(தந்யோபாக்யாநம்)
Narada puts questions: And th mystery is explained | Vishnu-Parva-Chapter-167-111 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : துவாரகையில் பலநாட்டு மன்னர்களின் முன்னிலையில் கிருஷ்ணனின் பெருமையைச் சொன்ன நாரதர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தன் அழிவைத் தானே விரும்பிய சம்பரனால் பிரத்யும்னன் அபகரிக்கப்பட்ட அதே மாதத்தில் ஜாம்பவதி சாம்பனைப் பெற்றாள்.(1) அவன் {சாம்பன்} தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து பலராமனால் ஆயுதப் பயன்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டான். பிற விருஷ்ணிகள் அவனை ராமனுக்குச் சற்றே குறைந்தவனாகக் கருதி மதித்து வந்தனர்.(2) அவன் {சாம்பன்} பிறந்ததிலிருந்து கிருஷ்ணன், பகைவர்களற்றவனாகவும், பகை மன்னர்கள் யாரும் அற்றவனாகவும் நந்தனத் தோட்டத்தில் வாழும் தேவர்களைப் போலத் தன்னுடைய தலைநகரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.(3) அந்த நேரத்தில் ஜனார்த்தனனின் மீது கொண்ட அச்சத்தால் பகை மன்னர்களால் அமைதியாக இன்புற்றிருக்க முடியவில்லை; யாதவர்களின் செழிப்பைக் கண்ட வாசவனும் கூடத் தன் வளங்களைத் தானே விரும்பாதிருந்தான்.(4)
அந்த நேரத்தில் துரியோதனன் ஹஸ்தினாபுரத்தில் {வாரண நகரத்தில் [யானையின் பெயரைக் கொண்ட நகரத்தில்]} ஒரு வேள்வியைச் செய்தான், மன்னர்கள் அனைவரும் அந்த நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(5) ஜனார்த்தனனையும், அவனது மகன்களையும், அவனது செழிப்பையும், கடற்கரையில் அமைந்துள்ள துவாரகா நகரையும் கேள்விப்பட்ட அந்த மன்னர்கள்,(6) தங்கள் ஒற்றர்களின் {அல்லது தூதர்களின்} மூலம் செய்திகளைச் சேகரித்துவிட்டு, விருந்தினர்களை விரும்புபவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனுமான கிருஷ்ணனைக் காண அவனது அரண்மனைக்குச் சென்றனர்.(7)
திருதராஷ்டிரனின் ஆளுகையில் இருந்த மன்னன் துரியோதனன், {அவனது தம்பிகள்}, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, திருஷ்டத்யும்னன் ஆகியோரும்,(8) பாண்டிய, சோழ, கலிங்க, பாஹ்லீக, திராவிட, கச நாடுகளின் மன்னர்கள் ஆகியோரும், பிறரும் எனப் பதினெட்டு அக்ஷௌஹிணி படைவீரர்களும், கிருஷ்ணனின் ஆயுதங்களால் பாதுகாக்கப்பட்ட யாதவர்களின் நகரத்தை அடைந்தனர்.(9) {அந்த மன்னர்கள், ரைவதக மலையின் அருகில் தங்கள் தொண்டர்களுடன் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் தங்கினர்}.(10) தாமரைக் கண்ணனான ரிஷிகேசன், மன்னர்களுக்குரிய இடங்களில் அவரவர் தங்க வைக்கப்பட்ட பிறகு, முன்னணி யாதவர்களுடன் சேர்ந்து தானும் அவர்களிடம் சென்றான்.(11) யது குல மன்னனான மதுசூதனன் அந்த மன்னர்களுக்கு மத்தியில் கூதிர் காலச் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(12) அதன் பிறகு அவரவர் வயதுக்கும் இடத்திற்கும் தகுந்த மதிப்பை அளித்துவிட்டு கிருஷ்ணன் பொன்னாலான தன் அரியணையில் அமர்ந்தான்.(13) அந்த மன்னர்களும் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் அமைந்தவையும், அழகாக அலங்கரிக்கப்பட்டவையுமான இருக்கைகளில் அமர்ந்தனர்.(14) பிரம்மனின் தர்பார் மண்டபத்தில் ஒளிரும் தேவர்களையும், அசுரர்களையும் போல அந்த மன்னர்களும் பேரழகுடன் திகழ்ந்தனர்.(15) யதுக்களும், மன்னர்களும் கிருஷ்ணன் கேட்கும் வகையில் பல்வேறு கருத்துகளை அங்கே பேசிக் கொண்டிருந்தனர்.(16)
அதேவேளையில், மின்னலுடனும், மேக முழக்கத்துடனும் கூடிய சூறாவளி அங்கே வீசியது. சில கணங்களுக்குப் பிறகு, அந்தத் தீய பருவ நிலையைப் பிளந்து கொண்டு சடாமுடியால் முற்றிலும் மறைக்கப்பட்டவரும், கைகளில் வீணையுடன் கூடியவருமான நாரதர் தோன்றினார்.(17,18) சக்ரனின் நண்பரும், நெருப்பைப் போன்று பிரகாசிப்பவருமான நாரத முனிவர், தீப்பிழம்பைப் போல மன்னர்களின் முன்பு இறங்கி வந்தார்.(19) முனிவர்களில் முதன்மையான நாரதர் நிலத்தைத் தீண்டிய உடனேயே அங்கே நிலவிய தீய பருவ காலம் மறைந்தது.(20) நாரதர், பெருங்கடலைப் போன்ற அந்த மன்னர்களின் சபையில் நுழைந்து, அரியணையில் அமர்ந்திருந்தவனும், நித்யனுமான அந்த யது மன்னனிடம் {கிருஷ்ணனிடம்},(21) "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, நீ ஒருவனே தேவர்களுக்கும் ஆச்சரியமானவனாக இருக்கிறாய். ஓ! புருஷோத்தமா, இவ்வுலகில் உன்னைப் போன்ற அருளைப் பெற்றவன் எவனுமில்லை" என்றார்.(22)
பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன் இவ்வாறு சொல்லப்பட்டதும் புன்னகைத்தவாறே, "ஆம், நான் ஆச்சரியமானவன்தான், குறிப்பாகக் கொடைகளின் காரியத்தில் நல்லூழைப் பெற்றவன்" என்றான்.(23) மன்னர்களுக்கு மத்தியில் இவ்வாறு சொல்லப்பட்டதும் முனிவர்களில் முதன்மையான நாரதர், "ஓ! கிருஷ்ணா, சரியான மறுமொழியைக் கேட்டவனானேன். நான் இனி விரும்பிய உலகத்திற்குச் செல்வேன்" என்றார்.(24)
அந்தக் கூட்டத்தில் இருந்த மன்னர்களால் நாரதரின் புதிர்நிறைந்த சொற்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள், நாரதர் புறப்பட இருந்த சமயத்தில் அண்டத்தின் தலைவனான கேசவனிடம்,(25) "ஓ! மாதவா, ’ஆச்சரியம் என்றும், அருள் என்றும்’ நாரதர் சொன்னார், நீயும் ’கொடைகள் {தக்ஷிணைகள்}’ என்று மறுமொழி கூறினாய்.(26) ஓ! கிருஷ்ணா, இந்தத் தெய்வீக வெளிப்பாடுகளை {திவ்யமான மந்திரப் பதங்களை} எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்பதற்குத் தகுந்தவர்களாக இருந்தால், அவற்றின் உண்மை பொருளைக் கேட்க விரும்புகிறோம்" என்றனர்.(27)
அப்போது கிருஷ்ணன், முன்னணி மன்னர்களான அவர்கள் அனைவரிடமும், "ஆம், நீங்கள் கேட்பதற்குத் தகுந்தவர்கள்தான், இருபிறப்பாளரான நாரதர் அதை உங்களுக்குச் சொல்வார்.(28) ஓ! தெய்வீக முனிவரே, உமது கேள்விக்கும், என் மறுமொழிக்கும் உண்டான உண்மைப் பொருளைக் கேட்க ஆவலாக இருக்கும் இந்த மன்னர்களுக்கு அவற்றை விளக்கிச் சொல்வீராக" என்றான்.(29)
அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்ததும், வெண்மையானதுமான ஒரு பொன் ஆசனத்தில் அமர்ந்திருந்த நாரதர் அந்தச் சொற்களை விளக்கத் தொடங்கினார். நாரதர்,(30) "ஓ! கூடியிருக்கும் மன்னர்களே, இந்தப் பெருங்கேள்வியில் நான் எவ்வாறு தேர்ந்தேன் என்பதைக் கேளுங்கள் {இந்தக் கிருஷ்ணனது பெருமைகளின் எல்லை நான் புரிந்து கொண்ட அளவில் நீங்கள் அனைவரும் கேட்பீராக}.(31) ஒரு காலத்தில், நான் {ஒரு நாளைக்கு மூன்று வேளை நீராடுபவர்களின் விருந்தினராக இருந்த நான்} இரவு முடிந்து சூரியன் உதித்த போது, தனியாகக் கங்கைக் கரையில் நடந்து கொண்டிருந்தேன்.(32) என் வீணையின் வடிவம் போன்றதும், இரண்டு குரோசங்கள் நீளம் கொண்டதுமான ஓர் ஆமையை நான் கண்டேன்.(33) அது நான்கு கால்களுடனும், இரண்டு ஓடுகளுடனும், நீரில் நனைந்தும், பாசிகளால் மறைக்கப்பட்டும் ஒரு மலையைப் போல் பெரிதாக இருந்தது. அதன் தோல் யானையைப் போன்று கடினமானதாக இருந்தது.(34) அப்போது என் கரங்களால் அந்த நீர்விலங்கைத் தீண்டி, "ஓ! ஆமையே, ஆச்சரியமான உடலைக் கொண்டவனாகவும், வெல்லப்பட முடியாத இரண்டு ஓடுகளைக் கொண்டவனாகவும் இருப்பதால் நற்பேறு பெற்றவனாகவும், பெரியவனாகவும் நான் உன்னைக் கருதுகிறேன். எவரையும் கவனிக்காமல் கவலையற்றவனாக நீ நீரில் திரிந்து கொண்டிருக்கிறாய்" என்றேன்.(35,36)
நீருலாவியான அந்த ஆமை, இதைக் கேட்டுவிட்டு ஒரு மனிதனைப் போல என்னிடம், "ஓ! முனிவரே, என்னில் ஆச்சரியமென்ன இருக்கிறது? ஓ! முனிவரே, நான் எவ்வாறு அருளப்பட்டவன் ஆவேன்?(37) கீழ்நோக்கிப் பாய்பவளும், என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விலங்குகள் உலவும் இடமாக இருப்பவளுமான இந்தக் கங்கையே அருளப்பட்டவள். இவளை விட ஆச்சரியம் நிறைந்தது வேறென்ன?" என்று கேட்டது.(38)
இதனால் ஆவலில் நிறைந்த நான் கங்கையாற்றை அணுகி அவளிடம், "ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, உன்னில் நீ பல மடுக்களைக் கொண்டிருக்கிறாய். பேருடல் படைத்த விலங்குகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டவளான நீ {முனிவர்கள் பலரின்} ஆசிரமங்களைப் பாதுகாத்துப் பெருங்கடலுக்குச் செல்கிறாய். எனவே நீ அருளப்பட்டவள், உன்னில் ஆச்சரியங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறாய்" என்றேன்" {என்றார் நாரதர்}.(39,40)
ஓ! ஜனமேஜயா, இவ்வாறு சொல்லப்பட்டதும் இருபிறப்பாளர்களில் முதன்மையானவரும், தெய்வீக கந்தர்வரும், இந்திரனுக்குப் பிடித்தமானவருமான நாரதரின் முன்பு தன் சொந்த வடிவில் தோன்றிய கங்கை,(41) "ஓ! தெய்வீகப் பாடகரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, ஓ! சச்சரவுகள் செய்ய விரும்புபவரே, இவ்வாறு சொல்லாதீர்; நான் அருளப்பட்டவளுமில்லை, ஆச்சரியங்களைக் கொண்டவளும் இல்லை.(42) உம்மைப் போன்ற வாய்மை நிறைந்தவரின் சொற்களுக்கு நான் அஞ்சுகிறேன். ஓ! இருபிறப்பாளரே, என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான ஆறுகள் பாயும் இடமாக இருப்பவரும், பேராச்சரியங்கள் நிறைந்தவருமான பெருங்கடலே {சமுத்ரராஜனே} அருளப்பட்டவர்" என்றாள்.(43,44)
நாரதர், மூவழிகளில் பாய்பவளின் (கங்கையின்) சொற்களைக் கேட்டுப் பெருங்கடலிடம் சென்று, "ஓ! பெருங்கடலே, ஓ! நீர்நிலைகளின் தலைவா, நீ நீர்நிலைகள் அனைத்தின் மூலமாக இருப்பதால் நீயே இவ்வுலகில் அருளப்பட்டவன், ஆச்சரியங்கள் நிறைந்தவன்.(45) குறிப்பாக, உலகத்தோரால் வழிபடப்படுபவர்களும், அவர்களைத் தூய்மைப்படுத்துபவர்களும், நீர் நிறைந்தவர்களுமான ஆறுகள் உன் மனைவியராக உன்னிடம் வருகின்றனர்" {என்றார்}.(46)
இவ்வாறு சொல்லப்பட்டதும், காற்றின் வலிமையால் நீரைப் பிளந்து கொண்டு உதித்தெழுந்த பெருங்கடல் {சமுத்ரராஜன்},(47) "ஓ! தெய்வீகப் பாடகரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, இவ்வாறு சொல்லாதீர்; நான் ஆச்சரியங்கள் நிறைந்தவனுமில்லை, அருளப்பட்டவனுமில்லை.(48) நான் வாழும் இந்தப் பூமியே அருளப்பட்டவள். இந்த அண்டத்தில் பூமியைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறென்ன?" என்று கேட்டான்.(49)
பெருங்கடலின் சொற்களைக் கேட்ட நான், ஆவலில் நிறைந்தவனாகப் பூமிப்படுகைக்குச் சென்று அண்டத்தின் சக்தியாக இருக்கும் பிருத்வியிடம், "ஓ! பெரும் பொறுமை கொண்ட அழகிய பூமியே, உலகங்கள் அனைத்தையும் தாங்குவதால் நீயே இந்த அண்டத்தில் அருளப்பட்டவளும்,(50) ஆச்சரியம் நிறைந்தவளாகவும் இருக்கிறாய். உயிரினங்களையும், மனிதர்களையும் தாங்குபவளாகவும், பொறுமையின் பிறப்பிடமாகவும் நீயே இருக்கிறாய்.(51) வானுலாவும் தேவர்களின் படைப்பாக நீ இருக்கிறாய்" என்றேன்.
அவள், என் சொற்களால் தூண்டப்பட்டும், தனக்கு இயல்பான பொறுமையைக் கைவிட்டும் என்னிடம்,(52) "ஓ! சச்சரவுகள் செய்வதில் விருப்பம் கொண்ட தெய்வீகப் பாடகரே, இவ்வாறு சொல்லாதீர்.(53) நான் அருளப்பட்டவளுமில்லை, ஆச்சரியம் நிறைந்தவளுமில்லை. என்னுடைய இந்தப் பொறுமை பிறரைச் சார்ந்திருக்கிறது. ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, என்னைத் தாங்கும் மலைகளே உண்மையில் பெரியவை,(54) அவற்றில்தான் ஆச்சரியங்கள் காணப்படுகின்றன. அவைகளே உலகங்களின் பாலங்களாக இருக்கின்றன" என்றாள்.
ஓ! மன்னர்களே, இந்தச் சொற்களைக் கேட்டு மலைகளிடம் சென்ற நான்,(55) "ஓ! மலைகளே, நீங்களே பெரியவர்கள், பேராச்சரியங்கள் பலவற்றால் நிறைந்தவர்கள். மேலும் நீங்களே தங்கச் சுரங்கங்களாகவும், விலைமதிப்புமிக்கப் பல ரத்தினங்களின் சுரங்கங்களாகவும் எப்போதும் பூமியில் நீடித்து வாழ்கிறீர்கள்" என்றேன்.(56)
அசைவற்றவையும், காடுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான மலைகள் என் கேள்வியை ஆற்றுப்படுத்தும் மறுமொழியைத் தெரிவித்தன. அவை,(57) "ஓ! பிராமண முனிவரே, நாங்கள் பெரியவர்களல்ல, எங்களில் எந்த ஆச்சரியமும் இல்லை. படைப்பாளனான பிரம்மனே பெரியவன், தேவர்களில் ஆச்சரியம் நிறைந்தவன் அவனே" என்றன.(58)
படைப்பாளனான பிரம்மனுடன் இந்தக் கேள்விச் சுழலுக்கு முடிவேற்படும் என்று எண்ணி அவரிடம் சென்றேன்.(59) சுயம்புவும், நான்கு தலைகளைக் கொண்ட தேவனும், உலகத்தின் பிறப்பிடமுமான அவரை முறையாக அணுகி வணங்கிவிட்டு, என் சொற்களுக்கு முடிவேற்படும் என்ற எதிர்பார்ப்பில் அவரிடம், "நீரே பெரியவர், ஆச்சரியம் நிறைந்தவர், உலகின் ஆசான்.(60,61) இவ்வுலகில் உமக்கு இணையாக வேறு உயிரினம் ஏதும் கிடையாது. அசைவன, அசையாதனவற்றுடன் கூடிய இந்த அண்டம் உம்மில் இருந்தே தோன்றியது.(62) ஓ! தேவர்களின் மன்னா, தேவர்களும், தானவர்களும், மூவுலகங்களின் பிற படைப்புகளும், இந்த அண்டமும், வெளிப்பட்டவையும், வெளிப்படாதவையுமான அனைத்தும் உம்மில் இருந்தே தோன்றின.(63) தேவர்களின் நித்திய மன்னர் நீரே. ஓ! தேவா, தேவர்களில் சிறந்தவராக இருக்கும்போது உலகங்கள் அனைத்தின் தோற்றமாக நீர் இருப்பதில் ஆச்சரியமென்ன" என்று கேட்டேன்.(64)
என் சொற்களைக் கேட்ட பெரும்பாட்டன் பிரம்மன், "ஓ! நாரதா, நீ ஏன் என்னைப் பெரியவனாகவும், ஆச்சரியம் நிறைந்தவனாகவும் சொல்கிறாய்?(65) உலகங்களைத் தாங்கும் வேதங்களே பெரியவை, ஆச்சரியம் நிறைந்தவை. ஓ! விப்ரா, ரிக், சாம, யஜூர், அதர்வணங்களில் கிடக்கும் உண்மைகளாக என்னை அறிவாயாக. வேதங்கள் என்னைத் தாங்குகின்றன, நானும் அவற்றைத் தாங்குகிறேன்" என்றார்.(66,67)
சுயம்புவான அந்தப் பரமேஷ்டியின் சொற்களைக் கேட்ட நான் வேதங்களிடம் செல்ல வேண்டும் என என் மனத்தில் தீர்மானித்தேன்.(68) பெரும்பாட்டனின் சொற்களின்படி, மந்திரங்களால் வழிபடப்படும் நான்கு வேதங்களின் அருகில் சென்று அவற்றிடம்,(69) "ஓ! வேதங்களே, நீங்களே பெரியவர்கள், ஆச்சரியம் நிறைந்தவர்கள், பிராமணர்களின் பிறப்பிடமாக இருக்கிறீர்கள் எனப் பெரும்பாட்டன் சொல்கிறார்.(70) ஸ்ருதியிலும், தபங்களிலும் உங்களில் மேம்பட்டவை எவையுமில்லை. எனவே அதை நான் உங்களிடம் கேட்பதற்காக வந்திருக்கிறேன்" என்றேன்.(71)
அப்போது தலை கவிழ்ந்த வேதங்கள் என்னிடம் மறுமொழியாக, "{பரமாத்மாவுக்காகச் செய்யப்படும்} யக்ஞங்களே {வேள்விகளே} பெரியவை, ஆச்சரியம் நிறைந்தவை.(72) ஓ! நாரதா, யக்ஞங்களுக்காவே {வேள்விகளுக்காகவே} நாங்கள் படைக்கப்பட்டோம். நாங்கள் எங்கள் வசப்பட்டவர்களல்ல. எனவே, யக்ஞங்களே {வேள்விகளே} எங்களை ஆள்கின்றன" என்றன.(73)
சுயம்புவான தேவனை விட வேதங்களே மேம்பட்டவை, வேதங்களைவிட யக்ஞங்களே மேம்பட்டவை என்பதைக் கேட்டு இல்ல நெருப்பால் தலைமை தாங்கப்படும் யக்ஞங்களிடம் சென்று,(74) "ஓ! யக்ஞங்களே, பெரும்பாட்டனாலும், வேதங்களாலும் சொல்லப்பட்டதைப் போல நான் உங்களிடம் பேரொளியைக் காண்கிறேன்.(75) உங்களைவிட ஆச்சரியம் நிறைந்தவை இவ்வுலகில் வேறேதும் இல்லை. நீங்கள் இருபிறப்பாளர்களிடம் பிறந்தவர்கள் என்பதால் பெரியவர்களாக இருக்கிறீர்கள்.(76) வேள்விக் காணிக்கைகளின் ஒரு பகுதியில் தேவர்களும், வேள்வி மந்திரங்களில் பெரும் முனிவர்களும், வேள்வியின் ஆகுதிகளில் {ஹவிஸ் பாகங்களால்} அக்னிகளும் உங்களால் நிறைவடைகின்றனர்" என்றேன்.(77)
நான் சொல்லி முடித்ததும், வேள்விக்களங்களில் (யூபக் கொடிக்கம்பங்களுடன்} இருந்த அக்னிஷ்டோமமும், பிற யக்ஞங்களும் {வேள்விகளும்},(78) "ஓ! முனிவரே, எங்களின் மத்தியில் ஆச்சரியமென்றும், பெரிதென்றும் சொல்லேதும் இல்லை. விஷ்ணு மட்டுமே பேராச்சர்யம் வாய்ந்தவன். அவனே எங்கள் பரம புகலிடமாக {கதியாக} இருக்கிறான்.(79) தாமரைக் கண்ணனான விஷ்ணு, மனிதர்களாக வெளிப்பட்டு நாங்கள் உண்பதற்கான ஆகுதிகளை {நெய்யாலான ஹவிஸாக} நெருப்பில் காணிக்கையளிக்கிறான். பெருங்கரங்களைக் கொண்டவனும், செந்தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்டவனும், மனைவியுடன் கூடியவனுமான அந்த விஷ்ணுவே பெரியவன், கொடைகளுடன் கூடிய ஒரு யக்ஞமும் அவனைப் போலப் பெரியதே" என்று மறுமொழி கூறின.(80)
அதன்பிறகு விஷ்ணுவின் நடமாட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காகப் பூமிக்கு இறங்கி வந்து தகுந்தவர்களான உங்களைப் போன்ற மன்னர்களால் சூழப்பட்ட கிருஷ்ணனைக் கண்டேன்.(81) உங்கள் அனைவராலும் சூழப்பட்டிருந்த மாதவனிடம் நான், "நீயே பெரியவனும், ஆச்சரியம் நிறைந்தவனும் ஆவாய்" என்றேன்.(82) அவனும், "கொடைகளுடன் சேர்த்து {தக்ஷிணையுடன் கூடிய நான்}" என்று மறுமொழி கூறினான். இஃது என் சொற்களுக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறது.(83) {வேள்விகள் அனைத்தின் கதியாக இருப்பவன் குணங்களுடன் கூடிய விஷ்ணுவே ஆவான்}. ஆமை சொன்னவை தொடங்கிச் சொற்களை வரிசையாகப் பின்தொடர்ந்தே நான் இங்கே வந்தேன். அவை தக்ஷிணையுடன் கூடிய இந்தப் புருஷனை சரியாகக் காட்டின.(84,85)) உங்களால் கேட்கப்பட்ட நான், என் சொற்களின் ரகசியத்தை இவ்வாறு விளக்கிச் சொன்னேன். நான் இனி திரும்பிச் செல்கிறேன்" என்றார்.(86)
நாரதர் தேவலோகத்துக்குப் புறப்பட்டுச் சென்றதும் ஆச்சரியத்தால் பீடிக்கப்பட்ட மன்னர்கள், தங்கள் படைகளுடனும், வாகனங்களுடனும் தங்கள் தங்கள் நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(87) யது குல வீரத் தலைவனான ஜனார்த்தனனும், யாதவர்களுடன் சேர்ந்து நெருப்பு போலப் பிரகாசிப்பவனாகத் தன் அரண்மனைக்குள் நுழைந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(88)
விஷ்ணு பர்வம் பகுதி – 167 – 111ல் உள்ள சுலோகங்கள் : 88
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |