(ஶக்ரநிஶ்சயகதநார்தம் நாரதஸ்ய த்வாரகாம் ப்ரதி கமநம்)
Narada's advice | Vishnu-Parva-Chapter-128-072 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் பெருமையைச் சொன்ன நாரதர்; பாரிஜாதம் கொடுக்க மீண்டும் மறுத்த இந்திரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாநயமிக்கப் பேச்சாளர்களில் முதன்மையானவரான நாரதர், மஹேந்திரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களின் மன்னனிடம் கமுக்கமாக இந்தச் சொற்களைச் சொன்னார்.(1) நாரதர், "ஏற்புடையவை மட்டுமே மன்னர்களிடம் சொல்லப்பட வேண்டும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. ஆனால் வாய்ப்பேற்படும் தருணங்களில் ஏற்பில்லாதவையாக இருப்பினும், அவர்களுக்கு நன்மை விளைவிக்கும் சொற்களும் சொல்லப்பட வேண்டும்.(2) அனுமதியில்லாமல் மன்னனின் முன்பு தோன்றுவதும் முறையாகாது என முனிவர்கள்[1] சொல்கின்றனர்.(3) ஆனால், நீ எப்போதும் காரியங்களில் எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் என் அறிவுரையை நாடுபவன் என்பதால் இன்று உன்னால் வேண்டப்படாதவற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், நீ விரும்பினால் அதை ஏற்றுக்கொள்வாயாக.(4) நண்பர்கள், அதிலும் குறிப்பாகத் தங்கள் நண்பர்கள் வீழ்வதைக் காண விரும்பாத நண்பர்கள், தாங்கள் அழைக்கப்படாவிட்டாலும் சந்தர்ப்பத்திற்கேற்ற நியாயமான நல்ல ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.(5) ஒருவனுக்கு ஏற்பில்லாததாக, இனிமையற்றதாக இருப்பினும் அவனது நலனுக்கு உகந்ததையே எப்போதும் அறம் சார்ந்த நன்மக்கள் பேச வேண்டும். அன்புக்கடனில் இருந்து விடுபடுவதற்கான வழி இதுவெனக் கடந்த காலங்களில் முனிவர்கள் அறிந்திருந்தனர்.(6) அற மீறல்களாக இருக்கும் ஏற்பில்லாத, உண்மையற்ற சொற்களை (எவரும்) கேட்கமாட்டார்கள். ஏற்புடையவையாக இருப்பினும் தீங்கிழைக்கும் சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது என முனிவர்கள் கண்டிக்கின்றனர்.(7) ஓ! நன்றாகக் கேட்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ! அனைத்தையும் அறிந்தவனே, என் கடமையும், பொறுப்பும், உனக்கு நன்மையை விளைவிப்பதுமான என் சொற்களைக் கேட்டு அதன் படி செயல்படுவாயாக.(8)
[1] "உலகம் சார்ந்த ஒழுக்க விதிகளையும், ஆட்சி அமைப்பின் அடிப்படை விதிகளையும் அறிந்தவர்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "உலக நடப்பை அறிந்தவனும், கொள்கைகளில் நிபுணனுமான ஒருவன், சிந்திக்காமல் செயல்படக்கூடாது என மன்னனுக்கு அறிவுரை கூற வேண்டும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உலகப்போக்கு நன்கறிந்தவன், நீதி விஞ்ஞானம் நன்கறிந்தவனான ஒருவன் குற்றம் காணாதவனாய் இருக்கக்கூடாது என்று சொல்கிறார்களல்லவா?" என்றிருக்கிறது.
ஓ! பலனை {பலாசுரனைக்} கொன்றவனே {இந்திரனே}, ஓ! தேவா, நண்பர்களுக்கு மத்தியிலோ, அன்புமிக்கச் சகோதரர்களுக்கு மத்தியிலோ உண்டாகும் வேற்றுமை, பகைவரின் இதயங்களில் மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.(9) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நன்மையின் வெற்றி தொடர்பான {நன்மையில் முடியக்கூடிய} செயல்கள் மட்டுமே செய்யப்பட வேண்டும், ஓ! நுண்ணறிவுமிக்கவர்களில் சிறந்தவனே, மற்றவற்றை ஆழ்ந்து ஆய்வு செய்த பின்னரே செய்ய வேண்டும்.(10) தொடங்கப்பட்டால் வருத்தத்தைக் கொண்டு வரும் செயல்களைக் கல்விமான்கள் ஒருபோதும் {செய்யத்} தொடங்கக்கூடாது. இதுவே ஞானிகளின், புத்திசாலிகளின் கொள்கையாகும்.(11) கிருஷ்ணனுக்குப் பாரிஜாதத்தைக் கொடுக்க மறுக்கும் உன்னுடைய இந்தச் செயலில் எந்த நன்மையான விளைவையும் உண்மையில் நான் காணவில்லை. ஓ! தேவர்களின் தலைவா, அதன் விளைவுகளை இப்போது கேட்பாயாக.(12)
எவனுடைய வெளிப்பாடாக இந்த அண்டமும், வெளிப்படாத சுயமும், நனவு கொண்ட பிறவும் இருக்கின்றனவோ அந்த ஹரியிடமிருந்தே, காரணங்களின் உலகிலும், விளைவுகளின் {காரியங்களின்} உலகிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும், மாயையின் ஆதிக்கத்தைக் கடந்த பரமாத்மாவாக ஞானிகளால் அறியப்படும் பரமனுமான அந்த விஷ்ணுவிடம் இருந்தே அனைத்தும் தங்கள் நனவுகளை {புத்தியைப்} பெறுகின்றன[2].(13,14) சிறப்புமிக்க உமாதேவி பிரகிருதியின் முக்கியமான சிறப்பான பகுதியாக இருக்கிறாள், விஷ்ணுவோ நனவு படைத்த {புத்தியுள்ள} படைப்புகள் அனைத்தினுடைய நனவின் {புத்தியின்} பிறப்பிடமாக இருக்கிறான்; வெளிப்பட்டிருக்கும் அண்டத்தில் படர்ந்தூடுருவி இருக்கும் அவன் இன்பநுகர் பொருட்கள் அனைத்துடனும் அடையாளம் காணப்படுகிறான்.(15) உமையைப் போலவே ருக்மிணியும், கிருஷ்ணனின் பிற மனைவியரும் வெளிப்பட்டிருக்கும் அவனது குணங்களே ஆவர்; பரிமாற்றத்திற்குட்படும் பிரகிருதியும், விஷ்ணுவும், ருத்திரனும் இந்தக் குணங்களைக் கொண்டிருக்கிறார்கள்[3].(16) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ருத்திரனுக்கும், விஷ்ணுவுக்குமிடையில் சிறிதளவு வேறுபாடும் கிடையாது; மேலும் அவர்கள் தகுதிவாய்ந்த அனைத்துப் படைப்புகளையும் (சத்வ, ரஜஸ், தமோ குணங்களுடன் கூடிய படைப்புகள் அனைத்தையும்) கட்டுப்படுத்தும் நித்தியமானவர்களாகவும், முதன்மையான குணங்களாகவும் இருக்கின்றனர்.(17) அனைத்தையும் படைப்பவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனும், அதோக்ஷஜன் என்றும் அறியப்படுபவனுமான விஷ்ணு உலகைப் படைப்பவனாகவும், மஹேஷ்வர தேவன் {உலகை} அழிப்பவனாகவும் இருக்கின்றனர்.(18) ஓ! தேவர்களின் தலைவா, பிரம்மனும், எஞ்சிய தேவர்களும், பிரஜாபதிகளும் உயரான்ம மஹேஸ்வரனால் பின்னர்ப் படைக்கப்பட்டவர்களாவர்.(19) எல்லையற்றவனும், புராதனப் புருஷனும், குணங்களுக்கு அப்பாற்பட்டவனும், நினைத்தற்கரியவனுமான விஷ்ணு இவ்வாறே வேதங்களில் விளக்கப்படுகிறான்.(20)
[2] "இந்த {13,14வது} ஸ்லோகங்கள் வங்க மொழிபெயர்ப்பையொட்டி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "ஹரி (விஷ்ணு - கிருஷ்ணன்) மட்டுமே இந்த அண்டத்தை ஆள்கிறான். அவனே இந்த அண்டத்தின் பிறப்பிடமாக இருக்கிறான். அவனே இயற்கையையும், அனைத்தையும் ஆள்கிறான். இவ்வாறே ஞானிகள் சொல்கிறார்கள்.(13) வெளிப்படாதவனிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் பவனிடம் (சிவனிடம்) இருந்து வந்தவையாகும். தலைவன் விஷ்ணு, அனைத்திலும் புத்தியாக இருக்கும் பரமனான சிவனின் ஆன்மாவாக இருக்கிறான்.(14)" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "எல்லா உலகுக்கும் நியாமகனான ஹரி ஒருவனே ஜகத்துக்கு ப்ரதான காரணப் பூதன். அவனை எல்லா அறிவாளிகளும் ப்ரக்ருதிக்கு மேலான க்ஷேஷ்தஜ்ஞனாக அறிகிறார்கள். அவ்யக்தமான அவனது வ்யக்தமான பிரிவு எல்லா உத்பத்திக்கும் காரணப் பூதமானது. ஜ்ஞானமுடைய அந்த வ்யக்தமான எல்லாவற்றிற்கும் மேலான ஆத்மா விஷ்ணு தேவன்" என்றிருக்கிறது.
[3] சித்திரசாலை பதிப்பில் இந்த 15, 16 ஸ்லோகங்கள், "புகழ்மிக்க உமாதேவி, இயற்கையின் முக்கியப் பகுதியாவாள். உலக நலன் கருதி இந்த மொத்த உலகமும், அவளுடைய பெயரிலேயே வெளிப்பட்டிருக்கிறது. ருக்மிணி போன்ற பெண்கள் அந்தத் தேவியின் முக்கியக் குணங்களை வெளிப்படுத்துகிறார்கள். உமாதேவி, பெருந்தலைவனான சிவன் ஆகியோருடைய குணங்களின் விளைவால் இயற்கையில் வீழ்ச்சியேதும் ஏற்படுவதில்லை" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ப்ரக்ருதியின் முதல் பாகம் யஸஸ்ஸுடைய உமாதேவி எல்லாம் கலந்த வ்யக்த உலகம் லோகத்தை நிலை நிறுத்தும் ஸ்த்ரீ (சக்தி)யெனும் பெயருடையது. ருக்மிணி முதலிய ஸ்திரீகள் அந்த ப்ரக்ருதியின் வ்யக்தமான முதல் குணம். ப்ரக்ருதி தேவி அழிவற்றவள். குணங்களுடைய தேவன் மஹேச்வரன்" என்றிருக்கிறது.
சிறப்புமிக்கவனான விஷ்ணு, பெரும் தவங்கள் செய்து வந்த அதிதியால் பழங்காலத்தில் வழிபடப்பட்டான்; அப்போது அவன் அதிதியிடம் நிறைவடைந்தவனாக அவளுக்கு ஒரு வரத்தை அளித்தான்.(21) உன் அன்னையான இந்த அதிதி நாராயணத் தேவனிடம், "உன்னை மகனாக {உன்னைப் போன்ற மகனை} அடைய விரும்புகிறேன்" என்று சொல்லிவிட்டு, அவனைப் பூஜித்து வணங்கினாள்.(22) அப்போது அவன் அவளிடம், "இந்த அண்டத்தில் எனக்கு இணையானவன் வேறு எவனும் இல்லை; எனவே நானே என் அம்சத்துடன் உனக்கு மகனாகப் பிறப்பேன்" என்றான்.(23)
இவ்வாறே, ஓ! தேவர்களின் தலைவா, அனைத்தையும் படைத்தவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான நாராயணன் உனது தம்பியாகப் பிறந்து, உபேந்திரன் என்று அழைக்கப்படுகிறான்.(24) கடந்த, நிகழ், எதிர் காலங்களின் தலைவனும், நித்திய தேவனுமான ஹரி, இவ்வாறே தன் சொந்த விருப்பத்தின் காரணமாக அவதரிப்பதைத் தன்னியல்பாகக் கொண்டவன் என்பதாலும் கசியப குலத்தில் தன்னைத்தானே படைத்துக் கொண்டான்.(25) அண்டத்தின் தலைவனும், அதனைப் படைப்பவனும், அழிப்பவனுமான கேசவன், உலக நன்மையை விரும்பி மதுராவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(26) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மசகு நெய்யால் படர்ந்தூடுருவப்படும் பலலப்பிண்டத்தைப் போல அண்டமும் அற்புதசக்தி வாய்ந்த விஷ்ணுவால் படர்ந்தூடுவப்பட்டிருக்கிறது[4].(27) அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அனைத்தையும் பாதுகாப்பவனும், (அடிப்படை பூதங்கள் வெளிப்படுத்தும்) குணங்கள் அனைத்தையும் கடந்தவனுமான அவன், தன் விருப்பத்தால் தூண்டப்பட்டவனாக உலகில் அவதரித்துத் தன்னில் மாற்றங்களை உண்டாக்குகிறான்.(28) இந்தக் காரணங்களினால் கேசவன் தேவர்கள் அனைவராலும் வழிபடப்பட வேண்டியவனாவான்; தாமரை உந்தி படைத்தவனும், எல்லாம் வல்லவனும், மக்களைப் படைத்தவனுமான அவன், அனந்தனின் வடிவில் உலகைத் தாங்குவதால் பெரிதும் புகழப்படுகிறான். வேதம் ஓதும் நல்லவர்களால் அவனே வேள்வி (யஜ்ஞம்) என்றும் அழைக்கப்படுகிறான்.(29,30)
[4] சித்திரசாலை பதிப்பில், "ஓ பிறருக்கு மதிப்பளிப்பவனே, அன்பால் படர்ந்தூடுருவப்படும் உலக வடிவங்களைப் போல இந்த மொத்த அண்டமும் விஷ்ணுவின் மகிமையால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மாம்ஸ பிண்டம் நெய்யில் எப்படி வ்யாபிக்கப்படுமோ அப்படிக் கீர்த்தி வாய்ந்த விஷ்ணுவால் இந்த ஜகத்து வ்யாபிக்கப்பட்டுள்ளது" என்றிருக்கிறது.
அந்தத் தலைவன், சத்ய யுகத்தில் வெண் தோற்றத்தையும், திரேதா யுகத்தில் சிவப்புத் தோற்றத்தையும், துவாபர யுகத்தில் மஞ்சள் தோற்றத்தையும் இப்போது இந்தக் கலியுகத்தில் கரிய தோற்றத்தையும் ஏற்றிருக்கிறான்.(31) இந்த ஹரியே தெய்வீகத் தோற்றத்தை ஏற்று ஹிரண்யாக்ஷனைக் கொன்றான், பூமியானவள் நீரின் {கடலின்} ஆழத்தில் மூழ்கிய போது இந்தத் தேவன், உலகிற்கு நன்மை செய்யும் விருப்பத்தில் பன்றியின் {வராக} வடிவை ஏற்றுப் பூமியை உயர்த்தினான். அவன் சிங்க மனிதத் {நரசிங்கத்} தோற்றத்தை ஏற்று ஹிரண்யகசிபுவைக் கொன்றான்.(32,33) மங்கலத் தேவனான அந்த விஷ்ணு குள்ளனின் {வாமன} வடிவை ஏற்று உலகை வென்று, பாம்புகளைக் கயிறாகக் கொண்டு {அந்த நாகபாசங்களால்} பலியையும் {மஹாபலிச்சக்கரவர்த்தியைக்} கட்டினான்.(34) அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், தயாளனுமான விஷ்ணு, (செல்வத்தைப் படைக்க உழைத்தவர்களான} தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மரபுவழியில் பொதுவாக இருந்த செழிப்பை உனக்கெனப் பறித்துக் கொடுத்தான்.(35) ஜனார்த்தனன் அறம் தேய்ந்தவனையே கொல்கிறான். பொய்மையைச் சார்ந்திருப்பவனைக் கொல்வது அந்த உயரான்மாவின் நோன்பாகும்.(36) நல்லோரின் புகலிடமும், அறத்தில் எப்போதும் உறுதியாக இருப்பவனுமான கோவிந்தன், உனக்கு நிறைவளிப்பதற்காகவே தேவர்களின் பகைவர்களாக இருந்த முக்கியத் தானவர்களைக் கொன்றான்.(37)
தன்னிறைவைக் கொண்டவனான அவன், ராமனாகப் பிறந்து யானையைக் கொல்லும் சிங்கத்தைப் போல ராவணனையும், ராட்சசர்கள் பிறரையும் கொன்றான்.(38) அண்டத்தின் தலைவனும், சிறந்தவர்கள் அனைவரிலும் சிறந்தவனுமான அவன், உலக நன்மைக்காகவே உபேந்திரன் என்ற பெயரில் அறியப்படுபவனாக இன்னும் மனிதர்களின் உலகில் வாழ்ந்து வருகிறான்.(39) அந்த ஹரி, சடாமுடி தரித்து, கருப்பு மான் தோலுடுத்தி, கையில் தண்டத்துடன் வைக்கோல் குவியலுக்கு மத்தியில் பெருகும் நெருப்பைப் போலத் தைத்தியர்கள் மத்தியில் {வாமன அவதாரத்தில்} திரிவதை நான் கண்டிருக்கிறேன்.(40) உலக நன்மைக்காக அந்தக் கோவிந்தன், தானவர்களால் அழிக்கப்பட்ட உலகத்தில் இருந்து தானவர்களை அழிப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.(41) ஓ !தேவர்களில் சிறந்தவனே, ஜனார்த்தனன் உன்னுடைய பாரிஜாத மரத்தை நிச்சயம் துவாரகைக்குக் கொண்டு செல்வான். நான் பொய் சொல்ல மாட்டேன்.(42) உடன் பிறந்த அன்பால் நிறைந்திருக்கும் உன்னால் நிச்சயம் கிருஷ்ணனைத் தாக்க இயலாது; அதே போல உன்னைப் போன்ற அண்ணனைக் கிருஷ்ணனால் அடிக்கவும் இயலாது.(43) ஓ! தேவா, என்னால் சொல்லப்படும் சொற்களை நீ கேட்க விரும்பாவிட்டால், குடிமை {அரசமைப்பு} விதிகளை அறிந்தவர்களும், உங்கள் நன்மையை விரும்புகிறவர்களுமான உன்னுடைய அமைச்சர்கள் பிறருடன் ஆலோசிப்பாயாக" என்றார் {நாரதர்}".(44)
வைசம்பாயனர், "ஓ! ஜனமேஜயா, நாதரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹேந்திரன், உலகத்தால் மதிக்கப்படும் அந்த முனிவரிடம் பின்வரும் சொற்களில் மறுமொழி கூறினான்.(45) {இந்திரன்}, "ஓ! இருபிறப்பாள முனிவரே, நீர் கூறுவது போன்ற கிருஷ்ணனின் இவ்வகையான மகத்துவங்களை நான் ஏற்கனவே பல முறை கேட்டிருக்கிறேன்.(46) கிருஷ்ணனின் இயல்பு உம்மால் விவரிக்கப்பட்டது போல இருந்தாலும், அறம்சார்ந்த நல்லோரின் கடமையை மனத்தில் முழுமையாகக் கொள்ளும் நான், ஒருபோதும் அவனுக்குப் பாரிஜாத மரத்தைக் கொடுக்கமாட்டேன்.(47) ஓ முனிவரே, உமக்கு நன்மை நேரட்டும். கிருஷ்ணன், பாராட்டத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், வலிமைமிக்கவனும், ஆற்றல்மிக்கவனுமாவான் என்பதை அறிந்திருப்பதால், ஓர் அற்பக் காரணத்திற்காக அவன் கோபமடையமாட்டான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.(48) பெருஞ்சக்திவாய்ந்த தேவர்கள் மன்னிப்பதையே எப்போதும் தங்கள் இயல்பாகக் கொண்டவர்களாகவும், ஞானக் கண்ணால் காணும் முதிர்ந்தோரின் சொற்களுக்குக் கீழ்ப்படிபவர்களாகவும் இருப்பார்கள்.(49) உயரான்மக் கிருஷ்ணன், அறவோரில் முதன்மையானவனும், அனைத்தையும் அறிந்தவனும் ஆவான்; எனவே, ஓர் அற்பக் காரணத்திற்காகத் தன் அண்ணனுடன் சச்சரவில் ஈடுபடுவது அவனுக்குத் தகுமா?(50) அதோக்ஷஜன் என் அன்னைக்கு வரமளித்ததைப் போலவே தன் அண்ணனாக இருக்கும் அவளுடைய மகனின் வேண்டுகோளை இப்போது நிறைவேற்றுவதும் அவனுக்குத் தகுந்ததாகும்.(51) ஜனார்த்தனன் தானே விரும்பி இந்திரனின் தம்பியான உபேந்திரனானதைப் போலவே, இப்போது தன் அண்ணனான இந்திரனின் மதிப்பைத் தக்கவைப்பதும் அவனுக்குத் தகுந்ததாகும்.(52) முந்தைய அவதாரத்தில் அந்தத் தேவன் பிறவியில் என்னுடைய முன்னுரிமையை ஏற்கவில்லையா? அந்த மதுசூதனன் இப்போது என் அண்ணனாக விரும்பினால் அவன் அவ்வாறே ஆகட்டும்" என்றான் {இந்திரன்}.(53)
அறம் சார்ந்தவரும், புத்திமானும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவருமான நாரதர், பலனை {பலாசுரனைக்} கொன்றவன் (பாரிஜாதத்தைப் பிரிவதில்லை எனத்) தீர்மானத்துடன் இருப்பதைக் கண்டு, யதுக்களில் முதன்மையான கிருஷ்ணனால் பாதுகாக்கப்படும் நகரத்திற்கு {துவாரகைக்குச்} சென்றார்" என்றார் {வைசம்பாயனர்}.(54)
விஷ்ணு பர்வம் பகுதி – 128 – 072ல் உள்ள சுலோகங்கள் : 54
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |