Saturday 26 December 2020

கிருஷ்ணனின் வல்லமை | விஷ்ணு பர்வம் பகுதி – 158 – 102

(கிருஷ்ணஸ்ய ஸபாப்ரவேஷம்)

Krishna invites a meeting of his kinsmen | Vishnu-Parva-Chapter-151-101 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவகியின் மகளான ஏகாநம்ச மாயையின் பெருமை; கிருஷ்ணனின் குழந்தைப்பருவ விளையாட்டுகளையும், அவன் செய்த தீரச் செயல்களையும் முற்றாகக் கூறிய நாரதர்...


Krishnas feat

கிருஷ்ணன் {யாதவர்களிடம்}, "அறம் சார்ந்த யாதவர்களே, உங்கள் தவச சக்தியாலும், மனங்குவிந்த ஓர்மையினாலும், பூமியின் மகனான நரகன் செய்த பாவத்தாலும் அவன் கொல்லப்பட்டான்.(1) அழகிய கன்னிகையர் பலர் அவனது அந்தப்புரத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர், மணி மலையின் சிகரம் பெயர்த்தெடுக்கப்பட்டு இங்கே கொண்டு வரப்பட்டது.(2) என்னுடைய பணியாட்களும் {கின்னரர்கள்} இந்தச் செல்வத்திரளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இப்போது நீங்களே இவை யாவற்றுக்கும் உரிமையாளர்கள்" என்றான்.(3)

அந்தத் தலைவன் இதைச் சொல்லிவிட்டு நிறுத்தினான். வாசுதேவனின் சொற்களைக் கேட்ட போஜர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் மகிழ்ச்சியில் மயிர் சிலிர்த்தவர்களாக ஜனார்த்தனனை வழிபட்டனர்.(4) பிறகு அந்த வீரர்கள், கூப்பிக் கரங்களுடன் அவனிடம், "ஓ! பெருந்தோள்களைக் கொண்ட தேவகியின் மகனே, தேவர்களுக்காக மிகக் கடினமான அருஞ்செயலைச் செய்து, உன் சக்தியின் மூலம் அடைந்த வளங்களையும், இன்ப நுகர் பொருட்களையும் கொடுத்து உன் மக்களை நிறைவடையச் செய்கிறாய். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை" என்றனர்.(5,6)

அப்போது தாசார்ஹர்களின் மனைவியரும், ஆஹுகனும் {உக்ரசேனனும்} மகிழ்ச்சியில் நிறைந்தவர்களாகக் கிருஷ்ணனைக் காண சபா மண்டபத்திற்குச் சென்றனர்.(7) தேவகியின் தலைமையிலான வசுதேவனின் ராணிகள் எழுவரும்[1], பெருங்கரங்களைக் கொண்ட ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(8) ராமனும், கிருஷ்ணனும் முதலில் ரோஹிணியை வணங்கிய பிறகு தேவகியை வணங்கினர்.(9) மித்ரன், வருணன் ஆகியோருடன் அழகாகத் தெரியும் தேவர்களின் அன்னையான அதிதியைப் போலவே அந்தத் தேவியும் {தேவகியும்} தாமரைக் கண்களைக் கொண்டவர்களான தன்னிரு மகன்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(10)

[1] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "தேவகனின் மகள்களான ஸஹதேவி, ஸாந்திதேவி, தேவரக்ஷிதை, விருகதேவ, உபதேவி, தேவகி ஆகியோரும், {பூரு குலத்தைச் சேர்ந்த} ரோஹிணியும் இங்கே குறிப்பிடப்படும் வசுதேவனின் ஏழு மனைவியராவர். இந்தக் குறிப்புக் கீதா பிரஸ் பதிப்பின் 757ம் பக்கத்தில் உள்ள அடிக்குறிப்பில் காணக்கிடைக்கிறது" என்று இருக்கிறது. அபிஜித்தின் மகன் ஆஹுகன், ஆஹுகனின் மகன்கள் தேவகன், உக்ரசேனன் ஆகியோர். ஹரிவம்சத்தில் பல இடங்களில் ஆஹுகன் என்று தன் தந்தையின் பெயரைக் கொண்டே அழைக்கப்படும் உக்ரசேனன் கம்சனின் தந்தையாவன். தேவகி, உக்ரசேனனின் அண்ணனான தேவகனின் இளைய மகளாவாள். இவ்வாறே கம்சன் தேவகியின் அண்ணனானான்; கிருஷ்ணனின் மாமனும் ஆனான். வசுதேவனின் மனைவிமார் மொத்தம் 14 பேர் என ஹரிவம்ச பர்வம் 35ம் பகுதியில் குறிப்பிருக்கிறது. 

அங்கங்களேதுமின்றி ஒரே அம்சமாக இருப்பவள் {ஏகாநம்சா} என்று மக்களால் சொல்லப்படுபவளும், தேவர்களின் மன்னனான புரோஷோத்தமன் கிருஷ்ணனுடன் ஒரே சமயத்தில்பிறந்தவளும், அவன் கம்சனையும், அவனது உறவினர்களையும் எவளுக்காகக் கொன்றானோ அந்த யசோதையின் மாய மகள் {ஏகாநம்ச மாயை}, அப்போது மனிதர்களில் முதன்மையான கிருஷ்ணன், ராமன் ஆகியோரின் முன்பு தோன்றினாள்.(11,12) இந்தக் காலம் வரை அவள் விருஷ்ணிகளின் குலத்தில் துதிக்கப்பட்டும், ஒரு {மகள் அல்ல} மகனைப் போலப் பேணி வளர்க்கப்பட்டும் வந்தாள்.(13) தடுக்கப்படமுடியாத யோக கன்னிகையாகவும் {யோக மாயையாகவும்}, அங்கங்களேதுமின்றி ஒரே அம்சமாக இருப்பவளாகவும் {ஏகானம்சையாகவும்} உலக மக்களால் அறியப்படும் அவள் கேசவனின் பாதுகாப்புக்காகவே பிறந்தாள்.(14) தேவியைப் போன்ற தன் தெய்வீக உடலால் கேசவனைப் பாதுகாத்ததால் யாதவர்கள் அவளைப் பெரும் மகிழ்ச்சியுடன் வழிபட்டு வந்தனர்.(15)

அவள் மண்டபத்திற்குள் நுழைந்ததும், மாதவன் தன் தோழியை அணுகுபவன் போலச் சென்று அவளது கரத்தைப் பற்றினான்.(16) பெருஞ்சக்திவாய்ந்த ராமனும் {பலராமனும்} தன் வலது கையால் அவளைப் பற்றி ஆரத்தழவி உச்சி முகர்ந்தான்.(17) விருஷ்ணி குலப் பெண்கள், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் கைகளில் பொற்தாமரைகளுடன் தாமரையிலேயே அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவியை {லட்சுமிதேவியைப்} போல அவளைக் கண்டனர்.(18) அப்போது அவர்கள் பொரிகளையும், பல்வேறு மலர்களையும் பொழிந்துவிட்டுத் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(19) பிறகு, அந்த யாதவர்கள், ஜனார்த்தனனின் அற்புதச் செயல்களை உயர்வாகப் பேசி, அவனைக் கௌரவித்துவிட்டுத் தங்களுக்குரிய அரியணைகளில் மகிழ்ச்சியாக அமர்ந்தனர்.(20) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பெருஞ்சிறப்புவாய்ந்தவனும், குடிமக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான மாதவன், தேவர்களைப் போன்ற தங்கள் உற்றார் உறவினரால் இவ்வாறு துதிக்கப்பட்டவனாக அங்கே அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.(21) யாதவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, வழிபடத்தகுந்தவரான நாரத முனிவர், தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரில் ஜனார்த்தனனைச் சந்திக்க வந்தார்.(22)

யது குல வீரத் தலைவர்களால் வழிபடப்பட்ட அவர் {நாரதர்}, கோவிந்தனின் கரங்களைப் பற்றிக் கொண்டு மிகச் சிறந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.(23) {அவன் அருகே} சுகமாக அமர்ந்த பிறகு விருஷ்ணிகளிடம் அவர், "ஓ! மனிதர்களில் சிறந்தவர்களே, தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரில் நான் இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவீராக.(24) ஓ! முன்னணி மன்னர்களே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணன், தன்னுடைய குழந்தைப் பருவம் முதல் செய்த வீரச் செயல்கள் அனைத்தையும் இப்போது கேட்பீராக.(25)

உக்ரசேனனின் தீய மகன் கம்சன், யாதவர்களை ஒடுக்கிவிட்டுத் தன் தந்தையான ஆஹுகனை {உக்ரசேனனை} சங்கிலிகளில் பிணைத்து {சிறைவைத்து} நாட்டைத் தானே கைப்பற்றிக் கொண்டான்.(26) தீய மனம் கொண்டவனும், இழிந்தவனும், குலத்தின் சாபமாக அமைந்தவனும், தன் மாமனாருமான ஜராசந்தனின் புகலிடத்தை நாடிய அவன், போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் பிறரை வெறுத்து வந்தான்.(27) பெருஞ்சக்திவாய்ந்த வசுதேவன், தன் உற்றார் உறவினருக்கான நற்பணியை நிறைவேற்றுவதற்காகத் தன் மகனைப் பாதுகாத்தான்.(28) மதுராவின் புறநகரில் கோபியருடன் {ஆயர்பாடியில்} வாழ்ந்து வந்தபோது சூரசேனர்கள் முன்பும், பிறர் முன்பும் மதுசூதனன் செய்த பேரற்புதச் செயல்களை நீங்கள் அனைவரும் கேட்டிருக்கிறீர்கள்.(29)

ஒரு நாள் ஜனார்த்தனன் ஒரு வண்டியின் அடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்தவளும், பயங்கரமானவளும், கொடிய முகத்தோற்றம் கொண்டவளுமான பூதனை எனும் ராட்சசி, பறவையின் வடிவில் இவனிடம் வந்து, நஞ்சூட்டப்பட்ட தன் முலைகளைப் பருகச் செய்ய விரும்பினாள். எனினும் இவன் அவளைக் கொன்றான். கானுலாவும் கோபர்கள் {ஆயர்கள்}, பயங்கர முகத்தோற்றம் கொண்டவளும், பலியின் மகளுமான பூதனை கொல்லப்பட்டதைக் கண்டு, இவனை மீண்டும் பிறந்தவனாகக் கருதி அதோக்ஷஜன் என்ற பெயரை இவனுக்குக் கொடுத்தனர்.(30-33) இந்தப் புருஷோத்தமன், தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மற்றோர் அற்புத அருஞ்செயலைச் செய்தான். இவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தன் பாதத்தால் {கட்டை விரலால்} ஒரு வண்டியைப் புரட்டிப் போட்டான். இவன் சிறுவர்கள் சிலருக்குக் காயமேற்படுத்தியதால் மர உரல் ஒன்றில் யசோதை இவனைக் கட்டினாள்.(34) அந்த நிலையிலும் இவன் இரண்டு அர்ஜுன மரங்களை வேருடன் சாய்ந்து தாமோதரன் என்ற பெயரைப் பெற்றான். யமுனையின் மடுவில் இவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது,(35) பெருஞ்சக்திவாய்ந்தவனும், தடுக்கப்பட முடியாதவனுமான நாகன் காளியன் இவனால் வெல்லப்பட்டான். இந்தத் தலைவன், அக்ரூரனின் முன்னிலையில் நாகர்களின் {பாம்புகளின்} வீட்டில் அவர்களால் துதிக்கப்பட்டவனாக தெய்வீக உடலை {திவ்யதேஹத்தை} ஏற்றான்.(36,37) உயரான்மாவும், நுண்ணறிவு மிக்கவனுமான வசுதேவன் மகன் கிருஷ்ணன், சிறுவனாக இருந்தாலும், குளிராலும், காற்றாலும் பீடிக்கப்படும் பசுக்களைக் கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்காக ஏழு இரவுகள் வரை கோவர்த்தன மலையை உயர்த்திப் பிடித்தான்.(29-38)

தீயவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், பேருடல் படைத்தவனும், மனிதர்களை அழிப்பவனுமான பேரசுரன் அரிஷ்டன், வாசுதேவனால் கொல்லப்பட்டான்.(39) சுநாமன் இவனைச் சிறைபிடிக்கப் படையுடன் வந்த போது, ஓநாய்களின் மூலம் அவனைத் தாக்கினான். பெருஞ்சக்திவாய்ந்தவனும், பேருடல் படைத்தவனுமான தானவன் தேனுகன்,(40) பசுக்களைப் பாதுகாப்பதற்காகக் கேசவனால் கொல்லப்பட்டான். ஆயர்களின் தோற்றத்தில் ரோஹிணியின் மகனுடன் காட்டில் திரிந்து வந்த இவன் கம்சனுக்கு அச்சத்தை ஏற்படுத்தினான்.(41) புருஷோத்தமனான இந்தச் சௌரி, விரஜத்தில் {ஆயர்பாடியில்} வாழ்ந்து வந்தபோது, போஜ மன்னன் கம்சனுக்கு உரிய குதிரையாக இருந்தவனும், அவனுக்கு {கம்சனுக்குப்} பேருதவி புரிபவனும், பற்களையே ஆயுதமாகக் கொண்டவனுமான பெருஞ்சக்தி வாய்ந்தவனை {கேசியைக்} கொன்றான்.(42,43) கம்சனின் சபைச் சேர்ந்தவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான தானவன் பிரலம்பன், ரோஹிணியின் மகனுடைய முஷ்டியின் ஒரே அடியில் கொல்லப்பட்டான்.(44) பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், தெய்வீக இளைஞர்களுக்கு ஒப்பானவர்களுமான இவர்கள் இருவரும் அந்தக் காலத்தில் கார்க்கியர் என்ற பிராமணரின் மூலம் தீக்ஷை பெற்றனர் {தொடக்கச் சடங்கை செய்து கொண்டனர் / பிறந்தது முதல் உள்ளபடியே சொல்லப்பட்ட உபநயநாதி ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டனர்}.(45) அந்தப் பெரும் முனிவர்கள் இவர்கள் யாவர் என்பதை அறிந்திருந்தார், எனவே, பிறவி முதல் அவரே இவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.(46)

அப்போது, பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், இமயத்தில் வாழும் மதங்கொண்ட இளஞ்சிங்கங்கள் இரண்டைப் போன்றவர்களுமான இவ்விருவரும் இளமையை அடைந்தவர்களாகக் கோபியரின் இதயங்களைக் கொள்ளை கொண்டனர். வீரர்களும், பிரகாசமிக்கவர்களும், நந்தகோபனின் மகன்களுமான இவ்விருவரும், பிற சிறுவர்களுடன் மேய்ச்சல் நிலத்தில் திரிகையில் கூட அவர்களால் இவர்களைக் காண முடியாது எனும்போது(46-48) பலம், விளையாட்டு ஆகியவற்றில் எவ்வாறு அவர்களோடு இணை சொல்ல முடியும்? நீண்ட கரங்களையும், உறுதிமிக்கத் தோள்களையும் கொண்ட பலன் {பலராமன்}, கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய இவ்விரு சகோதரர்களும் சால மரங்களைப் போல வளர்ந்து வருவதைக் கேள்விப்பட்ட கம்சன் துன்பமடைந்தவனாகத் தன் அமைச்சர்களுடன் ஆலோசித்தான்.(49,50) அவனால் இவர்களை எவ்வழிமுறையின் மூலமும் கைப்பற்ற முடியாத போது அவன் வசுதேவனையும், அவனது உறவினர்களையும் ஒடுக்கினான்.(51) குற்றவாளியைப் போல உக்ரசேனனுடன் சங்கிலியில் கட்டப்பட்ட அனகதுந்துபி தன் நாட்களைப் பெருந்துயரில் கழிக்கத் தொடங்கினான்.(52) இவ்வாறு ஜராசந்தனன், ஆஹ்விருதி, பீஷ்மகன் ஆகியோரின் துணையுடன் கூடிய கம்சன், தன் தந்தையைச் சிறையில் வைத்து, சூரசேன நாட்டை ஆட்சி செய்தான்.(53)

சிறிது நாட்கள் கடந்த பிறகு மன்னன் கம்சன், தேவனான திரிசூலபாணியை மதிக்கும் வகையில் மதுராவில் ஒரு பெரும் விழாவை நடத்தினான்.(54) ஓ! மன்னா, பல்வேறு நாடுகளில் இருந்து மற்போர்வீரர்கள், பாடகர்கள், நுண்ணறிவுமிக்க நடனக் கலைஞர்கள் ஆகியோர் அவ்விழாவில் திரண்டனர்.(55) பெருஞ்சக்திவாய்ந்த கம்சன், நுண்ணறிவுமிக்கவர்களும், நல்ல அனுபவம் கொண்டவர்களுமான கலைஞர்களின் மூலம் அவ்விழாவில் ஒரு பெரிய அரங்கத்தை அமைத்தான்.(56 விண்மீன்கள் பதிக்கப்பட்ட வானத்தைப் போல ஆயிரக்கணக்கான இருக்கைகளில் குடிமக்களும், கிராமவாசிகளும் அமர்ந்திருந்தனர்.(57)

அறச்செயல்களைச் செய்பவன் தெய்வீகத் தேரில் ஏறுவதைப் போலவே போஜ மன்னனான கம்சனும் நன்கலங்கரிக்கப்பட்ட அந்த அரங்கத்தின் மேடையில் ஏறினான்.(58) பெருஞ்சக்திவாய்ந்த கம்சன், ராமனையும், கிருஷ்ணனையும் நினைத்துக் கொண்டே முந்தைய நாள் இரவு முழுவதும் உறங்காதிருந்தான்,(59) அந்தச் சந்தர்ப்பத்திலோ, சூரியனையும், சந்திரனையும் போன்றவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான இவர்களின் வருகையைக் கேட்டதும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பெருங்கவனம் செலுத்தினான்.(60) மனிதர்களில் முதன்மையானவர்களும், பகைவரைக் கொல்பவர்களுமான வீர ராமன், கிருஷ்ணன் ஆகியோர் இருவரும் பசுக்களை மேய்க்கச் செல்லும் புலியைப் போல அங்கே நுழைந்தனர்.(61) வாயில் காப்போரால் தடுக்கப்பட்டும் உள்ளே நுழைந்த அவர்கள் குவலயபீடம் என்ற யானையைக் கொன்றனர். தடுக்கப்பட முடியாதவர்களான பலனும், கிருஷ்ணனும், முதலில் சாணூரனையும், ஆந்திரனையும் கசக்கிப் பிழிந்துவிட்டு, உக்ரசேனனின் தீய மகனையும் {கம்சனையும்}, அவனது தம்பியையும் கொன்றான்.(62-64)

தேவர்களாலும் செய்யமுடியாத இத்தகைய அருஞ்செயலைச் செய்ய யது குல வழித்தோன்றலைத் தவிர வேறு எவரால் முடியும்.(65) பிரஹலாதனும், பலியும், சம்பரனும் கூட இதற்கு முன்பு அடைய முடியாத செல்வங்கள் அனைத்தையும் கேசவன் கொண்டு வந்தான்.(66) முரு, பாஞ்சனன் என்ற தைத்தியர்களை அவன் கொன்றான். மலைசார்ந்த தன்னுடைய காட்டில் இருந்து வெளியே வந்த நிசுந்தனையும், அவனது உற்றார் உறவினர் அனைவரையும் கொன்றான்.(67) பூமியின் மகனான நரகனைக் கொன்றுவிட்டு, அதிதியின் அழகிய குண்டலங்கள் இரண்டையும் மீட்டுத் தேவலோகத்தில் இருந்து இந்த உலகம் வரை பெரும்புகழை ஈட்டினான்.(68)

ஓ! யாதவர்களே, கிருஷ்ணனின் கரவலிமையைச் சார்ந்தும், செருக்கு, அச்சம், கவலை ஆகியவற்றையும், பிற தடைகளையும் கைவிட்டும் பல்வேறு வேள்விகளைச் செய்வீராக.(69) தேவர்களின் பெரும்பணியொன்று நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணனால் செய்யப்பட்டது. உங்களுக்கு நன்மை நேரட்டும்.(70) ஓ! தலைவர்களே, மகிழ்ச்சிமிக்க இந்தச் செய்திகளை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் இங்கே வந்தேன். நீங்கள் அடைய விரும்பிய எதையும் பெருங்கவனத்துடன் கொடுக்கப் போவதாக வாசவன் {இந்திரன்} சொல்லியிருக்கிறான். அவன் {கிருஷ்ணன்} உங்களுடையவன், நீங்கள் அவனுடையவர்கள். தேவர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர் என்பதைக் கிருஷ்ணனுக்குத் தெரிவிக்கவே பாகனைத் தண்டித்த முதன்மையான தேவன் {இந்திரன்} என்னை இங்கே அனுப்பினான் என்பதை உறுதியாக அறிவீராக.(71,72) புத்தியிருக்கும் இடத்தில் செழிப்பு இருக்கும். செழிப்பு இருக்கும் இடத்தில் பணிவு இருக்கும். பணிவு, புத்தி, செழிப்பு ஆகியவை எப்போதும் உயரான்ம கிருஷ்ணனிடம் இருக்கின்றன[2]" என்றார் {நாரதர்}.(69-73)
[2] மற்ற இரு பதிப்புகளை ஒப்பிட்டு இந்த ஸ்லோகம் மாற்றப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே இருந்தால், "செழிப்பின் தேவியும், பணிவின் தேவியும் ஆளும் இடங்களிலேயே முன்னேற்றம் எனும் தேவி வாழ்கிறாள். உயரான்ம வாசுதேவனிடம் இவர்கள் மூவரும் இருக்கின்றனர்" என்று இருக்கும்.

விஷ்ணு பர்வம் பகுதி – 158 – 102ல் உள்ள சுலோகங்கள் : 73
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்