Friday 22 January 2021

மாயாவதியுடன் துவாரகை சென்ற பிரத்யும்னன் | விஷ்ணு பர்வம் பகுதி – 165 – 109

(மாயாவத்யா ஸஹ பிரத்யும்னஸ்ய துவாரகாகமனம்)

Pradyumna goes to Dwaraka and his parents recognize him | Vishnu-Parva-Chapter-165-109 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மாயாவதியுடன் துவாரகையை அடைந்த பிரத்யும்னன்; மட்டற்ற மகிழ்ச்சியடைந்த ருக்மிணி...


Pradyumna Mayavati Rukmini

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த மாயாவியான சம்பரன், தன் மாயைகள் அனைத்தும் முடிந்ததும், எட்டாம் பிறைநாளில் {அஷ்டமியில்} போரில் கொல்லப்பட்டான்.(1) பிரத்யும்னன், அசுரர்களின் முதன்மையான அவனை ரிக்ஷவந்த நகரத்தில் கொன்றுவிட்டுத் தன்னுடன் மாயாவதியை அழைத்துக் கொண்டு தன் தந்தையின் நகருக்கு {துவாரகைக்குப்} புறப்பட்டுச் சென்றான்.(2) வேகமாகச் செல்லவல்லவனான அந்த வீரன், தன் மாயா சக்தியின் மூலம் வானத்தில் எழுந்து தன் தந்தையின் சக்தியால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரை அடைந்தான்.(3) மன்மதனை (காமனைப்) போன்ற அந்த இளைஞன், மாயாதியுடன் சேர்ந்து வானத்தில் இருந்து கேசவனின் அந்தப்புரத்திற்குள் இறங்கினான்.(4) இவ்வாறு பிரத்யும்னன் கீழே இறங்கி வந்தபோது, கேசவனின் ராணிகள் ஆச்சரியத்தாலும், மகிழ்ச்சியாலும், அச்சத்தாலும் நிறைந்தனர்.(5) காமனுக்கு ஒப்பான அந்த இளைஞனையும், அவனது மனைவியையும் கண்ட பிறகு அவர்களது முகங்களில் மகிழ்ச்சி பெருகியது; அவர்கள் தங்கள் கண்களால் அவனது முகத்தில் உள்ள அமுதத்தைப் பருகுபவர்களைப் போலத் தெரிந்தனர்.(6) நாணம் நிறைந்த அந்தப் பிள்ளையின் முகத்தையும், அடிமேல் அடியெடுத்து வைத்து அடக்கத்துடன் நடக்கும் நடையும் கண்ட அவர்கள் அனைவரும் அவனிடம் அன்பால் நிறைந்தனர்.(7)

நூறு சக்களத்திகளால் சூழப்பட்டவளும், மகனைப் பெற்ற அன்னையுமான ருக்மிணி, அந்தப் பிள்ளையைக் கண்டதும் துயரால் பீடிக்கப்பட்டாள். கண்ணீர் சிந்தியபடியே அவள்,(8) "ஐயோ, நடு இரவில் கண்ட கனவில் கம்சனைக் கொன்றவர் {கம்ஸாரிணர் கிருஷ்ணர்} எனக்கு மாந்தளிர்களை {மாவிலைகளைத்} தந்தார்.(9) கேசவர் என்னை மடியில் வைத்துக் கொண்டு நிலவின் கதிர்களுக்கு ஒப்பான முத்து மாலையை என் கழுத்தில் சூட்டினார்.(10) அழகிய சுருள்முடிகளுடன் கூடியவளும், வெள்ளை ஆடை உடுத்தியவளும், கையில் தாமரையைக் கொண்டவளுமான ஓர் இளம்பெண் {என்னைப் பார்த்துக் கொண்டே} என் அறைக்குள் நுழைந்தாள்.(11) அழகாக என் மீது அவள் நீரைத் தெளித்தாள் {அழகாக என்னை நீராட்டினாள்}. அதன்பிறகு அந்தப் பெண் என் தலையைத் தன் கைகளால் தீண்டித் தாமரை மாலையை எனக்குக் கொடுத்தாள்" என்று சொன்னாள்.(12)

தன் தோழிகளால் சூழப்பட்டிருந்த ருக்மிணி, தன் கனவை இவ்வாறு விளக்கிச் சொல்லி மீண்டும் மீண்டும் அந்த இளவரசனைக் கண்டு,(13) "அழகும், நீண்ட ஆயுளும் கொண்டவனும், காமனுக்கு ஒப்பானவனும், இளமையின் முதல் நிலையில் அடியெடுத்து வைத்தவனுமான இத்தகைய பிள்ளையை மகனாகப் பெற்ற பெண் அருளப்பட்டவளே.(14) ஓ! மகனே, மேகம் போன்ற நிறத்துடன் கூடிய உன்னைப் போன்ற மகனால் அருளப்பட்ட நல்லூழ் கொண்ட அந்தப் பெண் யார்? உன் மனைவியுடன் நீ இங்கே வந்ததேன்?(15) ஐயோ, சக்திவாய்ந்த யமன், என் குழந்தை பிரத்யும்னனை அபகரிக்காதிருந்தால், இந்நேரம் அவனும் உன் வயதையே அடைந்திருப்பான்.(16) என் ஊகம் ஒருபோதும் பொய்யாகாது. நிச்சயம் நீ விருஷ்ணி குல இளவரசனே;(17) உன் மேனியில் உள்ள அடையாளங்களால் நீ சக்கரம் இல்லாத ஜனார்த்தனரைப் போலத் தெரிகிறாய். உன் முகமும், தலைமுடியும் நாராயணருக்கு ஒப்பானவையாக இருக்கின்றன,(18) உன் தொடைகளும், கரங்களும், மார்பும் என் மைத்துனரான ஹலாதரருக்கு {பலராமருக்கு} ஒப்பானவையாக இருக்கின்றன. ஐயோ, நீ நாராயணரின் இரண்டாம் தெய்வீக உடலைக் கொண்டவன் போலத் தெரிகிறாய். உன் மேனியால் நீ மொத்த மொத்த விருஷ்ணி குலத்தையும் அலங்கரிக்கிறாய்.(19) ஓ! பிள்ளாய், யார் நீ?" என்று கேட்டாள் {ருக்மிணி}.

அதே வேளையில், சம்பரனின் அழிவை நாரதரிடம் இருந்து கேட்டிருந்த கிருஷ்ணன், அங்கே திடீரென நுழைந்தான்.(20) ஜனார்த்தனன், காமனுக்கு ஒப்பான தன் மூத்த மகனையும், தன் மருமகள் மாயாவதியையும் கண்டு இன்பத்தால் நிறைந்து,(21) தேவி போன்ற ருக்மிணியிடம், "ஓ! தேவி, பெரும் வில்லாளியான உன் மகன் இதோ வந்துவிட்டான்.(22) மாயையில் திறன்மிக்கச் சம்பரனை இவன் கொன்றுவிட்டான். தேவர்களைத் துன்புறுத்த அவன் பயன்படுத்தி வந்த மாயக் கலைகள் அனைத்தையும் இவன் கற்றிருக்கிறான்.(23) மங்கலமானவளும், கற்புநிறைந்தவளுமான இந்தப் பெண் உன் மகனின் மனைவியாவாள். அவள் இந்தக் காலம் வரை சம்பரனின் வீட்டில் மாயாவதி என்ற பெயரில் வாழ்ந்து வந்தாள்.(24) இவளை சம்பரனின் மனைவி என்று நினைத்து மனம் வருந்தாதே. காமனின் அன்புக்குரிய மனைவியான ரதியென நீ இவளை அறிவாயாக. முற்காலத்தில் மன்மதன், ஹரனின் கோபத்தீயால் எரிக்கப்பட்டு அங்கங்களற்றவன் ஆனதில் இருந்து இந்தக் காலம் வரை இந்த மங்கலப் பெண், தன் மாய சக்தியால் உண்டான தன்னைப் போன்ற தோற்றத்தின் மூலம் அந்தத் தைத்தியனை {சம்பரனை} எப்போதும் மயக்கத்தில் {மோகத்தில்} வைத்திருந்தாள்.(25,26) இந்த அழகிய பெண், இளமையில் கூடச் சம்பரனை நாடவில்லை; இவள், தன் மாய சக்திகளின் மூலம் தன்னைப் போன்ற வடிவத்தை உண்டாக்கி, சம்பரனிடம் அவளை அனுப்பி வந்தாள்.(27) ஓ! அழகிய பெண்ணே, என் மகனின் மனைவியும், உன்னுடைய மருமகளுமான இவள் காமனுக்குத் துணையாக இருந்து அவனை நிறைவடையச் செய்வாள்.(28) நமது மூத்த மருமகளான இவள் நம் அன்புக்குத் தகுந்தவளாவாள். இவளை உன் அறைக்கு அழைத்துச் சென்று, தொலைந்து போய்த் திரும்பி வந்திருக்கும் உன் மகனுக்கு உணவளிப்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}".(29)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்}, "கிருஷ்ணனால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்ட ருக்மிணி, பெருமகிழ்ச்சி அடைந்தவளாக,(30) "என் வீர மகன் திரும்பி வந்துவிட்டதால் நான் பேறுமிக்கவளானேன். என் பிறவி அருளப்பட்டது,(31) தொலைந்து போன என் மகன் தன் மனைவியுடன் திரும்பி வந்துவிட்டதால் என் நோக்கம் நிறைவேறியது. என் மகனே வா, உன் மனைவியுடன் இந்த அறைக்குள் நுழைவாயாக" என்றாள் {ருக்மிணி}.(32)

பிரத்யும்னன், தன் அன்னையையும், கோவிந்தனையும் வணங்கிவிட்டு, ஹலாதரனிடம் {பலராமனிடம்} பணிந்து தலை வணங்கினான்.(33) பகைவரின் போர்வீரர்களைக் கொல்பவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கேசவன், பிரத்யும்னனை உயர்த்தி, ஆரத்தழுவிக் கொண்டு உச்சி முகர்ந்தான்.(34) ருக்மிணி தேவியும், அன்பால் தடைபட்ட சொற்களுடன் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தன் மருமகளை உயர்த்தி, தன் மடியில் அமர்த்தி அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.(35) அதிதி, சசியுடன் கூடிய தேவர்களின் மன்னனை வழிநடத்துவதைப் போலவே ருக்மிணியும் மனைவியுடன் திரும்பி வந்திருக்கும் தன் மகனை தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள்" என்றார் {வைசம்பாயனர்}[1].(36)

[1] சென்ற பகுதி முழுவதும் பிபேக்திப்ராயின் பதிப்பில் இல்லாவிட்டாலும் இந்தப் பகுதி முழுவதும் இருக்கிறது.

விஷ்ணு பர்வம் பகுதி – 165 – 109ல் உள்ள சுலோகங்கள் : 36
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்