(ஷம்பரவதே நாரதவாக்யம்)
Shamvara comes to the battle-field | Vishnu-Parva-Chapter-163-107 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சம்பராசுரனுக்கும் பிரத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, அப்போது கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் தன் தேரோட்டியிடம், "ஓ! வீரா, விரைவில் என் தேரை பகைவனிடம் {பிரத்யும்னனிடம்} கொண்டு செல்வாயாக.(1) எனக்குத் தீங்கிழைத்தவனைக் கணைகளால் நான் கொல்லப் போகிறேன்" என்றான்.
எப்போதும் அவனுக்கு நல்லதைச் செய்பவனான அந்தத் தேரோட்டி, தன் தலைவனின் சொற்களைக் கேட்டு,(2) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரைச் செலுத்தினான். இனிமைமிக்கக் கண்களைக் கொண்ட பிரத்யும்னன், அந்தத் தேர் தன்னை அணுகுவதைக் கண்டு கோபத்துடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு பொற்கணைகளை அதில் பொருத்தினான். அதன் பிறகு அவன் அதைக் கொண்டு சம்பரனைத் தாக்கிப் போரில் தன் கோபத்தைத் தூண்டச் செய்தான்.(3,4)
தேவர்களின் பகைவனான சம்பரன், அந்தக் கணைகளால் தன் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டவனாகப் பெரிதும் கலக்கமடைந்தான். தன் தேரின் கொடிக்கம்பத்தைப் பிடித்தபடியே அவன் தன் நினைவை இழந்தான்.(5) சில கணங்களுக்குப் பிறகு தன் நினைவு மீண்ட அந்தத் தானவன் சம்பரன் கோபத்துடன் தன் வில்லை எடுத்துக் கொண்டு ஏழு கூரிய கணைகளால் கிருஷ்ணனின் மகனைத் தாக்கினான்.(6) பிரத்யும்னன், அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே ஏழு கணைகளைக் கொண்டு ஏழு பகுதிகளாக அவற்றைத் துண்டித்தான். பிறகு எழுபது கணைகளைச் சம்பரன் மீது ஏவினான்.(7) மழையால் மலையை மறைக்கும் மேகத்தைப் போல அவன் அழகிய சிறகுகளைக் {மயில் இறகுகளைக்} கொண்ட ஆயிரம் கணைகளால் சம்பரனை மீண்டும் தாக்கினான். திசைகள் அனைத்திலும் கணைகளால் மறைக்கப்பட்ட வானம் சூரியன் காணப்படாமல் இருளில் மறைந்தது.(8,9) இதைக் கண்ட சம்பரன், தன் வஜ்ரத்தால் {வைத்யுத ஆயுதத்தால்} அந்த இருளை விலக்கிவிட்டுப் பிரத்யும்னனுடைய தேரின் மீது கணைகளைப் பொழிந்தான்.(10)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிரத்யுமனனும் தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே தன்னுடைய கடுங்கணைகளால் அக்கணைகளைப் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(11) கிருஷ்ணனின் மகனால் கணைகளின் பெருமழை நிறுத்தப்பட்ட போது, அந்தக் காலசம்பரன் தன் மாயா சக்திகளின் மூலம் மரங்களைப் பொழிந்தான்.(12) அந்த மரங்களைக் கண்ட பிரத்யும்னன் கோபத்துடன் கூடியவனாக நெருப்பாயுதங்களை {ஆக்னேயாஸ்திரங்களை} ஏவி அவை அனைத்தையும் அழித்தான். மரங்கள் அனைத்தும் சாம்பலாக்கப்பட்ட போது சம்பரன் கல் மழையைப் பொழிந்தான்.(13,14) பிரத்யும்னன் அதை வாயு ஆயுதங்களின் {வாயவ்ய ஆயுதங்களின்} மூலம் போர்க்களத்தில் இருந்து அகற்றினான். ஓ! மன்னா, அப்போது தேவர்களின் பகைவனான சம்பரன்,(15) தன் வில்லை எடுத்துக் கொண்டு, பெரும் மாயக் காட்சியை உண்டாக்கி பிரத்யும்னனுடைய தேரின் மீது சிங்கங்கள், புலிகள், கரடிகள், குரங்குகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், மேகம் போன்ற யானைகள் ஆகியவற்றை வீசினான். எனினும் அந்தக் காமன், கந்தர்வ ஆயுதங்களால் அவற்றைப் பல துண்டுகளாகத் துண்டித்தான்.(16,17)
பிரத்யும்னனால் தன் மாயை விலக்கப்பட்டதைக் கண்ட சம்பரன், கோபத்துடன்கூடியவனாக மற்றொரு அருஞ்செயலைச் செய்தான்.(18) அவன், அறுபது தலைகளை {அறுபது வயதைக்} கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், போர்வெறி கொண்டவையும், திறன்மிகு மாவுத்தர்களால் செலுத்தப்படுபவையுமான இளம் யானைகளை ஏவினான்.(19) அந்த மாயப் படைப்புகள் தன் மீது பாய இருப்பதைக் கண்டவனும், தன் கொடியில் மீன் சின்னம் கொண்டவனுமான அந்தத் தாமரைக் கண்ணன் (பிரத்யும்னன்) மாயச் சிங்கங்களை உண்டாக்க விரும்பினான்.(20) ஓ! மன்னா, இரவை அகற்றும் சூரியனைப் போலவே ருக்மிணியின் நுண்ணறிவுமிக்க மகனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயச் சிங்கங்களும் அந்த மாய யானைகளை அழித்தன.(21) தானவர்களின் மன்னனான சம்பரன், தன் மாய யானைகள் கொல்லப்பட்டதைக் கண்டு ஸம்மோஹினி மாயையை உண்டாக்கினான்.(22) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், மயனின் படைப்பான (கவர்ச்சிமிக்க) அந்த மாய மோகினி சம்பரனால் ஏவப்பட்டதைக் கண்டு தன் சஞ்சன (நனவு) ஆயுதத்தால் அதைத் தடுத்தான்.(23)
பெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னன் சம்பரன், தன் மாயை அழிக்கப்பட்டதைக் கண்டு பெருங்கோபம் கொண்டவனாகச் சிங்கமாயையை {மாயைகளின் மாயையை} வெளிப்படுத்தினான்.(24) பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன், தன் மீது பாய இருக்கும் சிங்கங்களைக் கண்டு கந்தர்வ ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சரபங்களை[1] உண்டாக்கினான்.(25) எட்டுக் கால்களையும், நகங்களையும், பற்களையும் கொண்ட அந்தச் சரபங்கள், மேகங்களைச் சிதறடிக்கும் காற்றைப் போல அந்தச் சிங்கங்களை விரட்டின. எட்டுக் கால்களைக் கொண்ட மாய விலங்குகளால் சிங்கங்கள் விரட்டப்படுவதைக் கண்ட சம்பரன், அவற்றைக் கொல்வதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(26)
[1] "எட்டுக் கால்களைக் கொண்டதும், குறிப்பாகப் பனி மூடிய பகுதிகளில் வசிப்பதுமான ஓர் அற்புத விலங்கு இஃது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். மஹாபாரதம் வன பர்வம் பகுதி 134, துரோண பர்வம் பகுதி 1, சாந்தி பர்வம் பகுதி 117, சாந்தி பர்வம் பகுதி 119 ஆகியவற்றில் சரபம் குறித்த குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
அவன் {சம்பரன்}, "ஐயோ, நான் எப்படிப்பட்ட மூடனாக இருந்திருக்கிறேன். நான் ஏன் இவன் குழந்தையாக இருக்கும்போதே இவனைக் கொல்லாதிருந்தேன்?(27) இப்போது இந்தத் தீய மனம் கொண்டவன் இளமையை அடைந்து ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். போரின் முகப்பில் நிற்கும் இந்தப் பகைவனை நான் எவ்வாறு கொல்லப் போகிறேன்?(28) அசுரர்களை அழிப்பவனான பெருந்தேவன் ஹரனால் எனக்குப் போதிக்கப்பட்டதும், {பந்நகீ என்றழைக்கப்படுவதும்} பாம்புகளாலானதுமான அந்தப் பயங்கர மாயையை நான் மட்டுமே அறிவேன்.(29) பெருஞ்சக்திவாய்ந்தவனும், தீயவனுமான இந்த மாயாபலி அதன் மூலம் எரிக்கப்படுவானென நான் நினைக்கிறேன்" என்று நினைத்தான்.(30)
இவ்வாறு நினைத்த சம்பரன், எரியும் நஞ்சு நிறைந்த பாம்புகளை வெளிப்படுத்தியதும் அந்த மாயையானது தேர், குதிரைகள் ஆகியவற்றுடனும், தேரோட்டியுடன் பிரத்யும்னனையும் சேர்த்து கட்டுகளால் கட்டியது.(31) பிரத்யும்னன், மாயப் பாம்புகளால் இவ்வாறு கட்டப்பட்டுத் தான் கொல்லப்படப்போவதை நினைத்து பாம்புகளைக் கொல்லவல்ல கருட மாயையை {சௌபர்ணியை} நினைத்தான்.(32) உயரான்ம பிரத்யுமனன் அதை நினைத்ததும் கருடர்கள் பாயத் தொடங்கி நஞ்சுமிக்கப் பாம்புகளை அழித்தன.(33) அந்தப் பாம்புகளின் மாயை விலக்கப்பட்டபோது, தேவர்களும், அசுரர்களும், "நன்று செய்தாய், நன்றாகச் செய்தாய்.(34) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ருக்மிணியின் மகனே, உன்னால் அந்த மாயை விலக்கப்பட்டதில் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம்" என்று சொல்லி அவனைத் துதித்தனர்.(35)
ஓ! ஜனமேஜயா, மாயப்பாம்புகள் விலக்கப்பட்டதும் சம்பரன் மீண்டும், "போர்க்களத்தில் தேவர்களாலும், அசுரர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாததும், யம தண்டத்திற்கு ஒப்பானதும், பொன்னாலானதுமான ஒரு தண்டம் என்னிடம் இருக்கிறது. முற்காலத்தில் உமாதேவி மகிழ்ச்சியுடன் அதைக் கொடுத்து,(36,37) என்னிடம், "ஓ! சம்பரா, பொன்னலான இந்தத் தண்டத்தை எடுத்துக் கொள்வாயாக. அனைத்து வகை மாயைகளை அகற்ற வல்லதும், அசுரர்கள் அனைவரையும் கொல்லவல்லதுமான இந்தத் தண்டத்தைக் கடுந்தவப் பயிற்சிகளின் மூலம் என் உடலில் இருந்து உண்டாக்கினேன்.(38,39) வானுலாவிகளும், பயங்கரம் நிறைந்த தானவர்களுமான சும்பன், நிசும்பன் ஆகியோரையும் அவர்களின் தொண்டர்களையும் இந்தத் தண்டத்தைக் கொண்டே யமனுலகு அனுப்பி வைத்தேன்.(40) உன் உயிர் பேராபத்தில் இருக்கும்போது இந்தத் தண்டத்தை உன் பகைவனின் மீது நீ வீசுவாயாக" என்றாள் {உமை}" என்று நினைத்தான் {சம்பரன்}.(41)
அவனது நோக்கத்தை அறிந்த தேவர்களின் மன்னன் {இந்திரன்} நாரதரிடம், "பெருங்கரம் கொண்ட பிரத்யும்னனின் தேரை விரைவில் அணுகி,(42) அவனது முற்பிறவியைக் குறித்து அவனுக்கு நினைவு படுத்துவீராக. அசுரரைக் கொல்பவனான அவனுக்குத் துளைக்கப்பட முடியாத இந்தக் கவசத்தையும், வைஷ்ணவ ஆயுதங்களையும் கொடுப்பீராக" என்றான். மகவானால் {இந்திரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட நாரதர் விரைந்து சென்றார்.(43,44)
அவர் வானத்தில் நின்றவாறே பிரத்யும்னனிடம், "ஓ! இளவரசே, தெய்வீகப் பாடகனான நாரதனாக என்னை அறிவாயாக. உனக்கு நினைவுறுத்துவதற்காகத் தேவர்களின் மன்னன் என்னை இங்கே அனுப்பினான்.(45) ஓ! கௌரவத்தை அளிப்பவனே, உன் முற்பிறவியை நினைவுகூர்வாயாக. ஓ! வீரா, நீயே காமன் {மன்மதன்}. ஹரனின் கோபத்தால் சாம்பலான நீ அங்கங்களற்றவன் ஆனாய்.(46) விருஷ்ணி குலத்தில், ருக்மிணியிடம் கேசவனால் பெறப்பட்டு, இங்கே பிரத்யும்னன் என்ற பெயரில் நீ அறியப்படுகிறாய்.(47) ஏழாம் இரவு முடிவடைவதற்கு முன்பே பேற்றறையில் {பிரசவ அறையில்} இருந்து சம்பரன் உன்னை அபகரித்துச் சென்றான்.(48) ஓ! பெருங்கரம் கொண்ட வீரா, தேவர்களின் பெரும்பணியான சம்பரனின் அழிவின் நிமித்தமாகவே அவன் உன்னைக் கடத்திச் சென்றபோதும் கேசவன் அவனை அலட்சியம் செய்தான்.(49)
மாயாவதி என்ற பெயரில் சம்பரனின் துணைவியாக இருப்பவளே உன் முன்னாள் மனைவியான மங்கலப் பெண் ரதி என்று அறிவாயாக.(50) அவள் {மாயாவதி}, {உன் பாதுகாப்புக்காகவும்}, அந்தத் தீய தானவனிடம் மோகத்தையும், மறதியையும் உண்டாக்கவும் தன் மேனியில் இருந்து மாயையின் மூலம் உண்டாக்கப்பட்ட ரதியை அவனிடம் அனுப்புகிறாள்.(51,52) ஓ! பிரத்யும்னா, வைஷ்ணவ ஆயுதங்களால் போர்க்களத்தில் சம்பரனைக் கொன்றுவிட்டு, உன் மனைவியான மாயாவதியுடன் துவாரகைக்குச் செல்வாயாக.(53) ஓ! பகைவரைக் கொல்பவனே, இந்த வைஷ்ண ஆயுதத்தையும், பேரொளிமிக்க இந்தக் கவசத்தையும் பெற்றுக்கொள்வாயாக. இவற்றைத் தேவர்களின் மன்னன் உனக்காக அனுப்பி வைத்திருக்கிறான்.(54)
என்னுடைய மற்றொரு சொல்லையும் கேட்டு அச்சமில்லாமல் அதைச் செயல்படுத்துவாயாக. பெருஞ்சக்திவாய்ந்ததும், பகைவர் அனைவரையும் கலங்கடிக்கவல்லதுமான ஒரு தண்டத்தைத் தேவர்களின் பகைவனான இவனிடம் பார்வதி மகிழ்வுடன் கொடுத்திருக்கிறாள்; தேவர்களிலோ, தானவர்களிலோ, மனிதர்களிலோ எவராலும் போரில் அதைத் தாக்குப்பிடிக்க முடியாது.(55,56) அந்த ஆயுதத்திற்கு எதிர்வினையாற்ற நீ அந்தத் தேவியை நினைக்க வேண்டும். அதையுந்தவிர, போரிடும் விருப்பமுள்ள எவரும் அந்தப் பெருந்தேவியை எப்போதும் வணங்கி அவளது மகிமைகளைத் துதிக்க வேண்டும்.(57) நீ உன் பகைவனுடன் போரிடும்போது கவனமாக இருப்பாயாக" என்றார் {நாரதர்}. நாரதர் இதைச் சொல்லிவிட்டு வாசவன் {இந்திரன்} இருக்குமிடத்திற்குத் திரும்பிச் சென்றார்" என்றார் {வைசம்பாயனர்}.(58)
விஷ்ணு பர்வம் பகுதி – 163 – 107ல் உள்ள சுலோகங்கள் : 58
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |