(அநிருத்தஸ்ய நாகபாஷமோசநம் க்ருஷ்ணஸ்ய வருணாலயகமநம் வருணேந ஸஹ யுத்தம் த்வாரகாப்ரத்யாகமநம் ச)
Krishna finds Aniruddha; gives the kingdom to Kumbhanda and fights with Varuna for cows | Vishnu-Parva-Chapter-186-130 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நாகபாசத்தில் இருந்து விடுபட்ட அநிருத்தன்; உஷை அநிருத்தன் திருமணம்; கும்பாண்டன் நாட்டைப் பெற்றது; பசுக்களின் நிமித்தம் வருணனோடு நடந்த போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு பல வரங்களைப் பெற்றதில் பாணன் பெரும் மகிழ்ச்சியடைந்தான். அவன், மஹாகாலன் என்ற உயர்நிலையை அடைந்ததும் ருத்ரனுடன் சென்றான்.(1)
மறுபுறம் வாசுதேவனும், மீண்டும் மீண்டும் நாரதரிடம், "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, பாம்புகளெனும் கயிற்றால் {நாகபாசத்தால்} அநிருத்தன் கட்டப்பட்டுக் கிடப்பது எங்கே?(2) உண்மையை அறிய விரும்புகிறேன். என் மனம் {அநிருத்தனுக்கான} அன்பால் வருந்துகிறது. வீரனான அநிருத்தன் வஞ்சகமாக அபகரிக்கப்பட்டதிலிருந்து துவாரகை நகரமே கவலையில் மூழ்கியிருக்கிறது.(3) எனவே, நான் அவனை உடனே விடுவிக்க இங்கே வந்திருக்கிறேன். ஓ! ஐயா, பகைவர்கள் கொல்லப்பட்ட நிலையில் அநிருத்தனை இன்றே நான் காண விரும்புகிறேன்.(4) {ஓ! தலைவரே, ஓ! நன்னோன்புகள் நோற்பவரே, அந்த} இடத்தை நீர் அறிந்தால் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)
கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நாரதர், "ஓ! மாதவா, இளவரசன் அநிருத்தன் பாம்புகளால் கட்டப்பட்டுப் பெண்களின் அந்தப்புரத்தில் {கன்யபுரத்தில்} கிடக்கிறான்" என்றார்.(6)
அதே வேளையில் அங்கே விரைந்து வந்த சித்திரலேகை, "ஓ! தலைவரே, உயரான்மாவும், ஆற்றல்படைத்தவருமான தைத்திய மன்னன் பாணனின் அந்தப்புரம் இஃது. இங்கே சுகமாக நுழைவீராக" என்றாள்.(7)
பலதேவன், கிருஷ்ணன், பிரத்யும்னன், நாரதர், சுபர்ணன் {கருடன்} ஆகியோர் அநிருத்தனை விடுவிப்பதற்காகப் பெண்களின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர்.(8) கருடனைக் கண்டதும், அநிருத்தனின் உடலில் கணைகளின் வடிவில் இருந்த பெரும்பாம்புகள் அனைத்தும் உடனே அவனை விட்டு அகன்றன.(9) அந்தப் பாம்புகள் அவனது உடலில் இருந்து வெளியேறி தரையில் கணைகளாக விழுந்தன.(10)
பெருஞ்சிறப்புமிக்க அநிருத்தன், கிருஷ்ணனால் பார்க்கப்பட்டுத் தீண்டப்பட்டதும், மகிழ்ச்சியுடன் புன்னகைத்தவாறே கைகளைக் கூப்பி,(11) "ஓ! தேவ தேவரே, ஓ! கேசவரே, பகைவரை எப்போதும் வெல்பவர் நீரே; நூறு வேள்விகளைச் செய்தவனாலும் {இந்திரனே ஆனாலும்} உம்முன் நிற்க இயலாது" என்றான்.(12)
{அப்போது தலைவன் {கிருஷ்ணன்}, "கருடன் மீதேறி நாம் துவாரகை செல்வோம்" என்றான். கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அநிருத்தன், போரில் பாணன் வெல்லப்பட்டான் என்பதை அறிந்து கன்னிகை உஷையுடன் சேர்ந்து மனம் மகிழ்ந்தவனானான்}[1].
[1] இந்த வாக்கியம் சித்திரசாலை பதிப்பில் காணக்கிடைக்கிறது. மற்ற எந்தப் பதிப்பிலும் இல்லை.
அதன் பிறகு, உன்னத மனம் படைத்த அநிருத்தன், மகிழ்ச்சியான மனத்துடன் பெருஞ்சிறப்புமிக்கவனும், பலம்வாய்ந்தவனுமான பலபத்ரனை {பலராமனை} வணங்கினான்.(13) அதன் பிறகு உயரான்ம மாதவனைக் கூப்பிய கரங்களுடன் வணங்கிவிட்டு, பெருஞ்சக்திவாய்ந்தவனும், பறவைகளில் சிறந்தவனும், அழகிய சிறகுகளைக் கொண்டவனுமான கருடனையும் வணங்கினான்.(14) அதன்பிறகு, பெருஞ்சக்திவாய்ந்தவனும், பல வண்ணக் கணைகளைக் கொண்டவனுமான அந்த மகரகேதனன் {அநிருத்தன்}, தன் தந்தையான பிரத்யும்னனை அணுகி, அவனை வணங்கினான்.(15) உஷையும், பெருஞ்சக்தி வாய்ந்த பலராமனையும், தடுக்கப்பட முடியாதவனான வாசுதேவனையும், தடங்கலற்ற பாதையைக் கொண்ட சுபர்ணனையும் தோழியர் சூழ வந்து வணங்கினாள். பிறகு நாணத்துடன் கூடிய அவள், மலர்களாலான வில்லைத் தரிப்பவனையும் {காமனான பிரத்யும்னனையும்} வணங்கினாள்.(16,17)
அப்போது நாரதர் புன்னகைத்தவாறே, இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பகைவரைக் கொல்பவனான வசுதேவன் மகனை {கிருஷ்ணனை} அணுகினார்.(18) அவனுக்கு ஆசிகளைப் பொழிந்த அவர், "ஓ! கோவிந்தா, பிரத்யும்னனுடன் {அநிருத்தனுடன்} நீ இணைந்தது, நற்பேற்றைப் பெருகச் செய்யும்" என்றார்.(19)
அப்போது அநிருத்தனுடன் கூடிய யாதவர்கள் அனைவரும் தெய்வீக முனிவரான நாரதரை வணங்கினர். அவர்கள் அனைவரையும் பதிலுக்கு மதித்த அவர் கிருஷ்ணனிடம்,(20) "ஓ! தலைவா, அநிருத்தனின் ஆற்றலால் விளைந்த திருமணம் {வீரத்தால் வெல்லப்பட்ட கன்னிக்கையைத் திருமணம் செய்யும் வீராக்யோவிவாஹம்} நடைபெறட்டும். மணமகன், மணமகள் தரப்புகளுக்கிடையில் நடக்கும் கேலிப் பேச்சுகளைக் காண்பதில் நான் பெரும் விருப்பம் கொண்டிருக்கிறேன்" என்றார்.(21)
நாரதரின் சொற்களைக் கேட்டு அனைவரும் நகைத்தனர். கிருஷ்ணன், "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, அது விரைவில் நிறைவேறும்" என்றான்.(22)
அதே வேளையில் கும்பாண்டன், திருமணத்திற்கு வேண்டிய பொருட்கள் அனைத்துடனும் கிருஷ்ணன் முன்பு வந்து அவனை வணங்கினான்.(23) கும்பாண்டன், "ஓ! கிருஷ்ணா, ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, நீ என் பாதுகாப்பை உறுதி செய்வாயாக. கூப்பிய கைகளுடன் நான் உன் புகலிடத்தை நாடுகிறேன் {உன்னைச் சரணடைந்தேன்}" என்றான்.(24)
கிருஷ்ணன், நாரதரின் வேண்டுகோளின் படி ஏற்கனவே கும்பாண்டனுக்குப் புகலிடம் நல்க ஆயத்தமாக இருந்தான். இப்போது தன் முன் நிற்கும் அந்த உயரான்மாவுக்குப் பாதுகாப்பை உறுதியளித்து, "ஓ கும்பாண்டா, அமைச்சர்களில் சிறந்தவனே, உன்னுடைய நற்செயல்களைக் கேட்டு நான் நிறைவடைந்தேன்.(25) நீ இனி இந்த நாட்டின் மன்னனாக இருப்பாயாக. நான் இந்த நாட்டை உன்னிடம் ஒப்படைக்கிறேன். எப்போதும் என் பாதுகாப்பில் வாழ்ந்து தற்கட்டுப்பாட்டுடன் கூடியவனாக உன் உற்றார் உறவினருடன் மகிழ்ந்திருப்பாயாக" என்றான்.(26)
ஜனார்த்தனன், இவ்வாறு அந்நாட்டை {சோணிதபுரத்தை} உயரான்ம கும்பாண்டனுக்கு அளித்துவிட்டு, அநிருத்தனின் திருமண விழாவைக் கொண்டாடினான்.(27) நெருப்பின் தெய்வீக லோகபாலன் {அக்னிதேவன்} அங்கே நேரடியாக வந்திருந்தான். {உரிய மங்கலமான நாளிலும், நேரத்திலும் அநிருத்தனின் திருமணம் நடந்தது}.(28) அநிருத்தனும், அவனது மனைவியும் {உஷையும்} நீராடிவிட்டுத் தங்களைப் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்ட பிறகு, அப்சரஸ்கள் அவர்களிடம் பல்வேறு கேலிகள் செய்யத் தொடங்கினர்.(29) கந்தர்வர்கள், மெல்லிசையுடன் கூடிய மங்கலப் பாடல்களைப் பாடினர், அப்சரஸ்கள் அந்தத் திருமண விழாவுக்கு அழகு சேர்க்கும் வகையில் நடனம் ஆடினர்.(30) தேவர்களாலும் துதிக்கப்படும் பெரும் விவேகியும், பகை நகரங்களை வெல்பவனும், பகைவரைக் கொல்பவனுமான உபேந்திரன் {கிருஷ்ணன்}, இவ்வாறு அநிருத்தனின் திருமணத்தைக் கொண்டாடி,(31) வரங்களை அளிப்பவனான ருத்ரனிடம் விபரம் தெரிவித்து, அவனைக் கௌரவித்துத் தேவர்களின் துணையுடன் புறப்பட விரும்பினான்.(32)
பகைவரை அழிப்பவனான கிருஷ்ணன், துவராகை செல்லப் புறப்பட்டதைக் கண்ட கும்பாண்டன், கூப்பிய கைகளுடன்,(33) "ஓ! தாமரைக் கண் மதுசூதனா, நான் உன்னிடம் சொல்லப் போவதைக் கேட்பாயாக. ஓ! மாதவா, வருணனின் பொறுப்பில் பாணனின் சில பசுக்கள் இருக்கின்றன. அவற்றில் பால் அமுதம் போலப் பொழிகிறது.(34) அவற்றின் பாலைப் பருகுபவன் பெருஞ்சக்தி வாய்ந்தவனாகவும், போரில் வெல்லப்பட முடியாதவனுமாகிறான்" என்றான்.(35)
கும்பாண்டன் இதைச் சொன்னதும், ஹரியின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. அங்கே செல்வதற்கான விருப்பத்தை அவன் தெரிவித்தான்.(36) அதன் பிறகு தெய்வீகனான பிரம்மன், கேசவனை வாழ்த்திவிட்டு, தன் சொந்த உலகத்திற்கு அங்கே வசிப்பவர்களுடன் திரும்பிச் சென்றான்.(37) வெற்றியடைய விரும்பும் இந்திரனும், மருத்துகளும், கிருஷ்ணனுடன் துவாரகைக்குப் புறப்பட்டனர். வெற்றியை விரும்புகிறவர் அனைவரும் கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.(38) அருகில் இருந்த உஷைக்குத் தேவி {உமாதேவி} விடைகொடுத்து அனுப்பினாள். உஷை, தோழியர் சூழ மயிலில் அமர்ந்து துவாரகைக்குப் புறப்பட்டாள். பலதேவன், கிருஷ்ணன், பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், ஆற்றல்மிகு அநிருத்தன் ஆகியோர் கருடனின் முதுகில் ஏறி அமர்ந்தனர்.(39) பறவைகளில் முதன்மையான கருடன், மரங்களைச் சாய்த்த படியும், பூமியை நடுங்கச் செய்தபடியும் பறந்து சென்றான்.(40) இவ்வாறு கருடன் சென்ற போது திக்குகள் அனைத்தும் கலக்கமடைந்தன, வானம் புழுதியால் நிறைந்திருந்தது, சூரியனின் கதிர்கள் ஒளிகுன்றின.(41)
மனிதர்களில் முதன்மையானவர்களும், பாணனை வென்றவர்களுமான அவர்கள், கருடனைச் செலுத்திக் கொண்டு வெகு தொலைவு சென்றனர்.(42) ஆகாய வழியில் வருண லோகத்தை நோக்கிச் செல்லும் நீண்ட பாதையில் பசுக்கள் தெய்வீகப் பால் தருவதை அவர்கள் கண்டனர். பல்வேறு நிறங்களில் இருந்த அந்தப் பசுக்கள், கடற்கரையின் அருகில் அமைந்திருந்த காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன.(43,44) கும்பாண்டன் சொன்ன அடையாளங்களைக் கண்டு அவர்கள், அவற்றை உறுதி செய்து கொண்டனர்.(45) நித்தியனும், அண்டத்தின் தலைமைக் காரணனும், பொருள்களின் சாரம் அறிந்தவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன், பாணனின் பசுக்களைக் கண்டு அவற்றை அடைய விரும்பி கருடனிடம் பேசினான்.(46)
கிருஷ்ணன், "ஓ! கருடா, எவற்றின் பாலைப் பருகுபவன் இறப்பற்றவன் ஆவானோ, அந்த மதிப்புமிக்கப் பாணனின் பசுக்கள் இவையே. நீ அங்கே விரைந்து செல்வாயாக.(47) எவற்றின் பாலைப் பருகுவதன் மூலம், பேரசுரர்கள் முதுமையால் பீடிக்கப்படுவதில்லையோ, உயிரினங்கள் பிணியில் இருந்து விடுபடுமோ அந்தப் பசுக்களைக் குறித்துச் சத்தியபாமா என்னிடம் கேட்டிருந்தாள்.(48) அறத்திற்குக் கேடில்லை என்றால் இந்தப் பசுக்களைக் கொண்டு வரும்படியும், என் பணியின் குறுக்கில் இவை நின்றால் {என் பணியில் அறத்தை விட்டுக் கொடுக்க நேரிடும் என்றால்} பேராசை கொள்ளக்கூடாது என்றும் அவள் என்னைக் கேட்டுக் கொண்டாள்.(49) ஓ! வினதையின் மகனே, நிச்சயம் இந்தப் பசுக்களைக் குறித்தே சத்தியா என்னிடம் பேசினாள்" என்றான்.(50)
கருடன், "இவையே அந்தப் பசுக்கள் என்பதில் ஐயமில்லை. நான் ஏற்கனவே இவற்றை வருணனின் வசிப்பிடத்தில் கண்டிருக்கிறேன். ஓ! கேசவா, என்னைக் கண்ட உடனேயே அவை வருணனின் மாளிகைக்குள் நுழைகின்றன. எனவே, அவற்றை அடைவதற்கு நீ உடனே ஏதாவது செய்ய வேண்டும்" என்றான்.(51) வினதையின் மகன் இதைச் சொல்லிவிட்டு தன் சிறகடிப்பால் பெருங்கடலைக் கலங்கடித்தபடியே வருணனின் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்.(52) கருடன், வருணனின் வசிப்பிடத்திற்குள் பலவந்தமாக நுழைவதைக் கண்ட அவனது தொண்டர்கள் அனைவரும் குழப்பமடைந்து அச்சத்தால் பீடிக்கப்பட்டனர்.(53) பல்வேறு ஆயுதங்களுடன் கூடியவர்களும், தடுக்கப்பட முடியாதவர்களுமான வருணனின் படையினர் வாசுதேவனின் முன்பு தோன்றிய பிறகு, பாம்புகளின் பகைவனான கருடனுடன் அவர்கள் பயங்கரமாகப் போரிட நேர்ந்தது.(54) தடுக்கப்பட முடியாதவர்களான வருணனின் படைவீரர்கள் ஆயிரக்கணக்கில் போர்க்களத்திற்கு வந்தாலும், அவர்கள் அனைவரும் உயரான்ம கேசவனால் முறியடிக்கப்பட்டனர்.(55) எரியும் ஆயுதங்களுடன் கூடிய வருணனின் அறுபதாயிரம் தேர்களும் அங்கே போரிட வந்த உடனேயே தப்பி ஓடி வருணனின் வசிப்பிடத்திற்குள்ளேயே மீண்டும் நுழைந்தன.(56) கிருஷ்ணனின் கணைகளால் முற்றாக எரிக்கப்பட்ட அவர்கள், தங்களைப் பாதுகாக்க எவரும் இல்லாததைக் கண்டு பிளந்து சென்றனர்.(57) பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், வீரர்களுமான பலதேவன், ஜனார்த்தனன், பிரத்யும்னன், அநிருத்தன், கருடன் ஆகியோரின் கணைகளால் அந்தப் படையினர் முற்றாகக் கொல்லப்பட்டனர்.(58)
களைப்பில்லா செயல்பாடுகளைக் கொண்ட கிருஷ்ணனால் தன் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட வருணன், கோபத்தால் தூண்டப்பட்டவனாகக் கேசவன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(59) தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரின் கூட்டத்தாரால் துதிக்கப்படுபவனாக அவன் {வருணன்} போர்க்களத்தில் காணப்பட்டான்.(60) நீரொழுகும் வெண்ணிறக்குடை அவன் தலைக்கு மேலே ஏந்தப்பட்டது. {அவன் சிறந்த வில்லுடன் இருந்தான்}.(61) மகன்கள், பேரப்பிள்ளைகள், படைவீரர்கள் ஆகியோருடன் கூடிய நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, கோபத்துடன் தன் வில்லை எடுத்து அதற்கு நாண்பூட்டி ஹரியைப் போருக்கு அழைத்தான்.(62) பிறகு நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, தன் சங்கை முழக்கி ஹரனைப் போன்ற கோபத்துடன், ஹரியை நோக்கி விரைந்து சென்று அவனைத் தன் கணைகளால் மறைத்தான்.(63) அப்போது, பெருஞ்சக்திவாய்ந்த ஜனார்த்தனன், தன்னுடைய பாஞ்சஜன்ய சங்கை முழக்கி, கணைகளால் அனைத்துத் திக்குகளையும் கலங்கடித்தான்.(64) போர்க்களத்தில் துல்லியமான கணைகளால் தாக்கப்பட்டாலும் வருணன் சிரித்துக் கொண்டே கிருஷ்ணனுடன் போரிட்டான்.(65)
இதைக் கண்ட ஜனார்த்தனன், அந்தப் போர்க்களத்தில் பயங்கரம் நிறைந்த வைஷ்ணவ ஆயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் முன்னே நிற்கும் நுண்ணறிவுமிக்க வருணனிடம்,(66) "ஒரு கணம் இங்கே காத்திருப்பாயாக. பகைவரை அழிக்கும் இந்தப் பயங்கர வைஷ்ணவ ஆயுதத்தை உன்னைக் கொல்வதற்காகவே எடுத்திருக்கிறேன்" என்றான்.(67)
பெருஞ்சக்திவாய்ந்தவனான வருணன், வைஷ்ணவ ஆயுதம் உயர்த்தப்பட்டதைக் கண்டும், தன்னுடைய வாருண ஆயுதத்தை எடுத்துக் கொண்டும் சிங்க முழக்கம் செய்தான்.(68) ஓ! படைகளை வெல்பவனே {ஜனமேஜயா}, வைஷ்ணவ ஆயுதத்தை முறியடிப்பதற்காக அந்த வாருண ஆயுதம் ஏவப்பட்டபோது, அதிலிருந்து ஏராளமான நீர் பொழிந்தது.(69) எனினும், வைஷ்ணவ ஆயுதத்தின் சக்தியால் அந்த நீரும் எரிந்தது {கொதித்து ஒளிர்ந்தது}. இவ்வாறு அந்த வாருண ஆயுதம் எரிக்கப்பட்ட போது, மீண்டும் சுடர்விட்டெரிந்து வளர்ந்த வைஷ்ணவ ஆயுதத்தைக் கண்டு,(70) அச்சத்தால் நிறைந்த அனைவரும் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.
அஃது எரிவதைக் கண்ட வருணன், கிருஷ்ணனிடம்,(71) "ஓ! பெருமைமிக்கவனே, முன்பு வெளிப்படாதிருந்து வெளிப்பட்டிருக்கும் உன் பிரகிருதியை நினைவுகூர்வாயாக[2].(72) ஓ! யோகத்தின் தலைவா, நீ எப்போதும் சத்வ குணத்தால் {நல்லியல்பால்} நீக்கமற நிறைந்தவனாக இருந்தாலும் இவ்வாறான போக்கால் {தமோ குணத்தால்} ஏன் பீடிக்கப்பட்டிருக்கிறாய்? ஓ! தேவா, (சிதையும் போக்கான) தமோ குணைத்தைக் கைவிட்டு, அகங்காரத்தையும், ஐம்பூதங்களால் உண்டாகும் பிற பலவீனங்களையும்[3] களைவாயாக.(73) உன் வைஷ்ணவ வடிவில் {உன் அவதாரங்களில்} நானே மூத்தவன்[4]. உன் அண்ணன் என்ற மதிப்புக்கு நான் தகுந்தவன் என்றாலும், என்னை ஏன் நீ எரிக்க விரும்புகிறாய்?(74) ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, நெருப்பானது மற்றொரு நெருப்பை நோக்கி தன் சக்தியை வெளிப்படுத்தாது. எனவே, என்னை நோக்கித் திரும்பியிருக்கும் உன் கோபத்தை விடுவாயாக. நீயே அண்டத்தின் முதன்மைக் காரணனாக இருக்கிறாய், உனக்குத் தலைமையேற்க எவரும் இல்லை.(75) தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவல்ல பிரகிருதியானவள், அண்டத்தின் பிறப்பிடமான உன் சக்தியையே பயன்படுத்துகிறாள்[5].(76) விஷ்ணு, அக்னி, சோமன் ஆகியோருடன் அடையாளங் காணப்படும் இந்த அண்டத்தைப் பிரகிருதியின் மூலமே நீ படைத்தாய்; பிறகு ஏன் அதை இப்போது தாக்குகிறாய்?[6](77) பூதங்களின் பிறப்பிடமும், சுயம்புவும், நித்தியனும், சிதைவற்றவனும், வெளிப்பட்டும், வெளிப்படாமலும் அனைத்துடன் அடையாளங் காணப்படுபவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(78) ஓ! பேரொளி படைத்தவனே, காப்பதற்குத் தகுந்த என்னை நீ பாதுகாப்பாயாக. அண்டத்தின் தலைமைக் காரணன் நீயே. உன் மூலமே படைப்பானது தன்னைப் பெருக்கிக் கொண்டது.(79) விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும் சிறுவனைப் போலவே நீ உன் படைப்புகளுடன் விளையாடுகிறாய். {நீயே இயற்கையெனும் பிரகிருதிக்குப் பிறப்பிடமாக இருக்கிறாய்}.நான் பிரகிருதிக்கு எதிரானவனுமல்ல, அவளைக் களங்கப்படுத்துபவனுமல்ல.(80) இயற்கை மாற்றங்களுக்கு உட்படும்போது நீயே அவளை மாற்றுகிறாய். மாற்றங்களிலும் மாற்றத்தை உண்டாக்கும் ஒன்றால் உன்னிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.(81) {ஓ! பாவமற்றவனே}, அறம் அறியா தீமைகளில் நீ மாற்றத்தை ஏற்படுத்துகிறாய். {இயற்கையில் உள்ள தீய கூறுகளை நீ எப்போதும் அழிக்கிறாய்}.(82) இயற்கையால் உண்டாக்கப்படும் பாவம் நிறைந்த போக்குகளான ரஜோ குணம், தமோ குணம் ஆகியவற்றால் இவ்வுலகம் நிறைந்திருக்கும்போது அவளை {உலகத்தை} மயக்கம் பீடிக்கிறது.(83) ஓ! தலைவா, பரமஞானத்தின் ஊற்றுக்கண்ணும், அனைத்தையும் அறிந்தவனும், படைப்பாளனும் நீயே; பிறகு ஏன் என்னைக் கலங்கச் செய்கிறாய்?" என்று கேட்டான்.(84)
[2] சித்திரசாலை பதிப்பில், "தெளிவில்லாததும், அடையாளங்களால் தெளிவானதுமான உன்னுடைய முந்தைய இயல்பை நினைவுகூர்வாயாக" என்றிருக்கிறது.
[3] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "கீதா பிரஸ் உரையின் 908ம் பக்கத்தில் உள்ள அடிக்குறிப்பில் அறியாமை, அகங்காரம், ஆசை, பகை, கவர்ச்சி எனச் சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உன்னுடைய முந்தைய வெளிப்படாத இயல்பை நினைவுகூர்வாயாக. வெளிப்படும் உன் குணங்களில் நீ மூழ்கியிருக்கிறாய்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "வ்யக்த ரூபமான நீ முன் அவ்யக்தமான உனது ப்ரக்ருதியை நினைவில் கொள்" என்றிருக்கிறது.
[4] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "கீதா பிரஸ் உரையின் 908ம் பக்கத்தில் உள்ள அடிக்குறிப்பில் விஷ்ணுவின் முதல் அவதாரமான மத்ஸ்யம் பெருங்கடலில் தோன்றியது என்று சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.
[5] சித்திரசாலை பதிப்பில், "நீண்ட காலத்திற்கு முன் உன்னால் படைக்கப்பட்ட இயற்கையானது, பிற வடிவங்களுக்கு மாறவல்லதாகும், எனவே அது பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது. உன்னால் படைக்கப்பட்ட இயற்கையானது, உன் மூல இயல்பைச் சார்ந்து உலகமாக வெளிப்படுகிறது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "நீ ஜகத்துக்கு உற்பத்தி காரணமாக இருக்கிறாய். விகாரமடையும் ப்ரக்ருதி உன்னால் முதலில் படைக்கப்பட்டது. மாறும் தர்மத்தைக் கொண்டது. உற்பத்தி காரணத்தால் காரண ரூபமாயிருக்கிறது" என்றிருக்கிறது.
[6] சித்திரசாலை பதிப்பில், "தகுந்த இயல்பைப் பயன்படுத்தி (நெருப்பின் தேவனுடைய இயல்பில்) ஆக்னேய, (விஷ்ணுவின் இயல்பில்) வைஷ்ணவ, (சந்திரனின் இயல்பில்) சௌம்ய ஆயுதங்களை நீ படைத்தாய். நீ இந்த மொத்த உலகையும் படைத்தாய். பின் ஏன் என்னை நீ எதிர்க்கிறாய்?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஆக்நேயாஸ்த்ரம், வைஷ்ணவாஸ்த்ரம் இவை இரண்டும் முதலில் இருந்தே ஸ்வபாவத்தில் நட்பானவை. இந்த உலகம் முழுதும் உன்னால் படைக்கப்பட்டது" என்றிருக்கிறது.
அனைத்தையும் அறிந்தவனும், உலகைப் படைத்தவனும், வீரனுமான கிருஷ்ணன், வருணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(85) இவ்வாறு சொல்லப்பட்டதும், கிருஷ்ணன் புன்னகைத்தவாறே, "ஓ! பயங்கர ஆற்றல் படைத்த வீரா, என்னை அமைதியடையச் செய்ய, இந்தப் பசுக்களை எனக்குக் கொடுப்பாயாக" என்றான்.(86)
கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சொல்புத்தி கொண்ட வருணன், "ஓ! மதுசூதனா, கேட்பாயாக.(87) ஓ! தலைவா, {நீண்ட காலத்திற்கு முன்} நான் பாணனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். இப்போது அதை எவ்வாறு என்னால் உடைக்க முடியும்?(88) ஓ! கேசவா, உன்னால் அனைவரின் உறுதிமொழியையும் உடைக்கச் செய்ய முடியும். ஆனால், ஓ! ஐயா, ஒருவனுடைய ஒழுக்கம் கெட்டால் அவன் நல்லோரின் நிந்தனைக்குரியவன் ஆகிறான்.(89) ஓ! மதுசூதனா, எப்போதும் நல்லோர் மட்டுமே அனைவரின் மதிப்புக்குத் தகுந்தவர்கள். ஆனால், தன் உறுதிமொழியை உடைத்த பாவி அருள் உலகம் எதனையும் அடையமாட்டான்.(90) எனவே, ஓ! மதுசூதனா, நீ தணிவடைவாயாக. என் அறம் கெடாதிருக்கும் வகையில் செயல்படுவாயாக. ஓ! மாதவா, உறுதிமொழியை உடைப்பதற்கு வழிவகுக்கும் பணியில் என்னை ஈடுபடுத்துவது உனக்குத் தகாது.(91) ஓ! காளையைப் போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உயிரோடு இருக்கும் வரையில் இந்தப் பசுக்களை ஒருபோதும் கொடுக்க மாட்டேனென முன்பு நான் உறுதியளித்திருக்கிறேன்.(92) இந்தப் பசுக்களை நீ அடைய விரும்பினால் என்னைக் கொன்றுவிட்டு அவற்றை எடுத்துக் கொள்வாயாக. ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களின் மன்னா, ஓ! மதுசூதனா, என் உறுதிமொழியை இவ்வாறே உனக்கு நான் சொன்னேன். இதில் ஒரு பகுதியும் பொய்யாகாது. ஒவ்வொரு பகுதியும் உண்மையாகும்.(93) ஓ! மாதவா, என்னிடம் உனக்கு இரக்கம் உண்டானால் என்னைக் காப்பாயாக. ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, இந்தப் பசுக்களை நீ எடுத்துச் செல்ல விரும்பினால், என்னைக் கொன்றுவிட்டு, அவற்றை எடுத்துச் செல்வாயாக" என்றான் {வருணன்}".(94)
வைசம்பாயனர் சொன்னார், "யது குலத்தைப் பெருகச் செய்பவனான கிருஷ்ணன், வருணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ’பசுக்கள் குறித்து வருணன் சொன்னதை மீற முடியாது’ என்று நினைத்தபடியே அமைதியடைந்தான்.(95)
பிறகு, அனைவரையும் புரிந்து கொள்ளும் கேசவன், புன்னகைத்தவாறே வருணனிடம், "ஓ! தலைவா, வருணா, பாணனுடன் நீ கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக நீ பிழைத்தாய்.(96) குறிப்பாக வாய்மையை அழகிய, இனிய சொற்களில் நீ வெளிப்படுத்தினாய். என்னால் எவ்வாறு உனக்குக் கொடுமை இழைக்க முடியும்?(97) ஓ! நீர்நிலைகளின் தலைவா, நீ வாய்மை நிறைந்தவன் என்பதால் உன்னை மகிழ்விப்பதற்காக நான் பாணனின் பசுக்களை விடுவிக்கிறேன். நீயும் விடுவிக்கப்படுகிறாய். இதில் ஐயமேதும் இல்லை. இனி நீ செல்வாயாக" என்றான்.(98)
அதன்பிறகு, வருணன், பேரிகைகளை ஒலிக்கச் செய்து அர்க்கியத்துடன் கேசவனைத் துதித்தான். யது தலைவனான கேசவன் அதை நீர்நிலைகளின் தலைவனான வருணனிடம் இருந்து ஏற்றுக் கொண்ட பிறகு, அவன் குவிந்த மனத்துடன் பலதேவனை {பலராமனைத்} துதித்தான். சூரனின் வழித்தோன்றலான வீர சௌரி {கிருஷ்ணன்}, வருணனுக்குப் பாதுகாப்பை அளித்து, சச்சியின் தலைவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(99,100) தேவர்கள், மருத்துகள், சாத்யர்கள், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், கின்னரர்கள் ஆகியோர் உயிரினங்களனைத்தின் நித்திய தலைவனான கிருஷ்ணனை ஆகாய வழியில் பின்தொடர்ந்து சென்றனர்.(101,102)
வெற்றியும், புகழும் அடைந்த கேசவன் அவ்வாறு சென்ற போது, ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அசுவினி இரட்டையர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், சித்தர்கள், சாரணர்கள், வித்யாதரர்கள் ஆகியோரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(103) சச்சரவுகளை எப்போதும் விரும்புகிறவரான நாரதர், பாணனும், வருணனும் வீழ்த்தப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தவராகத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றார்.(104) சங்கு, சக்கர, கதாதாரியான கேசவன் இவ்வாறு சென்ற போது, பல வாயில்களைக் கொண்டதும், நீலவண்ண கோபுரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கைலாச மலைச் சிகரங்களுக்கு ஒப்பான அழகிய மாளிகைகளைக் கொண்டதுமான துவாரகா நகரைத் தொலைவில் இருந்தே கண்டு தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான். கேசவனின் வருகையையும், புறப்பாட்டையும் முன்னறிவிக்கும் பாஞ்சஜன்யத்தின் முழக்கத்தைக் கொண்டு, அவன் தான் வரும் செய்தியை துவாரகாவாசிகளுக்கு அறிவித்தான்.(105,106)
பாஞ்சஜன்ய ஒலியைக் கேட்ட துவாரகாவாசிகள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.(107) அவர்கள், தங்கள் தங்கள் வசிப்பிடங்களை ஏராளமான மலர்களாலும், நீர் நிறைந்த குடுவைகளாலும் {பூரணக்கும்பங்களாலும்}, பொரிகளாலும் அலங்கரித்தனர்.(108) பல ரத்தினங்களும் மிகுந்திருக்கும் அந்தச் செழிப்பான நகரத்தின் வீதிகள் தூய்மைப்படுத்தப்பட்டன; பிராமணர்களும், பெரியோரும் அர்க்கியத்துடன் மாதவனின் வெற்றிகளைச் சொல்லிப் புகழ்ந்து அவனைத் துதித்தனர்.(109) பேரழகனும், மைத்திரளுக்கு ஒப்பானவனும், வினதையின் மகன் {கருடன்} மீது அமர்ந்து வருபவனுமான கிருஷ்ணனை மக்கள் {ஜயமுழக்கத்துடன்} வணங்கினர்.(110) க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பெருஞ்சக்திவாய்ந்த அனந்தனையும் {பலராமனையும்}, கேசியைக் கொன்றவனையும் {கிருஷ்ணனையும்} முறையாகத் துதித்தனர்.(111) துவாரகையின் தோட்டமொன்றில் காத்திருந்த தாமரைக் கண் மாதவன், ரிஷிகளாலும், தேவர்கள், கந்தர்வர்கள், சாரணர்கள் ஆகியோராலும் துதிக்கப்பட்டான்.(112) அந்த அற்புதங்களையும், பெருதோள்களைக் கொண்ட கிருஷ்ணனையும் கண்ட பெரும் தாசார்ஹர்கள் மிதமிஞ்சிய மகிழ்ச்சியை அடைந்தனர். பாணனை வீழ்த்தித் திரும்பியிருக்கும் பெரும்புருஷோத்தமனைக் கண்ட துவாரகாவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பேசத் தொடங்கினர்.(113,114)
யாதவர்களில் பெருந்தேர்வீரனான பெருங்கிருஷ்ணன், சுபர்ணனின் {கருடனின்} உதவியால் நெடுந்தொலைவுக்குச் சென்று திரும்பிய பிறகு, அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசினர்.(115) அவர்கள், "அண்டத்தின் அன்புநிறை தலைவனும், வலிமையான நீண்ட கைகளைக் கொண்டவனுமான கிருஷ்ணன் நம் பாதுகாவலனாக அமைந்ததால் நாம் அருளப்பட்டவர்களும், ஆதரிக்கப்பட்டவர்களும் ஆனோம்.(116) தேவனான தாமரைக் கண்ணன், வினதை மகனின் முதுகில் ஏறிச் சென்று தடுக்கப்பட முடியாதவனான பாணனை வீழ்த்தி, துவாரகைக்குத் திரும்பி நம் இதயங்களை இன்புறச் செய்தான்" என்றனர்.(117)
துவாரகாவாசிகள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, தேவர்களும், தேர்வீரர்களும் வாசுதேவனின் அரண்மனைக்குள் நுழைந்தனர்.(118) வாசுதேவன், பலதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரும் கருடனின் முதுகில் இருந்து இறங்கி அந்த மாளிகைக்குள் நுழைந்தனர்.(119) பல்வேறு வடிவங்களுடன் திரியும் தெய்வீகத் தேர்களும் வானத்தில் தென்பட்டன. அன்னப்பறவைகள், காளைகள், மான்கள், யானைகள், குதிரைகள், சாரசங்கள், மயில்கள் ஆகியவற்றால் இழுக்கப்பட்ட அந்த ஆயிரக்கணக்கான தேர்கள் அங்கே பேரெழிலை வெளிப்படுத்தின.(120,121)
அப்போது கிருஷ்ணன், பிரத்யும்னனிடமும், பிற இளவரசர்களிடமும், இனிய சொற்களில்,(122) "இங்கே வந்திருக்கும் ருத்ரர்களையும், ஆதித்யர்களையும், வசுக்களையும், அசுவினி இரட்டையர்களையும், சாத்யர்களையும், பிற தேவர்களையும் முறையாக வணங்குவீராக.(123) பெரும் நற்பேறு பெற்ற தேவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனும், தானவர்களுக்குப் பயங்கரனுமான சக்ரனையும் {இந்திரனையும்}, அவனது தொண்டர்களையும் வணங்குவீராக.(124) பெரும் நற்பேறு பெற்றவர்களும், பிருகு, அங்கிரஸ் ஆகியோரைச் சார்ந்தவர்களுமான ஏழு முனிவர்களையும் {சப்தரிஷிகளையும்}, பேரான்மாக்களான தவசிகளையும் சுகமாக வணங்குவீராக.(125) இங்கே இருக்கும் சக்கரதாரிகளான லோகபாலர்கள் அனைவரையும் வணங்குவீராக. என் மகிழ்ச்சிக்காகப் பெருங்கடல்களும், மடுக்களும் இங்கே வந்திருக்கின்றன. அவற்றையும் வணங்குவீராக.(126) திசைகள், துணைத்திசைகள் ஆகியனவும் இங்கே வந்திருக்கின்றன. அவற்றையும் முறையாக வணங்குவீராக. வாசுகி முதலிய பெருஞ்சக்திவாய்ந்த பாம்புகளும் இங்கே வந்திருக்கின்றனர். அவர்களையும் வணங்குவீராக.(127) என் மகிழ்ச்சிக்காகப் பசுக்களும் இங்கே வந்திருக்கின்றன. அவற்றையும் வணங்குவீராக. கோள்கள், விண்மீன்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் என் மகிழ்ச்சிக்காக இங்கே வந்திருக்கின்றனர். அவர்களையும் முறையாக வணங்குவீராக" என்றான்[7].(128)
[7] 123 முதல் 128 வரையுள்ள ஸ்லோகங்களின் செய்தியானது, சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு, இங்கே அளிக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த இடத்தில் {பொருள், வாக்கியங்கள் ஆகியவற்றில்} பிழைகள் மலிந்துள்ளதாலும், அவற்றைத் திருத்தி அடிக்குறிப்புகளிடும் நேரத்திற்கு அஞ்சியும் இவ்வாறு செய்யப்பட்டது.
வாசுதேவனின் சொற்களைக் கேட்ட இளவரசர்கள், உயரான்ம தேவர்களை முறையான வரிசையில் வணங்கி அவர்களின் முன்பு நின்றனர்.(129) தேவர்களைக் கண்ட குடிமக்கள், ஆச்சரியத்தால் நிறைந்து, பூஜைக்குத் தேவையான பொருட்களை விரைவில் திரட்டி,(130) "ஓ! நாம் எப்போதும் பேராச்சரியங்களையே காண்கிறோம். வாசுதேவனின் பாதுகாப்பில் இவை {நற்பேறாக} நமக்கு வாய்த்திருக்கின்றன" என்றனர்.(131) அதன்பிறகு மலர்களையும், நறுமணப் பொருட்களையும், சந்தனப் பொடிகளையும் பொழிந்து அவர்கள் தேவர்களைத் துதித்தனர்.(132) துவாரகாவாசிகள் தங்கள் புலன்களையும் மனத்தையும் கட்டுப்படுத்தியவர்களாக, பொரி தூவியும், தூபம் காண்பித்தும், நெடுஞ்சாண்கிடையாக வணங்கியும் தேவர்களை வழிபட்டனர்.(133) ஆஹுகன், வசுதேவன், சாம்பன், சாத்யகி, உல்முகன், பெருஞ்சக்திவாய்ந்த விப்ருது, பெருமைமிக்க அக்ரூரன், {நிசடன்} ஆகியோரை வாசவன் ஆரத் தழுவி உச்சி முகர்ந்தான்.(134,135)
அதன்பிறகு அந்தப் பெருஞ்சக்ரன் {இந்திரன்}, துதிக்கத்தகுந்தவனும், கேசியைக் கொன்றவனுமான கிருஷ்ணனை நோக்கி, மிகச் சிறந்த பின்வரும் சொற்களை யாதவர்களின் மத்தியில் வைத்து சொன்னான்.(136) அவன் {இந்திரன்}, "சாத்வர்களிலும், யதுக்களிலும் முதன்மையான இவன், தன் மகிமையையும், ஆண்மையையும் போர்க்களத்தில் வெளிப்படுத்தி அநிருத்தனை மீட்டான். இவன், போர்க்களத்தில் மஹாதேவன், குஹன் ஆகியோரின் முன்னிலையில் வைத்து, பாணனை வீழ்த்திவிட்டுத் துவாரகை திரும்பியிருக்கிறான்.(137,138) அவனுடைய {பாணனின்} ஆயிரங்கைகள் இரண்டாகக் குறைக்கப்பட்டன. இந்த ஹரி, அவனிடம் இரண்டு கைகளை மட்டுமே விட்டு வைத்து தன் நகருக்குத் திரும்பினான்.(139) மனிதர்களின் நிலத்தில் உயரான்மக் கிருஷ்ணன் பிறந்ததற்கான பணிகள் அனைத்தும் நிறைவேறின, நாமும் கவலைகளற்றவர்கள் ஆனோம்.(140) எந்தக் கவலையுமின்றி நீங்கள் இனிய மாத்வீக மதுவைப் பருகுவீராக {இன்பம் துய்ப்பீராக}. இவ்வாறு நீங்கள் உலகம் சார்ந்த பொருட்களில் பற்று கொண்டவர்களாக உங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பீராக.(141) இந்த உயரான்மாவின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பில் நானும் கவலையற்றவனாகத் தேவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வேன்" என்றான் {இந்திரன்}.(142)
ஆயிரங்கண்ணனான புரந்தரன் {இந்திரன்}, தானவர்களை அழிப்பவனும், உலகத்தால் புகழப்படுபவனுமான பெருமைமிகு கேசவனின் மகிமைகளை இவ்வாறு உரைத்துவிட்டு, அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.(143) அதன் பிறகு இந்திரன், அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தேவர்களுடனும், மருத்துகளுடனும் சேர்ந்து தேவலோகத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.(144) பெரும் ரிஷிகள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோரும், பெருஞ்சக்திவாய்ந்த கேசவனின் வெற்றிக்கான ஆசிகளைக் கூறி அவனைக் கௌரவித்துவிட்டு, தங்கள் தங்கள் உலகங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(145)
புரந்தரன் தேவலோகத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு, பெருஞ்சக்திவாய்ந்தவனும், தாமரை உந்தி படைத்த பெருந்தேவனுமான அவன் {பத்மநாபன் / கிருஷ்ணன்}, யாதவர்களின் நலத்தை விசாரித்தான்.(146) அப்போது சந்திரனைப் போன்ற கேசவனின் முகத்தைக் காண மக்களின் மத்தியில் அனைத்துப் பக்கங்களிலும் பேராரவாரம் எழுந்தது. பாவமற்றவனான கேசவன் அவர்களின் பக்தியைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(147) இவ்வாறு துவாரகை திரும்பிய கிருஷ்ணன், விருப்பத்திற்குரிய பொருட்கள், வளங்கள், செழிப்பு என அனைத்தையும் அடைந்தும், யாதவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(148)
விஷ்ணு பர்வம் பகுதி – 186 – 130ல் உள்ள சுலோகங்கள் : 148
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |