(யுத்தேயக்னிகணாபயானம் ஜ்வரோத்பத்திஸ்தேன க்ருஷ்ணஸ்ய யுத்தம் ச)
Krishna's battle with jvara (fever) | Vishnu-Parva-Chapter-180-124 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ஜ்வரதேவனுடன் கடும்போர் புரிந்த ராமகிருஷ்ணர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டே மலைச்சிகரங்களுக்கு ஒப்பான தண்டம், கதாயுதம், கலப்பை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, பறவைகளில் முதன்மையான கருடனின் முதுகில் ஏறிச் சென்றனர். அப்போது, ஓ! ஜனமேஜயா, ரோஹிணியின் மகன் {பலராமன்} போரில் ஈடுபட்டபோது, அவனுடைய வடிவமானது, யுக முடிவில் அனைத்தையும் எரிக்க விரும்பும் காலனைப் போன்று பயங்கரம் நிறைந்ததாக வளர்ந்தது.(64,65) போரில் திறன்மிக்கவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான பலதேவன், தன் கலப்பையால் பகைவரை இழுத்துத் தன் தண்டத்தால் {முசலத்தால்} அவர்களைக் கலங்கடித்தான்.(66) மனிதர்களில் முதன்மையானவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான பிரத்யும்னன், எதிர்த்துப் போரிடும் தானவர்களைத் தன் கணைகளால் முறியடித்தான்.(67) நெய் கலந்த மைத்திரளுக்கு ஒப்பானவனும், சங்கு, சக்கர, கதாதாரியுமான ஜனார்த்தனன், தன் சங்கை முழக்கியபடியே பல வழிமுறைகளில் போரிட்டான்.(68) நுண்ணறிவுமிக்கவனான வினதையின் மகன் {கருடன்}, தன் சிறகுகளால் தைத்தியர்களைத் தாக்கி, தன் நகங்களாலும், அலகாலும் சிதைத்து, அவர்களை யமலோகம் அனுப்பி வைத்தான்.(69) இவ்வாறு கணைமாரியால் தாக்கப்பட்டவர்களும், அந்த நான்கு வீரர்களால் வெல்லப்பட்டவர்களும், பயங்கரம் நிறைந்தவர்களுமான அந்த அசுரப்படையினர் போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்[1].(70)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இது தனி அத்யாயமாக இருந்தாலும், ஸ்லோக எண்கள் மட்டும் சென்ற அத்யாயத்தின் முடிவில் இருந்து தொடர்கிறது. அதன்படியே இங்கும் அளிக்கப்படுகிறது
ருத்ரனின் தொண்டனான ஜ்வரம் {ஜ்வரதேவன்}, தன் படை இவ்வாறு முறியடிக்கப்பட்டதைக் கண்டு, அவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன், ஒரு பைத்தியக்காரனைப் போல மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடியே போர்க்களத்திற்கு நடந்து வந்தான். அவன் மூன்று கால்களுடனும், மூன்று தலைகளுடனும், ஆறு கரங்களுடனும், ஒன்பது முகங்களுடனும் இருந்தான், அவனிடம் எரியும் ஆயுதம் {பஸ்மம்} ஒன்றிருந்தது, அவன் {காலாந்தகனான} யமனைப் போன்றவனாக இருந்தான். ஆயிரக்கணக்கான மேகங்களின் முழக்கத்தைப் போல முழங்கிய அவன்,(71,72) மயிர் சிலிர்ப்பு ஏற்பட்டவனாக, மாசடைந்த கண்களைக் கொண்டவனாக மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டும், கொட்டாவி விட்டுக் கொண்டும் உறங்குபவனைப் போல மயங்கிக் கொண்டிருந்தான்.(73)
தன் கண்களைக் கொண்டு முகத்தைப் பயங்கரமாக்கிக் கொண்ட அவன் {ஜ்வர தேவன்}, கலப்பைதாரியிடம் {பலராமனிடம்} கோபத்துடன்,(74) "உன் பலத்தால் ஏன் நீ செருக்கில் மிதக்கிறாய்? நான் போர்க்களத்திற்கு வந்திருப்பதை நீ காணவில்லையா? சில கணங்கள் காத்திருப்பாயாக. போர்க்களத்தில் என்னெதிரே வந்த உன்னால் உயிருடன் திரும்ப முடியாது" என்றான்.(75)
ஜ்வரம், புன்னகைத்தவாறே இதைச் சொல்லிவிட்டு, அண்ட அழிவின் போது உண்டாகும் நெருப்பை {பிரளயாக்னியைப்} போன்ற பயங்கரம் நிறைந்த தன் கைமுட்டியைக் காட்டியவாறே ஹலாயுதனை {பலராமனை} நோக்கி ஓடினான்.(75,76) இருப்பினும் ரோஹிணியின் மகன், அந்த ஜ்வரத்திற்கு வாய்ப்பேதும் நல்காமல் ஆயிரக்கணக்கான மண்டல கதிகளில் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தான்.(77) அப்போது, ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட ஜ்வரம், மலைபோன்று பெரிதான அவனது உடலைக் குறிபார்த்தவனாக, எரியும் தன் ஆயுதத்தை {பஸ்மத்தை} அவனது மார்பின் மீது வீசினான்.(78) அந்த நெருப்பாயுதம் {பஸ்மம் / சாம்பல்}, ராமனின் மார்பில் இருந்து சுமேரு மலையின் சிகரத்தில் விழுந்து, அதைத் துண்டுகளாகச் சிதறடித்தது.(79) எனினும், கிருஷ்ணனின் அண்ணன் தன் மார்பில் விடுபட்டு எஞ்சியவை மூலம் எரிக்கப்பட்டான். அவன் ஒவ்வொரு கணமும் பெருமூச்சுவிட்டுக் கொண்டும், கொட்டாவி விட்டுக் கொண்டும் கவனக்குறைவாக {உறக்கத்துடன் கூடியவனாக} நடமாடிக் கொண்டிருந்தான்.(80) அவனது கண்கள் தளர்ந்தன, மேனியில் மயிர்கள் சிலிர்த்தன, அவனது புலன்கள் அனைத்தும் கலங்கின. அவன் மனங்கலங்கியவனைப் போலப் பெருமூச்சு விடத் தொடங்கினான்.(81)
அப்போது கிட்டத்தட்ட தன் நனைவை இழந்துவிட்ட ஹலாதரன், கிருஷ்ணனிடம், "ஓ! கிருஷ்ணா, ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணா, {நான் விழுந்துவிட்டேன்}. ஓ! பாதுகாப்பைத் தருபவனே,(82) நான் எரிக்கப்படுகிறேன், இல்லை நான் முற்றாக எரிக்கப்படுகிறேன். நான் எப்படிப் பிழைக்கப் போகிறேன்" என்றான்.
பெருஞ்சக்திவாய்ந்த பலனால் இவ்வாறு சொல்லப்பட்டதும்,(83) தாக்குபவர்களில் முதன்மையான கிருஷ்ணன், புன்னகைத்தவாறே, "அஞ்சாதீர்" என்றான். இதைச் சொல்லிவிட்டு அவன் ஹலாயுதனை ஆரத்தழுவிக் கொண்டான்.(84)
பிறகு அவன் எரிபடுவதில் இருந்து அன்புக்குரிய கிருஷ்ணனால் காக்கப்பட்டான். மதுசூதனனான வாசுதேவன், எரிவதில் இருந்து ராமனைக் காத்ததும், பெருங்கோபத்துடன், ஜ்வரத்திடம்,(85) "ஓ! ஜ்வரமே, வந்து என்னுடன் போரிடுவாயாக. இந்தப் போரில் உன் பலம், சக்தி ஆகியவற்றின் எல்லையை எனக்குக் காட்டுவாயாக" என்றான்.(86)
இவ்வாறு சொல்லப்பட்டதும், பெருஞ்சக்திவாய்ந்த ஜ்வரம், எரிந்து கொண்டிருக்கும் தன் பேராயுதத்தை {பஸ்மத்தைத்} தன் வலக்கரத்தில் இருந்து கிருஷ்ணனின் மேனியில் வீசினான்.(87) தாக்குபவர்களில் முதன்மையானவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான கிருஷ்ணன் இதனால் சில கணங்கள் எரியும் உணர்வை அனுபவித்தான். பிறகு உடனே அந்த நெருப்பு அணைக்கப்பட்டது.(88) அப்போது ஜ்வரம், பாம்புகளைப் போன்ற தன் நீண்ட கரங்களைக் கொண்டு கிருஷ்ணனின் கழுத்திலும், அவனது மார்பிலும் தாக்கினான்.(89) இவ்வாறே, அந்தப் போர்க்களத்தில் ஜ்வரத்திற்கும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணனுக்கும் இடையில் அங்கே பெரும்போர் நேரிட்டது.(90) பயங்கரமிக்க அந்தப் போரில் கிருஷ்ணன், ஜ்வரம் ஆகியோருடைய கைகளின் தாக்குதல்களால் உண்டான ஒலி, மலைச்சிகரத்தைப் பிளக்கும் இடிக்கு ஒப்பாக இருந்தது.(91) அவ்வப்போது, "இவ்வாறு தாக்காதே; இவ்வாறே நீ தாக்க வேண்டும்" என்ற சொற்கள் கேட்டன. அந்தப் பெரும்போரில், பெருஞ்சக்திவாய்ந்த அவ்விருவரும் போரிட்டுக் கொண்டிருந்த போது,(92) மனிதனின் வடிவில் இருந்த அண்டத்தின் தலைவன், அண்டத்திற்கு முடிவை ஏற்படுத்துபவனைப் போலத் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், வானுலாவுகிறவனுமான ஜ்வரத்தைத் தன் கரங்களால் கலங்கடித்தான்.(93)
விஷ்ணு பர்வம் பகுதி – 180 – 124ல் உள்ள சுலோகங்கள் : 30
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |