(பாரிஜாதஹரணம்)
Krishna visit with Aditi | Vishnu-Parva-Chapter-121-065 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நரகனின் செல்வங்கள் அனைத்தையும், பதினாறாயிரம் கன்னியரையும் துவாரகைக்கு அனுப்பிய கிருஷ்ணன்; அதிதியிடம் சென்று காது குண்டலங்களைக் கொடுத்தது; பாரிஜாத மரத்தைப் பிடுங்கி துவாரகைக்குப் புறப்பட்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இந்திரனின் தம்பியான விஷ்ணு, வாசவனைப் போன்று பலமிக்கவனும், பூமியின் மகனுமான நரகனைக் கொன்றுவிட்டு அவனது வீட்டைத் தேடத் தொடங்கினான்.(1) நரகனின் கருவூலத்தை அடைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அங்கே அளவற்ற செல்வத்தையும், பல்வேறு வகை ரத்தினங்களையும் கண்டான்.(2) வைரங்கள், முத்துக்கள், பவளங்கள், வைடூரியங்கள், இந்திரநீலக் கற்கள், பல்வேறு ரத்தினங்கள்,(3) தங்கக் குவியல்கள், விலைமதிப்புமிக்கப் பிற பொருட்கள், சந்திரனைப் போல ஒளிரும் விலையுயர்ந்த படுக்கை,(4) எரியும் நெருப்பைப் போன்று பிரகாசிக்கும் சிங்க வடிவத்திலான அரியணை {சிம்மாசனம்},(5) மழைக்கால மேகங்களின் வண்ணத்திலானதும், சந்திரனின் ஒளியைக் கொண்டதும், தங்கப் பிடி கொண்டதுமான அழகிய குடை ஆகியவற்றையும் அங்கே கண்டான்.(6) ஓ! ஜனமேஜயா, வருணனிடம் இருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நீரோடைகளைக் கொண்டதும், தங்கத்தாலானதுமான நீரூற்றும் அங்கே இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம்; குபேரன், யமன், இந்திரன் ஆகியோரின் அரண்மனைகளில் கூட நாம் காணாதவையும், கேட்காதவையுமான ரத்தினக்குவியல்கள் அந்த நரகனின் கருவூலத்தில் இருந்தன.(7,8) பூமியின் மகனான நரகன், நிசுந்தன், ஹயக்ரீவன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகும் பிழைத்திருந்த அவனது {நரகனின்} கருவூலக் காவலர்கள், கேசவனுக்குத் தகுந்தவையெனக் கருதி விலைமதிப்புமிக்க அந்த ரத்தினங்களையும், அந்தப்புரக் காரிகையரையும் அவனிடம் {கிருஷ்ணனிடம்} கொண்டு சென்றனர்.(9,10)
அந்தத் தைத்தியர்கள், "ஓ! ஜனார்த்தனா, பல்வேறு வகைகளிலான இந்த ரத்தினங்களும், செல்வங்களும், பவளத்தால் செய்யப்பட்ட இந்தப் பொருட்களும்,(11) தங்கச் சரங்களுடன் கூடிய இந்த அழகிய கொடிகளும், விற்களையும், தோமரங்களையும், பிற ஆயுதங்களையும் சுமந்த செல்லும் இந்த இருபதாயிரம் களிறுகளும் {ஆண்யானைகளும்}, நாற்பதாயிரம் பிடிகளும் {பெண் யானைகளும்}, மிகச் சிறந்த இனத்தைச் சேர்ந்த எட்டு லட்சம் குதிரைகளும்(12,13) உன்னிடம் கொண்டு வரப்படும். மேலும் நீ விரும்பும் எண்ணிக்கையிலான பசுக்களை அந்தக, விருஷ்ணிகளின் வீடுகளுக்கு நாங்கள் எடுத்துச் செல்வோம்.(14) ஓ! தலைவா, நல்ல வேலைப்பாடுகளைக் கொண்ட கம்பளிப் படுக்கைகள், விரும்பியவாறு பேசும் அழகிய பறவைகள்,(15) சந்தனம், அகில், மலை ரத்தினங்கள், மூவுலகங்களிலும் திரட்டப்பட்ட செல்வங்கள் ஆகியவையும் நரகனின் அரண்மனையில் இருக்கின்றன.(16) தேவர்கள், கந்தர்வர்கள், பன்னகர்கள் ஆகியோரிடம் முன்பு இருந்த செல்வங்களும், ரத்தினங்களும் இப்போது நரகனின் வீடுகளில் இருக்கின்றன" என்றனர் {கருவூலக் காவலர்கள்}".(17)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மதுசூதனனான ரிஷிகேசன், இந்த ரத்தினங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, அவற்றை ஆய்வு செய்து, தானவர்களின் மூலம் அவை அனைத்தையும் விரைவாகத் துவாராவதிக்கு அனுப்பி வைத்தான்.(18) அவன், பொன்னைப் பொழியவல்ல வாருணியெனும் குடையைத் தனக்கு எடுத்துக் கொண்டு, மேகத்தின் உடல்வடிவமே ஆனவனும், பறவைகளில் முதன்மையானவனுமான கருடன் மீது ஏறி, முதன்மையான மணி மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(19,20) ஜனார்த்தனன், அந்த மணி மலையில் வாயில்களையும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வைடூரியச் சிகரங்களையும், கதவுகளையும் கண்டான். தங்க வண்ணம் பூசப்பட்ட மாளிகைகளின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட மொத்த மணி மலையும், மின்னல்களால் அலங்கரிக்கப்பட்ட மேகத்தைப போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(21-23) தூய்மையானவர்களும், தங்க நிறம் கொண்டவர்களும், உருண்டு திரண்ட இடைகளைக் கொண்டவர்களும், கந்தர்வர்கள், முன்னணி அசுரர்கள் ஆகியோரின் மகள்களுமான கன்னிகையர், நரகனால் பலவந்தமாகக் கடத்தி வரப்பட்டு அங்கே அடைக்கப்பட்டிருப்பதை மதுசூதனன் கண்டான். அவர்கள் அனைத்து வகை இன்பங்களையும் இழந்தவர்களாக இருந்தாலும்,(24,25) தேவர்களின் நகரத்தில் இன்னும் வசித்துக் கொண்டிருப்பவர்களைப் போலவும், தெய்வீகக் காரிகையரைப் போலவும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர். நரகனுடைய சக்தியின் காரணமாக எவராலும் அவர்களை அபகரிக்க முடியவில்லை.(26)
அந்தக் காரிகையர், யதுக்களில் முதன்மையானவனும், பெருந்தோள்களைக் கொண்டவனுமான கிருஷ்ணனைக் காண்பதற்காகத் தங்கள் புலன்களை அடக்கி, நோன்புகள் நோற்று மெலிவடைந்து, பட்டுடை உடுத்தியவர்களாகவும், ஒற்றைப் பின்னல் கொண்டவர்களாகவும் கூப்பிய கரங்களுடன் ஜனார்த்தனனை அணுகி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(27,28) பேரசுரர்களான நரகன், முரன் {முரு}, ஹயக்ரீவன், நிசுந்தன் ஆகியோர் இறந்ததை அறிந்ததால் அவர்கள் அச்சமில்லாதவர்களாகக் கிருஷ்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(29) அவர்களின் காவலர்களாக இருந்த முதியவர்கள், அதிக வயதைக் கொண்டவர்களாக இருப்பினும் கூப்பிய கரங்களுடன் யது குல வழித்தோன்றலான கிருஷ்ணனை வணங்கினர்.(30) பெருந்தோள் படைத்த கிருஷ்ணனின் சந்திரன் போன்ற முகத்தைக் கண்ட அந்த அழகிய காரியர் அனைவரும், அவனையே தங்கள் கணவனாகக் கொள்ள விரும்பினர்.
அதன்படியே அவர்கள் மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன்,(31,32) "அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் அறிந்த தெய்வீக முனிவர் நாரதரும், காற்றின் தேவனும் {வாயு தேவனும்} எங்களிடம் முன்பு சொன்ன அனைத்தும் உண்மையே.(33) சங்கு, சக்கர, கதாதாரியான அண்டத் தலைவன் நாராயணன், பூமியின் மகனான நரகனைக் கொன்ற உடனேயே உங்கள் கணவனாவான் என்று அவர்கள் சொன்னார்கள்.(34) எப்போதும் நாங்கள் கேள்விப்பட்டுக் கொண்டே இருந்தவரும், பகைவரைக் கொல்பருமான எங்கள் அன்புக்குரிய தலைவரை இதோ காண்கிறோம். ஓ! உயரான்ம தேவனான இவரைக் கண்டதன் மூலம் இன்று நாங்கள் அருளப்பட்டோம்" என்றார்கள்.(35)
இவ்வாறு அந்தத் தாமரைக் கண் கொண்ட காரிகைகளால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்ட வாசவனின் தம்பி {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரையும் தேற்றினான். அந்தப் பெண்கள் அனைவராலும் வரவேற்கப்பட்ட தாமரைக் கண்ணனும், கேசவனுமான மதுசூதனன், அவர்கள் அனைவரையும் தேரில் {பல்லக்குகளில்} ஏற்றித் தன் பணியாட்களின் {கிங்கரர்களின்} பாதுகாப்புடன் துவாரகைக்குக் கொண்டு சென்றான்.(36,37) அந்த வாகனத்தை {பல்லக்குகளைச்} சுமந்து செல்லும்போது, காற்றைப் போல வேகமாகச் செல்லும் ராட்சசர்கள் மத்தியில் பேரராவரம் எழுந்தது.(38) பலவான்களில் முதன்மையான விஷ்ணு, அந்தச் சிறந்த மலையின் பிரகாசமிக்க அழகிய சிகரத்தை வேரோடு பெயர்த்துவிட்டு, பறவைகளில் சிறந்த கருடனில் ஏறிச் சென்றான். தெளிந்த சூரியனையும், சந்திரனையும் போன்றிருந்த அது {அந்த மணி மலை}, ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அமைந்த வாயில்களைக் கொண்டிருந்தது. பறவைகளும், மான்களும், பல்வேறு விலங்குகளும், யானைகளும் அங்கு நிறைந்திருந்தன. அது மரங்களால் அழகூட்டப்பட்டதாகவும், குரங்குகள் நிறைந்ததாகவும் இருந்தது.(39,40) பெரும்பாறைகளும், பன்றிகளும், எருமைகளும், மான்களும் அங்கே இருந்தன. அதன் மேட்டுச் சமவெளி நீரூற்றுகளால் நிறைந்திருந்தது, பல்வேறு வகை மரங்களையும் கொண்டிருந்தது. விலங்குகள் பலவும், மயில்களும் அங்கே உலவிக் கொண்டிருந்தன. அது புத்தியைக் கடந்த அற்புதமாக இருந்தது.(41-43)
பறவைகளின் மன்னனான கருடன், ஜனார்த்தனனையும், அவனது மனைவியையும் மேரு மலைக்கு எளிதாகச் சுமந்து சென்றான்.(44) பெரும் மலைச்சிகரத்தைப் போன்ற அந்தப் பறவைகளின் மன்னன், தன் வலுவான சிறகுகளை அடித்து, அனைத்துப் பக்கங்களிலும் பேரமளியை ஏற்படுத்தினான்.(45) அவனுடைய பாதங்களின் கனத்தால் மலைநுனிகள் நொறுங்கின, மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன, பெரும் மேகங்களும் கலைந்தன, அவற்றில் {மேகங்களில்} சில அற்புத வடிவையும் ஏற்றன.(46) இவ்வாறே மனோ வேகம் கொண்ட அந்தப் பறவையானவன், ஜனார்த்தனன் விரும்பியவாறு சூரிய, சந்திரப் பாதைகளைக் கடந்து சென்றான்.(47) ஓ! பேரரசே, ஓ! பகைவரைக் கொல்பவனே, தன் எதிரிகளைக் கொல்பவனான கேசவன் சுமேரு மலையை அடைந்து தேவர்களின் வசிப்பிடங்களைக் கண்டான்.(48) விஷ்வதேவர்கள், சத்யஸ்கள், மருத்துகள், அஸ்வினி இரட்டையர்கள் ஆகியோரின் வசிப்பிடங்களையும்,(49) ஒளிர்ந்து கொண்டிருக்கும் மங்கலமான பிற பகுதிகளையும் கடந்து தேவலோகத்தை அடைந்து, தேவர்களின் மன்னனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான்.(50) மாதவன், கருடனின் முதுகில் இருந்து இறங்கிச் சென்று தேவர்களின் மன்னனைச் சந்தித்தான். இந்திரனும் பெரும் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றான்.(51) மனிதர்களில் முதன்மையான ஜனார்த்தனன், தன் மனைவியுடன் சென்று, அதிதிக்குச் சொந்தமான காது குண்டலங்களை, தேவர்களின் மன்னனிடம் கொடுத்து வணங்கி, பதிலுக்கு அவனால் வரவேற்கப்பட்டான். சத்தியபாமாவை புலோமனின் மகள் {இந்திராணி சசி} முறையாக வரவேற்றாள்.(52,53)
அதன் பிறகு, வாசவனும் {இந்திரனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் மனைவியருடன் சேர்ந்து, தேவர்களின் அன்னையான அதிதியின் செழிப்பான வசிப்பிடத்திற்குச் சென்றனர்.(54) அங்கே சென்ற அந்தப் பெருந்தேவர்கள் இருவரும், தவத்தில் ஈடுபட்டுவரும் பெரும் அதிதியைச் சூழ்ந்து அமர்ந்து அசுரர்கள் வழிபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர்.(55) அதிதியின் மகனும், சசியின் தலைவனுமான புரந்தரன், ஜனார்த்தனனை முன் வைத்துக் கொண்டு, தன் அன்னையை அணுகி வணங்கி, அவளுடைய காது குண்டலங்களை அவளிடமே திருப்பிக் கொடுத்துக் கேசவனின் மகத்தான செயல்களை விவரித்தான்.(56) அவற்றைக் கேட்ட அதிதி, பெரும் நிறைவடைந்தவளாகத் தன் மகன்கள் இருவரையும் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் {பாராட்டினாள்}.(57) அவள் அவர்களிடம் மங்கல வாழ்த்துகளைச் சொல்லி வரவேற்றுக் கௌரவித்தாள். அதன் பிறகு புலோமனின் மகளும் {சசியும்}, சத்யபாமாவும் பெரும் மகிழ்ச்சியுடன் அதிதி தேவியின் பாதங்களை மதிப்புடன் வணங்கினர். சிறப்புமிக்கவளான தேவர்களின் அன்னை அவர்களை அன்புடன் வரவேற்ற பிறகு, கேசவனிடம்,(58,59) "என் மகனே, தேவர்களின் மன்னனான இவன் {இந்திரன்} உலகங்களெங்கும் வணங்கப்படுவதைப் போலவே நீயும் எந்த உயிரனத்தாலும் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறாய்.(60) உன் மனைவியர் அனைவரிலும் மிகச் சிறந்தவளும், உலகங்கள் அனைத்தாலும் கொண்டாடப்படுபவளும், காண்பதற்கு இனிய அழகியுமான இந்தச் சத்யபாமா, எப்போதும் இளமை நிறைந்தவளாகவும், நல்லூழ் கொண்டவளாகவும் இருப்பாள்.(61,62) அவளது மேனியில் எப்போதும் தெய்வீக நறுமணங்கமழும். ஓ! கிருஷ்ணா, நீ மனித வடிவில் இருக்கும் வரை உன்னுடைய மனைவியான இவள் {சத்யபாமா} மூப்பெய்தமாட்டாள்" என்றாள்.
தேவர்களின் அன்னையால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டவனும்,(63) பெருஞ்சக்திவாய்ந்தவனுமான கிருஷ்ணன், பல்வேறு ரத்தினங்களுடன் வாசவனால் கௌரவிக்கப்பட்டான். அதன் பிறகு அவன், தேவர்களின் மன்னனுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு சத்யபாமாவுடன் சேர்ந்து வினதையின் மகன் மீது ஏறி,(64) தேவர்களின் மொத்தக் கூட்டத்தால் வழிபடப்பட்டவனாக தெய்வீக நந்தவனங்களில் திரியத் தொடங்கினான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவன், வாசவனின் நந்தவனத்தைக் கடந்த போது, மிகச் சிறந்ததும், புனிதமானதும், தெய்வீகமானதும், எப்போதும் புனித நறுமணங்கமழ்வதும், நாளுக்கு நாள் மலர்வதும், அருகில் அணுகியவரின் முற்பிறவி நினைவை மீட்கவல்லதுமான பெரும் பாரிஜாத மரத்தைக் கண்டான்.(65,66) அந்த மரத்திற்குக் காவலாகத் தேவர்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், அளவில்லா ஆற்றலைக் கொண்ட கிருஷ்ணன், அதை வேரோடு பிடுங்கி கருடனின் தலையில் வைத்தான்.(67) அதன்பிறகு உபேந்திரனும் {கிருஷ்ணனும்}, சத்யபாமாவும், அப்சரஸ்களைக் கண்டவாறே துவாரகை நோக்கி வான்வழியில் சென்றனர். அந்தத் தெய்வீகக் காரிகையர், சத்தியபாமாவைப் பின்னால் இருந்தே கண்டனர்.(68,69)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தன் மறுப்பைத் தெரிவிக்காமல், "கிருஷ்ணன் எப்போதும் வெல்வான்[1]" என்றான்.(70)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில், "கிருஷ்ணன் ஒருபோதும் வெல்லமாட்டான்" என்றுதான் இருக்கிறது. சித்திரசாலை பதிப்பில், "பெருந்தோள்களைக் கொண்டவன் செய்ய வேண்டியதையே செய்திருக்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் பெருந்தோள்களைக் கொண்டவன் செய்த செயல் என் ஏற்பைக் கொண்டது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அவன் செய்யப்பட்ட கார்யம் (உபகாரங்கள்) உடையவன்" என்றிருக்கிறது. எனவே மேற்கண்டவாறு மாற்றப்பட்டிருக்கிறது.
பகைவரைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், இவ்வாறு தேவர்களால் துதிக்கப்பட்டு, ஏழு முனிவர்களால் பாடப்பட்டுத் தேவலோகத்தில் இருந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(71) அந்த நீண்ட தொலைவை குறுகிய ஒன்றாகக் கடந்து சென்று யாதவர்களின் நகரத்தை {துவாரகையைக்} கண்டான்.(72) வாசவனின் தம்பியான தலைவன் கிருஷ்ணன் அந்த அருஞ்செயலைச் சாதித்துவிட்டுக் கருடன் மீதேறி துவாரகைக்குத் திரும்பினான்" {என்றார் வைசம்பாயனர்}.(73)
விஷ்ணு பர்வம் பகுதி – 121 – 065ல் உள்ள சுலோகங்கள் : 73
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |