(யுத்தேயக்னிகணாபயானம் ஜ்வரோத்பத்திஸ்தேன க்ருஷ்ணஸ்ய யுத்தம் ச)
Krishna goes to Sonitpura and fights with Rudra's followers on the way | Vishnu-Parva-Chapter-179-123 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பாணபுரி அக்னிகளுடனும், பெரும் முனிவர் அங்கீரசுடனும் போரிட்ட கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சங்குகள், பேரிகைகளின் {தூரியங்களின்} முழக்கம், சூதர்கள், மாகதர்கள், வந்திகளின் ஆயிரக்கணக்கான பாடல்கள்,(1) வெற்றியை அறிவிக்கும் மனிதர்களின் வாழ்த்தொலிகள் ஆகியவை ஒலித்தபோது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, சந்திரனையும், சூரியனையும், சுக்ரனையும் போலத் தோன்றினான்.(2) ஓ! மன்னா, வினதையின் மகன் {கருடன்} வானத்தில் உயர்ந்தபோது, ஹரியின் சக்தியால் அவனுடைய அழகு பெருகி அபரிமிதமானது.(3) தாமரைக் கண்ணனான கேசவன், பாணனைக் கொல்ல விரும்பி எட்டுக் கரங்களைக் கொண்டதும், மலைக்கு ஒப்பானதுமான ஒரு வடிவத்தை ஏற்றான். அந்த நேரத்தில் சாரங்கபாணியான ஜனார்த்தனன், எண்ணற்ற தலைகளைக் கொண்டவனானான்.(4) அவன், வலக்கைகள் நான்கில் வாள், சக்கரம், கதாயுதம், கணைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தான், இடக்கைகள் நான்கில் தோல் கேடயம், சாரங்கவில், வஜ்ரம், சங்கு ஆகியவற்றைக் கொண்டிருந்தான்.(5) {சாரங்கபாணி ஆயிரம் தலைகளைக் கொண்டிருந்தான்}. சங்கர்ஷணன், ஆயிரம் வடிவங்களை ஏற்று,(6) வெண்மையான ஆயுதங்களை ஏந்தி, சிகரங்களுடன் கூடிய கைலாச மலையைப் போல உயிரினங்கள் அனைத்தினாலும் தடுக்கப்பட முடியாதவனாக உதயச் சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(7) உயரான்மப் பிரத்யும்னன், போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், சனத்குமாரனைப் போன்ற தோற்றத்தை ஏற்றான்.(8) அதன்பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகன் {கருடன்}, வலுவாகச் சிறகடித்து எண்ணற்ற மலைகளை நடுங்கச் செய்தபடியும், காற்றின் பாதையைத் தடுத்தபடியும் பறந்து சென்றான்.(9) மனோ வேகத்துடன் கூடிய அவன் சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரின் புனிதமிக்கப் பாதையைக் கடந்து சென்றான்.(10)
அந்த நேரத்தில் ராமன் {பலராமன்}, போரில் ஒப்பற்றவனான கிருஷ்ணனிடம், "ஓ! கிருஷ்ணா, இஃதென்ன அற்புதம்?(11) நாம் திடீரெனத் தன்னொளியை இழந்திருக்கிறோம். நாம் அனைவரும் பொன்வண்ணத்தை ஏற்றிருக்கிறோம். இதன் காரணம் என்ன? நாம் சுமேரு மலையின் அருகில் வந்துவிட்டோமா?" என்று கேட்டான்.(12)
அதற்கு அந்தத் தலைவன் {ஸ்ரீ பகவான் / கிருஷ்ணன்}, "ஓ! பகைவரைக் கொல்பவரே, பாணனின் நகரத்தை நெருங்கிவிட்டோமென நான் நினைக்கிறேன். அவனைப் பாதுகாப்பதற்காக இந்நகரத்தில் நிலைத்திருக்கும் நெருப்பு {அக்னி}, சுடர்விட்டு ஒளிவீசுகிறது.(13) ஓ! கலப்பைதாரியே, ஆகுதி நெருப்பின் {ஆஹவனீய அக்னியின்} ஒளியால் நாம் பீடிக்கப்பட்டிருக்கிறோம்; அதுவே நம் வண்ணத்தை மாற்றியிருக்கிறது" என்றான்.(14)
ராமன் {பலராமன்}, "பாணனின் நகரை நெருங்குவதன் மூலம் நம் உடல் தன்னொளியை இழக்கிறதென்றால், இதற்குமேல் முறையென நீ நினைப்பதைச் செய்வாயாக" என்றான்.(15)
தலைவன், "ஓ! வினதையின் மகனே, நீ முறையென நினைப்பதைச் செய்வாயாக. நீ வழிமுறைகளைக் கண்டடைந்த பிறகு, நான் முறையென நினைப்பதைச் செய்வேன்" என்றான்".(16)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நினைத்த வடிவங்களை ஏற்கவல்லவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான கருடன், வாசுதேவனால் சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்டு, ஆயிரம் வாய்களை உடையவன் ஆனான்.(17) பெருஞ்சக்திவாய்ந்த அந்த வினதையின் மகன், குதித்தெழுந்து ஆகாயக் கங்கை இருக்குமிடத்திற்குச் சென்றான். அங்கே அவன் ஏராளமான நீரைப் பருகி வந்து,(18) அந்த நெருப்பில் அதைப் பொழியத் தொடங்கினான். நுண்ணறிவுமிக்கவனான வினதையின் மகன் இந்த வழிமுறையை ஏற்படுத்தியதும் அந்த நெருப்பு {ஆஹவநீய அக்னி} உடனே அணைந்தது.(19)
சுபர்ணன் {கருடன்}, ஆகாயக் கங்கையின் நீரால் அந்த நெருப்பு அணைந்ததைக் கண்டு, ஆச்சரியத்தால் நிறைந்தவனாக,(20) "ஓ!, யுக முடிவைப் போல இந்நெருப்பு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தது. நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணனின் நிறத்தையே அது மங்கச் செய்திருந்தது.(21) {பெருஞ்சக்தி வாய்ந்தவர்களான கிருஷ்ணன், சங்கர்ஷ்ணன் (பலராமன்), பிரத்யும்னன் ஆகியோர் மூவலகங்களையும் ஒடுக்கவல்லவர்களென நான் கருதுகிறேன்" என்றான்[1].(22)
[1] அடைப்புக்குறிக்குள் இருக்கும் இந்த ஸ்லோகம் மன்மதநாததத்தரின் பதிப்பில் விடுபட்டிருக்கிறது. மற்ற அனைத்துப் பதிப்புகளிலும் இருக்கிறது.
பறவைகளின் மன்னனான கருடன், நெருப்பை அணைத்த பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த தன் சிறகுகளை அடித்துப் பேரொலியை உண்டாக்கினான்.(23) ருத்ர கணங்களான அந்த நெருப்புகள் அதைக் கண்டு, "கருடன் மீது ஏறி வருபவர்களும், பல வடிவங்களைக் கொண்டவர்களும், பயங்கர மனிதர்களுமான இந்த மூவர் யாவர்?(24) இவர்கள் ஏன் இங்கே வருகின்றனர்?" என்று நினைத்தன. அந்த மலைநெருப்புகள் இவ்வாறு சிறிது நேரம் சிந்தித்தாலும், அவற்றால் எதையும் தீர்மானிக்க முடியவில்லை.(25) அவை அந்த மூன்று யதுக்களுடனும் போரிடத் தொடங்கின. அவர்கள் போரில் ஈடுபட்டபோது அங்கே பேரொலி எழுந்தது.(26)
நுண்ணறிவுமிக்கவரும், நெருப்புகளின் தலைவருமான அங்கிரஸ், சிங்கங்களின் முழக்கத்தைப் போன்ற அந்த அமளியைக் கேட்டுவிட்டு, "போர் நடக்கும் இடத்திற்கு விரைந்து செல்வாயாக" என்று சொல்லி ஒருவனை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார்.(27) மனோவேகம் கொண்ட மற்றொரு அசுரன், "காரியமென்ன என்பதைச் சென்று பார்" என்று பாணன் மூலம் சொல்லியனுப்பப்பட்டான்.(28) "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அந்த மனிதனும் உடனே புறப்பட்டு நெருப்புகளுக்கும், வாசுதேவனுக்கும் இடையில் நடக்கும் போரைக் கண்டான்.(29) நெருப்பின் தேவர்களில் முக்கியமான ஐவரும், ஸ்வாஹா எனும் காணிக்கையின் போது நன்கறியப்பட்டவர்களுமான கல்மாஷன், குசுமன், தஹனன், சோஷணன் {மஹாபலன்}, பெருஞ்சக்திவாய்ந்த தபனன் ஆகியோரும், நெருப்பின் சிறுதெய்வங்களான பிறரும் தங்கள் தங்களுக்குரிய படைகளுடன் போரிட்டுக் கொண்டிருப்பதை அவன் கண்டான். ஸ்வதாவின் தலைமை தேவர்களான பிடரன், பதகன், ஸ்வர்ணன், ஸ்வாகதன், ப்ராஜஸ் என்ற ஐவரும் போரிட்டுக் கொண்டிருந்தனர்,(30-32) ஜோதிஷ்டோமம், வஷட்காரம் ஆகியவற்றின் அதிகாரிகளான பெருஞ்சக்திவாய்ந்த நெருப்பின் தேவர்களும் அங்கே போரிட்டுக் கொண்டிருந்தனர்.(33)
அப்போது, பெரும் முனிவரான அங்கிரஸ், பிரகாசமிக்கத் தன் தண்டத்தை {சூலத்தை} உயர்த்தியபடியே ஒரு நெருப்புத் தேரில் ஏறி, நெருப்பின் தேவர்களுக்கு மத்தியில் போர்க்களத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(34)
கூரிய கணைகளை ஏவும் அங்கீரஸைக் கண்டு கோபத்தால் நிறைந்த கிருஷ்ணன், மீண்டும் மீண்டும் சிரித்தபடியே,(35) "ஓ! நெருப்பின் தேவர்களே, சில கணங்கள் பொறுமையாகக் காத்திருப்பீராக. உங்கள் அழிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது. என் ஆயுதங்களின் சக்தியால் ஒரு கணத்தில் எரிக்கப்பட்டு நீங்கள் அனைவரும் அனைத்துப் பக்கங்களில் சிதறி தப்பி ஓடுவீர்கள்" என்றான்.(36)
அப்போது அங்கிரஸ், அந்தப் போரில் கிருஷ்ணனின் உயிரை எடுத்துவிடுபவரைப் போல, கையில் எரியும் திரிசூலத்துடன் விரைந்து சென்றார். நுண்ணறிவுமிக்கவனும், அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் யமனைப் போன்ற ஒளிமிக்கவனுமான கிருஷ்ணன், தன்னுடைய பிறைவடிவக் கூரிய கணைகளால் {அர்த்தச்சந்திர பாணத்தால்} அங்கிரஸின் தண்டத்தை {சூலத்தை} அறுத்து, காலனைப் போன்ற ஒரு கணையால் {ஸ்தூணகர்ண பாணத்தால்} அவரது மார்பைத் தாக்கினான்.(37,38) இதனால் அங்கிரஸ் குருதியில் குளித்தவராக, உடல் சிதைக்கப்பட்டவராகக் கீழே விழுந்தார்.(39) பிரம்மனின் மகன்களும், நெருப்பின் தேவர்களுமான நால்வர் இதைக் கண்டு, பிறருடன் சேர்ந்து பாணனின் நகரத்திற்குத் தப்பி ஓடினர்.(40)
{கிருஷ்ணன் பாணபுரி இருந்த இடத்திற்குச் சென்றான்}. அப்போது நாரதர், பாணனின் நகரத்தைத் தொலைவில் இருந்து கண்டு,(41) "ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணா, சோணித நகரத்தை அதோ பார். பாணனைப் பாதுகாப்பதற்காகவும், அவனது நன்மைக்காகவும் கார்த்திகேயனும், பேரொளிமிக்க ருத்ரனும், அவனது மனைவியும் {ருத்ராணியும்} எப்போதும் அங்கே வாழ்ந்து வருகின்றனர்" என்றார்.
கிருஷ்ணன், நாரதரின் சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே,(42,43) "ஓ! பெரும் முனிவரே, நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்வீராக. பாணனைப் பாதுகாப்பதற்காகப் போர்க்களத்திற்கு ருத்ரனே வந்தாலும், நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக அவனுடன் போர் புரிவோம்" என்றான்.(44)
வேகமாகச் செல்பவனான கருடன், கிருஷ்ணனும், நாரதரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்களைப் பாணனின் நகருக்கு அழைத்துச் சென்றான்.(45) அப்போது தாமரைக் கண்ணனும், மேகத்தைப் போன்றவனுமான கேசவன், மேகத்தைப் போன்ற தன் சங்கை எடுத்து முழக்கினான்.(46) பெருஞ்சக்திவாய்ந்த மாதவன், அந்தச் சங்கை முழக்கி, அற்புதச் செயல்களைச் செய்யும் பாணனுக்கு அச்சத்தை ஊட்டியபடியே அவனது நகருக்குள் நுழைந்தான்.(47) இவ்வாறு அவர்கள் நுழைவதைக் கண்ட பாணனின் படைவீரர்கள் தங்கள் பேரிகைகளையும், சங்குகளையும் முழக்கியபடியே தங்களைச் செயலுக்கு ஆயத்தம் செய்தனர்.(48) அதன்பிறகு பிரகாசமிக்க ஆயுதங்களுடன் கூடிய கிங்கரப் படைவீரர்கள், போர்க்களத்திற்கு அணிவகுத்து வந்தனர். அப்போது, ஒற்றுமையுடன் கூடியவர்களும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவர்களும், எண்ணற்றவர்களுமான அந்தப் படைவீரர்கள் பெரிய கார்மேகங்களைப் போலத் தெரிந்தனர்.(49,50)
அதன்பிறகு, தைத்தியர்கள், தானவர்கள், முன்னணி பிரமதர்கள் ஆகியோர் எரியும் பல்வேறு ஆயுதங்களுடன் நித்தியனான கிருஷ்ணனுடன் போரிடத் தொடங்கினர்.(51) கிருஷ்ணன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், கருடன் ஆகியோர் எரியும் நெருப்பைப் போலத் தடுக்கப்பட முடியாதவர்களும், குருதியைக் குடிப்பதற்காக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் போர்க்களத்தில் திறந்த வாயுடன் வந்தவர்களுமான யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோருடன் போரிடத் தொடங்கினர்.(52,53)
பெருஞ்சக்திவாய்ந்த பலபத்ரன் {பலராமன்}, பாணனின் படையைக் கண்டு, பகைவரின் படைகளை அழிப்பவனான கிருஷ்ணனிடம், "ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணா, {இந்தப் படைவீரர்கள் அழியப் போவதைப் பார்}.(54) இந்தப் படைவீரர்கள் முற்றிலும் அச்சத்தால் பீடிக்கப்படுவதற்குச் செய்ய வேண்டியதைச் செய்வாயாக" என்றான்.
நுண்ணறிவுமிக்கப் பலபத்திரன் {பலராமன்}, ஆயுத அதிகாரிகளில் முதன்மையான புருஷோத்தமனான கிருஷ்ணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, காலனைப் போன்ற பயங்கர நெருப்பாயுதங்களை எடுத்துக் கொண்டான்.(55,56) அசுரர்களையும், இரைதேடும் பறவைகளையும் அவ்வாயுதங்களால் கலங்கடித்த ஜனார்த்தனன், படைவீரர்கள் காணப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றான்.(57) எண்ணற்ற பிரிவுகளாகக் களத்தில் நின்றவர்களும், முக்கியமாகப் பிரமதர்களைக் கொண்டவர்களுமான அசுரப்படையினர், ஈட்டிகள், பட்டிசங்கள், சக்திகள், ரிஷ்டிகள், பினாகைகள், பரிகங்கள் ஆகியவற்றை ஏந்திக் கொண்டும், மலைகளையும், மேகங்களையும் போன்று பெருஞ்சுமைகளுடன் கூடிய பயங்கரமான பல விலங்குகளுடன் கூடியவர்களாகக் காற்றால் சிதறடிக்கப்பட்ட மேகங்களைப் போலத் தெரிந்தனர். பெரும் வில்லாளிகள் பலர் அந்தக் காட்சிக்கு மெருகூட்டிக் கொண்டிருந்தனர்.(58,59) தண்டங்கள் {முசலங்கள்}, ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், பரிகங்கள் ஆகியவற்றுடன் இங்கேயும், அங்கேயும் ஓடிக் கொண்டிருந்த அந்த அசுரப் படையினர், அந்தப் போர்க்களத்தில் எழிலை அதிகரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கருடனின் முதுகில் அமர்ந்து கொண்டிருந்த சங்கர்ஷணன் {பலராமன்}, மதுசூதனனான கிருஷ்ணனிடம்,(60) "ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ! புருஷோத்தமா, நான் இந்த அசுரப் படையுடன் போரிட விரும்புகிறேன்" என்றான்.
இதைக் கேட்ட கிருஷ்ணன்,(61) "நானும் அதையே விரும்புகிறேன். இந்த முன்னணி போர்வீரர்களுடன் நான் போர்க்களத்தில் போரிட விரும்புகிறேன்.(62) நான் மேற்கு நோக்கிப் போரிடும்போது, சுபர்ணன் என் எதிரில் இருக்கட்டும். பிரத்யும்னன் என் இடது புறத்திலும், நீர் என் வலது புறத்திலும் இருப்பீராக. இந்தப் பயங்கரப் போரில் நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம்" என்றான்"[2].(63)
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்யாயம் இத்துடன் நிறைவடைகிறது. சித்திரசாலை, பிபேக்திப்ராய், உ.வே.ராமானுஜ ஐயங்கார் பதிப்புகளில் இன்னும் அதிகச் செய்திகள் இருக்கின்றன. அந்தச் செய்திகள் மன்மதநாததத்தரின் பதிப்பில் அடுத்த அத்யாயத்தில் தொடர்கின்றன.
விஷ்ணு பர்வம் பகுதி – 179 – 123ல் உள்ள சுலோகங்கள் : 63
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |