(ஸர்வபூதோத்பத்தி꞉)
A description of the earth | Bhavishya-Parva-Chapter-12 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : தாமரையில் பிரம்மனை நிறுவிய நாராயணன்; தாமரையில் வளரும் உறுதியான வேர்களாக மலைகள்....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது, நித்தியனான ஹரி, பெரும்பிரகாசம் கொண்டதும், பூமியின் குணங்களையும், அடையாளங்களையும் கொண்டதும், பல யோஜனைகள் நீளம் பரந்ததுமான அந்தத் தங்கத் தாமரையில் பிரம்மனை வைத்தான்.{1} யோகிகளில் முதன்மையானவனும், உயிரினங்கள் அனைத்தின் மனமாக இருப்பவனும், அவற்றின் படைப்பாளனுமான அவன், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.{2} புராணங்களை நன்கறிந்த பெரும் முனிவர்கள், நாராயணனின் மேனியில் தோன்றி, பூமியை ஆதரிப்பது இந்தத் தாமரை என்று விளக்குகின்றனர்.{3}(1-3)
அந்தத் தாமரையின் இருப்பிடமாகப் பூமாதேவி இருக்கிறாள், அதனுள் வளரும் உறுதியான வேர்களாக தெய்வீக மலைகள் இருக்கின்றன.{4} இமயம், மேரு, நீலம், நிஷதம், கைலாசம், கிரௌஞ்சம், கந்தமாதனம்,{5} புனிதமான திரிஷிரம், அழகிய மந்தரம், உதயம், கந்தரம், விந்தியம், அஸ்தம் ஆகிய இந்த மலைகள் விருப்பத்திற்குரிய பொருட்களை அளிப்பனவாகவும், தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் ஆசிரமங்களை உள்ளடக்கியவையாகவும் இருக்கின்றன.{6,7} இந்த மலைகளை இடையிடையே கொண்ட நாடானது ஜம்பூத்வீபம் என்றழைக்கப்படுகிறது. வேள்விகளைச் செய்வோர் இங்கே வேள்விகளைச் செய்கின்றனர்.{8} வேள்விகளில் இருந்து வெளியே வருபவையும், அமுத நீரைக் கொண்டவையுமான ஓடைகள், நூற்றுக்கணக்கான புனிதத் தலங்களைக் கொண்ட சரிதாதேவி {ஆறு} ஆகின்றன.{9} அந்தத் தாமரையைச் சுற்றிலும் எண்ணற்ற இழைகளாக அமைந்திருப்பன தாதுக்களின் மலைகள் எனப் பூமியில் அறியப்படுகின்றன{10}.(4-10)
ஓ! மன்னா, அந்தத் தாமரையின் மேல் இதழ்கள், மிலேச்சர்களுக்குச் சொந்தமான மலைப் பாதைகளையும், கடக்கப்பட முடியாத பாதைகளையும் கொண்டவையாக இருக்கின்றன.{11} கீழ் இதழ்கள், பெரும் தைத்தியர்கள், உரகர்கள் ஆகியோருக்குச் சொந்தமான பாதாள லோகத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.{12} அதற்கும் கீழுள்ள பகுதி உகதம் அல்லது பெருந்துன்பங்களின் சுரங்கம் என்றழைக்கப்படுகிறது. கொடுங்குற்றங்களைச் செய்தவர்கள் அங்கே மூழ்குகிறார்கள்.{13}(11-13) இந்தத் தாமரையின் நுனியில் அமைந்துள்ள பரந்த நீர்ப் பரப்பானது அனைத்துப் பக்கங்களிலும் (நிலத்தைக் கொண்ட) பொருங்கடலாகும்.(14)
இந்தப் பெருந்தாமரையானது, நாராயணனின் இதயத்தைப் போன்றே உண்டாக்கப்பட்டதால் அது புஷ்கரம் என்றழைக்கப்படுகிறது.{15} இதன் காரணமாகவே, இந்தத் தாமரையின் தோற்றத்தை நன்கறிந்த பழங்காலப் புராதன முனிவர்கள் பெரும் வேள்விகளைச் செய்யும்போது, வேள்விக்களத்தில் தாமரையின் வடிவிலான பீடத்தை அமைக்கின்றனர்.{16}
இவ்வகையிலேயே தலைவன், மலைகளையும், ஆறுகளையும், தேவர்களையும், அண்டத்தின் பொருள்களையும் படைப்பவனான பிரம்மனைத் தாமரையில் படைத்தான்.{17} அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், சுயம்புவுமான அந்தப் பெருந்தேவன், பிரம்மனைப் படைத்த போது, பெருங்கடலெனும் படுக்கையில் கிடந்து அண்டமெனும் நித்திய தாமரையைப் படைத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.{18}(15-18)
பவிஷ்ய பர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 18
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |