(மஹாபத்மோத்பத்தி꞉)
The creation of a lotus after dissolution | Bhavishya-Parva-Chapter-11 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : வசிஷ்டரின் பிறப்பு; ஆகாயம், ஒலி, காற்று ஆகியன படைக்கப்பட்டது; பொற்றாமரை படைப்பு....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் {நாராயணன்}, பிராமண முனிவரான ஆபவ வசிஷ்டராகப் பிறப்பெடுத்து, தன் உடலெனும் கொள்கலத்தை மறைத்துத் தவம் பயிலத் தொடங்கினான்.(1) அதன் பிறகு, அண்டத்தின் ஆன்மாவும், அளவற்ற சக்திகளைக் கொண்டவருமான பெரும் வசிஷ்டர், ஐம்பூதங்களையும், பிற உயிரினங்களையும் படைக்க நினைத்தார்.{2}
[1] ஆபம் என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். அவற்றுக்குத் தலைவன் வருணன் என்று அழைக்கப்படுகிறான். அதன் காரணமாவே அவனுடைய மகனாகிய வசிஷ்டருக்கு ஆபவர் என்ற பெயர் ஏற்பட்டது. https://mahabharatham.arasan.info/2013/05/99.html
அண்டமானது, வானம் இல்லாமல் நுட்பமாகி நீரில் மூழ்கியிருந்தபோது, வசிஷ்டர், தவப் பயிற்சிகளால் அறிவுப்புலன்களைப் பெருகச் செய்து அந்த நீரிலேயே பலகாலத்தைச் செலவழித்தார்.{3} நீரில் வாழ்ந்து வந்த அவர், பெருங்கடலைக் கலங்கடித்து இரண்டாம் அலையுடன் நுட்பமான ஆகாயமாக எழுந்தார்.{4} பிறகு அவர் காற்றால் உண்டாக்கப்பட்ட ஒலியாக அந்த ஆகாயத்தில் தோன்றினார். அந்தப் பெரும் வசிஷ்டர் காற்றைப் போலவே தாமும் வளரத் தொடங்கினார்.{5} பெருகி வந்ததும், பலமிக்கதுமான காற்றால் பெருங்கடல் கலங்கடிக்கப்பட்டபோது அலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.{6} பெருங்கடலின் நீர் கலங்கடிக்கப்பட்ட போது, பெருஞ்சக்திவாய்ந்த தலைவன், இருள்வழிகளில் நெருப்பைப் போலத் தோன்றினான்.{7}
அந்த நெருப்பானது, பெருங்கடலின் நீரை வற்றச் செய்தது; அதனிலிருந்து வானம் போன்ற துளையொன்று எழுந்தது.{8} அவனது சக்தியில் இருந்து அமுதம் போன்ற தூய நீர் உண்டானது. அதனில் இருந்து ஆகாயமும், அதனில் இருந்து காற்றும், அதனில் இருந்து ஆர்ப்பரிக்கும் அலைகளும் பூமியில் உண்டாகின. பெரும்பூதங்களின் பிறப்பிடமான தலைவன் அதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தான்.{9,10} பல வடிவங்களைக் கொண்ட தலைவன், பூதங்களைக் கண்டு, அண்டத்தின் படைப்பிற்கு அவற்றின் தேவையை அறிந்து, பிரம்மனுக்கான பொருள்களைக் குறித்து நினைக்கத் தொடங்கினான். இவ்வாறே ஒரு யுகத்தின் முடிவிலும், பல யுகங்களின் முடிவுகளிலும் பிரம்மன் தன் பிறப்பை அடைந்தான்.{11,12}
பிரம்மன், ஞானம் கொண்டவன், அவன் யோகிகளில் முதன்மையானவன், அவன் அண்டத்தின் ஆன்மாவைக் காண்பவன், உலகின் இருபிறப்பாளர்களில் அவன் புலனடக்கம் கொண்ட பிராமணன் ஆவான்.{13} யோகத்தை அறிந்த தலைவன் பிரம்மன், வேதங்களையும், அண்டத்தின் நோக்கங்களையும் படைப்பதில் துல்லிய ஆன்ம சக்திகளைக் கொண்டதும், அனைவராலும் வழிபடப்படுவதுமான பிரம்மத்தை ஈடுபடுத்துகிறான்.{14}
அப்போது நித்தியனான ஹரி, உயிரினங்களைப் படைப்பதற்காகப் பெருங்கடலில் கிடந்து, பல்வேறு வழிமுறைகளில் விளையாடி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.{15} அதன் பிறகு அவன், சூரியப் பிரகாசத்துடன் கூடியதும், ஆயிரம் இதழ்களைக் கொண்டதுமான ஒரு தங்கத் தாமரையைத் தன் உந்தியில் இருந்து படைத்தான்.{16} பெரியவனான அந்த அச்யுதனின் மேனியில் இருந்து உண்டான அந்தத் தாமரையானது, நறுமணத்துடனும், எரியும் தழல்களைப் போன்ற பிரகாசத்துடனும், கூதிர் காலச் சூரியனைப் போலத் தெளிந்த ஒளியுடனும் ஒளிர்ந்து கொண்டிருந்தது" என்றார் {வைசாம்பாயனர்}.(2-17)
பவிஷ்ய பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 17
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |