(பாரிஜாதம் ந தாஸ்யாமீதீந்த்ரபாஷணம்)
Narada's advice and Indra's answers | Vishnu-Parva-Chapter-127-071 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் எச்சரிக்கையை நாரதர் மூலம் கேள்விப்பட்ட இந்திரன்; போர் புரியாமல் பாரிஜாதத்தைக் கொடுப்பதில்லை என உறுதியுடன் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நன்மனம் கொண்டவரும், அறம் சார்ந்த அறிவுடனும், நாநயத்துடனும் பேசுபவருமான நாரதர், தேவர்களின் தலைவனுடைய {தேவேந்திரனுடைய} சொற்களைக் கேட்டு இவ்வாறு பேசினார்,(1) "ஓ! பலனை {பலாசுரனைக்} கொன்றவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உன்னிடம் அதிக அக்கறை கொண்டுள்ளதால் உனக்கு நன்மை விளைவிப்பதையே சொல்வேன்.(2) நான் உன் மனநிலையை ஏற்கனவே அறிந்திருந்ததால், வலிமைமிக்கத் தேவனான சிவனுக்கும் பழங்காலத்தில் நீ பாரிஜாத மரத்தைக் கொடுக்கவில்லை என்பதை வசுதேவனின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னேன்.(3) நான் அவனிடம் (பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்லக் கூடாததற்கான) எண்ணற்ற காரணங்களைச் சொன்னாலும் அவன் அவற்றில் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(4) அந்தத் தாமரைக் கண்ணன், "நான் இந்திரனின் தம்பி என்பதால் அவனால் பேணி வளர்க்கப்பட வேண்டியவன் {சீராட்டத்தகுந்தவன்}" என்று என்னிடம் மறுமொழியாகச் சொன்னான்.(5)
ஓ! தேவா, ஓ! விருத்திரனைக் கொன்றவனே, நான் எண்ணற்ற காரணங்களை மீண்டும் மீண்டும் சொன்னாலும் அவனுடைய மனம் மாறவில்லை.(6) மேலும், ஓ! தேவா, மனிதர்களில் முதன்மையான மதுசூதனன் தன் உரையின் இறுதியில் கோபத்துடன்,(7) "தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, பன்னகர்களில் முதன்மையானவர்களாலோ என் உறுதி மொழி நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியாது; ஓ! முனிவரே உமக்கு அருள்கள் அனைத்தும் கிட்டட்டும்.(8) இணக்கமான முறையில் உம்மால் இவ்வாறு கோரப்பட்டும் புரந்தரன் என்னிடம் பாரிஜாத மரத்தைக் கொடுக்கவில்லை என்றால், மணமிக்கக் களிம்புகளைக் கொண்டு சசியால் {இந்திராணியால்} பூசப்படும் புரந்தரனின் மார்பில் நான் என் கதாயுதத்தை வீசுவேன்" என்று சொன்னான்[1].(9) ஓ! மஹேந்திரா, இதுவே உன் தம்பியான உபேந்திரனின் உறுதியான தீர்மானமாகும்; இனி நீ இக்காரியத்தில் எது முறையானதோ, எது நியாயமானதோ அதைச் செய்வாயாக.(10) ஓ! தேவர்களின் தலைவா, உன் நலனுக்கு உகந்த சொற்களை என்னிடம் இருந்து கேட்பாயாக; பாரிஜாதத்தைத் துவாரகைக்குக் கொண்டு செல்ல அனுமதிப்பதே உனக்குச் சிறந்ததென எனக்குத் தோன்றுகிறது" என்றார் {நாரதர்}.(11)
[1] "இங்கே வரும் 8, 9 ஸ்லோகங்களும், விஷ்ணு பர்வம் 68ம் அத்தியாயத்தில் வரும் 38, 39 ஸ்லோகங்களும் ஒன்றே" எனச் சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அனைத்தையும் அழிப்பவனான அந்த ஆயிரங்கண் தேவன் {இந்திரன்}, கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தனித்துவமான தெளிந்த குரலில் இவ்வாறு பேசினான்,(12) "ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, அப்பாவி அண்ணனான என்னிடம் கேசவன் இவ்வாறு நடந்து கொள்ள விரும்பினால் உண்மையில் அவன் எனக்குச் செய்யக்கூடிய தீங்கென்ன?(13) ஓ! நாரதரே, கடந்த காலங்களில் கிருஷ்ணன் எனக்கெதிரான செயல்கள் பலவற்றைச் செய்து என்னை அவமதித்துள்ளான்; அவன் என் தம்பி என்பதை நினைவில் கொண்டதால் மட்டுமே அவை அனைத்தையும் நான் பொறுத்தேன்.(14) காண்டவ வனம் எரிக்கப்பட்ட நிகழ்வில் அவன் அர்ஜுனனின் தேரைச் செலுத்தியபோது, பெருகும் காட்டுத் தீயை அணைக்க முயன்ற என் மேகங்களை அவன் தடுத்தான்.(15) கோவர்த்தன மலையை உயர்த்தியதன் மூலம் என் விருப்பத்திற்கு எதிரான இனிமையற்ற செயலை அவன் செய்தான். மேலும் விருத்திரனைக் கொல்லும் சமயத்தில் நான் அவனது உதவியைக் கோரியபோது,(16) "நான் பக்கச் சார்பற்றவன், அனைத்து உயிரினங்களையும் சமமாகப் பார்ப்பவன்" என்று எனக்கு மறுமொழி கூறினான். பிறகு நான் என் கரங்களின் வலிமையால் விருத்திரனைக் கொன்றேன்.(17) ஓ! முனிவரே, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் போர் நேரும்போதெல்லாம் கிருஷ்ணன் (என் அதிகாரத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டு) தன் இனிய விருப்பத்தின்படியே எப்போதும் போரிட்டு வந்திருக்கிறான் என்பதை நீரும் அறிவீர்.(18)
இக்காரியத்தில் அதிகம் பேசி பயனென்ன? எங்களுக்கிடையில் ஓர் இணக்கமான உணர்வைத் தக்கவைத்துக் கொள்ள நீர் முயற்சி செய்வீராக. ஓ! நாரதரே, நீரே என் சாட்சி; உறவினர்களுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுவது என் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.(19) கேசவன் என் மார்பில் தன் கதாயுதத்தை வீசத் தயாராக இருக்கலாம் (அஃது எதிர்பாராத செயலும் அல்ல); ஆனால் இது தொடர்பாகப் புலோமன் மகளின் {இந்திராணியான சசியின்} பெயரைச் சொல்ல எந்த உரிமையும் இருப்பதாகத் தெரியவில்லை {இது தொடர்பாக என் மனைவியின் பெயரைச் சொல்ல அவனுக்கு எந்த உரிமையுமில்லை}.(20) எல்லாம் வல்லவரான எங்கள் தந்தை கசியபரும், எங்கள் அன்னை அதிதியும் நீரில் {கடற்கரையில்} வசிக்கச் சென்றிருக்கிறார்கள். இக்காரியம் அவர்களின் முன்பு வைக்கப்பட வேண்டும்.(21) குறிப்பாக, தற்கட்டுப்பாடு இல்லாதவனும், அறியாமையும், ஆணவமும் நிறைந்தவனுமான என் தம்பி கிருஷ்ணன், தன் மனைவியுடைய தூண்டுதலின் பேரில் (மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய} தன் அண்ணனான என்னை நிந்திக்கிறான்.(22) ஓ! இரு பிறப்பாளரே, விஷ்ணுவே கூடத் தன் மனைவியால் தூண்டப்பட்டவனாக இந்த நாளின் என்னை அவமதித்திருக்கிறான் என்பதால், ஓ! விப்ரரே, பெண்களுக்கு ஐயோ, ஆணவ செல்வாக்கிற்கு ஐயோ.(23) ஓ! வலிமைமிக்க முனிவரே, ஆசையாலும், காமத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணன், எங்கள் தந்தையான கசியபரின் குலத்தையோ, எங்கள் அன்னையான அதிதி உதித்த தக்ஷ குலத்தையோ, நான் அவனுடைய அண்ணன் என்பதையோ, நான் தேவர்களின் அரசன் என்பதையோ, தேவர்களிடம் எனக்கிருக்கும் மரியாதையையோ கொஞ்சமும் மதிக்கவில்லை.(24,25)
ஓ! பாவமற்றவரே, நன்னடத்தையும், ஞானமும் கொண்ட தம்பி ஒருவன், ஆயிரம் மகன்களையும், மனைவியரையும் விட மதிப்புமிக்கவன் எனக் கடந்த காலத்தில் பிரம்மன் என்னிடம் சொன்னார்.(26) சகோதரர்களைப் போன்ற நண்பன் வேறு எவனும் கிடையாது, வாழ்வாதரத்தை மட்டுமே தேடும் பயனற்றவர்களே மற்றவர்கள் என்று படைப்பாளர்களில் ஒருவரான என் தந்தையும், என் அன்னை அதிதியும் என்னிடம் சொன்னார்கள்[2].(27) ஒரே கருவறையில் பிறந்த சகோதரர்களைப் போல உலகில் வேறு எந்த நண்பனுமில்லை என என் தந்தை கசியபர் சொன்னார். பாவத்தில் நாட்டம் கொண்ட தானவர்கள், என் சகோதரர்கள் இல்லை என்பதால் என்னுடன் போரிடுகிறார்கள்.(28) ஓ! விப்ரரே, இப்போது நான் சொல்லப்போவதில் தற்புகழ்ச்சி இருப்பதால் நான் இதைச் சொல்லக்கூடாது; இதற்காக என்னை மன்னிப்பீராக; அதற்கான சந்தர்ப்பம் நேர்வதால் மட்டுமே நான் இன்று இதைச் சொல்கிறேன்.(29)
[2] "நம்பிக்கைக்குரிய உண்மையான நட்பும், அன்பும் சகோதரர்களுக்கிடையில் மட்டுமே இருக்கும். வேறு நபர்களுக்கிடையே அது வெறும் கேலிக்கூத்துக்காகவும், வணிகத்துக்காகவும், பராமரிப்பு மற்றும் ஆதரவுக்காகவும் மட்டும்தான் இருக்கும் என ஆசிரியர் இங்கே சொல்ல வருகிறார். மனைவியானவள், தன் கணவன் தன்னை ஆதரிக்கிறான் என்பதற்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிறாள். மூப்படைந்த பெற்றோர், தங்கள் மகன் தங்களைப் பராமரிக்கிறான் என்பதற்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிறார்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
முற்காலத்தில், ஓ! முனிவர்களில் சிறந்தவரே, ஓ! பாவமற்றவரே, வரத்தைப் பெற்றவர்களும், திறமைமிக்கவர்களுமான வில்லாளிகளால் தேவர்களுடைய வில்லின் நாண் அறுக்கப்பட்ட போது,(30) தலையற்ற விஷ்ணுவின் உடலானது என்னால் ஆதரிக்கப்பட்டது. வெட்டப்பட்ட தலை ருத்திரனின் (சிவனின்) காந்தியால் (உடலுடன்) சேர்க்கப்பட்டபோது,(31) ஒருபோதும் வீழாதவனான (அச்யுதனான) விஷ்ணு, தேவர்களைவிடத் தானே மேன்மையானவனென மீண்டும் சொன்னான். அப்போது, ஓ! நாரதரே, அந்தக் கேசவன் வில்லில் நாண்பூட்டி செருக்குடன் நின்றான்[3].(32) ஓ! முனிவரே, நான் கிருஷ்ணனைப் புறக்கணித்தால், அன்னையும், தந்தையும் என்ன சொல்வார்களோ என்று நினைத்தும், அவனிடம் கொண்ட பழைய அன்பாலும் மட்டுமே நான் கிருஷ்ணனின் உடலில் அவதரித்தேன்.(33) ஓ! நாரத முனிவரே, தம்பியான அவனை அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே வேள்வியில் காணிக்கையளிக்கப்படும் இந்திரனின் பங்கை வைஷ்ணவமாக்கி {வைஷ்ணவ பாகமாக்கி} அவனுக்குக் கொடுத்தேன்.(34)
[3] வேள்வியின் வடிவில் விஷ்ணு இருந்த தக்ஷனின் வேள்வி அழிக்கப்பட்ட நிகழ்வை இது குறிக்கிறது எனச் சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது. இந்தக் கதை சதபத பிராமணத்தில் குறிப்பிடப்படுகிறது. மேலே 30 முதல் 32ம் ஸ்லோகம் வரையுள்ள செய்தி சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "பழங்காலத்தில் வில்லாளிகளால் விஷ்ணுவுடைய வில்லின் நாண் அறுக்கப்படவில்லை, பிறகு, ஓ பெரும் முனிவர்களில் முதன்மையானவரே, அவனது தலை உடலில் இருந்து வெட்டப்பட்டபோது நானே அவனது உடலுக்குள் புகந்து அவனது உடலை நிலைக்கச் செய்தேன், பிறகு ருத்திரர்களின் சக்தியைக் கொண்டு அவனுடைய உடலில் தலையைக் கவனமாகப் பொருத்துவதில் நான் வென்றபோது, தேவர்களில் முதன்மையானவனும், சிறந்தவனும் தானே என அச்யுதன் சொல்லிக் கொண்டான்; ஓ நாரதரே, மீண்டும் தன் வில்லில் புது நாண்பொருத்திக் கொண்டு (தன் எதிரிகளை எதிர்த்து) கேசவன் செருக்குடன் நின்றான்" என்று வரும். உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மதியில் சிறந்தவரே, முன் (தக்ஷ யஜ்ஞ ஸமயம்) தேவர்களது வரதானத்தால் வில் நாண் அறுக்கப்பட்டு (யஜ்ஞரூபி) விஷ்ணுவின் தலையும் அறுக்கப்படும் ஸமயம் அவன் உடல் என்னால் காக்கப்பட்டது. முயற்சி செய்து ருத்ர சக்தியால் அறுப்புண்ட தலை என்னால் சேர்க்கப்பட்டது. நாரதரே, மறுபடியும் அச்சுதன் கேசவன் தேவர்களில் சிறந்தவன் என்று தன்னைப் பாராட்டி சொல்லி வில்லை நாணேற்றி கர்வம் கொண்டிருந்தான்" என்றிருக்கிறது.
எனினும், ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, அரசனான நானே இதுவரை பிற போர்களில் முதல் அடியை அடிப்பேன் என்றாலும், கெடுவாய்ப்பாக எனக்கும் அவனுக்கும் இடையில் போர் உண்டானால், அவனே முதல் அடியை அடிக்கட்டும்.(35) அறத்தின் சாரத்தை அறிந்தவரே, ஓ! பாவமற்றவரே, கிருஷ்ணனுடைய அனைத்து அவதாரங்களிலும் அவனுடைய மதிப்புக்குரிய மனிதர்கள் அனைவரையும் நான் பாதுகாத்திருக்கிறேன்.(36) விஷ்ணு, என்னுடைய வசிப்பிடத்தை நொறுக்கி, அதிலுள்ள பொருட்களைக் கொண்டு உலகங்கள் அனைத்திலும் முதன்மையான தன் உலகை {வைகுண்டத்தை}, அல்லது தன் புவனத்தை அமைத்தான்.(37) ஓ! முனிவரே, அதனால் நான் என் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. என் தம்பியிடம் கொண்ட மதிப்பால் "கிருஷ்ணன் சிறுவன், அவன் என்னால் சீராட்டத்தக்கவன்" என்றே எப்போதும் நான் நினைத்து வந்திருக்கிறேன்.(38) ஓ! நாரதரே, என் தந்தையும், அன்னையும், "என்னுடைய மகனான இவன் சிறுவனாகவும், வயதில் இளையவனாகவும் இருக்கிறான்" எனச் சொல்வார்கள்.(39) மேலும் கேசவன் என் அன்னைக்கு மிகவும் பிடித்தவன் என்பதால் எனக்கு அவனிடம் பொறாமை உண்டு. (என் அன்னையுடைய) அன்பின் ஆழம் கேசவனிடம் உச்சத்தை எட்டுகிறது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(40)
கேசவன் அனைத்தையும் அறிந்தவன், வலிமைமிக்கவன், வீரன், தக்க மனிதர்களை மதிப்பவன் என நான் நம்பிவந்தேன்; ஆனால் அந்த நம்பிக்கை இப்போது பொய்யாகிவிட்டது.(41) ஓ! நாரதரே, கேசவனிடம் நீர் சென்று என்னுடைய இந்தச் சொற்களைச் சொல்வீராக; "என் பகைவர்கள் அறைகூவி அழைக்கையில் போரில் நான் ஒருபோதும் புறமுதுகிடமாட்டேன்.(42) நீ விரும்பினால் வருவாயாக, நீ விரும்பிய எதையும் நான் பொறுத்துக் கொள்வேன். ஓ! மனைவிக்கு அடங்கியவனே, நீ விரும்பினால் முதல் அடியை அடிப்பாயாக.(43) ஓ! ஜனார்த்தனா, உறுதியான கரத்துடன் கருடன் மீது அமர்ந்து வந்து உன் சாரங்க கதாயுதத்தாலோ, சக்கரத்தாலோ, வாளாலோ முதல் அடியை அடிப்பாயாக.(44) ஓ! ஐயோ, ஓ! கேசவா, அவ்வாறு தாக்கப்பட்டால், தம்பியிடம் கொண்ட அன்பு என்னைத் தளரச் செய்யாமல் இருந்தால், நான் என் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி உன்னைத் தாக்குவேன்" {என்று நான் சொன்னதாக அவனிடம் சொல்வீராக}.(45)
ஓ! முனிவர்களில் சிறந்தவரே, சக்கரபாணியான கிருஷ்ணனால் போரில் நான் வெல்லப்படாத வரையில் பாரிஜாத மரத்தைவிட்டு நான் பிரியமாட்டேன்.(46) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, தம்பியான அவன் தன் அண்ணனான என்னைப் போருக்கு அறைகூவியழைக்கும்போது, மனைவிக்கு அடங்கியவனான அந்த ஹரியை என்ன காரணத்தினால் நான் மன்னிக்க வேண்டும்?(47) ஓ! சிறப்புமிக்க முனிவரே, கிருஷ்ணனால் பாதுகாக்கப்படும் துவாரகைக்கு இன்றே சென்று, போருக்கு நான் தயாராக இருப்பதாக அச்யுதனிடம் சொல்வீராக.(48) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, என் சொற்கள் அனைத்தையும் மனத்தில் சுமந்து சென்று, அந்த மதுசூதனனிடம் இவ்வாறு சொல்வீராக, "உன்னால் நான் வெல்லப்படும் வரை பாரிஜாத மரத்தின் ஒற்றை இலையையோ, ஏன் பாதி இலையையோ கூடப் பெறுவதற்கு உன்னை அனுமதிக்க மாட்டேன்" என்று சொல்வீராக.(49) ஓ! சிறப்புமிக்க முனிவரே, "வஞ்சகமாக மரத்தைக் களவு செய்தல் உனக்குத் தகாது; நியாயமான போர் நடைபெறட்டும்; கபட நடைமுறைகள் நிந்தனைக்குரியவை" என்று எனக்காக அச்யுதனிடம் அச்சமில்லாமல் சொல்வீராக" என்றான் {இந்திரன்}".(50)
விஷ்ணு பர்வம் பகுதி – 127 – 071ல் உள்ள சுலோகங்கள் : 50
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |