவர்களும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவர்களுமான நால்வருடன் கூடியதுமான பிரம்மம் அவனுடைய பிரகாசத்தில் எரிவது போலவும், வெளிப்பட்டது. அவனில் இருந்தே பெரும்பூதங்கள் மீண்டும் இருப்புக்குள் வந்தன.(5,6) அவ்விடத்தில் (மேருவில்) நிலைத்திருந்த பிரம்மத்தால் நீரில் இருந்து பூமி உயர்த்தப்பட்டதால் அவன் புலப்படாதவனாக இருப்பினும் மனிதர்களின் பார்வைக்குள் வந்தான்.(7)
மேருவின் உச்சியாக இருக்கும் பிரம்மலோகமானது, சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையில் அமைந்திருக்கிறது. அது நூறு, அல்லது ஆயிரம் யோஜனைகள் உயரம் கொண்டதாகவும், அதைவிட நான்கு மடங்கு அகலம் கொண்டதாகவும் இருக்கிறது.{8} மேருவின் அளவு கற்பனையானதே என்பதாலும், ஒரு பாலைவனத்தின் பரப்பையோ, ஏரியின் ஆழத்தையோ அளப்பது போல அதை அளந்துவிட முடியாது என்பதாலும், தெய்வீக ஞானத்தைக் கொண்ட எந்த மனிதனாலும் பல்லாயிரம் வருடங்கள் ஆனாலும் அதன் உயரத்தை அளக்க முடியாது.{9} அதன் உயரத்தையும், பரப்பையும் போலவே அதன் சுற்றளவும் எல்லையற்றதே. ஓ! மன்னா, நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட சுமேருவின் பரப்பளவு நூறு யோஜனைகளாகும்.{10}(8-10)
ஆன்ம சாதனை செய்தவர்களும், பிரம்ம ஞானத்தை அறிந்தவர்களுமான சில துறவிகள் இந்த மலையின் இன்னும் பல சிறப்புகளைச் சொல்கிறார்கள்.(11) மருத்துகள், தேவர்கள், ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், விஷ்வதேவர்கள் ஆகியோருடன் அவன் லோகபாலர்களைப் பாதுகாக்கிறான்.(12) விஷ்ணுவின் ஆற்றல் எங்கும் சமமாகப் பரவி இருக்கிறது. ஓ! மன்னா, அவன் {புருஷன்}, பிரம்மத்தில் இருந்து பெற்ற தன்னுடைய பிரம்ம உடலில் தெய்வீக விஷ்ணுவுடன் சேர்ந்து, சூரியன் (நெருப்பு), வருணன் (நீர்) ஆகியோரிடம் இருந்து வெளிப்படும் பூமியைப் பாதுகாக்கிறான். (13,14)
வாய்மை நிறைந்த பிராமணர்கள், தாங்கள் செய்யும் பல்வேறு நோன்புகளினாலும், வேத கல்வியில் அவர்கள் அடைந்த தேர்ச்சியாலும் பிரம்மத்தைப் பாடியிருக்கிறார்கள்.(15) மூவுலகங்களும் பிரம்மனில் நிலைத்திருக்கின்றன, பிரம்மம் வெளிப்பட்ட நிலையிலோ, வெளிப்படாத நிலையிலோ அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறது.(16) வேதங்களில் தேர்ச்சியடைந்த பிராமணர்கள், வேதங்களால் அனுமதிக்கப்பட்டவையும், ஈஷ்வரனால் சுவாசிக்கப்பட்டவையும், மனத்தைத் தூய்மை செய்து, செயல்களைச் சொல்லாத சொற்களிலும் வஞ்சனையற்ற பிராமணர்களால் பயிலப்படுபவையும், தினம் தோறும் செய்ய வேண்டியவையுமான கட்டாயச் சடங்குகளை நமது நன்மைக்கானவை என்று கருதுகிறார்கள். இந்தச் சடங்குகள் நல்ல செயல்களின் பலனை விளைவித்தாலும் அவை பிரம்மத்தின் ஒரு சிறு பகுதியாகவே அமைகின்றன. இவ்வாறே ஸ்ருதிகள் சொல்கின்றன.{17,18}
வாய்மை நிறைந்த பிராமணர்கள், அனைவரின் ஆன்மாவான பிரம்மத்தின் மிக நுட்பமான பகுதியே இந்த அண்டம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். பிராமணர்கள், தாங்கள் அறிவுசார்ந்த தங்கள் பிரிவுகளின் பன்முகத்தன்மையால் வேள்விகளில் பிரம்மன், இந்திரன், மித்திரன், வருணன் முதலிய பெயர்களால் ஒரே பிரம்மத்தையே வழிபடுகிறார்கள். ஒரே பெரும் பிரம்மத்துக்கே விப்ரர்கள் பல்வேறு வழிகளில் பெயர் கொடுத்திருகிகறார்கள்.{19} அண்டத்தின் வடிவம் திரளானது, மனத்தின் வடிவோ நுட்பமானது. தலைவன், இவ்விரண்டு வடிவங்களும் புத்திக்கு மட்டுமே சொந்தமானவை என்பதை நினைவில் கொண்டு முதலில் ஆண், பெண் ஐக்கியத்தைப் படைத்தான்{20}.(17-20)
தெய்வீகத் தலைவன் பிரம்மன், பல்வேறு இன்பங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தேவியுடனும், தன் தொண்டர்களுடனும் அவற்றை இன்புறுகிறான்.(21) எளிய நாட்டங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் எப்போதும் முக்திக்கு வழிவகுக்கும் வழியிலேயே செல்லும் பிரம்மவாதிகளில் பிரம்மனே முதன்மையானவன்.(22) (உமை ஆன்ம அறிவியலாகவும், பரமேஷ்வரன் அதைப் புரிந்து கொள்ளும் நித்திய ஞானமாகவும் இருக்கின்றனர்) அவனது உடலே நீரோடையாகச் சொர்க்கத்தில் இருந்து பாய்கிறது. சோமன் {சந்திரன்} இவ்வோடையிலேயே பிறந்தான்; இதன் மூலமே மஹேஷ்வரன் கணங்களின் தலைவனாக ஆனான்.(23)
இயல்பாகவே மஹேஷ்வரனை, கணங்களின் மன்னனாக நிறுவியபோது பேரொலியை வெளியிட்டதால் ஆறு என்பது {நாதம் என்ற சொல்லில் இருந்து} நதி என்றழைக்கப்பட்டது.(24) அவள் {ஆறு} பிரம்மலோகத்தில் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொண்டு, தன் வழியில் நின்ற மலைகளைக் கடந்து, பூமியை நோக்கி ஏழு வழிகளில் இறங்கி வந்தாள்; இதன் காரணமாகவே அவள் கங்கை என்று அழைக்கப்பட்டாள்.(25) ஓ! மன்னா, பெருங்கடலில் கலக்கும் முன் கோதாவரியின் வடிவில் தன்னை ஏழாகப் பிரித்துக் கொண்டு, ஜானவியின் வடிவில் மேலும் ஆயிரம் பகுதிகளாகத் தன்னைப் பிரித்துக் கொண்டு பல்வேறு புனிதத்தலங்களுக்குப் பாய்ந்து சென்றாள்.(26)
முதலில் திரள் பூதங்கள் பெரும்பூதங்களில் இருந்து உண்டான பிறகே புத்தியின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.(27) அவனது தாமரை வாய்கள் நான்கில் இருந்து உண்டான வேதம், அதுமுதலே மனித குலத்திற்கு ஆன்ம போதனைகளின் ஊற்றாகத் திகழ்கிறது.(28) புனித வேள்வியானது அவனது ஞானத்தில் இருந்தும், புத்தியில் இருந்தும் வெளிப்பட்டது; நான்கு புரோகிதர்கள் அதன் நான்கு கால்களாகினர்; பெரும்பாட்டன் பிரம்மன் அதற்குத் தலைவனானான் {வேள்வியின் தலைவனானான்}.(29)
உலகத்தைத் தாங்கும் தர்மத்தின் நான்கு கால்களில் (நான்கு ஆசிரமங்களில்) முதலில் வருவது மாணவ நிலை என்றழைக்கப்படும் பிரம்மசர்யம், மிகப்புனித நிலையான இல்லறவாசி நிலை {கிருஹஸ்தம்} இரண்டாவதாகும்.(30) காட்டில் உள்ள அறத்துறவியின் நிலை {வானப்ரஸ்தம்}, பெரும்பிரம்மத்துடன் ஐக்கியமாகும் {சந்நியாச} நிலை ஆகியன மூன்றாவது, நான்காவது நிலைகளாகும். அறவாழ்வின் இந்நான்கு நிலைகளும் சொர்க்கத்தை அடைவதற்கு வழிவகுப்பவையாகக் கருதப்படுகின்றன.(31) யோகப்பயிற்சியின் மூலமும், வேதாந்தத்தை உண்மையாகப் புரிந்து கொள்வதன் மூலமும் மனிதனின் மனத்திறன்கள் வளர்ச்சியடைகின்றன. நித்திய வேதங்கள் பிரம்மசர்யம் பயில்வதற்காக நிலைத்திருக்கின்றன.(32) பித்ருக்கள் இல்லறவாசிகளின் ஒழுங்கை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுவதன் மூலம் நிறைவடைகிறார்கள், சுமேரு மலையின் உச்சியில் இருக்கும் ரிஷிகள் யோகத்தின் மூலம் நிறைவடைகிறார்கள்" என்றார் {வைசம்பாயனர்}[1].(33)
[1] சித்திரசாலை பதிப்பின் சம்ஸ்கிருத மூலத்தில் இந்த அத்தியாயம் 69 ஸ்லோகங்களைக் கொண்டிருக்கிறது. அதன் தமிழில் ஒலிபெயர்ப்பை நம் தளத்திலேயே காணலாம். மேலும் மன்மதநாத தத்தர் செய்த ஆங்கில ஹரிவம்சத்தின் அடுத்த அத்தியாயத்தில், மேற்கண்ட மூலத்தில் உள்ள இரண்டு அத்தியாயங்களைக் கடந்துள்ள 20ம் அத்தியாயமே 18ம் அத்தியாயமாக வருகிறது.
பவிஷ்ய பர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 33
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |