Monday 23 November 2020

அந்தகாசுரன் | விஷ்ணு பர்வம் பகுதி – 143 – 087

(அந்தகவதம்)

The history of the Asura Andhaka: They fight again | Vishnu-Parva-Chapter-143-087 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : அந்தகாசுரன் பிறப்பு; முனிவர்களின் கவலை; மந்தார வனத்தின் பெருமையை அந்தகனிடம் சொன்ன நாரதர்...

Lord Shiva in forest

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஓ! வைசம்பாயனரே, ஷட்புரம் அழிந்த கதையை நான் கேட்டேன். நீர் ஏற்கனவே குறிப்பிட்ட அந்தகனின் அழிவை இப்போது சொல்வீராக.(1) ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், அப்போது நேர்ந்த நிகும்பனின் அழிவையும் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என்றான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பழங்காலத்தில் தெய்வீகனான தலைவன் விஷ்ணுவால் {கிருஷ்ணனால்} திதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டபோது, அவள் மரீசியின் மகனான கசியபரை தவத்தால் வழிபட்டாள்.(3) ஓ! பரதனின் வழித்தோன்றலே, முனிவர்களில் முதன்மையான கசியபர், அவளது தவங்கள், தொண்டு, துணை, அழகு ஆகியவற்றில் நிறைவடைந்து,(4) தவத்தையே செல்வமாகக் கொண்ட அவளிடம், "ஓ! அழகியே, ஓ! அறம்சார்ந்த பெண்ணே, நான் உன்னிடம் நிறைவடைந்தேன். ஒரு வரத்தை வேண்டுவாயாக" என்றார்.(5)

திதி {கசியபரிடம்}, "ஓ! தலைவா, ஓ! அறம்சார்ந்தோரில் முதன்மையானவரே, தேவர்கள் என் மகன்களைக் கொன்றுவிட்டனர், இப்போது எனக்கு எவருமில்லை. தேவர்களால் கொல்லப்பட இயலாத ஒப்பற்ற ஆற்றல் கொண்ட மகனை நான் வேண்டுகிறேன்" என்று கேட்டாள்.(6)

கசியபர் {திதியிடம்}, "ஓ! தேவி, ஓ! தக்ஷனின் மகளே, ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, எனக்கு ருத்ரனுக்கு மேலான அதிகாரம் இல்லை, அவனைத் தவிர வேறு எந்த தேவனாலும் நிச்சயம் உன் மகனைக் கொல்லப்பட முடியாது. உன் மகன் ருத்ரனிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளட்டும்" என்றார்.(7,8)

ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, அதன்பிறகு வாய்மை நிறைந்தவரான அந்தக் கசியபர் தன் விரல்களால் அந்தத் தேவியின் வயிற்றைத் தீண்டினார்.(9) ஆயிரம் கரங்களையும், ஆயிரம் தலைகளையும், இரண்டாயிரம் கால்களையும், இரண்டாயிரம் கண்களையும் கொண்ட ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள்.(10) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவன் ஒரு குருட்டு மனிதனைப் போலச் செல்லும் காரணத்தால் அந்த மாகாணத்தின் மக்கள் அவனை அந்தகன் என்ற பெயரில் அழைத்தனர்.(11) ஓ! ஜனமேஜயா, காலனுக்கும் மேலானவனாகத் தன்னைக் கருதிக் கொண்ட அந்த தைத்தியன், அனைவரையும் ஒடுக்கி அவர்களின் ரத்தினங்களை வன்முறையுடன் அபகரித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.(12) உலகங்கள் அனைத்தையும் அச்சுறுத்திய அந்தகன், அவ்வாறு பெருஞ்செருக்குடன் அப்சரஸ்களையும் அபகரித்துத் தன் வீட்டில் வாழுமாறு அவர்களை வற்புறுத்தினான்.(13) அந்தத் திதியின் மைந்தன், மூடத்தனத்தால் பாவமிழைக்கத் துணிந்து பிறன் மனைவியரையும், ரத்தினங்களையும் களவு செய்தான்.(14)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அனைவரையும் ஒடுக்குபவனான அவன், ஒரு காலத்தில், தன் தொண்டர்களான அசுரர்களுடன் சேர்ந்து மூவுலகங்களையும் வெல்ல ஆயத்தம் செய்தான்.(15) இதைக் கேட்ட தலைவன் சக்ரன் {இந்திரன்}, தன் தந்தையான கசியபரிடம், "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அந்தகன் இவையனைத்தையும் செய்கிறான்.(16) ஓ! தலைவா, நான் செய்ய வேண்டியதை ஆணையிடுவீராக. ஓ! முனிவரே, என் தம்பியின் இத்தகைய ஒடுக்குமுறைகளில் எவ்வாறு நான் துன்புறுவேன்?(17) என் மாற்றாந்தாயின் அன்புக்குரிய மகனை எவ்வாறு நான் தாக்குவேன்? ஓ! ஐயா, வழிபடத்தகுந்த இந்தத் தாயின் மகன் என்னால் கொல்லப்பட்டால், நிச்சயம் அவள் என் மீது கோபம் கொள்வாள்" என்றான் {இந்திரன்}.(18)

தேவர்களின் மன்னனுடைய சொற்களைக் கேட்ட பெரும் முனிவர் கசியபர், " ஓ! தேவர்களின் தலைவா, உனக்கு நன்மை நேரட்டும்; அனைத்து வழிமுறைகளினாலும் நான் அவனைத் தடுப்பேன்" என்றார்.(19)

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, திதியும், கசியபரும் சேர்ந்து மிகக் கடினமாக முயற்சித்து மூன்று உலகங்களையும் வெல்வதிலிருந்து அந்தகனை விலகச் செய்தனர்.(20) இவ்வாறு தடுக்கப்பட்டாலும் அந்தத் தீயவன் தேவர்களையும், தேவலோகவாசிகளையும் பல்வேறு வழிமுறைகளின் மூலம் ஒடுக்கத் தொடங்கினான்.(21) தீய மனம் கொண்ட அந்த தைத்தியன், காட்டின் மரங்களை வேருடன் பிடுங்கி, தோட்டங்களையும் அழித்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, பலத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த அந்தத் தானவன், தேவர்களின் முன்னிலையிலேயே இந்திரனின் தேரோட்டிகளையும், குதிரைகளையும், திசைகளின் யானைகளையும் {திக்கஜங்களையும்} அபகரித்துச் சென்றான்.(22,23) தேவர்களின் பாதையில் முள்ளாக இருந்த அவன் {அந்தகன்}, யஜ்ஞங்களால் தேவர்களைத் தணிவாக்க விரும்பிய மனிதர்களின் வழிகளில் தடைகளை ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டான்.(24)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தகன் மீது கொண்ட அச்சத்தாலும், யஜ்ஞங்களுக்குத் தடையேற்படுவதாலும், வேள்விசெய்பவர்களான மூவர்ணத்தினர் {பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர்} வேள்விகளைச் செய்வதை நிறுத்தினர், தவசிகளும் {பலனில்லாத} வெறுமையான தங்கள் தவப் பயிற்சிகளைக் கைவிட்டனர்.(25) அவனது ஆணையின் பேரில் காற்றானவன் வீசினான், சூரியன் தன் கதிர்களைக் கைவிட்டான், சந்திரன் நட்சத்திரங்களுடன் தோன்றவும், மறையவும் செய்தான்.(26) பெரும்பயங்கரனும், பலத்தின் செருக்கில் மிதப்பவனுமான தீய அந்தகனின் மீது கொண்ட அச்சத்தால் பறவைகளாலும் ஆகாயத்தில் சுதந்திரமாகப் பறக்க முடியவில்லை.(27) ஓ! வீரா, ஓ! குரு குலத்தை நிலைநிறுத்துபவனே, இவ்வாறு பெரும்பயங்கரனான அந்தகனின் மீது கொண்ட அச்சத்தால் உலகம் ஓங்காரம், வஷட்காரம்[1] ஆகியவற்றைக் கைவிட்டது.(28) ஒரு காலத்தில் பாவம் நிறைந்த அந்த தைத்தியன், உத்ரகுரு, பத்ராஸ்வம், கேதுமாலம், ஜம்மபூத்வீப மாகாணங்களைச் சூறையாடினான் {அங்கு வசித்த மக்களை விரட்டினான்}.(29) தேவர்களாலும் அணுக முடியாத அந்த அசுரனிடம், தானவர்களும், பிற உயிரினங்களும் மதிப்பைக் காட்டினர்.(30)

[1] "{வேள்விகள்} முதலிய அறச்சடங்குகள் அனைத்தும் செய்யப்படாமல் நின்றன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! அறவோரில் முதன்மையானவனே, அந்தகனால் ஒடுக்கப்பட்ட பிரம்மவாதிகள் ஒன்று சேர்ந்து அவனது அழிவுக்காக வழிமுறைகளை வகுக்க முயன்றனர்.(31) அவர்களில் நுண்ணறிவுமிக்க பிருஹஸ்பதி, "ருத்ரனைத் தவிர வேறு எவராலும் அவனைக் கொல்ல முடியாது.(32) ஏனெனில், நுண்ணறிவுமிக்க கசியபர் திதிக்கு வரமளித்தபோது, ’ருத்திரனை எதிர்த்து என்னால் உன் மகனை காக்க இயலாது’ என்று சொல்லியிருக்கிறார்.(33) அனைவருக்கும் நன்மையைச் செய்யும் நித்தியனான சர்வனிடம் அனைத்து உயிரினங்களுக்கும் நேரும் தொல்லைகளை எடுத்துரைக்கும் வழிமுறைகளை நாம் காண வேண்டும்.(34) பெருஞ்சக்திவாய்ந்தவனும், அறவோரின் புகலிடமும், தெய்வீகனுமான தலைவன் பவனிடம் நம் நோக்கத்தைத் தெரிவித்தால் அவன் நிச்சயம் உலகில் நமக்கிருக்கும் துன்பத்தை நீக்குவான்.(35) ஏனெனில், தீயோரிடம் இருந்து நல்லோரைக் காப்பது, அதிலும் குறிப்பாக பிராமணர்களைக் காப்பது உலகத்தின் ஆசானும், தேவர்களின் தேவனுமான பவனின் பணியாகும்.(36) இருபிறப்பாளரில் சிறந்தவரான நாரதரிடம் சென்று அவரது துணையை நாடுவோம். மஹாதேவனின் நண்பரான அவர், நமக்குப் பொருத்தமான வழியைச் சுட்டிக் காட்டுவார்" என்றார் {பிருஹஸ்பதி}.(37)

பிருஹஸ்பதியின் சொற்களைக் கேட்ட தவசிகள், தெய்வீக முனிவர்களில் முதன்மையான நாரதரை வானத்தில் கண்டனர்.(38) தேவர்கள் அவரை முறையாக வழிபட்டு வரவேற்று, "ஓ! தெய்வீக முனிவரே, ஓ! தலைவா, ஓ! அறம்சார்ந்த ரிஷியே, கைலாசத்திற்கு விரைவாகச் சென்று அந்தகனின் அழிவைக் குறித்துப் பெருந்தேவனான ஹரனிடம் பேசுவீராக" என்றனர். அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காகவே இதை நாரதரிடம் சொன்னார்கள். அவரும், "அவ்வாறே ஆகட்டும்" என்றார்.(39,40)

கல்விமானான முனிவர் நாரதர், ரிஷிகள் புறப்பட்டுச் சென்ற பிறகு, தம் மனத்தில் இக்காரியத்தைச் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.(41) அந்தத் தெய்வீக முனிவர், தேவர்களின் தேவனான சிவனைக் காண்பதற்காக அவன் எப்போதும் வாழும் மந்தாரத் தோட்டத்திற்குச் சென்றான்.(42) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவர், சூலபாணியின் (சிவனுக்குரிய) அழகிய மந்தாரவனத்தில் ஓரிரவு வாழ்ந்து, இனிய நறுமணம் வீசும் பொருட்கள் அனைத்திலும் சிறந்தவையான மந்தார மலர்களால் நன்கு கோர்க்கப்பட்ட மாலையையும், சந்தன மலர்களாலான மற்றொரு மாலையையும் விருஷத்வஜனின் {சிவனின்} அனுமதியுடன் எடுத்துக் கொண்டு தேவர்களின் நகருக்கு {அமராவதிக்குப்} புறப்பட்டார்.(43-45) ஓ! மன்னா, நாரதர், நறுமணமிக்க அந்த மாலையைத் தன் கழுத்தில் சூடிக் கொண்டு, பலத்தில் செருக்குண்டிருக்கும் தீய ஆன்மா படைத்த அந்தகன் இருக்கும் இடத்திற்குச் சென்றார்.(46) அந்தகன், சந்தானக மலர்களாலான அந்த மாலையைக் கண்டும், அதன் இனிய நறுமணத்தை நுகர்ந்தும், "ஓ! பெரும் முனிவரே,(47) தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, இத்தகைய அழகிய நிறத்தையும், மணத்தையும் எப்போதும் கொண்டிருக்கும் இந்த அழகிய மலர்களை நீ எங்கே பெற்றீர்? இவை அனைத்து வகையிலும் தேவலோகத்தின் சந்தானக மலர்களை விஞ்சியிருக்கின்றனவே.(48) இவை எங்கே வளர்கின்றன, இவற்றின் உரிமையாளன் எவன்? ஓ! முனிவரே, விருந்தினராக தேவர்களால் மதிக்கப்படுபவரே, நீர் என்னிடம் மதிப்பு கொண்டிருந்தால் இவையனைத்தையும் சொல்வீராக" என்று கேட்டான்.(49)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, முனிவர்களில் முதன்மையானவரும், தவங்களையே ரத்தினங்களாகக் கொண்டவருமான நாரதர் இதைக் கேட்டு புன்னகைத்தபடியே அவனது வலக்கரத்தைப் பற்றிக்கொண்டு,(50) "ஓ! வீரா, இந்த மலர்கள் மலைகளில் சிறந்த மந்தர மலையில் அமைந்திருக்கும் அழகிய காட்டில் வளர்கின்றன. இவை திரிசூல பாணியின் படைப்பு.(51) அந்தப் பெருந்தேவனின் கணங்கள் அந்தக் காட்டைப் பாதுகாக்கின்றனர். அவனுடைய அனுமதியில்லாமல் எவனாலும் அங்கே நுழைய முடியாது.(52) பல்வேறு ஆடைகளை உடுத்தியவர்களும், பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களுமான அந்தக் கணங்கள் பயங்கரமானவர்களாகவும், அணுகப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். மஹாதேவனால் நன்கு பாதுகாக்கப்படும் காரணத்தால் அவர்கள் எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர்.(53)  அனைவரின் ஆன்மாவாகவும், பாதுகாவலனாகவும் உள்ளவனும், கணங்களால் தொண்டாற்றப்படுபவனுமான ஹரன், அந்த மந்தார வனத்தில் எப்போதும் உமாதேவியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(54)

ஓ! கசியப குலத்தில் பிறந்தவனே, மூவுலகங்களின் தலைவனான ஹரனை ஒருவன் கடுந்தவங்களைச் செய்து துதித்தால், அவன் மந்தார மலர்களை அடைவான்.(55) ஹரனால் விரும்பப்படும் இந்த மரங்கள் பெண் ரத்தினங்களையும், விலைமதிப்புமிக்க பிற ரத்தினங்களையும், விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் தரவல்லவையாக இருக்கின்றன.(56) ஓ! ஒப்பில்லா ஆற்றலைக் கொண்டவனே, துன்பங்கள் இல்லாத இடமாக இருக்கும் அந்த மரங்களின் காடு, தன்னொளி பெற்றதாக இருக்கிறது. சூரியனோ, சந்திரனோ தங்கள் கதிர்களை அங்கே பொழிவதில்லை.(57) ஓ! பெரும் பலம் கொண்டவனே, அந்தப் பெரும் மரங்களுக்கு மத்தியில் சில நறுமணங்களைக் கொடுப்பவை, சில நீரையும், வேறு சில பல்வேறு நறுமணமிக்க ஆடைகளையும் தரவல்லவை.(58) அவை விருப்பத்திற்குரிய அனைத்து வகை உணவுப் பொருட்களையும், பானங்களையும் தரவல்லவை.(59) ஓ! பாவமற்ற வீரா, அந்த மந்தார வனத்தில் எவரும் தாகமோ, பசியோ, களைப்போ அடைவதில்லை என்பதை அறிவாயாக.(60) தேவலோகத்தில் உள்ள மரங்களை விட மேன்மையான அந்த மரங்களின் குணங்களை நூறு ஆண்டுகளானாலும் விளக்கிச் சொல்ல முடியாது.(61) ஓ! திதியின் மகன்களில் முதன்மையானவனே {அந்தகா}, அங்கே ஒரே ஒரு நாள் வாழ்பவனும், மஹாதேவனுக்கும் மேன்மையான அனைவரையும் வெற்றி கொள்வான். இதில் ஐயமேதுமில்லை.(62) அந்தப் பகுதியானது, உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே சொர்க்கத்தின் சொர்க்கமாகவும், இன்பத்தின் இன்பமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது என் கருத்தாகும்" என்றார் {நாரதர்}".(63).

விஷ்ணு பர்வம் பகுதி – 143 – 087ல் உள்ள சுலோகங்கள் : 63
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்