(பிரத்யும்நேந ஷம்பரஸைந்யவித்ராவணம்)
Battle between Pradyumna and Shamvara's sons | Vishnu-Parva-Chapter-162-106 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சம்பரனின் நூறு மகன்களைக் கொன்ற பிரத்யும்னன்; கேதுமாலி, துர்தரன், சத்ருஹந்தன், பிரமர்த்தனன் ஆகியோரின் அழிவு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு ருக்மிணியின் மகனுக்கும், சம்பரனின் மகன்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போர் நடந்தது.(1) கோபத்தில் நிறைந்திருந்த அந்தப் பெருந்தைத்தியர்கள், பிரத்யும்னன் மீது கணைகளையும், சக்திகளையும், பராசங்களையும், தோமரங்களையும், குண்டங்களையும், புசுண்டிகளையும், கதாயுதங்களையும் அடுத்தடுத்து பொழியத் தொடங்கினர்.(2) கோபத்தில் தூண்டப்பட்டிருந்த கிருஷ்ணனின் மகனும் போரில் தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ஐந்து கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(3) இதனால் பெருங்கோபம் கொண்டவர்களும், உறுதிமிக்கவர்களுமான அந்த அசுரர்கள், பிரத்யும்னனைக் கொல்வதற்காக ஆயுதங்களின் வலைப்பின்னலை உண்டாக்கினர்.(4) கோபத்தால் தூண்டப்பட்ட அனங்கனும் {மன்மதனான பிரத்யும்னனும்} தன் வில்லை எடுத்துக் கொண்டான். அவன் பெருஞ்சக்திவாய்ந்த சம்பரனின் மகன்கள் பத்து பேரைக் கொன்றான்.(5) பெருஞ்சக்திவாய்ந்த கேசவனின் மகன், அடுத்தக் கணத்தில் கோபத்தில் நிறைந்தவனாக ஒரு பல்லத்தால் சித்திரசேனனின் தலையை அறுத்தான்.(6) சம்பரனின் எஞ்சிய மகன்கள் போர் வெறியோடு விரைந்து கணைகளை ஏவத் தொடங்கினர். அனங்கனைக் கொல்வதற்காக அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கணைகளை ஏவிப் போரிட்டனர். (7)
மறுபுறம், பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனின் மகன், விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல அவர்களின் தலைகளைத் துண்டித்துக் கொண்டிருந்தான்.(8) இவ்வாறு, பெரும் வில்லாளிகளான சம்பரனின் நூறு மகன்களையும் கொன்றுவிட்டு மேலும் போரிடும் விருப்பத்தோடு போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான். சம்பரன், தன்னுடைய நூறு மகன்களும் கொல்லப்பட்டதைக் கேட்டுக் கோபத்தில் நிறைந்தான்.(9,10) அவன் தன்னுடைய சாரதியிடம் தன் தேரை ஆயத்தம் செய்யச் சொன்னான். அந்தச் சாரதியும் மன்னனின் ஆணையை ஏற்றுக் கொண்டு தலையால் தரையைத் தீண்டி அவனை வணங்கிவிட்டு அங்கே தேரைக் கொண்டு வந்து,(11) படைவீரர்களைத் தயாராகும்படி கேட்டுக் கொண்டான். அந்தத் தேரானது, பாம்புகளைக் கயிறுகளாகக் கொண்டு கட்டப்பட்ட ஆயிரம் கரடிகளால்[1] இழுக்கப்பட்டது.(12) அது புலித்தோலால் மறைக்கப்பட்டு, சிறுமணிகளால் அமைந்த வலைப்பின்னலால் அலங்கரிக்கப்பட்டு, ஓநாய்களால் நிறைந்திருந்தது.(13) அடுத்தடுத்துப் பத்துப் படிக்கட்டுகளைக் கொண்டிருந்த அதில் நட்சத்திரங்கள் வரையப்பட்டு, பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில், சிங்கத்தின் வடிவங்கள் வரையப்பட்ட கொடிகள் அழகூட்டிக் கொண்டிருந்தன.(14) அந்தத் தேரைச் சுற்றிலும் மரத்தாலான மோதற்றடைகளும் {காக்கும் கவசங்களும்}, இரும்பு அச்சாணிகளும் இருந்தன. மந்தர மலையின் சிகரத்தைப் போல உயரமாகவும், வரிசையான அழகிய சௌரிகளாலும், நட்சத்திரங்களால் மறைக்கப்பட்டுப் பொன்னாலான கொடிக்கம்பங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(15,16)
[1] சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இங்கே மான்கள் என்று குறிப்பிடப்படுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதி முழுவதும் இல்லை.
சம்பரன், காலனால் தூண்டப்பட்டவனைப் போலப் பொற்கவசம் பூண்டு, வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு, தன்னுடைய படைவீரர்களுடனும், நான்கு அமைச்சர்களுடனும் போருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(17) துர்தரன், கேதுமாலி, சத்ருஹந்தன், பிரமர்த்தனன் என்ற நான்கு அமைச்சர்கள் சூழப் போரிடும் விருப்பத்துடன் சம்பரன் புறப்பட்டுச் சென்றான்.(18) அந்தச் சம்பரன், அனைத்துப் பக்கங்களிலும் பல்வேறு நிமித்தங்கள் தோன்றிக் கொண்டிருந்த போர்க்களத்திற்கு இருநூறு தேர்கள், இரண்டாயிரம் யானைகள்,(19) எட்டாயிரம் குதிரைகள், பத்து லட்சம் காலாட்படை வீரர்களுடன் சென்றான்.(20) {அவன் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது எரிகொள்ளிகள் விழுந்தன. வானத்தில் கழுகுகள் பறந்தன. மாலைப் பொழுதைப் போல முழங்கும் மேகங்களால் வானம் நிறைந்திருந்தது.(21) மின்னல் தோன்றியது. மேகங்கள் கடும் ஒலிகளை வெளியிட்டன}[2]. நரிகள் ஊளையிட்டு அந்தப் பெரும்படையைப் பீதியில் பீடிக்கச் செய்தது.(22) கழுகுகள், தானவர்களின் குருதியைப் பருக விரும்பி கொடிமரங்களின் உச்சியில் அமர்ந்தன. தலையற்ற முண்டங்கள் அவனது தேரில் விழுவதாகத் தெரிந்தது.(23) சம்பரனின் தேரில் {தேருக்கு மேல் பறந்த} பறவைகள் தெளிவற்ற ஒலிகளை வெளியிட்டன. சந்திரன் ராகுவால் பீடிக்கப்பட்டு (கிரகணம் ஏற்பட்டு) அதன் வட்டில் அதனால் சூழப்பட்டது {நிலவில் சுற்றொளி தெரிந்தது}.(24) அவனது இடது கையும், கண்ணும் பேரழிவை முன்னறிவிக்கும் வகையில் துடித்தன. அவனது தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் {கால் தடுக்கி விழுந்து} வேகத்தைக் குறைத்தன.(25) தேவர்களின் பகைவனான சம்பரனின் தலையில் கங்கப் பறவைகள்[3] அமர்ந்தன. இந்திரன் நெருப்புக் கங்குகள் கலந்த குருதி மழையைப் பொழியத் தொடங்கினான்.(26) ஆயிரக்கணக்கான கொள்ளிக் கட்டைகள் போர்க்களத்தில் விழுந்தன, சாரதியின் கைகளில் இருந்து கடிவாளங்கள் நழுவின.(27) ஆனால் கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் அந்தத் தீய நிமித்தங்களைக் கவனிக்காமல் பிரத்யும்னனைக் கொல்லப் புறப்பட்டான்.(28) அடுத்தடுத்து முழக்கப்பட்ட பேரிகைகள், மிருதங்கங்கள், சங்கங்கள், பணவங்கள், ஆனகங்கள், துந்துபிகள் ஆகியவற்றின் ஒலியால் பூமி நடுங்கினாள்.(29) இந்தப் பயங்கர ஒலியால் உண்டான பீதியால் பீடிக்கப்பட்ட விலங்குகளும், பறவைகளும் அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடின.(30) எனினும், பகைவனைக் கொல்லும் விருப்பத்தில் இருந்த கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} அப்போது போர்க்களத்தில் காத்துக்கொண்டிருந்தான்.(31)
[2] 21ம் ஸ்லோகத்தில் உள்ள செய்திகள் மன்மதநாததத்தரின் பதிப்பில் விடுபட்டிருக்கின்றன.
[3] மற்ற இரு பதிப்புகளிலும் காக்கைகள் என்று இருக்கிறது.
போரிடும் தீர்மானத்துடன் கூடிய சம்பரன், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சூழ ஆயிரக்கணக்கான கணைகளால் பிரத்யும்னனைத் தாக்கினான். எனினும் அவன், தன் கைகளின் வேகத்தை வெளிப்படுத்தி அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே அவற்றை வெட்டி வீழ்த்தினான்.(32) பிறகு தன்னுடைய வில்லை வளைத்து, அந்தப் படையில் கணையால் தாக்கப்படாத எவனும் கிடையாது என்ற அளவுக்குக் கணைகளை ஏவினான்.(33) இவ்வாறு பிரத்யும்னனால் ஏவப்பட்ட கணைகளால் தாக்கப்பட்ட சம்பரனின் படைவீரர்கள் அச்சத்துடன் அவனிடம் திரும்பிச் சென்றனர்.(34) தன்னுடைய படைவீரர்கள் புறமுதுகிடுவதைக் கண்டு கோபத்தால் நிறைந்த சம்பரன், தன் அமைச்சர்களிடம்,(35) "என் ஆணையின் பேரில் சென்று என்னுடைய பகைவனுடைய மகனைத் தாக்குங்கள். அவனைப் புறக்கணிக்காமல் உடனடியாகக் கொல்லுங்கள்.(36) அவன் புறக்கணிக்கப்பட்டால் தொடக்கத்தில் அலட்சியம் செய்யப்படும் ஒரு நோயைப்போல மொத்தமாக நம்மை அழித்துவிடுவான். எனக்கு மகிழ்ச்சியளிக்க விரும்பினால், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான இந்தப் பாவியைக் கொல்வீராக" என்று ஆணையிட்டான்.(37)
சம்பரனின் ஆணைக்குக் கீழ்ப்படிந்த அமைச்சர்கள், கோபத்தால் நிறைந்தவர்களாகக் கணைமாரி பொழிந்தபடியே தங்கள் தேர்களைச் செலுத்திச் சென்றனர்.(38) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், அவர்கள் போர்க்களத்தை நோக்கி விரைவதைக் கண்டு கோபத்தால் தூண்டப்பட்டு, விரைவாகத் தன் வில்லை எடுத்துக் கொண்டு அங்கே நின்றான்.(39) ருக்மிணியின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான பிரத்யும்னன், கோபத்துடன் துர்தரனை ஐந்து கணைகளாலும், அறுபத்துமூன்றால் கேதுமாலியையும், எழுபதால் சத்ருஹந்தனையும், எண்பத்திரண்டு கணைகளால் பிரமர்த்தனனையும் தாக்கினான்.(40,41) இதனால் கோபத்தில் நிறைந்த அமைச்சர்கள் கணைமாரியால் பிரத்யும்னனை மறைத்தனர். உண்மையில் அஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் நூற்றி இருபது கடுங்கணைகளை அவன் மீது ஏவினார்கள்.(42) மகரத்வஜன் (பிரத்யும்னன்) தன்னைத் தாக்குவதற்கு முன் அவை அனைத்தையும் வெட்டி வீழ்த்தினான்.(43) பிறகு பிறை வடிவக் கணையொன்றை எடுத்துப் படைவீர்கள், போர்வீரர்கள் ஆகியோரின் கண்களுக்கு முன்பாகவே துர்தரனின் தேரோட்டியைக் கொன்றான்.(44) அடுத்தக் கணத்திலேயே கங்க இறகுகளைக் கொண்ட நான்கு கணைகளைக் கொண்டு அவனது நான்கு குதிரைகளைக் கொன்றான், ஒரு கணையால் அவனது குடையையும், கடிவாளத்தையும், மற்றொன்றால் கொடிமரத்தையும், அறுபது கணைகளால் அச்சாணிகள், சக்கரங்கள், கம்பங்கள் ஆகியவற்றையும் வீழ்த்தினான்.(45) அதன்பிறகு கங்க இறங்கைக் கொண்ட மற்றொரு கணையை எடுத்துக் கொண்ட அவன் குறுகிய வாழ்நாளைக் கொண்ட துர்தரனின் மார்பில் அதை ஏவினான்.(46) அந்தத் தானவன், தன் அழகு, காந்தி, உயிர் ஆகியவறை இழந்து, புண்ணியம் குறைந்த கோளைப் போலத் தேரில் இருந்து விழுந்தான்.(47)
வீரத்தானவனான துர்தரன் கொல்லப்பட்டதும் தைத்திய தலைவனான கேதுமாலி கணைகளைப் பொழிந்தபடியே கிருஷ்ணனின் மகனை நோக்கி விரைந்தான்.(48) கோபத்துடனும், கடுமுகத்துடனும் கூடிய அவன் பிரத்யும்னனிடம் மீண்டும் மீண்டும் "நில்! காத்திருப்பாயாக" என்றான்.(49) இதனால் கோபமடைந்த கிருஷ்ணனின் மகன், மழைக்காலத்தில் மலையில் நீரைத் தெளிக்கும் மேகத்தைப் போலக் கணைகளால் அவனை மறைத்தான்.(50) பெரும் வில்லாளியான பிரத்யும்னனால் கடுங்காயம் அடைந்த அந்தத் தானவ அமைச்சன், தன் சக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரத்யும்னனைக் கொல்வதற்காக அதை ஏவினான்.(51) எனினும் அந்த மகரத்வஜன் {பிரத்யும்னன்}, கிருஷ்ணனின் சக்கரத்துக்கு இணையான வலிமை கொண்ட அந்தச் சக்கரம் தன் மீது பாயும் முன்பே துள்ளி குதித்து அதைப் பிடித்துக் கொண்டான்.(52) மேலும் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைக் கொண்டு கேதுமாலியின் தலையைக் கொய்தான்.(53) ருக்மிணியின் மகனுடைய அற்புதம்நிறைந்த அந்தப் பெருஞ்செயலைக் கண்டு தேவர்களின் மன்னனும், தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(54) கந்தர்வர்களும், அப்சரஸ்களும் அவன் மீது மலர்மாரி பொழிந்தனர். கேதுமாலி கொல்லப்பட்டதைக் கண்ட சத்ருஹந்தனும், பிரமர்த்தனனும் ஒரு பெரும்படை சூழ பிரத்யும்னனை நோக்கி ஓடினர்.(55) அவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் மகனைக் கொல்வதற்காக அவன் மீது கதாயுதங்கள், முசலங்கள், சக்கரங்கள், பாசங்கள், தோமரங்கள், கணைகள், பிண்டிபாலங்கள், கோடரிகள் {குடாரங்கள்} ஆகியவற்றையும் பிற ஆயுதங்களையும் {கூடங்கள், முத்கரங்கள் ஆகியவற்றையும்} ஏவினர்.(56) எனினும் வீரனான அந்தக் காமன் {பிரத்யும்னன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தும் வகையில் அவை அனைத்தையும் தன் கணைகளால் பல துண்டுகளாக வெட்டினான்.(57) கோபம் கொண்ட அவன் ஆயிரக்கணக்கான யானைகள், மாவுத்தர்கள், தேர்கள், தேரோட்டிகள், குதிரைகள் ஆகியவற்றில் காயமடையாதவர் எவரும் இல்லாதபடிக்கு அனைவரையும் தன்னுடைய கணைகளால் தாக்கினான்.(58,59)
அவர்களின் படைவீரர்களைக் கலங்கடித்த பிரத்யும்னன், குருதியையே நீராகக் கொண்ட ஒரு பயங்கர ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(60) முத்து ஆரங்களே அதன் அலைகள் பலவாகவும், சதை, கொழுப்பு, ஊனீர் ஆகியவை புழுதியாகவும், சக்கராயுதங்கள் தீவுகளாகவும், கணைகள் சுழல்களாகவும், தேர்கள் அழகிய கரையாகவும்,(61) கங்கணங்களும், காது குண்டலங்களும் ஆமைகளாகவும், கொடிகளே மீன்களாகவும், யானைகள் பிற நீர்வாழ் விலங்குகளாகவும் இருந்தன.(62) அந்த ஆறு குதிரைகளை நீர்வாழ் விலங்குகளாகவும், தலைமுடிகளைப் பாசிகளாகவும், அரைஞாண்களைத் தாமரைத் தண்டுகளாகவும், அழகிய முகங்களைத் தாமரைகளாகவும், சாமரங்களை அன்னங்களாகவும்,(63) தலைகளைத் திமி மீன்களாகவும், குருதியை நீராகவும் கொண்டிருந்தது. அனங்கனால் அங்கே உண்டாக்கப்பட்ட ஆறானது, எவராலும், குறிப்பாகப் பலவீனர்களால் கடக்கப்பட முடியாததாக இருந்தது.(64) பயங்கரமானதாகவும், கடக்கப்பட முடியாததாகவும், ஆயுதங்களால் நிறைந்ததாகவும் இருந்த அது {அந்த ஆறு}, யமனின் ஆட்சிப்பகுதி வரை விரிந்திருந்தது.(65)
ருக்மிணியின் அழகிய மகன், பிற வில்லாளிகளைக் கலங்கடித்துவிட்டு, சத்ருஹந்தன் மீது எண்ணற்ற கணைகளை ஏவினான்.(66) கோபத்தால் நிறைந்த அவனும் கணைகளை ஏவி பிரத்யும்னனின் மார்பைத் தாக்கினான்.(67) கேசவனின் பலம்வாய்ந்த மகன் அந்தக் கணைகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்தாலும் நடுங்காமல் இருந்தான். அவன் மரணத் தருவாயில் இருந்த சத்ருஹந்தனைக் கொல்வதற்காக சக்தி ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டான்.(68) ருக்மிணியின் மகனால் ஏவப்பட்டு எரிந்து கொண்டிருந்த அந்தச் சக்தி ஆயுதம், இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற ஒலியை வெளியிட்டபடியே பாய்ந்து பகைவனின் இதயத்தைத் துளைத்தது.(69) பெருஞ்சக்திவாய்ந்த சத்ருஹந்தன், இதயம் பிளக்கப்பட்டவனாகவும், அங்கங்கள் சிதைக்கப்பட்டவனாகவும், முக்கிய உறுப்புகளும், மூட்டுகளும் பிரிக்கப்பட்டவனாகவும் கீழே விழுந்து குருதி கக்கினான்.(70)
சத்ருஹந்தன் கொல்லப்பட்டதைக் கண்ட பிரமர்த்தனன், முசலாயுதத்துடன் முன்வந்து,(71) "ஓ! போரிடும் விருப்பம் கொண்டவனே, இந்தச் சாதாரண மனிதர்களுடன் போரிடுவதில் பயனென்ன? ஓ! தீய புத்தி கொண்டவனே, ஒரு கணம் இங்கே உறுதியாக நின்று என்னுடன் போரிட்டால் இந்தப் பூமியில் இனியும் நீ வாழ மாட்டாய்.(72) நீ விருஷ்ணி குலத்தில் பிறந்தவன், உன் தந்தையோ எங்கள் பகைவன். இன்று எங்களால் அவனது மகனைக் கொல்ல முடிந்தால் அவனும் கொல்லப்படுவான்.(73) ஓ! தீய புத்தியைக் கொண்டவனே, உன் மரணத்தால் தேவர்கள் அழிவடைவார்கள், தைத்தியர்களும், தானவர்களும் தங்கள் பகைவன் கொல்லப்பட்டதால் இன்புற்றிருப்பார்கள்.(74) என் ஆயுதங்களால் உன்னைக் கொன்று, இறந்து போன சம்பரன் மகன்களின் நீர்க்கடனை உன் குருதியால் நிறைவேற்றுவேன்.(75) உன்னைப் போன்ற இளம் மகனின் மரணத்தைக் கேட்டு பீஷ்மகனின் மகள் {ருக்மிணி} பரிதாபகரமாக அழுது புலம்புவாள்.(76) தீயவனும், உன் தந்தையுமான அந்தச் சக்கரபாணியும் உன் மரணத்தைக் கேட்டு இன்று தன் உயிரை விடுவான்" என்றான்.(77)
பிரமர்த்தனன் இதைச் சொல்லிவிட்டு, தன் பரிகத்தைக் கொண்டு ருக்மிணியின் மகனை விரைவாக அடித்தான். பெருஞ்சக்திவாய்ந்தவனும், சுறுசுறுப்பு மிக்கவனுமான ருக்மிணியின் மகன் இவ்வாறு தாக்கப்பட்டதும் தன் கரங்களால் அவனது தேரைத் தூக்கி வீசித் தரையில் அடித்து நொறுக்கினான்.(78) அப்போது அந்தத் தானவன் தன் தேரில் இருந்து கீழே குதித்துக் காலாளாகத் தரையில் நின்றான்.(79) பிறகு தன் கதாயுதத்தைக் கேசவன் மகன் மீது வீசினான். மறுபுறம் அந்தக் காமனோ {பிரத்யும்னனோ}, அந்தக் கதாயுதத்தைக் கொண்டே பிரமர்த்தனனை நசுக்கினான்.(80) பிரமர்த்தனன் கொல்லப்பட்டதைக் கண்ட தைத்தியர்களால் பிரத்யும்னன் முன்பு நிற்க இயலாமல் சிங்கத்தால் பீதியடையும் யானைமந்தையைப் போலத் தப்பி ஓடத் தொடங்கினர்.(81) {வேட்டை} நாயைக் கண்ட ஆடுகளைப் போலவே பிரத்யும்னனால் பீதியடைந்த தைத்திய படைவீரர்களும் தங்கள் இதயம் கலங்கினர்.(82) தலைமயிர் கலைந்தவர்களாகவும், குருதியால் கறைபட்ட ஆடைகளைக் கொண்டவர்களாகவும், அழகற்றவர்களாகவும் தோன்றிய தானவப் படை வீரர்கள், மாதவிலக்கில் உள்ள பெண்ணைப் போலத் தெரிந்தனர்.(83) காமாந்தகனான கொடூரனால் முரட்டுத் தனமாகக் கையாளப்பட்டு, மன்மதனின் கணைகளால் துளைக்கப்பட்டு அந்தப் போரில் {காமப்போரில்} தாக்குப்பிடிக்க முடியாமல் தன் வீட்டுக்குத் தப்பியோடும் இளம்பெண்ணைப் போலவே கணைகளால் தாக்கப்பட்டு அச்சத்தில் நிறைந்திருந்த அந்தத் தானவப் படைவீரர்களும் போர்க்களத்தைவிட்டு அகன்று, பெருமூச்சு விட்டபடியே அங்கிருந்து தப்பி ஓடினர்" என்றார் {வைசம்பாயனர்}.(84)
விஷ்ணு பர்வம் பகுதி – 162 – 106ல் உள்ள சுலோகங்கள் : 84
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |