(மஹாதேவேநாந்தகவதம்)
Andhaka goes to the mount Mandara | Vishnu-Parva-Chapter-144-088 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மந்தர மலைக்குச் சென்ற அந்தகன்; அந்தகனை அழித்த பரமசிவன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பரதனின் வழித்தோன்றலே, நாரதரின் சொற்களைக் கவனமாகக் கேட்ட பேரசுரன் அந்தகன் மந்தர மலைக்குச் செல்லும் விருப்பம் கொண்டான்.(1) பெருஞ்சக்தியும், பலமும் வாய்ந்தவனும், பலத்தின் செருக்கில் மிதப்பவனுமான அந்தகன், (தன்னைச் சுற்றிலும்) பிற அசுரர்களைத் திரட்டிக் கொண்டு மஹாதேவனின் வசிப்பிடமான மந்தர மலையை அடைந்தான்.(2) பெரும் மேகங்களாலும், பெரும் மூலிகைகளாலும், அறம்சார்ந்த சித்தர்களாலும் அது மறைக்கப்பட்டிருந்தது. அங்கே பெரும் முனிவர்கள் வாழ்ந்தனர்,(3) யானைகள் பலவும், சந்தனம், அகரு மரங்களும், இன்னும் பல்வேறு மரங்களும் அங்கே நிறைந்திருந்தன. கின்னரர்களின் பாடல்களால் அழகூட்டப்பட்டதிருந்த அது, காற்று வீசுவதற்கு ஏற்ப மலர்ந்த மரங்கள் ஆடுவதைப் போல ஆடிக் கொண்டிருந்தது.(4,5) பறவைகள் வெளியிடும் இனியவொலி அங்கே நிரம்பியிருந்தது, அன்னங்கள் அழகாக அசைந்து கொண்டிருந்தன.(6) அசுரர்களை அழிக்கும் பெருஞ்சக்திவாய்ந்த எருமைகளாலும், சந்திரக் கதிர்களைப் போன்று வெண்மையான சிங்கங்களாலும் அஃது {அந்த மலை} அலங்கரிங்கப்பட்டிருந்தது. {மொத்த மலையும் தங்கக் குவியலைப் போலத் தோன்றியது}.(7) {சிங்கங்கள் பலவும் அந்த மலையில் உலவிக் கொண்டிருந்தன}. நூற்றுக்கணக்கான மான்கள் அங்கே நிறைந்திருந்தன.
அங்கே வந்த அவன் {அந்தகன்}, அங்கே தன்வடிவில் இருந்த சிறந்த மலையிடம்,(8) "என் தந்தை பெற்ற வரத்தினால் நான் எவராலும் கொல்லப்பட முடியாதவன் என்பதை அறிவாயாக. அசையும் {உயிருள்ள} படைப்புகளையும், அசையாத {உயிரற்ற} படைப்புகளையும் உள்ளடக்கிய மூவுலகங்களும் என் ஆளுகையின் கீழ் உள்ளன.(9) ஓ! மலையே, என் மீது கொண்ட அச்சத்தால் எவராலும் என்னுடன் போரிட இயலவில்லை. ஓ! பெரும் மலையே, உன்னுடைய மேட்டுச் சமவெளியில் {தாழ்வரையில்}, விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் அளிக்கவல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ரத்தினங்களுடன் கூடியவையுமான பாரிஜாத மரங்களைக் கொண்ட காடு {பாரிஜாதவனம்} இருப்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(10) என் மனம் ஆவலால் நிறைந்திருக்கிறது. உன் மேட்டுச் சமவெளிகளில் அந்தக் காடு எங்கே இருக்கிறது என்பதை விரைவாகச் சொல்வாயாக. ஓ! மலையே, நான் உன்னிடம் கோபம் கொண்டால் உன்னால் என்னை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது.(11) மறுபுறம் நான் உன்னை ஒடுக்கித் துன்புறுத்தினால், உன்னைப் பாதுகாக்கவல்லவர் எவரையும் நான் காணவில்லை" என்றான். இவ்வாறு சொல்லப்பட்டதும் மந்தர மலை அங்கேயே அப்போதே மறைந்து போனது.(12)
வரத்தில் செருக்கடைந்திருந்த அந்தகன் பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனாக, பயங்கரச் சிங்கமுழக்கம் செய்தபடியே,(13) "ஓ! மலையே, என்னால் வேண்டப்பட்டும் நீ போதுமான மதிப்பைக் காட்டவில்லை. இப்போது என் பலத்தைப் பார். இந்தக் கணத்திலேயே நான் உன்னை நொறுக்குகிறேன் {பொடியாக்குகிறேன்}" என்றான்.(14)
வரத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த பெரும் பலம்வாய்ந்த அந்தகன் இதைச் சொல்லிவிட்டு, பல யோஜனைக்குப் பரந்திருந்த ஒரு சிகரத்தை மற்ற அசுரர்களின் துணையுடன் பிடுங்கி, அதை {மற்ற சிகரங்களுடன் தேய்த்து} நொறுக்கத் தொடங்கினான். ஓ! வீரா, இதன் காரணமாக அந்தப் பெரும் மலையில் இருந்த ஓடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.(15,16)
ருத்ரன் இவை அனைத்தையும் அறியவந்தபோது, அந்தகனால் பிடுங்கப்படுவதற்கு முன்பு இருந்ததைப் போலவே, மதங்கொண்ட யானைகளும், பல்வேறு ஓடைகளும், பல வண்ணங்களிலான தோட்டங்களும் நிறைந்த அதே அழகுடன் மீண்டும் அதைத் தோன்றச் செய்து தன் தயவை வெளிப்படுத்தினான்.(17,18) அதன்பிறகு, அந்தகனால் பிடுங்கப்பட்ட பயங்கரச் சிகரங்கள், அந்தத் தலைவனுடைய {சிவனுடைய} சக்தியின் மூலம் அசுரர்களுக்கு அழிவைக் கொண்டு வந்தன.(19) ஓ! மன்னா, அந்த மலைச் சிகரங்கள், தங்களை வேருடன் பிடுங்கியவர்களும், தப்பி ஓடுபவர்களுமான அசுரர்களை நசுக்கின.(20) எனினும், மந்தர மலையின் மேட்டுச் சமவெளிகளில் சுகமாக அமர்ந்திருந்த அசுரர்கள் கொல்லப்படவில்லை.(21)
இவ்வாறு தன் படைவீரர்கள் நசுக்கிக் கொல்லப்படுவதைக் கண்ட அந்தகன், பயங்கரச் சிங்கமுழக்கம் செய்தபடியே,(22) "ஓ! மலையே, போரில் வஞ்சகத்தால் நாங்கள் கொல்லப்பட்டோம். நான் ஏன் உன்னுடன் போரிட வேண்டும்? உன்னுடைய முகப்பில் அமைந்திருக்கும் தோட்டத்தின் உரிமையாளனை நான் அழைக்கிறேன். அவன் போரிட முன்வரட்டும்" என்றான்[1].(23) இவ்வாறு சொல்லப்பட்டதும் அவனைக் கொல்ல விரும்பிய மஹாதேவன், தன் கதாயுதத்தை {சூலத்தை} எடுத்துக் கொண்டும், தன் காளையைச் செலுத்திக் கொண்டும் அங்கே வந்தான்.(24) நுண்ணறிவு மிக்கவனும், முக்கண் தேவனுமான அந்தப் பூதகணேஷ்வரன் {பூத கணங்களின் தலைவனான சிவன்}, பூத கணங்கள் சூழ அங்கே வந்தான்.(25)
[1] மற்ற பதிப்புகளுடன் ஒப்பிட்டு இந்த ஸ்லோகத்தின் பொருள் மாற்றப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "ஓ! மலையே, உன்னுடன் போரிட வேண்டிய தேவையேதும் இல்லை. உன்னுடைய முகப்பில் அமைந்திருக்கும் தோட்டத்தின் உரிமையாளனை நான் அழைக்கிறேன். அவன் போரிட முன்வரட்டும். போர்க்களத்தில் மறைந்திருந்து அழிவுப்பணியைச் செய்வதால் பயனென்ன?" என்றிருக்கும்.
மஹாதேவன் கோபத்தால் தூண்டப்பட்டபோது, மொத்த உலகமும் நடுங்கியது, ஆறுகள் எரியும் {கொதிக்கும்} நீருடன் நேர்மாறான போக்கில் பாய்ந்தன.(26) சிவனுடைய காந்தியால் திசைகள் அனைத்தும் பற்றி எரிந்தன. கோள்கள் ஒன்றோடொன்று போரிடத் தொடங்கின. ஓ! குருவின் வழித்தோன்றலே, அந்நேரத்தில் மலைகள் அனைத்தும் அசைந்தன,(27) மழையின் தேவன், புகையுடன் கூடிய கரித்துண்டுகளை {நெருப்புக் கங்குகளைப்} பொழிந்தான். சந்திரன் வெப்பமானான், சூரியன் குளிர்ந்தான்.(28) பிரம்மவாதிகள் வேதங்களை மறந்தனர். ஓ! பாவமற்றவனே, அந்நேரத்தில் குதிரைகள் பசுக்களையும், பசுக்கள் குதிரைகளையும் ஈன்றன.(29) மரங்கள் சாம்பலாகி பூமியில் விழுந்தன. காளைகள் பசுக்களை ஒடுக்கத் தொடங்கின, பசுக்கள் காளைகளைச் செலுத்தத் தொடங்கின.(30) திசைகள் அனைத்திலும் ராட்சசர்களும், யாதுதானர்களும், பிசாசங்களும் நிறைந்திருந்தனர்.(31)
தெய்வீகனான மஹாதேவன், இத்தகைய மாறுபட்ட நிலையில் அண்டத்தைக் கண்டு, நெருப்பைப் போன்று பிரகாசமிக்கத் தன் கதாயுதத்தை {சூலத்தை} ஏவினான்.(31,32) ஓ! மன்னா, ஹரனால் ஏவப்பட்ட அந்தப் பயங்கரக் கதாயுதம் {சூலம்}, நல்லோரின் பாதையில் முள்ளாக இருந்த அந்தகாசுரனின் மார்பில் பாயந்த உடனேயே அவனைச் சாம்பலாக்கியது.(33)
உலகின் பகைவன் கொல்லப்பட்டபோது, தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும் சங்கரனை {சிவனைத்} தணிவடையச் செய்யத் தொடங்கினர் {துதிக்கத் தொடங்கினர்}.(34) தேவதுந்துபிகள் முழங்கின, மலர் மாரி பொழிந்தது. ஓ! மன்னா, மூவுலகங்களும் கவலையில் இருந்து விடுபட்டு நிம்மதியடைந்தன.(35) தேவர்களும், கந்தர்வர்களும் பாடத் தொடங்கினர், அப்சரஸ்கள் ஆடத் தொடங்கினர். பிராமணர்கள் வேதமோதவும், வேள்விகளைச் செய்யவும் தொடங்கினர்.(36) கோள்கள் தங்கள் இயல்பு நிலையை அடைந்தன, ஆறுகள் முறையான போக்கில் பாய்ந்தன. நீரில் நெருப்பு எரியவில்லை {ஆறுகளில் பாய்ந்த நீர் கொதிநிலையில் இல்லை}. {திசைகள் அனைத்தும் தெளிந்தன} மக்கள் அனைவரும் நம்பிக்கைகளை வளர்க்கத் தொடங்கினர்.(37) மலைகளில் முதன்மையான மந்தரம், தூய்மையுடனும், செழிப்புடனும், பிரகாசத்துடனும் மீண்டும் அழகில் ஒளிர்ந்தது.(38) தலைவன் ஹரன், இவ்வாறு தேவர்களுக்கு நன்மையைச் செய்து, பாரிஜாதவனத்தில் மீண்டும் உமையுடன் விளையாடத் தொடங்கினான்" என்றார் {வைசம்பாயனர்}.(39)
விஷ்ணு பர்வம் பகுதி – 144 – 088ல் உள்ள சுலோகங்கள் : 39
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |