(வஜ்ரநாபவதம்)
The destruction of Vajranabha | Vishnu-Parva-Chapter-154-098 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபனுக்கும், பிரத்யும்னனுக்கும் இடையில் நடந்த கடும்போரில் இருவரும் மயக்கமடைந்தது; சக்கர ஆயுதத்தால் வஜ்ரநாபனைக் கொன்ற பிரத்யும்னன்; சுநாபனின் மரணம்; நான்காகப் பிரிக்கப்பட்ட வஜ்ரநாபனின் நாடு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உலகின் விழியான சூரியன் உதித்து மூன்று முஹூர்த்தங்கள் கடந்ததும், பாம்புகளின் பகைவனான கருடனைச் செலுத்திக் கொண்டு தேவன் ஹரி அங்கே வந்தான்.(1) ஓ! குருவின் வழித்தோன்றலே, பறவைகளின் மன்னனான கருடன், அன்னப்பறவைகளையும், காற்றையும், மனத்தையும் விட வேகமாகச் ஆகாய லோகத்தில் இருக்கும் சக்ரனிடம் சென்றான்.(2) தலைவன் கிருஷ்ணன், வாசவனின் அருகில் வந்ததும் தைத்தியர்களின் அச்சத்தைப் பெருகச் செய்யும் பாஞ்சஜன்ய சங்கத்தை முழக்கினான்.(3) பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னன் அவ்வொலியைக் கேட்டு தன் தந்தையின் அருகில் வந்தபோது, கேசவன் அவனிடம், "விரைவாக வஜ்ரநாபனைக் கொல்" என்றான்.(4) மீண்டும் அவன், "கருடனின் முதுகில் ஏறி அங்கே செல்வாயாக" என்றான். தேவர்களில் முதன்மையான இந்திரனையும், உபேந்திரனையும் வணங்கிவிட்டு அவ்வாறே அவன் செய்தான் {கருடனின் முதுகில் ஏறிச் சென்றான்}.(5)
ஓ! பேரரசே {ஜனமேஜயனே}, பிரத்யும்னன், மனம் போல் வேகம் கொண்ட கருடனைச் செலுத்திச் சென்று தன் பெரும் பகைவனான வஜ்ரநாபனை அவன் அணுகினான்.(6) அனைத்து ஆயுதங்களின் பயன்பாட்டையும் நன்கறிந்த வீரப் பிரத்யும்னன், கருடன் மீது உறுதியாக அமர்ந்து கொண்டு வஜ்ரநாபனைத் தாக்கினான்.(7) பெருஞ்சக்திவாய்ந்த வஜ்ரநாபன், கருடனின் மீது அமர்ந்து வந்த உயரான்ம கிருஷ்ணனின் மகனுடைய {பிரத்யும்னனின்} கதாயுதத்தால் மார்பில் காயமடைந்தான்.(8) பிரத்யும்னனின் கதாயுதத்தால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்தத் தைத்திய வீரன் {வஜ்ரநாபன், தன்னினைவை இழந்து கலங்கி இறந்தவனைப் போல மீண்டும் மீண்டும் குருதியைக் கக்கினான்.(9)
போரில் தடுக்கப்பட முடியாதவனான கிருஷ்ணனின் மகன் அப்போது அவனிடம், "களைப்பாறுவாயாக" என்று சொன்னான். வீரனான வஜ்ரநாபன் ஒரு கணத்தில் நினைவு மீண்டவனாகப் பிரதயும்னனிடம்,(10) "ஓ! பெருஞ்சக்தி வாய்ந்த யாதவா, நன்று செய்தாய். உன் ஆற்றலின் மூலம் நீ என் பகைவரில் சிறப்புமிக்கவன் ஆகிவிட்டாய். இப்போது உன்னைத் திருப்பித் தாக்குவதற்கான நேரம் எனக்கு; இங்கேயே உறுதியுடன் நிற்பாயாக" என்றான்.(11)
இதைச் சொல்லிவிட்டு நூறு மேகங்களைப் போல முழங்கிய அந்தத் தைத்தியர்களின் தலைவன் {வஜ்ரநாபன்}, மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் கதாயுதத்தைப் பெருஞ்சக்தியுடன் வீசினான்.(12) ஓ! மன்னா {ஜனமேஜயா}, யதுக்களில் முதன்மையான பிரத்யும்னன் அந்தக் கதாயுதத்தின் மூலம் நெற்றியில் படுகாயம் அடைந்து குருதி கக்கி தன் நினைவை இழந்தான்.(13) பகைவரைக் கொல்பவனான தெய்வீகக் கிருஷ்ணன், இதைக் கண்டதும் தன் மகனைத் தேற்றுவதற்காக {பெருங்கடலின் நீரில் உதித்த} பாஞ்சஜன்யத்தை {சங்கை} முழக்கினான்.(14) பெருஞ்சக்திவாய்ந்தவனான பிரத்யும்னன் பாஞ்சஜன்யத்தின் ஒலியால் உணர்வு மீண்டு எழுந்து நின்றான். ஓ! பாரதா, களைப்பகன்று வந்த பிரத்யும்னனைக் கண்டு உலகத்தினர் அனைவரும், குறிப்பாக இந்திரனும், கேசவனும் பெரிதும் மகிழ்ந்தனர்.(15)
ஓ! ஜனமேஜயா, அதன்பிறகு ஆயிரம் கூர்முனைகளைக் கொண்டதும், தைத்தியர்களுக்கு அழிவைத் தருவதுமான சக்கரம் {சக்கராயுதம்}, கிருஷ்ணனின் விருப்பத்தின் பேரில் அவனுடைய மகனின் கைக்கு வந்தது.(16) அவன் {பிரத்யும்னன்}, உயரான்ம இந்திரனையும், உபேந்திரனையும் வணங்கிவிட்டு பகைவனை அழிப்பதற்காக அதை ஏவினான்.(17) ஓ! பாரதா, நாராயணனின் மகனால் ஏவப்பட்ட அந்தச் சக்கரம், தைத்தியர்களின் முன்னிலையிலேயே வஜ்ரநாபனின் உடலில் இருந்து அவனது தலையைப் பிரித்தது.(18) பகைவரைக் கொல்ல விரும்புபவனும், போரில் திளைப்பவனும், பயங்கரம் நிறைந்தவனுமான சுநாபன் மிகக் கவனத்துடன் இருந்தாலும் {மாளிகையின் பின்புறம்} போர்க்களத்தில் கதனால் கொல்லப்பட்டான்.(19) பகைவரைக் கலங்கடிப்பவனான சாம்பன் கூரிய கணைகளைக் கொண்டு தேவர்களின் பகைவரை யம குலத்தவராக்கிக் கொண்டிருந்தான்.(20) பேரசுரன் வஜ்ரநாபனின் அழிவுக்குப் பிறகு, நாராயணனிடம் அச்சங்கொண்ட நிகும்பன் ஷட்புர நகரத்திற்குத் தப்பிச் சென்றான்.(21)
இவ்வகையில் தேவர்களின் பகைவனும், தடுக்கப்பட முடியாதவனுமான வஜ்ரநாபன் கொல்லப்பட்ட பிறகு, உயரான்மாக்களான அந்த ஹரிக்கள் இருவரும் {இந்திரனும், கிருஷ்ணனும்} வஜ்ர நகரத்திற்கு இறங்கி வந்தனர்.(22) தேவர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிறுவர்களையும், முதியவர்களையும் தேற்றி அங்கே அமைதியை நிறுவினர்.(23) ஓ! மன்னா, அதன்பிறகு பெருஞ்சக்தி வாய்ந்த மஹேந்திரனும், உபேந்திரனும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் {நடப்பவற்றையும், நடக்க இருப்பவற்றையும்} குறித்து (அவற்றுக்கான ஏற்பாடுகளைக் குறித்தும்} பிருஹஸ்பதியுடன் சேர்ந்து ஆலோசித்து,(24) வஜ்ரநாபனின் நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்தனர். ஓ! மன்னா,வெற்றியால் ஈட்டப்பட்ட அந்த நாட்டில் நான்கில் ஒரு பகுதி ஜயந்தனின் மகன் விஜயனுக்கும்,(25) நான்கில் மற்றொரு பகுதி பிரத்யும்னனின் மகனுக்கும், இன்னும் ஒரு பகுதி சாம்பனின் மகனுக்கும் {குணவானுக்கும்}, நான்கில் மேலும் எஞ்சிய ஒன்று கதனின் மகனான சந்திரபிரபனுக்கும் கொடுக்கப்பட்டன.(26) ஓ! மன்னா, சக்ரனும், கேசவனும், வஜ்ரநாபனின் நாட்டில் நான்கு கோடி கிராமங்களையும், வஜ்ரபுரம் போன்று வளமிக்க ஆயிரம் கிளை நகரங்களையும்கூட நான்கு பகுதிகளாகப் பிரித்தனர்.(27) ஓ! வீரா, வீர வாசவனும், கேசவனும், கதகதப்பான ஆடைகள் பலவற்றையும், மான்தோல்களையும், துணிமணிகளையும் கூட நான்காகப் பிரித்தனர்.(28)
சக்ரன், மாதவன் ஆகியோரின் பெரும் வழித்தோன்றல்களான அந்த வீர மன்னர்கள், தேவதுந்துபிகளில் உண்டான இசையுடனும், விஷ்ணுவின் பாதங்களில் இருந்து வெளிப்படும் {விஷ்ணுபதியான} கங்கையின் நீரைக் கொண்டு ரிஷிகளின் முன்னிலையில் வைத்து தேவர்களான சக்ரன், கிருஷ்ணன் ஆகியோரால் அரசபட்டஞ்சூட்டி நீராட்டப்பட்டனர்.(29,30) விஜயன் முன்பிருந்தே ஆகாயலோகத்தில் திரிபவன், மாதவனின் வழித்தோன்றல்களும் தங்கள் அன்னையரிடம் இருந்து பெற்ற குணங்களின் நிமித்தம் அதைப் பயின்றனர்.(31)
இவ்வாறு அவர்கள் அனைவரையும் அரியணையில் நிறுவியபிறகு தெய்வீக வாசவன் {இந்திரன்}, {தன் மகன்} ஜயந்தனிடம், "ஓ! வீரத்துடன் படைகளை வெல்பவனே, இந்த மன்னர்கள் அனைவரையும் பாதுகாப்பதே உனக்குத் தகும்.(32) ஓ! பாவமற்றவனே, அவர்களில் ஒருவன் என் குலத்தைத் தழைக்கச் செய்பவன், மற்ற மூவரும் கேசவனின் வம்சத்தில் பிறந்தவர்களாவர். என் ஆணையின் பேரில் உயிரினங்களின் மத்தியில் எவராலும் அவர்களைக் கொல்ல இயலாது.(33) பைமர்களின் பாதுகாப்புடன் தேவலோகத்துக்கும், துவாரகைக்கும் இடையில் ஆகாய வழியில் செல்லும் பயிற்சியை அவர்கள் அடைவார்கள்.(34) அவர்களின் விரும்பியவாறு திக்கஜங்களின் குலத்தில் பிறந்த யானைகளையும், உச்சைஷ்ரவத்தின் குலத்தில் பிறந்த குதிரைகளையும், தேவதச்சனால் {துவஷ்டாவான விஷ்வகர்மனால்} கட்டப்பட்ட தேர்களையும் அவர்களுக்குக் கொடுப்பாயாக.(35) ஓ! வீரா, ஐராவதனின் மகன்களும், ஆகாயத்தில் செல்லவல்ல யானைகளுமான ஷத்ருஞ்ஜயன், ருபுஞ்ஜயன் என்ற இருவரையும் வீரர்களான கதனுக்கும், சாம்பனுக்கும் கொடுப்பாயாக.(36) அதன் மூலம் இந்தப் பைமர்கள் இருவரும் {கதனும், சாம்பனும்} தங்கள் மகன்களைக் காண ஆகாய வழியில் இங்கே வந்து பைமர்களால் பாதுகாக்கப்படும் துவாராவதி நகருக்குத் திரும்பிச் செல்ல முடியும்" என்றான் {இந்திரன்}.(37)
இவ்வாறு ஆணையிட்டதும் தெய்வீகனான புரந்தரன் தேவ நகரத்திற்கும் {அமராவதிக்கும்}, தலைவன் கேசவன் துவாரகைக்கும் சென்றனர்.(38) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அங்கேயே {வஜ்ரபுரத்திலேயே} ஆறு மாதங்கள் காத்திருந்தனர். மகன்களின் நாடுகள் உறுதியாக நிறுவப்பட்ட பிறகே அவர்கள் துவாரகைக்குத் திரும்பினர்.(39) ஓ! தேவனைப் போன்ற மன்னா, அந்த நாடுகள் இப்போதும் சுமேரு மலைக்கு அருகில் {மேருவின் வடக்கு பக்கத்தில்} இருக்கின்றன. உலகம் உள்ள வரை அவை புகழுடன் இருக்கும்.(40) உலக்கைப் போர் முடிந்து விருஷ்ணிகள் தேவலோகத்திற்குப் புறப்பட்ட பிறகு கதன், பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் வஜ்ரபுரத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(41) ஓ! மன்னா, அவர்கள் அங்கே நீண்ட காலம் வாழ்ந்த பின்பு, தங்கள் தங்களுக்குரிய அறச்செயல்களின் மூலமும், உலகின் படைப்பாளனான ஜனார்த்தனனுடைய தயவின் மூலமும் மீண்டும் தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றனர்[1].(42)
[1] மஹாபாரதத்தின் 16ம் பர்வமான மௌசல பர்வத்தில் சொல்லப்படும் இரும்பு உலக்கையால் உண்டான போர் முடிந்து யாதவர்கள் பெருமளவில் அழிந்த பிறகு எனப் பொருள் கொள்ள வேண்டும். மௌசல பர்வம் 3ம் அத்தியாயத்தில் 44, 45ம் ஸ்லோகங்களில் மேற்சொன்ன அனைவரும் கொல்லப்பட்டதாக ஒரு குறிப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் இறந்த பிறகு தேவலோகத்தில் இருந்து வஜ்ரபுரத்திற்குத் திரும்பி வந்து, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தேவலோகத்திற்கே திரும்பிச் சென்றனர் எனப் பொருள் கொள்ளலாம். இறுதியில் கிருஷ்ணனின் பேரனான அநிருத்தனின் மகன் வஜ்ரன் இந்திரப்ரஸ்தத்தின் ஆட்சிக்கட்டிலில் நிறுவப்படுகிறான்.
ஓ! மன்னா, இவ்வாறே என்னால் சொல்லப்பட்ட பிரத்யும்னனின் வரலாறானது, அருள், புகழ், நீண்ட வாழ்நாள் ஆகியவற்றைப் பொழிந்து, பகையை அழிக்கும்.(43) துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்பவர்களின் மகன்களும், பேரன்களும் செழித்திருப்பர், கேட்பவர்களின் உடல் நலமும், செல்வ வளமும் பெருகும், அவர்கள் அடையும் புகழ் பெரியதாக இருக்கும்" என்றார் {வைசம்பாயனர்}[2].(44)
[2] 43, 44 ஸ்லோகங்கள் மூன்று பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மூன்றுக்கும் பொதுவாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
விஷ்ணு பர்வம் பகுதி – 154 – 098ல் உள்ள சுலோகங்கள் : 44
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |