(ஜனமேஜயாஷ்வமேத꞉ இந்த்ரஸ்ய காபட்யம் ச)
Indra ravishes Vapushthama; Vishwavasu pacifies Janamejaya's wrath | Bhavishya-Parva-Chapter-05 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஜனமேஜயன் செய்த அஸ்வமேத யக்ஞம்; இந்திரன் அந்த வேள்வியைக் களங்கப்படுத்தியது; ஜனமேஜயன் அடைந்த கோபம்; விஸ்வாவசு ஜனமேஜயனிடம் சொன்ன சமாதானம்...
சௌதி {சௌனகரிடம்}, "அந்த முதன்மையான ரிஷி {வியாசர்}, மன்னன் ஜனமேஜயனை இவ்வாறு தேற்றியபோது, கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் குறித்த அவரது சொற்களை அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டனர்.(1) நிலவின் அமுதக் கதிர்களுக்கு ஒப்பான அந்தப் பெரும் ரிஷியினுடைய சொற்களின் சாறு {சாற்றைப் பருகியது} அவர்களது காதுகளை நிறைவடையச் செய்தது.(2) பல்வேறு வீரர்கள் கொல்லப்பட்டதைச் சொல்வதும், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை {என்ற புருஷார்த்தங்களைத்} தருவதுமான பாரதப் போரின் அழகிய வரலாற்றைக் கேட்டு அந்தக் கூட்டத்தில்(3) இருந்த சிலர் கண்ணீர் சிந்தினர், வேறு சிலர் தியானத்தில் ஈடுபட்டனர். உள்ளங்கையில் எழுதி வைக்கப்பட்டதைப் போல அந்த வரலாற்றுத் தொடர் அந்த முனிவரால் விளக்கப்பட்டது.(4)
தெய்வீக ரிஷியான வியாசர் அங்கே இருந்த சபை உறுப்பினர்கள் அனைவரையும் வலம் வந்து அவர்களது அனுமதியைப் பெற்றுக்கொண்டு, "நான் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.(5) அதன்பிறகு முன்னணி தவசிகளும், ரிஷிகளில் முதன்மையானவரும், பேசுபவர்களில் சிறந்தவருமான வியாசரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(6) தெய்வீகரான வியாசரும், ரிஷிகளும் புறப்பட்ட பிறகு, புரோஹிதர்களும், மன்னர்களும் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.(7)
மன்னன் ஜனமேஜயன், பயங்கரம் நிறைந்த பன்னகர்களைப் பழிவாங்கிய பிறகு, நஞ்சைக் கைவிடும் பாம்பைப் போலக் கோபத்தைக் கைவிட்டான்.(8) பெரும் முனிவரான ஆஸ்தீகர், எரியும் தலையைக் கொண்ட தக்ஷகனை ஹோம நெருப்பில் இருந்து காத்து, தன்னுடைய ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(9) மன்னன் ஜனமேஜயனும், தன் மக்களால் சூழப்பட்டவனாக ஹஸ்தினாபுர நகரத்திற்குச் சென்று மனநிறைவுடன் கூடிய தன் குடிமக்களை மகிழ்ச்சியுடன் ஆளத் தொடங்கினான்.(10) சில நாட்கள் கழிந்ததும், ஜனமேஜயன், ஏராளமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியை முறையாகச் செய்தான்.(11)
வழிபடத்தகுந்த பெண்மணியான காசியை வபுஷ்டமா, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி தற்கட்டுப்பாட்டுடன் கூடியவளாக ஜனமேஜயன் வேள்வியில் கொல்லப்பட்ட குதிரையிடம் சென்று, அதன் அருகே அமர்ந்தாள்.(12) வாசவன் {இந்திரன்}, முற்றிலும் அழகான அந்தப் பெண்ணின் மீது கொண்ட விருப்பத்தில், கொல்லப்பட்ட அந்தக் குதிரையின் உடலில் நுழைந்து அவளை அறிந்தான்.(13) ஜனமேஜயன் அந்த மாற்றத்தைக் கண்டு, வேள்வியைச் செய்யும் புரோஹிதரிடம், "இந்தக் குதிரைக் கொல்லப்பட வில்லை; உடனே இதைக் கொல்வீராக" என்றான்.(14) விவேகியான அந்தப் புரோஹிதர், இந்திரனின் அம்முயற்சியை அறிந்து கொண்டு, அரச முனியான ஜனமேஜயனிடம் அதைத் தெரிவித்தார், மன்னன் புரந்தரனை {இந்திரனைச்} சபித்தான்[1].(15)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே புரோஹிதர் சபித்தார் என்றிருந்தாலும், சித்திரசாலை பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் மன்னன் சபித்தான் என்றிருப்பதால் இங்கே திருத்தப்பட்டிருக்கிறது.
ஓ! சௌனகரே, அப்போது அந்த ஜனமேஜயன் {தன் புரோஹிதரிடம்}, "செய்த தவங்கள், குடிமக்களின் பாதுகாப்பு, வேள்வி ஆகியவற்றின் மூலம் நான் பயனேதும் ஈட்டியிருந்தால், அதைக் கொண்டு மெய்யுறுதியுடன் உமக்கொன்றைச் சொல்கிறேன்; கேட்பீராக;(16) தீய மனம் கொண்டவனும், குதிரை வேள்விகளில் மனக்கட்டுப்பாடு ஏதும் கொள்ளாதவனுமான இந்திரனை இன்று முதல் க்ஷத்திரியர்கள் எவரும் வழிபடமாட்டார்கள்" என்றான்.(17)
பிறகும் பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் ஜனமேஜயன், {தன் வேள்வியில்} தலைமை வகிக்கும் புரோஹிதர்களிடம், "நான் செய்த இந்த வேள்வி இந்திரன் மூலம் பாழடைந்ததால், உங்களிடம் பிராமண சக்தி கிஞ்சிற்றும் இல்லை என்பதை உண்மையில் நான் அறிந்தேன்.(18) எனவே, நீங்கள் என் ஆட்சிப்பகுதிக்குள் வாழக்கூடாது. உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் வேறெங்காவது செல்வீராக" என்றான். இவ்வாறு சொல்லப்பட்டதும் ஜனமேஜயனிடம் கோபமடைந்த பிராமணர்களும் அங்கிருந்து சென்றனர்.(19)
பெரும் பக்திமானான மன்னன் ஜனமேஜயன், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தன் அரண்மனைக்குள் சென்று, தன் ராணிகளிடம் ஆணையிடும் வகையில்,(20) "புழுதி படிந்த தன் காலை என் தலையில் வைத்தவளும், கற்பற்றவளுமான வபுஷ்டமாவை என் வீட்டில் இருந்து விரட்டுவீராக.(21) அவள் என் புகழையும், மகிமையையும் அழித்து என் மதிப்பைக் கெடுத்திருக்கிறாள். கைவிடப்பட்ட மலர்மாலையைப் போலவே கற்பற்ற மனைவியான அவளை நான் காணவும் விரும்பவில்லை.(22) இவ்வுலகில் பிறரை விரும்பும் மனைவியுடன் வாழ்பவனால் இனிய உணவை உண்ணவும், தனிமையான இடத்தில் மகிழ்ச்சியாக உறங்கவும் முடியாது. {நாயால் நக்கப்பட்டு} களங்கமடைந்த {வேள்வி} ஹவிஸைப்போல அவனால் அவளிடம் இன்புற முடியாது" என்றான்.(23) சினத்துடன் கூடிய பரீக்ஷித்தின் மகன் இதைச் சொல்லிவிட்டு உரக்க அழுதான். அப்போது கந்தர்வ மன்னனான விஸ்வாவசு அவனிடம் பேசினான்[2].(24)
[2] சித்திரசாலை பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இங்கே கந்தர்வ மன்னன் என்று ஆண்பாலில் குறிப்பிடப்பட்டிருப்பதால் இங்கேயும் அவ்வாறே திருத்தப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே கந்தர்வ இளவரசி விஷ்வாவசு என்று இருக்கிறது.
விஸ்வாவசு, "ஓ! மன்னா, நீ முன்னூறு வேள்விகளைச் செய்திருக்கிறாய்; இனியும் உன்னை வாசவன் {இந்திரன்} மன்னிக்க மாட்டான். உன்னால் முறையாக மணக்கப்பட்ட வபுஷ்டமையின் குற்றம் இதிலேதும் இல்லை.(25) அவள் {வபுஷ்டமை} முன்னர் அப்சரஸ் ரம்பையாக இருந்தாள், இப்போது காசியின் மகளாகப் பிறந்திருக்கிறாள். அழகிய காரிகையருள் சிறந்தவளான இவளை மதிப்புமிக்க ரத்தினமாகக் கருதி இவளுடன் இன்புற்றிருப்பாயாக[3].(26) இவளை ஒருபோதும் கைவிடாதே. ஓ! குருக்களில் முதன்மையானவனே, நீ செல்வத்தில் சச்சியின் தலைவனை {இந்திரனைப்} போன்றவன். நீ வேள்விகளைச் செய்ய ஆயத்தமாக இருப்புதைக் கண்ட தேவர்களின் மன்னன், அதில் குற்றங்களை நாடி இங்கே தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறான். ஓ! மன்னா, வேள்விப் பயன்களை அடைவதில் நீ அவனைக் கடந்து விடுவாய் என்று கருதியே அந்தத் தேவர்களின் மன்னன் {இந்திரன்} இந்த யக்ஞத்திற்குத் தடங்கல்களை ஏற்படுத்தினான்.(28)
[3] சித்திரசாலை பதிப்பில், "வாசவனால் (இந்திரனால்) நீ செய்த முன்னூறு வேள்விகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அவன் ஒரு தெய்வீகப் பெண்மணியை உன் மனைவியான வபுஷ்டமாவாக ஆக்கியிருக்கிறான். காசியின் மன்னனுடைய மகள் ரம்பையென்ற தெய்வீகப் பெண்மணியாவாள். ஓ! மன்னா, அவள் பெண்களில் ரத்தினமாவாள், அவளை நீ ஏற்றுக் கொள்வாயாக" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீ முன்னூறு வேள்விகளைச் செய்திருந்தாலும், வாசவனால் உன்னைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனே வபுஷ்டமாவை உன் மனைவியாக்கினான் என்பதால் அவள் பழிக்கத்தக்கவள் அல்ல. காசி மன்னனின் மகளாகப் பிறந்திருக்கும் இந்த ராணி அப்சரஸ் ரம்பையாவாள்" என்றிருக்கிறது.
தடங்கலை ஏற்படுத்த விரும்பிய வாசவன் {இந்திரன்}, குதிரை கொல்லப்பட்டதைக் கண்டு, அதில் குற்றம் கண்டுபிடித்து, இந்த மாயையை இங்கே ஏற்படுத்தியிருக்கிறான்[4].(29) இந்திரன் வபுஷ்டமையை ரம்பை என்று கருதியே அறிந்தான். அதன் விளைவால் உண்டான கோபத்தில் தூண்டப்பட்ட நீயும், முன்னூறு வேள்விகளைச் செய்து கொடுத்த உன் புரோஹிதர்களைச் சபித்து, இந்திரனுக்கு மட்டுமே சொந்தமான பயன்களை இழந்தாய். அந்த ஆசான்கள் உன்னால் விரட்டப்பட்டிருக்கின்றனர்.(30,31) வாசவன் எப்போதும் உன்னைக் கண்டும், பிராமணர்களைக் கண்டும் அஞ்சி நின்றவன். அவன் தன் மாயா சக்தியால் இந்தச் செயலை நிறைவேற்றியதன் மூலம் அந்த இரண்டு அச்சங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறான்.(32) வெற்றிகளையே அடைய விரும்பும் பெருஞ்சக்திவாய்ந்த புரந்தரனால், சாதாரண மனிதர்களாலும் செய்ய முடியாத காரியமான தன் மகன்கள், பேரப்பிள்ளைகளின் மனைவிகளை எவ்வாறு கெடுக்க முடியும்?[5](33)
[4] சித்திரசாலை பதிப்பில், "இஃது உன் வேள்வியைத் தவிர்க்க விரும்பும் இந்திரனால் காட்டப்படும் ஒரு மாயையாகும். வேள்வி செய்யப்படுவதை அறிந்த வாசவன், (இறந்து போன) குதிரையைப் பீடித்து, நீ வபுஷ்டமையாகக் கருதும் ரம்பையுடன் கலவி புரிந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வேள்வியைத் தடுக்க விரும்பிய வாசவன் மாயையைப் பயன்படுத்தினான். அவள் வேள்வியில் ஒரு பலவீனத்தைக் கண்டடைந்ததால் இறந்த குதிரையும் உயிர் பெற்றதைப் போலத் தோன்றிற்று. இந்திரன் வபுஷ்டமையாக இருக்கும் ரம்பையுடன் கலவிபுரிய விரும்பினான்" என்றிருக்கிறது.
[5] சித்திரசாலை பதிப்பில், "பேரொளி படைத்தவனும், வெற்றியை விரும்புகிறவனும், நகரங்களை அழிப்பவனுமான அவனால் {இந்திரனால்}, ஒருபோதும் பிறரால் செய்யப்படாத பாதகத்தை, தன் கொள்ளுப் பேரனின் மனைவியை என்றேனும் அபகரிக்க முடியுமா?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "புரந்தரன் எப்போதும் பெரும் சுறுசுறுப்பு மிக்கவன், எப்போதும் வெற்றியை விரும்புபவன். அப்படிப்பட்டவன், தன் கொள்ளுப் பேரனின் மனைவியைக் களங்கப்படுத்தும் தீய ஒழுக்கத்தை ஒருபோதும் பின்பற்றுவானா?" என்றிருக்கிறது. ஐயமேற்படும் இடங்களில் அல்லனவன்றி நல்லன ஏற்பது இயல்பாம்.
இந்திரனிடம் புத்தி, அறம், புலனடக்கம், ஆன்ம ஆற்றல், மகிமை ஆகியவை போதுமான அளவுக்கு இருப்பதைப் போலவே முன்னூறு வேள்விகளைச் செய்த உன்னிடமும் அவை இருக்கின்றன.(34) எனவே, இந்திரனையும், ஆசான்களையும், வபுஷ்டமாவையும் பழிக்காதே, உன்னையும் பழித்துக் கொள்ளாதே. விதியை வெல்வது மிகக் கடினமானது.(35) தேவர்களின் மன்னன், தன்னுடைய ஆன்ம சக்திகளின் மூலம் குதிரைக்குள் புகுந்து உன்னுடைய கோபத்தைத் தூண்டச் செய்தான்; ஆனால் நீ கோபத்தால் தூண்டப்படாதே. மகிழ்ச்சியை விரும்புவோர் எப்போதும் விதியின் வழிகளையே பின்பற்ற வேண்டும்.(36) எதிர் திசையில் இருக்கும் நீரோட்டத்தைக் கடப்பதைப் போலவே கெட்ட விதியைக் கடப்பதும் மிகக் கடினமானதாகும். எனவே முனைப்பில் இருந்து விலகுவாயாக; கவலையைக் களைந்து ரத்தினம் போன்றவளும், பாவமற்றவளுமான உன் மனைவியின் துணையில் இன்புற்றிருப்பாயாக.(37)
ஓ! மன்னா, அப்பாவிகளான சாதாரணப் பெண்கள் ஆண்களிடம் இருந்து பிரிந்தால் அவர்கள் பின்னவர்களை {அந்தப் பெண்கள் ஆண்களைச்} சபிப்பார்கள் {பாவமற்ற பெண்கள் அலட்சியப்படுத்தப்பட்டால், அதிலும் குறிப்பாகக் குற்றமற்ற தெய்வீகப் பெண்கள் அவமதிக்கப்பட்டால், நீயும் பிற பெண்களால் அலட்சியப்படுத்தப்படுவாய்}.(38) சூரியனின் கதிர்களும், நெருப்பின் தழல்களும், வேள்விப் பீடமும், ஆகுதிகளும், மாற்றானை விரும்பாத மனைவியும் பிறரால் தீண்டப்பட்டாலும் ஒருபோதும் களங்கமடைவதில்லை[6].(39) நற்பண்புகளைக் கொண்ட மனைவியர், செழிப்பின் தேவியை {ஸ்ரீதேவியைப்} போல எப்போதும் மதிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுக் கல்விமான்களால் துதிக்கப்படவும் வேண்டும்" என்றான் {விஷ்வாவசு}".(40)
[6] சித்திரசாலை பதிப்பில், "சூரியனின் ஒளி, நெருப்பின் தழல், வேள்விப் பீடம், வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதி ஆகியவையே பெண்களைக் களங்கப்படுத்த முயன்றாலும் அவர்கள் ஒருபோதும் களங்கமடைய மாட்டார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பாவமிழைக்காத பெண் உன்னால் அவமதிக்கப்பட்டால் நீ சபிக்கப்படுவாய். சூரியனின் ஒளி, நெருப்பின் தழல், வேள்வி நெருப்பில் காணிக்கையளிக்கப்படும் ஆகுதி ஆகியவையும் பெண்களைக் களங்கப்படுத்த முயன்றாலும் அவர்கள் களங்கமடையாமலேயே நீடித்திருப்பார்கள்" என்றிருக்கிறது.
பவிஷ்ய பர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 40
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |