(ஏகார்ணவவிதி꞉)
The work of dissolution described | Bhavishya-Parva-Chapter-09 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஒற்றைப் பெருங்கடலில் நாராயணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஏழு வடிவங்களைக் கொண்டவனும், யோகியுமான நாராயணன், நெருப்பின் வடிவை ஏற்று எரியும் தழல்களைக் கொண்டு பெருங்கடல்களை வற்ற செய்வான்.{1} ஆறுகள், பெருங்கடல்களின் வடிவில் உள்ள ஆசைகள் அனைத்தையும், மலைகளின் வடிவில் இருக்கும் அவற்றின் சக்திகளையும் தன் சக்தியால் அழிப்பான்.{2} திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {சூக்ஷுமமாகவும்} உள்ள இரண்டையும் அவன் அழிப்பான். அந்த இரண்டின் வேராக இருக்கும் பிரம்மத்தில் அனைத்தையும் நிலைநிறுத்தி மீண்டும் அண்டத்தைப் படைப்பதற்காகக் குணங்கள் அனைத்தையும் வற்ற செய்வான்.{3} விளைவுகளை உண்டாக்கும் காரணியான பிரம்மத்தில் இருக்கும் சிறப்பை அவன் உயிரினங்களுக்குக் கொடுப்பான். அந்த நேரத்தில் அவன் இவை அனைத்தையும் அழிப்பான்.{4} ஹரியானவன், காற்றைப் போலச் சக்தி நிறைந்தவனாக இருப்பினும், மொத்த அண்டத்தையும் வென்று, ஐந்து உயிர் மூச்சுகளையும், ஐம்புலன்களையும் மேல்நோக்கி இழுப்பான்.{5}
அதன்பிறகு, தேவர்களின் ஐம்புலன்களும், பிற உயிரினங்களின் ஐம்புலன்களும், அவற்றின் பொருள்களான {புலன்நுகர் பொருட்களான} மணம் {வாசனை}, உடல் முதலியவையும் (தங்கள் இருப்புக்காக) பூமியை அடையும்.{6}(1-6) சுவையின் புலனான நாக்கும், அதன் பொருளான சாறும் நீருக்குச் செல்லும். பார்வையின் புலனான கண்ணும், அதன் பொருளான நிறமும், ஒளியுடல்களிடம் {ஜோதிகளிடம்} செல்லும்.{7} தீண்டலின் புலனான தோலும், அதன் பொருளான தீண்டலும், உயிர் மூச்சும், அதன் பணியும், இயக்கமும் காற்றிடம் செல்லும். மேலும் இவை அனைத்தும் சரடைப் போல இருக்கும் ரிஷிகேசனிடம் நிலைத்திருக்கும்.{8}(7,8) அனைத்தையும் அறிந்தவனான தலைவன், அண்டச் சரடில் உள்ள நுட்பமான திறன்கள் {ஆற்றல்கள்}, புலன்கள், அதன் பொருள்கள் ஆகியவை சீரான நிலையில் தேவர்களிடம் நிறைந்திருக்கும் வகையில் அவை யாவற்றையும் காற்றின் மூலம் ஈர்ப்பான்.{9} அப்போது, நிறம், தீண்டல் முதலியவற்றின் தொடர்பால் உண்டாவதும், அண்டத்தின் காரணமாக இருப்பதுமான பயங்கரம் நிறைந்த சம்வர்த்தக நெருப்பானது, நூறு தழல்களுடன் கூடியதாக மொத்த உலகையும் எரிக்கும்.{10} அந்த நெருப்பானது, மலைகள், மரங்கள், சோலைகள், கொடிகள், கொப்புகள், தெய்வீகத் தேர்கள் {விமானங்கள்}, நகரங்கள், ஆசிரமங்கள் {முனிவர்களின் குடில்கள்}, தெய்வீகக் கட்டடங்கள், பிற வசிப்பிடங்கள் ஆகியவற்றைச் சாம்பலாக்கிய பிறகு, உலகின் ஆசானான ஹரி, செயலெனும் நீரால் அதை {அந்த சம்வர்த்தக நெருப்பை} அணைப்பான்.{11,12}
பிறகு, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கிருஷ்ணன், பெரும் மேகத்தின் வடிவை ஏற்றுத் தூய நீரால் பூமியை நிறைவடையச் செய்வான்.{13} உயர்ந்ததும், மங்கலமானதும், புனிதமானதும், இனிமையானதும், அமுதத்தைப் போன்றதுமான நீரால் பூமியானது பெரிதும் அமைதியடைந்திருக்கும் போது,{14} மலைகளும், மரங்களும் நீருக்கடியில் கிடக்கும்போது, மேகங்கள் நீருண்டவையாக இருக்கும்போது,{15} பூமியானது ஒரே பரப்பிலான நீராக {ஒற்றைப் பெருங்கடலாக} மாறி உயிரினங்களேதும் அற்றதாகியிருக்கும்போது,{16} சூரியனும், ஆகாயமும், உயிரினங்களும் இல்லாத நுட்பமான இடத்தில் கிடக்கும் ரிஷிகேசனில் பெரும்பூதங்கள் அனைத்தும் மூழ்கியிருக்கும்.{17}(9-17) இவ்வாறு அளவற்ற புத்தியைக் கொண்ட அந்த நித்திய புருஷன், மொத்த படைப்பையும் வற்ற செய்து, எரித்துக் கலங்கடித்துப் பருகிய பிறகு, தன் புராதன வடிவில் மட்டுமே நீடித்திருப்பான். அனைத்தையும் மறைக்கும் பெருங்கடலில் அந்தப் பெரும் யோகியானவன், யோகத் துயிலில் கிடக்கும்போது, நித்தியமாக நிலைத்திருக்கும் பூதங்கள் அனைத்தும் அந்தத் தூய பிரம்மத்துடன் ஐக்கியமாகிக் கிடக்கும்.{18} வெளிப்படாத புருஷனானவன், அந்த ஒற்றைப் பெருங்கடலில் {ஏகார்ணவத்தில்} ஆயிரம் அயுதா ஆண்டுகள் {அயுதாநாம் ஸஹஸ்ராணி} கிடக்கும்போது, அவனை எவராலும் வெளிப்படையாக உணர முடியாது" என்றார் {வைசம்பாயனர்}{19}.(18,19)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "நீர் விளக்கிய ஒற்றைப் பெருங்கடல் யாது? இந்தப் புருஷன் எவன்? யோகம் யாது? ஒரு யோகியானவன் எவன்?" என்று கேட்டான்.(20)
வைசம்பாயனர், "தலைவன் அனைத்தையும் ஒற்றைப் பெருங்கடலாக {ஏகார்ணவமாக} {எவ்வளவு காலத்தில்} மாற்றுவான் என்பதை எவ்வளவு காலம் காத்திருந்தாலும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தில் தலைவனே அனைத்தையும் அளப்பான், அனைத்தையும் காண்பான், அனைத்தையும் அறிவான்; வேறு எதுவும் {எவருக்கும்} புலப்படாது.{21} தலைவனானவன் {இறைவனானவன்}, வானம், பூமி, காற்று, பூதங்கள் ஆகியவற்றைத் தன் புத்தியால் ஊடுருவியும், தேவர்களின் தலைவனும், மனோ ஆற்றல்களுடன் கூடியவனுமான பிரம்மனைத் தன்னில் மூழ்கச் செய்தும், தன் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்திக் கொண்டும் தண்ணீரில் உறங்கிக் கொண்டிருப்பான்" என்றார் {வைசம்பாயனர்}.{22}(21,22)
பவிஷ்ய பர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |