Monday 31 August 2020

கிருஷ்ணனை வழிபட்ட கைசிகன் | விஷ்ணு பர்வம் பகுதி – 107 – 051

(பீஷ்மகஸம்ஸதி க்ருஷ்ணேநாஶ்வாஸநம்)

Kaishika worships Krishna | Vishnu-Parva-Chapter-107-051 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிரதனும், கைசிகனும் தங்கள் அரசுகளைக் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தல்; இந்திரனின் விருப்பத்துடன் மன்னர்கள் அனைவரின் பேரரசனாகப் பட்டமேற்றுக் கொண்ட கிருஷ்ணன்; அனைவரையும் அமைதியடைச் செய்தது...

Govinda Pattabhishekam

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! தலைவரே, தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான கம்ஸனைக் கொன்ற பிறகும் கிருஷ்ணன் அரியணையில் அமரவில்லை.(1) அதன் பிறகு அவன் கன்னிகைக்காகக் காத்திருந்தான், அங்கும் அவன் வரவேற்கப்படவில்லை. இவ்வாறு அவமதிக்கப்பட்டாலும் அவன் ஏன் பொறுமையை வெளிப்படுத்தினான்?(2) வினதையின் மகன் {கருடன்} பெருஞ்சக்திவாய்ந்தவன். அவனும் ஏன் பொறுமையை வெளிப்படுத்தினான்? ஓ! பிராமணரே, இவை யாவையும் கேட்பதற்கு நான் பேராவல் கொண்டிருக்கிறேன். விரிவாக விளக்குவீராக" என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நித்தியனான வாசுதேவன், வினதையின் மகனுடன் {கருடனுடன்} விதர்ப்ப நகருக்கு வந்த போது, கைசிகன் தன் மனத்துக்குள் அவனைக் குறித்து இவ்வாறு நினைத்தான்,(4) "அற்புதமான கிருஷ்ணாபிஷேகத்தை நாம் கண்டால், நிச்சயம் நமது பாவங்கள் அழியும்.(5) பொருட்களின் உண்மையான சாரத்தைக் கண்ட கிருஷ்ணன் மூலம் நமது மனமும் தூய்மையடையும். தேவர்களின் மன்னனும், தாமரைக் கண் ஜனார்த்தனனுமான கிருஷ்ணனைத் தவிரத் தகுந்த வேறொருவன் மூவுலகங்களிலும் கிடையாது. ஓ! மன்னர்களே, இத்தகையவனை நாம் எவ்வாறு வரவேற்க வேண்டும்? எனினும் {தகுந்த விருந்தினன் வந்தும்} நாம் கடமை தவறக்கூடாது" {என்று தன் மனத்திற்குள் நினைத்தான்}.(6-8)

கிரதன், கைசிகன் என்ற அந்த இரு சகோதரர்களும் இவ்வாறு சிந்தித்து, தங்கள் நாட்டைக் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அளிப்பதற்காக அவனிடம் செல்ல விரும்பினர். வீரர்களும், உன்னதர்களும், விதர்ப்ப மன்னர்களுமான அவ்விருவரும் அந்தத் தேவனை {கிருஷ்ணனை} அணுகித் தலைவணங்கி, "நீ எங்கள் வீட்டுக்கு வந்திருப்பதால், எங்கள் பிறவியும், புகழும் இன்று அருளப்பட்டன; எங்கள் பித்ருக்களும் அருளப்பட்டனர்.(9,10) நாங்கள் உன்னுடையவர்கள், எங்கள் குடைகள், கொடிக்கம்பங்கள், அரியணை, படை, புகழ் பெற்ற எங்கள் நகரம் ஆகியனவும் உன்னுடையவையே.(11) நீண்ட கரங்களைக் கொண்டவனே, முன்பு இந்திரனால் உபேந்திரனாக நீ அபிஷேகம் செய்யப்பட்டாய். இப்போது நாங்கள் எங்கள் நாட்டில் உனக்கு அபிஷேகம் செய்கிறோம்.(12) எண்ணற்ற மன்னர்களாலும், பேரரசன் ஜராசந்தனாலும் நாங்கள் செய்வதைத் தடுக்க முடியாது.(13) மற்ற மன்னர்களுக்குத் தஞ்சமளிப்பவனும், பெரும்பிரகாசம் கொண்டவனுமான மன்னன் ஜராசந்தன் உன் பகைவன் ஆவான். அவன் எப்போதும் தன் உரையாடல்களில்,(14) "தேவகியின் மகன் அரியணையில் நிறுவப்படாதவன், அவனுக்கென நகரமும் இல்லை. மன்னர்களுடன் ஒரே சபையில் எவ்வாறு அவன் அமர்வான்?(15) பெரும்பலம்வாய்ந்தவனும், பிரகாசம் கொண்டவனுமான கிருஷ்ணனும் செருக்குடையவன். எனவே, கன்னிகையின் சுயம்வரத்திற்கு அவன் ஒருபோதும் வரமாட்டான்.(16) மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய இருக்கைகளில் அமரும்போது, பேரொளியுடன் கூடிய அவன் எவ்வாறு தாழ்ந்த இருக்கையில் அமர்வான்?" என்று சொல்கிறான்.(17)

மன்னன் பீஷ்மகன், மன்னர்களுக்கு மத்தியில் நிகழும் இந்த விவாதத்தைக் கேட்டும், இந்த வேற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியும் எங்களுடன் ஆலோசித்து நீ இளைப்பாறுவதற்காக இந்த மிகச்சிறந்த வீட்டை ஆயத்தம் செய்தான். ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, தேவர்களில் தலைமை தேவன் நீ, உலகங்கள் அனைத்தின் தலைவன் நீ. மனிதர்களின் உலகத்தில் பேரரசனாக நடந்து கொள்வாயாக. ஓ! தலைவா, மன்னர்களின் சபையில் இருக்கைகள் குறித்துச் சங்கடமேதும் வேண்டாம்.(18-20) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி இன்று அரச அபிஷேகம் செய்த பிறகு, அடுத்த {நாள்} காலையில், இந்திரனின் ஆணையின் பேரில் கூடும் மன்னர்களின் பேரரசனாக நிறுவப்பட்டு விதர்ப்ப நகரத்தின் அரியணையில் சுகமாக நீ அமர்ந்திருப்பாயாக" என்று {கிரதனும், கைசிகனும்} சொன்னார்கள்.(21,22)

அந்த வீரர்கள் இருவரும், தேவர்களில் முதன்மையான அவனிடம் இதைச் சொல்லிவிட்டு, கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிவிட்டு, மன்னர்களிடம் ஒரு தூதனை அனுப்பினர்.(23) தேவ தூதன் மூலம் அறிவிக்கும் வஜ்ரதாரியான வாசவனைப் போலக் கைசிகனும் மன்னர்களின் கூட்டத்திற்கு இந்தச் செய்தியை அறிவித்தான்.(24)

கைசிகன், "ஓ! மன்னர்களே, நித்தியனான ஹரி, வினதையின் மகனுடன் சேர்ந்து நம் விருந்தினனாக விதர்ப்ப நகருக்கு வந்திருக்கிறான் என்பதை நீவிர் அனைவரும் அறிவீர்.(25) என் தமையர் கிரதர், கொடை அளிக்க மிகத் தகுந்தவனைக் கண்டு, அறமீட்டும் நோக்கில் தன் நாட்டை வாசுதேவனுக்கு அளித்திருக்கிறார்.(26) என் தமையர், "இந்த இருக்கையில் அமர்வாயாக" என்று அவனிடம் சொன்னபோது, புலப்படாத வானுலாவியால் {அசரீரியால்} இவ்வாறு சொல்லப்பட்டது.(27)

அந்தத் தேவதூதன் {அசரீரியானவன்}, "ஓ! மன்னா {கிரதா}, நீ அமர்ந்த இருக்கையை வாசுதேவனுக்கு அளிக்காதே. பொன்னாலானதும், தேவதச்சனால் அமைக்கப்பட்டதும், அனைத்து வகை ரத்தினங்களும் பதிக்கப்பட்டதும், சிங்கச் சின்னம் பொறிக்கப்பட்டதுமான இந்த வெண்மையான இருக்கையை {அரியணையை} தேவர்களின் மன்னன் இவனுக்காக {கிருஷ்ணனுக்காக} அனுப்பியிருக்கிறான்.(28,29) நீயும் மற்ற மன்னர்களுடன் சேர்ந்து அவனை இந்த இருக்கையில் {அரியணையில்} அமர்த்தி அபிஷேகம் செய்வாயாக.(30) குண்டின நகரத்தில் {குண்டினபுரத்தில்} கன்னிகைக்காகக் கூடியிருக்கும் மன்னர்களில் எவன் வரவில்லையோ அவன் தேவர்களின் மன்னனால் கொல்லப்படுவான்.(31) தெய்வீகமான பொன்னாலும், ரத்தினங்களாலும் ஆன நிதிகளின் அம்ஸமாகப் பிறந்தவையும், வளங்களின் உயரான்மத் தலைவனுக்கு {குபேரனுக்குச்} சொந்தமான தெய்வீக ஆபரணங்களைக் கொண்டவையுமான எட்டுக் குடுவைகள் {அஷ்ட கலசங்கள்} இந்தப் பேரரசனை {கிருஷ்ணனை} நிறுவுவதற்காக மன்னர்களிடம் வந்து சேரும்.(32,33) ஓ! மன்னா {கிரதா}, தேவர்களின் மன்னனுடைய இந்த ஆணை உனக்குச் சொல்லப்பட்டது. ஒரு கடிதத்தின் மூலம் மன்னர்கள் அனைவரையும் அழைத்து, கேசவனின் அரச அபிஷேகத்தை நடத்துவாயாக" என்றான் {தேவ தூதன்}".(34)

கைசிகன் தொடர்ந்தான், "ஓ! மன்னர்களே, ஆகாயத்தில் இருந்து இதைச் சொல்லி, உதயச் சூரியனைப் போன்று பிரகாசிக்கும் இருக்கையைக் கிருஷ்ணனுக்கு அளித்துவிட்டு, அந்தத் தேவதூதன் தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.(35) தேவர்களின் மன்னனால் பயங்கரனாகவும், தடுக்கப்படமுடியாதவனாகவும் அறியப்பட்டவனும், ஆகாயத்தில் இருந்து அவன் குடுவைகளின் மூலம் எவனுக்கு அபிஷேகம் செய்வானோ அந்த ஜனார்த்தனனின் அற்புத வடிவை, மனிதர்களில் உலகில் காணக்கிடைக்காத அந்த அற்புத வடிவை மன்னர்கள் அனைவரும் காண வேண்டுமென அவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.(36,37) தேவர்களுக்குத் தேவனான விஷ்ணுவின் அற்புதமான புனித நீராட்டை நாம் கண்டால் நிச்சயம் நம் பாவங்கள் தூள் தூளாகும்.(38) ஓ! முன்னணி மன்னர்களே, நீங்கள் ஜனார்த்தனனுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டதால் அஞ்சாதீர்கள், வாருங்கள்.(39) கிருஷ்ணனின் மனம் தூய்மையானது என்பதை உண்மையாக நான் அறிவேன். மனிதர்களின் தலைவர்களிடம் அவன் ஒருபோதும் பகைமை கொள்ள மாட்டான்.(40) அதையுந்தவிர, அவன் {கிருஷ்ணன்} தன் இதயத்தில் மகத மன்னன் {ஜராசந்தன்} பேரில் பகையேதும் வளர்க்கவில்லை. எனவே இக்காரியத்தில் நீவிர் ஆலோசித்து உரியதைச் செய்வீராக" என்றான் {கைசிகன்}".(41)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, கைசிகளின் சொற்களைக் கேட்ட மன்னர்கள் சாபம் குறித்து அஞ்சிக்கொண்டிருந்த வேளையில், மேக முழக்கம் போன்ற ஆழமானதும், தன்னொலியால் வானத்தை நிறைத்ததுமான புலப்படாத குரலொன்று தேவர்களின் மன்னனுடைய ஆணையைச் சொன்னது.(42,43)

{தேவதூதன்} சித்திராங்கதன், "ஓ! மன்னர்களே, மூவுலகின் மன்னனான சக்ரன் {இந்திரன்}, உங்கள் நலத்திற்காகவும், குடிமக்களை ஆள்வதற்காகவும் இந்த ஆணையை வெளியிடுகிறான்.(44) ஓ! மன்னர்களே, நீவிர் கிருஷ்ணனுடன் பகையுண்டாக்கி வாழாதீர். நீங்கள் அனைவரும் அவனை நிறைவடையச் செய்தவர்களாக உங்களுக்குரிய நாடுகளில் வாழுங்கள்.(45) கிருஷ்ணன் தன் பக்தர்களின் இடர்களைக் களைபவன், தன் பகைவருக்கு அண்ட அழிவின் நெருப்பைப் போன்றவன். எனவே, அவனுடன் நட்பை உண்டாக்கிக் கொண்டு நீங்கள் அனைவரும் கவலையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பீராக.(46) ஒரு மன்னன், மனிதர்களின் தலைவனாவான்; தேவர்கள், மன்னர்களின் தலைவர்களாவர்; இந்திரன், தேவர்களின் தலைவனாவான், மேலும் ஜனார்த்தனன் இந்திரனின் தலைவனாவான்.(47) தேவர்களின் தேவனும், பெரும்பலம் வாய்ந்த தலைவனுமான விஷ்ணு, மனிதர்களின் உலகில் கிருஷ்ணன் என்ற பெயரில் மனிதனாகப் பிறந்திருக்கிறான்.(48) எந்த உலகத்திலும் தேவர்களாலோ, தானவர்களாலோ, மனிதர்களாலோ, ஏன் குமரனுடன்[1] கூடிய திரிசூலபாணியான மஹாதேவனாலோ கூடக் கொல்லப்பட முடியாதவன் அவன் மட்டுமே ஆவான்.(49) இவ்வாறிருக்கையில் பிறரைக் குறித்துச் சொல்வதற்கென்ன? தேவர்களுடன் கூடிய நான், தேவர்களின் மன்னனான உயரான்மக் கேசவனின் அபிஷேக விழாவை நடத்த விரும்புகிறேன்.(50) அதையுந்தவிர, ஒரு பேரரசனின் அபிஷேக விழாவில் தேவர்களின் கை ஏதுமில்லை; மன்னர்களே அதைச் செய்வதற்குரியவர்கள். உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படும் கேசவனின் அரச அபிஷேகத்தை என்னால் செய்ய முடியாது.(51) ஓ! மன்னர்களே, விதர்ப்ப நகரத்திற்குச் சென்று கிரதனுடனும், கைசிகனுடனும் ஆலோசித்துச் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட படியே இவ்விழாவை நடத்துவீராக.(52) ஓ! மன்னர்களே, அமைதியையும், நட்பையும் ஏற்படுத்திக் கொள்ளும நேரம் வந்துவிட்டதெனக் கருதியே வாசவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறான். நான் தேவ தூதனாவேன்.(53) மன்னர்களான கிரதனும், கைசிகனும் இன்று கிருஷ்ணனின் அரச அபிஷேக விழாவைச் செய்வதற்காக அவனை விதர்ப்ப நகரத்திற்கு அழைத்திருக்கிறார்கள். ஓ! மன்னர்களே, அவர்களுடன் சேர்ந்து கிருஷ்ணனின் அபிஷேக விழாவை நடத்துவீராக. பிறகு கொடைகளை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியான இதயங்களுடன் சுயம்வரத்திற்குத் திரும்புவீராக.(54,55) விளையாட்டுக் களம் வெறுமையாகாதிருக்க முன்னணி மன்னர்களான ஜராசந்தன், சுனீதன் {தமகோஷன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான ருக்ஷவான் {ருக்மி}, சௌபத்தின் மன்னனான சால்வன் ஆகியோர் இங்கேயே காத்திருக்கட்டும்" என்றான் {தேவ தூதன் சித்திராங்கதன்}".(56)

[1] "இவன் மஹாதேவனின் மகனும், தேவர்களின் படைத்தலைவனும், பிரம்மச்சரிய வாழ்வைப் பின்பற்றியவனுமான கார்த்திகேயனாவான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்று எப்போதும் அவனை நினைப்பவர்களுக்கு இந்த விளக்கம் தேவைப்படாது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னர்கள் அனைவரும், சித்திராங்கதனால் அறிவிக்கப்பட்ட தேவர்களின் மன்னனுடைய ஆணையைக் கேட்டு அங்கே செல்ல விரும்பினர். நுண்ணறிவுமிக்க மன்னன் ஜராசந்தனும் அதற்கு அனுமதி கொடுத்தான். அவர்கள் பீஷ்மகனின் தலைமையில் தங்கள் படைகள் சூழ புறப்பட்டுச் சென்றனர்.(57,58) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன் பீஷ்மகன், கைசிகனின் வீட்டில் வாழ்ந்து வந்த பெருங்கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம் கவலையால் எரியும் இதயத்துடனும், தன் தொண்டர்கள் சூழவும், பிற மன்னர்களுடன் சேர்ந்தும் சென்றான்.(59,60)

கிருஷ்ணனின் அபிஷேகத்திற்காக அங்கே கொண்டுவரப்பட்டதும், கொடிகள், நீள் முக்கோணக் கொடிகள், மாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக ரத்தினங்கள் பொருத்தப்பட்டதும், தெய்வீக மலர் மாலைகள், நீண்டு குறுகிய கொடிகள், ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக வண்டிகளால் {வாகனங்களால் / விமானங்களால்} சூழப்பட்டதும், பேரழகு வாய்ந்ததுமான தேவர்களுடைய சபா மண்டபத்தின் ஒளியை {பீஷ்மகன் முதலிய} அவர்கள் தொலைவிலேயே கண்டார்கள். அங்கே ஆகாயத்தில் நின்று கொண்டிருந்த அப்சரஸ்கள், வித்யாதரர்கள்,(61-63) கந்தர்வர்கள், முனிவர்கள், கின்னரர்கள் ஆகியோர் தேவர்களின் தலைவனான கிருஷ்ணனின் சாதனைகளைப் பாடிக் கொண்டிருந்தனர்.(64) பெரும் முனிவர்களும், சித்தர்களும் அவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். தேவ துந்துபிகள் வானத்தில் தாமாகவே முழங்கிக் கொண்டிருந்தன.(65) வானத்தில் நிலைத்திருந்த தேவர்கள், மந்தாரம், பாரிஜாதம், சந்தானகம், கல்பம், ஹரிசந்தன மரங்களின் வேர், பட்டை, மலர்கள், கனிகள் ஆகியவற்றாலான நறுமணப் பொடிகளை ஏராளமாகப் பொழிந்தனர்.(66) தன் வாகனத்தில் அமர்ந்திருந்த சச்சியின் தலைவன் {இந்திரன்} பிற தேவர்களுடன் வந்து வானத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(67) லோகபாலர்கள் எண்மரும் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் இருந்து கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் (கிருஷ்ணனின்) மகிமைகளைப் பாடி ஆடவும் துதிக்கவும் செய்தனர்.(68)

மன்னர்கள், அந்த ஆரவார ஒலியைக் கேட்டுத் தங்கள் கண்களை ஆச்சரியத்தில் விரித்துக் கொண்டே சபா மண்டபத்திற்குள் நுழைந்தனர்.(69) பெருங்கரம் கொண்டவனும், பலம்வாயந்தவனுமான மன்னன் கைசிகன் வெளியே வந்து அவர்களை முறையாக வரவேற்றான்.(70) தேவர்களில் முதன்மையானவனும், எழில்மிகுந்தவனுமான ஹரியிடம் மன்னர்களின் வருகை அறிவிக்கப்பட்ட போது, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்துக் கொண்டு அவன் வெளிப்பட்டான்.(71) அந்த அரச அபிஷேக விழாவின் போது, துணிகளால் கட்டப்பட்ட கழுத்துடையவையும், மாவிலைகளால் மறைக்கப்பட்டவையுமான தெய்வீகக் குடுவைகள் {அஷ்ட கலசங்கள்}, மேகங்களைப் போல் பொன், ரத்தினங்கள், மலர்கள், நறுமணப்பொருட்களுடன் கலந்த நீரைப் பொழியத் தொடங்கின.(72,73) ஜனார்த்தனனின் அபிஷேக விழாவை முறையான சடங்குகளின் படி மன்னர்களின் முன்னிலையில் செய்து முடித்ததும், தேவர்களின் மன்னன் அவனைத் தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்தான்.(74) பல்வேறு வண்ணங்களிலான தெய்வீக ஆடைகள், மாலைகள், களிம்புகளுடன் மன்னர்கள் அனைவரையும் முறையாக வரவேற்ற மாதவனும் நீராடுவதற்காகத் தேவர்களின் மங்கல சபா மண்டபத்தில் அமர்ந்தான். யது குல, விதர்ப்ப குல மன்னர்கள் அவனைத் துதிக்கத் தொடங்கினர்.(75,76)

பலம்வாய்ந்தவனும், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவனுமான வினதையின் மகன் {கருடன்}, கேசவனின் வலப்புற இருக்கையில் அமர்ந்திருந்தான்.(77) வாசுதேவனின் விருப்பப்படியே, உயரான்மாக்களான வீரமன்னர்கள் கிரதனும், கைசிகனும், தங்கள் தங்களுக்குரிய இருக்கைகளில் இடப்புறத்தில் அமர்ந்திருந்தனர்.(78) பெரும்பலம்வாய்ந்தவர்களும், சாத்யகியின் தலைமையிலானவர்களுமான விருஷ்ணி, அந்தகக் குலத் தேர்வீரர்கள் அவனுக்கு இடப்புறத்தில் அமர்ந்திருந்தனர்.(79) தேவர்கள் சச்சியின் தலைவனுக்கு அழகூட்டுவதைப் போலவே அந்த முன்னணி மன்னர்களும், சூரியனைப் போன்று பிரகாசிப்பதும், தெய்வீக விரிப்பால் மறைக்கப்பட்டதுமான தெய்வீக இருக்கையில் சுகமாக அமர்ந்திருந்த அழகிய கிருஷ்ணனுக்கு அழகூட்டினர்.(80) அதன்பிறகு அமைச்சர்களால் கேசவனிடம் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு மன்னர்களும் அவனால் முறையாக வரவேற்கப்பட்டு, தங்கள் தங்களுக்குரிய அரியணைகளில் சுகமாக அமர்தனர்.(81)

அப்போது பெரும் விவேகியும், பேசுபவர்களில் முதன்மையானவனும், சாத்திரங்கள் அனைத்தையும் நன்கறிந்தவனுமான மன்னன் கைசிகன், அவனுக்குரிய {கிருஷ்ணனுக்குரிய} மதிப்பை வெளிப்படுத்திக் கொண்டு,(82) "ஓ! தலைவா, உன்னை மனிதனாகக் கருதி இந்த மன்னர்கள் அறியாமையால் உனக்குக் குற்றம் இழைத்தனர். எனவே, ஓ! தேவா, இவர்களை நீ மன்னிப்பாயாக" என்று கேட்டுக் கொண்டான்.(83)

கிருஷ்ணன் {கைசிகனிடம்}, "ஓ! கைசிகரே, க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றும் மன்னர்களில் எவரும் என்னிடம் பகைமை கொண்டிருந்தால், அஃது என் இதயத்தில் ஒரு நாளைக்குக் கூட நிலைத்திருக்காது.(84) ஓ! மன்னர்களே, அறமற்றவற்றுக்கு {இழிந்தவற்றுக்கு} எதிராகத் தங்கள் முகத்தைத் திருப்பி, அறம்சார்ந்து {நற்குணத்துடன்} போரிடுவோரிடம் நான் எவ்வாறு கோபம் அடைவேன்?(85) நடந்து முடிந்தது போகட்டும். மாண்டவர் தேவலோகம் சென்றனர். பிறப்பும், இறப்பும் மனிதர்களுக்கு இயல்பே.(86) ஓ! மன்னர்களே, இறந்தோருக்காக வருந்தாதீர். நீங்கள் அனைவரும் என்னைப் பொறுத்துக் கொள்ளவும், {என் மீது நீங்கள் கொண்ட} உங்கள் பகைமையைக் கைவிடவும் நான் விரும்புகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}".(87)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும்பிரகாசம் கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, இந்தச் சொற்களைச் சொல்லி மன்னர்களுக்கு ஆறுதல் கூறி கைசிகனைப் பார்த்து {பேசாமல்} நின்றான்.(88) அதே வேளையில், பேசுபவர்களிலும், குடிமையியலை {நீதி சாத்திரங்களை} நன்கறிந்தவர்களிலும் முதன்மையான பீஷ்மகன், அனைவருக்கும் உரிய மதிப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசத் தொடங்கினான்".(89)

விஷ்ணு பர்வம் பகுதி – 107 – 051ல் உள்ள சுலோகங்கள் : 89
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்