Sunday 20 December 2020

துவாரகையைச் சீரமைத்த தேவதச்சன் | விஷ்ணு பர்வம் பகுதி – 155 – 99

(புனர்விஷேஷதோ த்வாரவதீநிர்மாணம்)

The celestial architect builds Dwaraka | Vishnu-Parva-Chapter-155-099 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகை விஷ்வகர்மனால் மிகச்சிறப்பாக நிர்மாணிக்கப்படல்; கிருஷ்ணனின் மனைவியருக்கு மாளிகைகள் அமைத்தல்; செய்குன்றுகள், ஆறுகள், குளங்கள், வனங்கள், உபவனங்கள் ஆகியவை அமைத்தல்...


A palace in Dwaraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன், தேவர்களின் வசிப்பிடத்திற்கு ஒப்பானதும், அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலிகளால் நிறைந்ததும், மணி மலை, விளையாட்டு இல்லங்கள், தோட்டங்கள், காடுகள், சபாமண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவற்றைக் கொண்டதுமான துவாரகா நகரத்தைக் கருடனின் முதுகில் அமர்ந்தவாறே கண்டான்.(1,2)

தேவகியின் மகனான கிருஷ்ணன் {துவாரகா} நகரத்தை அடைந்ததும், தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தேவதச்சனை {விஷ்வகர்மனை}அழைத்து,(3) "ஓ! சிற்பிகளில் முதன்மையானவனே, எனக்கு விருப்பமானதை நீ செய்ய விரும்பினால் கிருஷ்ணனின் மகிழ்ச்சிக்காக அவனது அழகிய நகரத்தை மேலும் அழகாக்குவாயாக.(4) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, தேவர்களின் நகரைப் போல நூற்றுக்கணக்கான தோட்டங்கள் சூழ துவாரகா நகரத்தை அமைப்பாயாக.(5) மூவுலகங்களிலும் காணப்படும் ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டு துவாராவதி நகரத்தை அலங்கரிப்பாயாக.(6) ஏனெனில், பெருஞ்சக்தி வாய்ந்த கிருஷ்ணன், தேவர்களின் பணிகள் அனைத்திற்காகவும் முனைந்து பயங்கரம் நிறைந்த போரெனும் கடலில் எப்போதும் மூழ்குகிறான்" என்றான் {இந்திரன்}.(7)

இந்திரனுடைய சொற்களின் பேரில் துவாராவதி நகருக்குச் சென்ற விஷ்வகர்மன் அதை அமராவதியைப் போல அலங்கரித்தான். தாசார்ஹர்களின் ஆட்சியாளனும், எப்போதும் பறவையில் பறப்பவனும், நாராயணனுமான தலைவன் ஹரி,(8) தெய்வீகப் பொருட்கள் அனைத்தையும் கொண்டு விஷ்வகர்மனால் அலங்கரிக்கப்பட்ட துவாரகா நகரத்தைக் கண்டு தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேறியவனாக அங்கே நுழைந்தான்.(9) விஷ்வகர்மனால் பளபளப்பாக்கப்பட்ட துவாரகா நகருக்குள் நுழைந்தபோது அவன் அழகிய மரங்களைக் கண்டான்.(10) கங்கை, சிந்து ஆறுகளுக்கு ஒப்பாகத் தாமரைத் தண்டுகள் நிறைந்தவையும், அன்னப்பறவைகள் விளையாடும் நீரைக் கொண்டவையுமான அகழிகளால் சூழப்பட்ட அந்த நகரத்தைக் கண்டான்.(11) பொன்வண்ண மேகங்களால் மறைக்கப்பட்ட வானத்தைப் போலவே அந்த நகரமும் வீடுகளில் (வீடுகளின் மேற்கூரைகளில்) நிறுவப்பட்டிருக்கும் பொன்னாலான சூரியத் திரைகளுடன் {பிரகாரங்களுடன்} அழகாகத் தெரிந்தது.(12) நந்தனத்திற்கும், சைத்ரரதத்துக்கும் ஒப்பான தோட்டங்களால் சூழப்பட்டிருந்த துவாரகை மேகங்களால் பீடிக்கப்பட்ட வானத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(13)

பொன்னாலும், ரத்தினங்களாலுமான ஓரழகிய வாயிலும், அழகிய மேட்டுச் சமவெளி, குகைகள், முற்றங்களுடன் கூடிய காட்சிக்கினிய ரைவத மலையும் அதன் {துவாரகையின்} கிழக்குப் பக்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(14) தெற்கே ஐந்து வண்ணங்களுடன் கூடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட புதர்கள் {பிரகாசமான லதாவேஷ்ட மலையும்} இருந்தன. மேற்கில் அதே போல வானவில்லின் வண்ணத்தில் {ஸுகக்ஷணமெனும் வெள்ளி மலையும்} இருந்தன.(15) ஓ! மன்னா, மந்தரத்திற்கு {மந்தர மலைக்கு} ஒப்பானதும், மஞ்சளாக இருப்பதுமான வேணுமான் மலை வடக்கிற்கு அழகூட்டிக் கொண்டிருந்தது.(16) சித்ரகம், பஞ்சவர்ணம், பாஞ்சஜன்யம், ஸர்வர்தகம் எனும் காடுகள் {கிழக்கில்} ரைவதக மலையின் அழகை அதிகரித்துக் கொண்டிருந்தன.(17) {தெற்கில் லதாவேஷ்ட மலையைச் சுற்றி} மரங்களின் வேர் வரை நீளும் கொடிகளால் முற்றிலும் மறைக்கப்பட்ட மேருப்ரபம் என்ற பெருங்காடும், பானு, புஷ்பகம் என்ற பெருங்காடுகளும் அங்கே ஒளிர்ந்தன.(18) {மேற்கில் ஸுகக்ஷண மலையைச் சுற்றி} அசோகம், பீஜகம், மந்தாரம் ஆகிய மரங்களால் ஆழகூட்டப்பட்ட கரவீராகரம் {மந்தாரம்}, அலரி மரங்களைக் கொண்ட ஸதாவர்த்தகம் ஆகிய காடுகளும் இருந்தன.(19) {வடக்கில் வேணுமான் மலையைச் சுற்றி} சைத்ரரதம், நந்தனம், ரமணம், பாவனம், வேணுமான் ஆகிய பெருங்காடுகள் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் அழகைப் பரப்பிக் கொண்டிருந்தன.(20)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, வைடூரத் தாமரை இலைகளாலும், அழகிய தடாகத்தாலும் அலங்கரிக்கப்பட்ட மந்தாகினி எனும் பேராறு கிழக்கில் பாய்ந்தது.(21) விஷ்வகர்மனால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்ட எண்ணற்ற தேவர்களும், கந்தர்வர்களும் கேசவனை மகிழ்விப்பதற்காக அங்கே மேட்டுச் சமவெளிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.(22) புனித ஆறான மந்தாகினி ஐம்பது வாய்களுடன் துவாரகா நகருக்குள் நுழைந்து அங்கே வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளித்தாள்.(23) ஒப்பற்ற அழகுடன் கூடியதும், அகழிகளாலும், மதில்களாலும் சூழப்பட்டதும், மஞ்சள் வண்ணம் பூசப்பட்டதும்,(24) கூரிய சதக்னிகளாலும், இரும்புச் சக்கரங்களாலும் பளபளப்பாக்கப்பட்டதுமான துவாரகா நகரை அவன் கண்டான். மணிகளின் வலைகளாலும், பறக்கும் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டவையும்,(25) தேவர்களின் நகரைப் போல அந்த நகரை அழகாகத் தெரியச் செய்வதுமான எட்டாயிரம் தேர்களையும் கிருஷ்ணன் கண்டான்.(26)

எட்டு யோஜனைகள் நீளம், பனிரெண்டு யோஜனைகள் ஆகலம், மேலும் இரு மடங்கு சுற்றுப்புறத்துடன் உறுதியாக நிறுவப்பட்டிருந்த துவாரகா நகரத்தை அவன் கண்டான்.(27) எட்டு நெடுஞ்சாலைகளையும், பதினாறு குறுக்குச் சாலைகளையும் கொண்டிருந்த அந்த நகத்தில், உசானஸால் அமைக்கப்பட்டிருந்த முக்கியச் சாலையில்,(28) பெண்களும் எளிதாகப் போரிடக்கூடும் எனும்போது விருஷ்ணிகளைக் குறித்து என்ன சொல்வது? விஷ்வகர்மன் படைவீரர்களின் அணிவகுப்புக்காக ஏழு நெடுஞ்சாலைகளை அமைத்திருந்தான்.(29)

பயங்கர முழக்கங்களால் நிறைந்தும், முற்றங்கள் நிறைந்ததும், பொன், ரத்தினங்களாலான படிகளைக் கொண்டதும், மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுமான அந்தச் சிறந்த நகரத்தில் சிறப்புமிக்கத் தாசார்ஹர்களின் மாளிகைகளைகளைக் கண்டு கிருஷ்ணன் பெரிதும் மகிழ்ந்தான்.(30,31) அந்த மாளிகைகளின் கோபுரங்கள் கொடிகளாலும், இலைகளாலும், கிளைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேரு மலையின் சிகரங்களுக்கு ஒப்பான பொன்மாடங்களால் அந்த மாளிகைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(32,33) பொன் மலர்களாலும், ஐந்து வண்ண மலர்களாலும் மறைக்கப்பட்டதைப் போல வீடுகளின் உச்சிகள் அழகிய சிகரங்களையும், குகைகளையும் கொண்ட அழகிய மலைகளைப் போல இருந்தன.(34,35) விஷ்வகர்மனால் கட்டப்பட்டவையும், காட்டுத் தீயைப் போல எரிபவையுமான அந்த வீடுகள், மேக முழக்கம் போன்ற ஒலியால் நிறைந்த மலைகள் பலவற்றைப் போலத் தெரிந்து சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசத்துடன் வானத்தை மறைத்தன.(36) அந்த நகரம், காட்டு மரங்களாலும், உன்னதத் தாசார்ஹர்களாலும் பளபளத்தது.(37) மேகம் போன்ற வீடுகளாலும் தேவர்களான வாசுதேவன், இந்திரன் ஆகியோராலும் அலங்கரிக்கப்பட்ட துவாரகா நகரம், பலவண்ண மேகங்களால் பீடிக்கப்பட்ட வானத்தைப் போலத் தெரிந்தது.(38) தெய்வீகனான வாசுதேவனுக்காக விஷ்வகர்மனால் கட்டப்பட்ட வீடு நான்கு யோஜனை அகலும், அதே அளவு நீளமும் கொண்டதாக இருந்தது.(39) ஒப்பற்றவனும், பெரும் வளம் கொண்டவனுமான வாசுதேவனின் வீடானது, மாளிகைகளாலும், செய்குன்றுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும் விஷ்வகர்மன் வாசவனின் ஆணையின் பேரில் அந்த வீட்டைக் கட்டியிருந்தான்.(40)

விஷ்வகர்மன், சுமேரு மலையின் உயர்ந்த சிகரம் போன்று பேரழகுடன் கூடிய பெரிய பொன்மாளிகை ஒன்றை ருக்மிணிக்காகக் கட்டினான். அது காஞ்சனை எனப் பெயரிடப்பட்டது.(41,42)

சத்யபாமா, தெளிந்த சூரியனைப் போலப் பிரகாசிக்கும் கொடிகால் அலங்கரிக்கப்பட்டதும், ரத்தினமயமான படிக்கட்டுகளைக் கொண்டதுமான ஒரு மஞ்சள் வீட்டைக் கொண்டிருந்தாள். அது போகவான் என்ற பெயரால் கொண்டாடப்பட்டது.(43,44)

சுற்றிலும் பெருங்கொடிகளைக் கொண்டதும், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தோற்றத்தைக் கொடுக்கவல்லதும், நன்கு அமைக்கப்பட்டதுமான சிறந்த மாளிகை ஜாம்பவதிக்காகக் கட்டப்பட்டது.(45,46)

எரியும் நெருப்பையும், தங்கத்தையும் போன்ற பிரகாசமானதும், கைலாச மலையின் சிகரத்தையும், பெருங்கடலையும் போன்று பெரியதுமான மற்றொரு மாளிகையை விஷ்வகர்மன் மேரு என்ற பெயரில் கட்டினான். காந்தார மன்னனின் நுண்ணறிவுமிக்க மகளைக் கேசவன் அந்த வீட்டில் அமர்த்தினான்.(47,48)

பைமைக்கு {பீமைக்கு} பத்மகூலம் என்ற பெயரில் ஒரு வீடு கட்டப்பட்டது. அது தாமரையின் வண்ணத்தைக் கொண்டதாகவும், பெரும் பிரகாசம் மிக்கதாகவும், காட்சிக்கினிய உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகவும் இருந்தது.(49)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, சாரங்கபாணியான கேசவன், விருபத்திற்குரிய பொருட்கள் அனைத்துடன் கூடியதும், சூரியபிரபை என்ற பெயரைக் கொண்டதுமான வீட்டை லக்ஷ்மணைக்காகக் கட்டினான்.(50)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, வைடூரியத்தின் காந்திக்கு ஒப்பான பிரகாசம் கொண்டதும், உலகம் முழுவதும் பரம் என்ற பெயரில் அறியப்படுவதும், மாளிகைகளின் ரத்தினமும், பெரும்ரிஷிகள் வந்து செல்வதுமான பச்சை மாளிகையானது வாசுதேவனின் ராணியான மித்ரவிந்தைக்காகத் தனியாக ஒதுக்கப்பட்டது.(51,52)

தேவர்களாலும் உயர்வாகப் பேசப்பட்டதும், கேதுமான் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதும், மலை போல விஷ்வகர்மனால் கட்டப்பட்டதுமான சிறந்த மாளிகை கேசவனின் ராணியான சுவார்த்தைக்காகக் கட்டப்பட்டது.(53,54)

அந்த மாளிகைகளில் தேவதச்சன் தன் சொந்த கைகளால் கட்டியதும், விரஜம் என்ற பெயரைக் கொண்டதும், பேரழகுடன் கூடிய ஒளிமிக்கதும், ஒரு யோஜனை தொலைவு பரப்பளவையும், அனைத்து வகை ரத்தினங்களையும் கொண்டதுமான மாளிகை, உயரான்ம கேசவனின் சபையானது.(55,56) வாசுதேவனின் அந்த மாளிகையில் சாலைகளைச் சுட்டுவதற்காகத் தங்கக்கம்பங்களுடன் கூடிய கொடிகளும், முக்கோணக் கொடிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. யது குலத்தில் முதன்மையான கேசவன், பெரும் மலையான வைஜயந்தத்தையும், பல்வேறு தெய்வீக ரத்தினங்களையும் அங்கே கொண்டு வந்திருந்தான்.(57,58)

பெருஞ்சக்திவாய்ந்த விஷ்வகர்மன், இந்திரத்யும்னமெனும் தடாகத்தின் அருகில் இருந்ததும், அறுபது தாலங்கள் {அறுபது பனை மர} உயரத்தைக் கொண்டதும், அரையோஜனை அளவு பரப்பளவைக் கொண்டதுமான நன்கறியப்பட்ட ஹம்ஸகூட மலைச் சிகரத்தைக் கின்னர்கள், மற்றும் பெரும் நாகர்களின் உதவியுடன் அங்கே கொண்டு வந்து வைத்தான்.(59,60) விஷ்வகர்மன், சூரியனின் பாதையில் கிடந்த சுமேருவின் தங்கத்தேரையும், மூவுலகங்களிலும் நன்கறியப்பட்ட நூறு தாமரைகளுடன் கூடிய மிகச் சிறந்த தங்கச் சிகரத்தையும் கிருஷ்ணனுக்காகப் பெயர்த்தெடுத்து அங்கே கொண்டு வந்தான்.(61,62) அந்தத் துவஷ்டா {விஷ்வகர்மன்}, அனைத்து வகை மூலிகைகளுடன் கூடியதும், பேரழகைக் கொண்டதுமான சிகரத்தை இந்திரனின் வேண்டுகோளுக்கிணங்கவும், பெரும் பணியில் ஈடுபடும் ஊக்கத்துடனும் அங்கே கொண்டு வந்தான்.(63)

கேசவனே பாரிஜாத மரத்தை அபகரித்து வந்து துவாரகையில் வைத்தான்.(64) அற்புதச் செயல்களைச் செய்பவனான கிருஷ்ணன் அந்த மரத்தைக் கொண்டு வரும்போது அதைப் பாதுகாத்து வந்த தேவர்களுடன் போரிட வேண்டி இருந்தது.(65) தங்கம் மற்றும் ரத்தினங்களாலான தெப்பங்களும், தாமரைகளும், நறுமணமிக்க ரத்தினமயமான தாமரைகளும் கிருஷ்ணனுக்காக வெட்டப்பட்ட குளங்களிலும் தடாகங்களிலும் மிதந்து கொண்டிருந்தன.(66) ரத்தினமயமான மலர்களும், கனிகளும் நிறைந்த மரங்களாலும், நூற்றுக்கணக்கான தங்கத் தாமரைகளாலும் குளங்களும், தடாகங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(67) நூற்றுக்கணக்கான கிளைகளைக் கொண்டவையும், பெரியவையுமான சாலம், தாலம் {பனை}, கதம்ப மரங்கள் காட்சிக்கினியவையான அந்தத் தடாகங்களின் கரைகளுக்கு அழகூட்டின.(68) யது குலத்தில் சிறந்த கிருஷ்ணனுக்காக விஷ்வகர்மன், சுமேரு, இமய மலைகளில் வளரும் மரங்கள் அனைத்தையும் துவாரகைக்குக் கொண்டு வந்து நட்டான்.(69) தோட்டங்களின் வேலிகளில் அனைத்து பருவகாலங்களிலும் கனிகளைக் கொடுப்பவையும், வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, அந்திச்சிவப்பு நிறங்களிலான மலர்களை உச்சியில் கொண்டவையுமான மரங்கள் நடப்பட்டன.(70) அந்தச் சிறந்த நகரத்தின் இனிமைமிக்க ஓடைகளிலும், தடாகங்களிலும் உள்ள நீரும், அவற்றின் கரைகளும் நிகர் அளவில் {சமமாக} இருந்தன.(71) அங்கே இருந்த சந்தனம் பச்சை சர்க்கரையினை போன்றிருந்தது. சில ஆறுகளில் எப்போதும் மலர்கள் மிதந்து கொண்டிருந்தன; மணல் பொன்னாலான சக்கரை வண்ணம் கொண்டவையாக இருந்தது.(72) பித்துப்பிடித்த மயில்களும், குயில்களும் அந்நகரத்தின் மரங்களில் அமர்ந்து மேலும் அழகூட்டிக் கொண்டிருந்தன.(73) யானைகள், பசுக்கள், எருமைகள், பன்றிகள், மான்கள் ஆகியவற்றின் மந்தைகளும், பறவைக் கூட்டங்களும் அந்த நகரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.(74) இவ்வகையிலேயே விஷ்வகர்மன் நூற்றுக்கணக்கான கோபுரங்களுடனும், பெரும் மலைகள், ஆறுகள், தடாகங்கள், காடுகள், தோட்டங்கள் ஆகியவற்றுடன் அந்த அழகிய நகரை அமைத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(75,76)

விஷ்ணு பர்வம் பகுதி – 155 – 099ல் உள்ள சுலோகங்கள் : 76
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்