(பாரிஜாதநிபம்தநம் ஸத்யாகோபம்)
The present of the Parijata by Krishna to Rukshmini | Vishnu-Parva-Chapter-122-066 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நாரதர் கொடுத்த பாரிஜாத மலர்; அதை ருக்மிணி அடைந்தது; ருக்மிணியைத் துதித்த நாரதர்; சத்யபாமாவின் பொறாமை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, மதுராவில் பிறந்த கிருஷ்ணனின்[1] மங்கல வரலாற்றை மீண்டும் மீண்டும் கேட்டு இன்னும் என்னால் முழுமையான நிறைவை எட்ட முடியவில்லை.(1) மனைவியரை மணந்து கொண்டு துவாரகையில் வசித்தவனும், ஆறு குணங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணனின் வரலாற்றை நீர் நன்கறிவீர். இப்போது எனக்கு அதைச் சொல்வீராக" என்று கேட்டான்[2].(2)
[1] மற்ற மூன்று பதிப்புகளையும் ஒப்புநோக்கி ஒரு சொல்லின் பொருள் மட்டும் இங்கு மாற்றப்பட்டுள்ளது.
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால் இந்த ஸ்லோகம் பின்வருமாறு அமையும்: "மாதவன் தன் மனைவிகளை மணந்து கொண்டு மதுராவில் வாழ்ந்து வந்தபோது, அந்தக் கிருஷ்ணனுடைய வரலாற்றின் ஆறு பகுதிகளை அறிந்தவர் நீர்". உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "த்வாரகையில் வசிக்கும் மணம் புரிந்து கொண்ட கிருஷ்ணனது ஆறு குண விசேஷம் பொருந்திய சரித்ரத்தைச் சொல்லும். உமக்கும் எல்லாம் தெரிந்ததல்லவா" என்றிருக்கிறது. சித்திரசாலை பதிப்பின் அடைப்புக்குறிக்குள், "இறையாண்மை, ஞானம், புகழ், செழிப்பு, உலகம் சார்ந்த ஆசைகளில் இருந்து விடுதலை, தர்மம் ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவன் கிருஷ்ணன் என்று உரையாசிரியர் நீலகண்டர் விளக்குகிறார்".
வைசம்பாயனர், "ஓ! ஜனமேஜயா, ஓ! பரதனின் வழித்தோன்றலே, பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன் தன் மனைவியரை மணந்து கொண்ட பிறகு செய்த செயல்கள் அனைத்தும் அவனுக்குத் தகுந்தவையே {அற்புதம் நிறைந்தவையே}. நான் அவற்றைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! மன்னா, பெருஞ்சக்திவாய்ந்தவனும், பலம்வாய்ந்தவனுமான வாசுதேவன் தன் திருமணத்திற்குப் பிறகு ஒருமுறை ருக்மிணியுடன் சேர்ந்து ரைவத மலைக்குச் சென்றான்.(4) ருக்மிணி நோற்ற நோன்பு முடியும் நாளில் நடக்கப் போகும் பெரும் விழாவில் பிராமணர்களைத் தன்னால் நிறைவடையச் செய்ய முடியும் என்பதால் மதுசூதனனே நேரடியாக அந்த இடத்திற்குச் சென்றான்.(5) ஓ! மன்னா, நாரதரின் ஆணையின்படியே அந்த வாசுதேவனின் மகன்களும், அவனது சகோதரர்களும் ஏற்கனவே அங்கே அனுப்பப்பட்டனர்.(6) நுண்ணறிவுமிக்க மாதவனின் பதினாறாயிரம் மனைவிகளும், தங்கள் தகுதிக்குத் தகுந்த காந்தியுடன் அங்கே சென்றனர்.(7) புலனடக்கத்துடன் கூடிய அந்தத் தலைவன் அங்கே, இருபிறப்பாளர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், எப்போதும் அறச்சடங்குகளைச் செய்பவர்களுக்கும், தன் நலத்தை நாடிய அனைவருக்கும் அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தான்.(8) ஓ! குருவின் வழித்தோன்றலே, யௌனேயர், சிரௌதேயர், மௌகேயர்[3], நண்பர்கள், தூய்மையானவர்கள், பேரறச்சடங்குகளை எப்போதும் செய்பவர்கள், பெருங்குலங்களில் பிறந்தவர்கள் ஆகியோருடன் அங்கே சென்றவனும், தன்மீது பற்றும், ஆர்வமும் கொண்டவர்களிடம் எப்போதும் அன்பு கொண்டவனும், பக்தர்களின் புகலிடமுமான அந்தத் தலைவன் {கிருஷ்ணன்}, வேள்வியால் பிராமணர்களையும், தன்னுடைய உற்றார் உறவினரின் பதவிக்குத் தகுந்தபடி அவர்களையும் நிறைவடையச் செய்தான்.(9,10) தன் அன்புக்குரிய மனைவியும், பீஷ்மகனின் மகளுமான ருக்மிணியின் நோன்பு முடிந்ததும் அந்தத் தலைவன் அவளை உயர்வாகக் கௌரவித்தான்.(11)
[3] "திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வழியில் அமையும் உறவினர்கள் யௌனேயர்கள், தன்னுடன் கல்வி பயின்றவர்கள் சிரௌதேயர்கள், வேள்வி புரோஹிதர்கள் மௌகேயர்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன் அங்கே வசித்து வருகையில் அவன் தன் மனைவியர் சூழ ருக்மிணியுடன் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அங்கே நாரத முனிவர் வந்தார்.(12) முனிவர்களில் சிறந்தவரான அவர் அங்கே வந்த போது, வாசவனின் தம்பியும், அளவற்ற சக்தி கொண்டவனுமான கேசவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி முறையாக அவரைத் துதித்தான்.(13) ஓ! பரதனின் வழித்தோன்றலே, வசுதேவனின் மகனான கிருஷ்ணனால் துதிக்கப்பட்ட முனிவர்களில் சிறந்த நாரதர், பக்திமான்களால் துதிக்கப்படும் பாரிஜாத மலரொன்றை அவனிடம் {கிருஷ்ணனிடம்} கொடுத்தார்.(14) ஓ! மன்னா, போஜனின் மகளான ருக்மிணி தன்னருகே இருந்ததால் ஹரியும் {கிருஷ்ணனும்} அந்தப் பாரிஜாத மலரை அவளிடம் {ருக்மிணியிடம்} கொடுத்தான்.(15) களங்கமற்றவளும், கிருஷ்ணனின் அன்புக்குரியவளுமான அந்தப் பெண்ணும், அவனுடைய குறிப்பை அறிந்து அந்த அழகிய மலரைத் தன் கூந்தலில் சூடிக்கொண்டாள்.(16) மூவுலகங்களில் உள்ள அழகுகளின் மொத்த வடிவமாகத் திகழ்ந்தவளும், நாராயணனை எப்போதும் ஈர்ப்பவளுமான அந்தப் பீஷ்மகனின் மகள், அந்நேரத்தில் அந்தத் தெய்வீக மலரால் இருமடங்கு அழக்கூட்டப்பட்டாள்.(17)
அப்போது பிரஜாபதியின் மகனான நாரதர், காமனின் {மன்மதனின் / பிரத்யும்னனின்} அன்னையிடம் (ருக்மிணியிடம்}, "ஓ! தேவி, ஓ! கற்புக்கரசியே, இந்த மலர் உனக்குத் தகுந்ததே.(18) ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவளே, இம்மலரைச் சூட நீயே தகுந்தவளென்றும், உன் தொடர்பு ஏற்பட்டதால் இது மிகச் சரியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்.(19) ஓ! மங்கல குணங்களைக் கொண்டவளே, ஓ! கணவனிடம் எப்போதும் அன்பு கொண்டவளே, இந்த மலர் ஒருபோதும் வாடாது.(20) ஓ! நற்குணங்கள் பலவற்றைக் கொண்டவளே, ஓ! காலஞானம் அறிந்தவளே, ஓராண்டு காலம் இந்த மலர் விரும்பிய மணத்தை வெளியிடும்.(21) ஓ! இனிய வாக்கைக் கொண்ட அழகிய பெண்ணே, விரும்பிய வெப்பத்தையும், குளிர்ச்சியையும் இந்த மலர் அளிக்கும், விரும்பிய வண்ணம் பல்வேறு சாறுகளும் இதிலிருந்து வெளிவரும்.(22) ஓ! அழகிய பெண்ணே, வேண்டும்போது நற்பேற்றை அருளும் இந்தப் பாரிஜாத மலர், இனிமை நிறைந்த நறுமணத்தையும் வீசும்.(23) ஓ! தேவி, நீ எந்த மலரை விரும்பினாலும் மரங்களின் மன்னனான பாரிஜாத மரத்தின் இம்மலர் அதைக் கொடுக்கும்.(24) ஓ! மங்கலப் பெண்ணே, நல்லவளே, நற்பேற்றின் வேராகத் திகழும் இஃது அறம் வளர்க்கும், சூடுவோரின் மனத்தைத் தீய பாதையில் திரும்ப விடாது.(25) நீ காண விரும்பும் நிறத்தை இஃது ஏற்கும், நீ விரும்பியவாறே மெலிதாகவோ, பருமனாகவோ மாறும்.(26) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, விரும்பத்தகாத நாற்றத்தை நீக்கி, நறுமணத்தை அதிகரித்து, இரவில் விளக்கின் பணியை இது செய்யும்.(27) மேலும் மலர்களில் மிகச் சிறந்தவையான சந்தானக மலர் மாலையை இஃது உனக்குத் தரும், நினைக்கும்போதெல்லாம் சிதைவற்ற உடைகளையும் உனக்குக் கொடுக்கும்.(28) நீ இம்மலரைச் சூடும்போதெல்லாம், ஒரு தேவியை {தேவர்களைப்} போலவே பசி, தாகம், களைப்பு, முதுமை ஆகியவற்றை வெல்வாய்.(29) நீ விரும்பும்போதெல்லாம் இது நல்ல இசைக்கருவிகளின் துணையுடன் இசையை ஒலிக்கும்.(30) ஓர் ஆண்டுக் காலம் நிறைவடைந்ததும், இஃது உன்னிடம் இருந்து சென்றுவிடும் என்பது இம்மலரின் விதியாகும்.(31) ஓ! அழானவளே, உனக்கு நன்மை நேரட்டும். தேவர்களை நிறைவடையச் செய்வதற்காகவே படைப்பாளன் {பிரம்மன்} பாரிஜாத மலருக்குள் இந்தப் பண்பைப் பொதிந்திருக்கிறான்.(32) தேவர்களில் முதன்மையான மகாதேவனின் அன்புக்குரிய மனைவியும், இமயத்தின் மகளும், அண்டத்தின் தலைவியுமாக இருப்பதால் உமா தேவி இம்மலரை எப்போதும் சூடுகிறாள்.(33) ஓ! குணவதியே, மகேந்திரனுக்கும், பிற தேவர்களுக்கும் அன்னையான அதிதி, புலோமனின் மகளான சசி {இந்திராணி}, தேவர்களின் அன்னையான சாவித்ரி, ஸ்ரீதேவி ஆகியோரும் எப்போதும் இம்மலரைச் சூடுகின்றனர். தேவர்களின் மனைவியருக்கும், முன்னணி தேவர்களான வசுக்களின் மனைவியருக்கும், பிறருக்கும் கூட இதைச் சூடிக்கொள்ளும் கால அளவு ஓராண்டைக் கடப்பதில்லை.(34,35)
ஓ! போஜனின் மகளே {ரும்மிணியே}, வாசுதேவனின் பதினாறாயிரம் மனைவியருக்கு மத்தியில் முதன்மையானவளாகவும், அவனது பெரும் அன்புக்குரியவளாகவும் உன்னையே நான் கருதுகிறேன்.(36) ஓ! குணவதியே, ஓ! அனைவருக்கும் தலைவனாக இருப்பவனின் அன்புக்குரிய மனைவியானவளே, நற்குணத்தைக் கொண்டவர்களான உன் சக்காளத்திகள் அனைவரும் இன்று கௌரவ நீரால் உன்னால் நனைக்கப்பட்டனர் {அவர்கள் அனைவரையும் இன்று நீ விஞ்சிவிட்டாய்}.(37) மதுசூதனனான கிருஷ்ணன், இந்த மந்தார மலரை உனக்கு அளித்ததால் உன் நற்பெறும், புகழும் வெளிப்பட்டது.(38) ஓ! அழகிய பெண்ணே, நற்பேறு படைத்தவளும், கற்புக்கரசியும், எப்போதும் தன்னைப் பெரும்பேறு பெற்றவளாகக் கருதிக் கொள்பவளும், சத்ராஜித்தின் மகளுமான சத்யபாமா இன்று உன்னுடைய நற்பேற்றைக் குறித்து அறியப் போகிறாள்.(39) சாம்பனின் அன்னையான ஜாம்பவதியும், காந்தாரியும், உயரான்ம வாசுதேவனின் பிற மனைவியரும், நற்பேற்றுக்கான தங்கள் பேராசையை இன்று கைவிடுவார்கள்.(40) ஓ! தேவி, ஆயிரம் மனோரதங்களாலும் வெல்ல இயலாத நற்பேறெனும் வாகைசூடும் உன்னுடைய வெற்றிரதம் இன்று வெளிவந்திருக்கிறது.(41) ஓ! போஜனின் மகிமை பொருந்திய அழகிய மகளே, நான் இன்று கிருஷ்ணனின் மற்றொரு ஆன்மாவாக உன்னை அறிகிறேன்.(42) ஓ! ஹரியின் அன்புக்குரிய மனைவியானவளே, மூவுலகங்களின் ரத்தினத் திரளைப் போன்ற இந்த மலரை அச்யுதன் {கிருஷ்ணன்} உனக்கு அளித்திருப்பதால் உன் வாழ்வு அருளப்பட்டதாகும்" என்றார் {நாரதர்}.(43)
ஓ! பேரரசே {ஜனமேஜயா}, சத்யபாமாவால் அங்கே அனுப்பப்பட்டிருந்த பெண் பணியாட்கள் நாரதரின் இந்தச் சொற்களைக் கேட்டனர்.(44) ஓ! மன்னா, கிருஷ்ணனின் மற்ற மனைவியரும் அங்கே தங்களுடைய பணிப்பெண்களை அனுப்பியிருந்தனர். அவர்களைக் கண்டே நாரதர் ருக்மிணியைக் குறித்து இவ்வாறு சொன்னார்.(45) இவை அனைத்தையும் குறிப்பாகக் கேட்ட அந்தப் பணிப் பெண்கள் அனைவரும், பெண்களுக்குரிய தங்கள் இயல்பின் விளைவால் இந்தச் செய்தியைக் கிருஷ்ணனின் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்றனர்.(46) இதைக் கேட்ட அந்தத் தேவியர், குலத்துக்குத் தகுந்த ருக்மிணியின் குணங்களைப் புகழ்ந்து ஒருவருக்கொருவர் காதுகளில் முணுமுணுக்கத் தொடங்கினர்.(47) தாமோதரனின் {கிருஷ்ணனின்} மனைவியரில் கிட்டத்தட்ட அனைவரும், "ஏன் இது நடக்கக்கூடாது? ருக்மிணியே கேசவனின் முதல் மனைவியும், அவருடைய மகனின் அன்னையும் ஆவாள். எனவே அவள் இத்தகைய மதிப்புக்குத் தகுந்தவளே" என்று சொன்னார்கள்.(48) ஆனால், பெருஞ்செருக்குடையவளும், விஷ்ணுவின் அன்புக்கு எப்போதும் உரியவளுமான சத்யபாமாவால் தன் சக்காளத்தி இத்தகைய நற்பேற்றை அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(49) இளமை நிறைந்த அந்த அழகிய தேவி, எப்போதும் தன் நற்பேற்றில் செருக்குடையவளாகவும், உணர்ச்சி மிகுந்தவளாகவும் இருந்தாள். தன் சக்காளத்தி அடைந்த இத்தகைய நற்பேற்றைக் கேட்டதும் அவள் பொறாமையால் பீடிக்கப்பட்டாள்.(50)
புன்சிரிப்பைக் கொண்ட அவள், எரிதழலைப் போன்ற கோபத்தால் பீடிக்கப்பட்டவளாகக் குங்குமத்தையும், பட்டாடையையும் கைவிட்டு, வெள்ளுடை உடுத்தினாள்.(51) பொறாமையில் பெருகும் நெருப்பில் எரிந்தவளும், காந்தியிழந்தவளுமான அவள், மேகத்திற்குள் நுழையும் நட்சத்திரத்தைப் போலக் கோபமெனும் அந்தப்புரத்திற்குள் தனியாக நுழைந்தாள்.(52) தன் கணவனின் {கிருஷ்ணனின்} மீது கொண்ட கோபத்தின் அடையாளமாக அவள் குளிர்ந்த சந்திரனைப் போன்ற வெள்ளைத் துணியை நெற்றியில் கட்டினாள். சிவந்த சந்தனத்தை அந்தத் துணிக்கு அருகில்பூசினாள்.(53) எனவே சத்யபாமா தேவி அவற்றை மறக்காமல் நினைத்துக் கொண்டே இருந்தாள். பெரும் தலையணையைக் கொண்ட கட்டிலில் அவள் தன் ஆபரணங்களை வீசினாள். பிறகு ஒற்றைப் பின்னல் பின்னிக் கொண்டு தன் சக்காளத்தியின் நற்பேற்றை மீண்டும் மீண்டும் நினைத்துக் கோபத்தில் தன் தலையை அசைத்துக் கொண்டே அங்கு அமர்ந்திருந்தாள்.(54) கேசவன் அவளை அன்புடன் வருடினாலும், பணிப்பெண்கள் சொன்ன கோளால் கோபத்தில் இருந்த அவள், தன் புருவத்தை வளைத்து, பெருமூச்சு விடத் தொடங்கி, தான் விளையாடும் தாமரைகளைத் தன் நகங்களால் கிழிக்கத் தொடங்கினாள்[4]" என்றார் {வைசம்பாயனர்}.(55)
[4] சித்திரசாலை பதிப்பில், "பணிப்பெண்கள், "காரணமில்லாமல் நீ கோபப்படுகிறாய்" என்று சொல்லி அந்தக் கோபவீட்டில் இருந்து அவளை இழுக்க முயன்றனர். உன்னதக் குலத்தில் பிறந்தவளாக இருப்பினும் அவள் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டபடியே தன் கண் இமைகளைத் தாழ்த்தி நீரில் கிடந்த மலரை (தாமரையைத்) தன் நகங்களால் கிழித்தாள்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஸத்யபாமை பணிப்பெண்களால் "உயர்ந்த குலத்தினளாகிய நீ அகாரணமாகக் கோபங்கொள்ளக் கூடாது" என்று கூறி வெளியில் இழுக்கப்பட்டவளாய் வளைந்த புருவமுடைய அவள் பெருமூச்சு விட்டு தாமரை புஷ்பத்தைப் பிய்த்து எறிந்தாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்தியாயம் முழுவதும் இல்லை. இதற்குப் பின்னர் வரப் போகும் சில அத்யாயங்களும் அதில் இடம்பெறவில்லை.
விஷ்ணு பர்வம் பகுதி – 122 – 066ல் உள்ள சுலோகங்கள் : 55
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |