(ஸாங்க்யயோகவிசார꞉)
The great Brahman describe | Bhavishya-Parva-Chapter-16 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரம்ம ஞானம் குறித்து விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்...
வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, "ஓ! மன்னா, உன்னுடைய ஐம்புலன்களையும் {பஞ்சேந்திரியங்களையும்} கட்டுப்படுத்தி, தூய மனத்துடனும், முழு மனத்தின் கவனத்துடனும் நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.{1} எவனைக் கர்மத்தின் மூலம் அடைய முடியாதோ, எவன் பிரம்ம ஞானத்தை அறிந்தவர்கள் முன் தோன்றுவானோ, எவன் செயல்களில் பற்றில்லாதவனோ, எவன் பிரம்மத்துடன் தொடர்புடையவனோ,{2} எவன் அண்டத்தின் வெளிப்படாத காரணனாக {அவ்யக்த காரணனாக} இருக்கிறானோ, எவன் நித்தியனோ, எவன் வடிவத்துடனும், வடிவம் இல்லாமலும் இருக்கிறானோ அவனை நிஷ்கள {பகுபடாத, தூய்மையான} புருஷன் என்று அறிவாயாக. ஆத்மாவில் இருந்து பெறப்படும் அகங்காரம் {தன்முனைப்பு}, இந்தப் புருஷனிலிருந்தே வருகிறது.{3}(1-3) அவன் தெய்வீக வடிவைக் கொண்டிருக்கிறான், அவன் புலன்நுகர் பொருட்களின் தலைவனாக இருக்கிறான், அவன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், நித்தியனாகவும், யுகங்களின் பிறப்பிடமாகவும்,{4} காலத்தின் மூன்று வடிவங்களாகவும், பிறப்பில்லாதவனாகவும், எங்கும் நீக்கமற சமமாக நிறைந்தவனாகவும் இருக்கிறான். நாராயணனைக் குறித்த அறிவைக் கொண்டவர்கள், வெளிப்படாதவனில் இருந்து தனித்தவனாக இவனை அறிகிறார்கள்.{5}
அவன் அனைத்தையும் புரிந்து கொள்கிறான், எங்கும் செல்பவனாக இருக்கிறான், எங்கும் தன் தலையைக் கொண்டிருக்கிறான், அனைத்தையும் காண்கிறான், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைக் கொண்டிருக்கிறான்.{6} அனைத்தையும் கேட்கிறான், வெளியெங்கும் விரிந்திருக்கிறான். அவன் காரண, காரியங்களுக்குக் காரணனாகவும், வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும் இருக்கிறான், அவனுடைய நகர்வை எவராலும் காண முடிவதில்லை.{7}(4-7)
அவன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், வடிவமற்றவனாகவும் இருந்தாலும், வடிவத்தை ஏற்றுக் கொண்டு, தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மரத்தில் நெருப்பைப் போல எங்கும் திரிந்து கொண்டிருக்கிறான்.{8} அவனே பரமேஷ்டி, அவனே பிரஜாபதி, அவனே உலகங்களின் தலைவனாகவும் இருக்கிறான். அவனுடைய இந்தப் பெயர் உண்மையில் பாடப்படுகிறது.{9} வெளிப்படாதவனான அவன், பிரம்மயோகத்தின் மூலம் வெளிப்படுகிறான். அஹங்காரமானது, நாராயணனில் இருந்து உண்டாகும் அறியாமையால் பெறப்படுகிறது.{10}(8-10)
சுயத்தின் நனவுடன் கூடிய இந்தப் புருஷன் பிரம்மமாக நிலைத்திருக்கிறான். அசைவன, அசையாதனவற்றை உள்ளடங்கிய உலகத்தின் தலைவனான அவன் பிரம்மன் என்று அழைக்கப்படுகிறான்.{11} எவன் இந்த அண்டத்தைப் படைத்தானோ, எவன் அனைத்துக்குப் பிறப்பிடமாக இருக்கிறானோ அந்தத் தலைவன், "நான் அனைத்தையும் படைப்பேன்" என்றான்.{12} பிரம்மன் இதைச் சொன்னபோது, இயற்கையில் இருந்து அங்காரத்தின் நனவு உண்டானது, இவ்வாறே மொத்த உலகமும் இருப்புக்குக் கொண்டு வரப்பட்டது.{13} ஆனால், உண்மையான, எல்லாம்வல்ல, குணங்களற்ற பிரம்மமானது, பிரம்மமாகவே நீடித்தது.{14} வெளிப்படாத பிரம்மத்தின் இயல்புத் தன்மைகளான நுட்பமான ஐந்து பூதங்களில் இருந்து வேதங்களும், அவற்றின் பல்வேறு கிளைகளும் வெளிப்பட்டன.{15}(11-15) அனைத்தையும் வெளிப்படுத்தும் பிரம்மத்தால் ஆணையிடப்படும் பிரம்மன், இயற்கையில் இருந்து ஒரு வடிவை ஏற்றுக் கொண்டு நீரைப் படைத்தான்.{16} அதன் பிறகு, ஈஷ்வரனின் ஆணையைப் பின்பற்றும் படைப்பாளர்களின் மத்தியில் ஏழாவது பிரம்மன், முன்பைப் போலவே காற்றைப் படைத்து, அதைத் தாங்கி தாத்ரி என்ற பெயரை ஏற்றான்.{17} முன்பு இந்த அண்டம் காற்றில் இருந்து உண்டாக்கப்பட்டு, நீரின் அடியில் மூழ்கியிருந்த போது, தார்ஜச தேவர்கள் அதை உயர்த்தியதால் மொத்த அண்டமும் வெளிப்பட்டது.{18} ஈஷ்வரன் தன் படைப்பை நிலைக்கச் செய்யப் பூமியை உண்டாக்க விரும்பியபோது, அவன் நீரின் ஒரு பகுதியை திடமான பொருளக மாற்றினான், எஞ்சியவை நீர்மமாகவே இருந்தன; அப்போது மக்கள் பூமியைக் கண்டார்கள்.{19}(16-19)
நீரானது ஒரு திடப் பொருளாக மாற்றப்பட்டதால் பூபுருஷன் எழுந்து பயங்கர ஒலியால் திசைகள் அனைத்தையும் நிறைத்து, "நான் நீருக்கு மேல் வாழ விரும்புகிறேன். நீரானது திடமாக மாற்றப்பட்டதால் நான் பீடிக்கப்பட்டுக் களைத்திருக்கிறேன். எனவே என்னை உயர்த்துவீராக" என்றான்.{20,21} அதன்பிறகு பூமியான பிருத்வி, உயிரினங்கள் அனைத்தையும் ஆதரித்து எங்கும் பரந்து விரிந்தவளாகச் சிறிது இடம்பெற விரும்பி, ஒரு வடிவை ஏற்று, "என்னை உயர்த்துவீராக" என்றாள்.{22} அந்த இனிய சொற்களைக் கேட்ட ஹரி, ஒரு பன்றியின் வடிவை ஏற்று, பெருங்கடலுக்குள் குதித்தான். அவன், நீரில் இருந்து பூமியை உயர்த்தும் மிகக் கடினமான பணியைச் செய்துவிட்டு, எவரும் தன்னைக் காணமுடியாத படி (மனக்குவிப்புடன்) சமாதியில் ஈடுபட்டான்.{23} பன்றியின் வடிவை ஏற்றுப் பூமியை உயர்த்தியவனே பிரகாசமான பிரம்மம் ஆவான். சிலர் அவனை ஆகாயமாக அறிகிறார்கள். அனைத்தையும் படைத்த பிரம்மன், அவனில் இருந்தே உண்டானான்.{24} அனைத்துக்கும் பிறப்பிடமான அந்த ஈஷ்வரன், ஞானத்தின் நுட்பமான மன யோகத்தின் மூலம் பாம்பு, ஆமை ஆகியவற்றின் வடிவில் இன்னும் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்.{25} பூமியின் உட்புறத்தையும், நீரின் உட்புறத்தையும் பிளந்து, சிரித்துக் கொண்டே சூரியனைப் படைத்து அவனை உயரத்தில் நிறுத்தினான்.{26} சூரிய லோகத்தில் இருந்து முழு வெப்பமும் வெளிப்பட்டது, சந்திர லோகத்தில் இருந்து முழு நீரும் வெளிப்பட்டது.{27} நித்திய ஞானத்தில் இருந்து சந்திரன் வெளிப்பட்டதாலும், அவன் பரமஞானம் கொண்டவன் என்பதாலும் அவன் சோமன் என்று அழைக்கப்பட்டான்.{28}(20-28)
சந்திரலோகத்தின் எல்லையில் இருந்து காற்றை (உயிர் மூச்சு) வெளிப்பட்டது. அவன் அனைத்து தோற்றப்பாடுகளின் காரணங்களையும் விளக்கி வேதங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.(29) அவனது யோகத்தின் மூலமும், பிரம்மத்தில் இருந்து உண்டாகும் அவனது இயல்பின் காரணமாகவும் அவன் தெய்வீகனும், நித்தியனுமான ஒரு புருஷனைப் படைத்தான்.(30) அவனுடைய நீர்ம நிலை நீரானது, திட நிலை பூமியானது; அவனது துளைகள் வானமானது, ஒளியுள்ள பகுதி கண்ணானது.(31) பிரம்மத்தில் இருந்து புருஷனாக வெளிப்படுவதும், பிரகாசத்தால் பெறப்பட்டதுமான மஹத் கோட்பாடு, ஐம்பூதங்களுடன் சேரும்போது உடலை காற்றின் மூலம் கலங்கடிக்கிறது.(32) ஜீவன் அல்லது மனித ஆத்மாவானது, புத்தியில் ஞானம் போல வெளிப்படையாக நிலைத்திருக்கிறது, ஈஷ்வரன் மட்டுமே அதை அறிவான்.(33) உடலில் நித்தியமாக நிலைத்திருக்கும் சுயம் அல்லது நெருப்பானது, ஐம்பூதங்களுடன் சேர்ந்த சூரியனாகிறது (அதாவது பரமாத்மா ஆகிறது).(34)
முற்பிறவி செயல்பாடுகளின் காரணமாக மனித ஆன்மாவானது, (ஆன்மவியலில்) முன்னேற்றத்தையோ, இழிநிலையையோ அடைந்து இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்கிறது.(35) புலன்களால் கலக்கமடைந்து, பிரம்மத்தை (அதன் உண்மை வடிவத்தைக்) குறித்த அறியாமையுடன் கூடிய ஒருவன், தன் கர்மத்தின் (செயல்களின்) காரணமாகப் பிறப்பையோ, இறப்பையோ அடைகிறான்.(36) ஒரு மனிதன் பரப்பிரம்மமாகாத வரையில் அவன் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைகிறான்.(37) யோகத்தின் பயனால் தன் புலன்களைக் கட்டுபடுத்திப் பிரம்மத்துடன் ஐக்கியமாகும்போதே அவன் உண்மையான மகிழ்ச்சியை {பேரின்பத்தை} அடைகிறான்.(38) இருப்பினும் அவன் (மாற்றங்களால் அமைந்த) இந்த உலகில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு பிரம்மமாகிறான்; அவன் கோபத்தால் அழிவையோ, புலன் நுகர் பொருட்களில் பற்றையோ அடைவதில்லை.(39)
உயர்ந்த ஆன்ம சக்திகளைக் கொண்டவனும், அனைத்தையும் அறிந்தவனுமான இவன் பூதங்களின் சாரங்களுக்குள் நுழைகிறான். அப்போது அவன் பிறப்பையும், இறப்பையும் அறிகிறான்.{40} பிரம்மத்தின் உண்மை வடிவை அறிந்த மனிதன், கடந்த கால, எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் முக்திக்கான வழிமுறைகளின் ஞானத்தை அடைந்து, மிகச் சிறந்த கதியை எட்டுகிறான்.{41}(40,41) அவன் தன் மனத்தால் அறிவுசார் புலன்கள் அனைத்தையும், பெருங்கடலைக் கலங்கடிக்கும் காற்றைப் போல மனத்தைக் கலங்கடிக்கும் ஆசைகள் அனைத்தையும் வெல்வான்.(42) மனிதனின் ஆன்மாவானது, ஞானக் கண்ணின் (ஆன்ம அறிவின்) மூலம் ஆசைகள் அனைத்தையும் வென்று, மனத்தை மாசுப்படுத்தும் உடலின் தளைகள் அனைத்தில் இருந்து விடுபடும்.(43) நுட்பமான உடலைக் கொண்ட யோகி, ஆன்ம அறிவியலின் மூலம் மறுமையைப் படைக்கவோ, அழிக்கவோ செய்கிறான்; இந்த உலகத்தையே கூட அவனால் படைக்க இயலும்.(44) பரமாத்மாவில் நிலைத்த மனத்தைக் கொண்டவனால், முற்பிறவி செயல்களின் காரணமாக இழிந்த நிலையில் பிறந்தவர்களை விடுவிக்க முடியும்.(45) செயல்பாடுகள் முக்தி {விடுதலை}, மற்றும் இன்பம் ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும். ஆனால், பிரம்மத்தில் தன்னை மூழ்கச் செய்தவனுக்கு உலகம்சார்ந்த இன்பங்களுக்கு வழிவகுக்கும் செயல்கள் ஏதும் இல்லை" என்றார் {வைசம்பாயனர்}.(46)
பவிஷ்ய பர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 46
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |