(வாஸுதேவமாஹாத்ம்யம்)
Arjuna describes another wonderful work | Vishnu-Parva-Chapter-168-112 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிராமணரின் குழந்தையைக் காக்க கிருஷ்ணனால் ஏவப்பட்ட அர்ஜுனன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, உலகத்தின் தலைவனான கிருஷ்ணனின் மகிமைகளை மீண்டும் கேட்க விரும்புகிறேன்.(1) உயரான்மாவும், நுண்ணறிவுமிக்கவனும், புராதனப் புருஷனுமான கிருஷ்ணனின் பெருஞ்செயல்களைக் கேட்பதில் இன்னும் தணிவடையாதவனாக இருக்கிறேன்" என்றான்.(2)
வைசம்பாயனர், "ஓ! மன்னா, கோவிந்தனின் மகிமைகளைச் சொல்லி முடிக்க நூறு ஆண்டுகளும் போதாது.(3) காண்டீவ வில் தரித்தவனான பீபத்சு (அர்ஜுனன்), கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மரால் தூண்டப்பட்டதும் சொன்ன பேரற்புதம் நிறைந்த கேசவனின் செயல்களை இப்போது கேட்பாயாக.(4) ஓ! குருவின் அரச வழித்தோன்றலே, மன்னர்களின் முன்னிலையில், பகைவர் அனைவரையும் வென்ற தன் அண்ணன் யுதிஷ்டிரனிடம் அவன் சொன்னதைக் கேட்பாயாக.(5)
அர்ஜுனன், "முன்பொரு காலத்தில் என் உறவினர்களைக் காண்பதற்காக நான் துவராகா நகருக்குச் சென்றேன். போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டவனாக அங்கே சில காலம் வாழ்ந்திருந்தேன்.(6) அந்த நேரத்தில் அற ஆன்மாவும், பெருங்கரங்களைக் கொண்டவனுமான மதுசூதனன், சாத்திரச் சடங்குகளின்படி ஒரு நாள் அளவுக்கு நீளும் வேள்வியை நடத்தினான் {வேள்வியில் ஒரு நாள் தீக்ஷையில் இருந்தான்}.(7) கிருஷ்ணன் வேள்வியில் அமர்ந்திருந்தபோது ஒரு பிராமணர் தன் காரியங்களைச் சொல்லி அவனது பாதுகாப்பை நாடினார்.(8)
பிராமணர், "ஓ! தலைவா, நீயே (குடிமக்களின்) பாதுகாப்பிற்குப் பொறுப்பானவன்; மேலும், நற்பணியால் ஈட்டப்பட்ட புண்ணியத்தில் நான்கில் ஒரு பங்கைப் பெறத் தகுந்தவனே பாதுகாவலன்" என்றார்.(9)
வாசுதேவன், "ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, உமக்கு நன்மை நேரட்டும். நீர் (எவருக்கும்) அஞ்ச வேண்டாம். எவ்வளவு கடும்பணியாக இருந்தாலும், உமது அச்சத்திற்குக் காரணமானவனிடம் இருந்து உம்மை நான் பாதுகாப்பேன். உமக்கு அச்சத்தை ஏற்படுத்துபவன் எவன்?" என்று கேட்டான்.(10)
பிராமணர், "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, என் மகன்கள் பிறந்த உடனேயே அபகரிக்கப்பட்டனர். ஓ! பாவமற்ற கிருஷ்ணா, என்னுடைய மூன்று மகன்களும் அவர்கள் பிறந்த உடனேயே அபகரிக்கப்பட்டனர். நீ இப்போது என் நான்காவது மகனைக் காக்க வேண்டும்.(11) ஓ! ஜனார்த்தனா, என் மனைவி பேறு கால வலியில் இருக்கிறாள். என் பிள்ளை அபகரிக்கப்படாத வகையில் நீ ஏற்பாடுகளைச் செய்வாயாக" என்றார்.(12)
அர்ஜுனன், "அப்போது கோவிந்தன் என்னிடம், "நான் இப்போது வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், எச்சூழ்நிலையிலும் ஒரு பிராமணர் நம்மால் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றான்.(13)
கிருஷ்ணனின் சொற்களைக் கேட்ட நான் அந்தக் கோவிந்தனிடம், "இதில் என்னை நீ நியமிப்பாயாக. நான் இந்தப் பிராமணரின் அச்சத்தை அகற்றுகிறேன்" என்றேன்.(14)
இவ்வாறு சொல்லப்பட்டதும் சற்றே புன்னகைத்த ஜனார்த்தனன், "உன்னால் இவரைப் பாதுகாக்க முடியுமா?" என்று கேட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கிருஷ்ணனின் அந்தச் சொற்களைக் கேட்டு நான் பெரிதும் வெட்கமடைந்தேன்.(15)
இவ்வாறு வெட்கமடைந்த என்னைக் கண்ட ஜனார்த்தனன் மீண்டும், "உன்னால் அவரைப் பாதுகாக்க இயலுமென்றால் செல்.(16) பெருங்கரங்களைக் கொண்ட ராமர் {பலராமர்}, பெருந்தேர் வீரனான பிரத்யும்னன் ஆகியோரைத் தவிர, விருஷ்ணி, அந்தகக் குலத்தோர் பிறர் உன்னைப் பின்தொடர்வார்கள்" என்றான்.(17)
பிறகு விருஷ்ணி படை சூழ நான் என் முன் அந்தப் பிராமணரை வைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றேன்" என்றான் {அர்ஜுனன்}.(18)
விஷ்ணு பர்வம் பகுதி – 168 – 112ல் உள்ள சுலோகங்கள் : 18
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |