Monday 17 August 2020

சிருகாலனுடன் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 100 – 044

(சிருகாலாக்யராஜவதம்)

Battle with Shrigala | Vishnu-Parva-Chapter-100-044 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன், பலராமன், தமகோஷன் ஆகியோர் படையுடன் கரவீரபுரம் சென்றது; போரில் கொல்லப்பட்ட சிருகாலன்; சிருகாலனின் மகன் சக்ரதேவன் கரவீரபுரத்தின் அரியணை ஏறியது...

Krishna_kills_Shrigala Mughal painting, c. 1585 from the Court of Akbar

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "போரில் பயங்கரனும், இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனுமான சிருகாலன், அவர்களின் {கிருஷ்ணன், பலராமன், தமகோஷன் ஆகியோரின்} வருகையை அறிந்தும், நகரத்தை அவர்கள் தாக்கப் போகிறார்கள் என்று நினைத்தும் (நகரத்தை விட்டு) வெளியே வந்தான்.(1) ஆயுதங்களால் நிறைந்திருப்பதும், தேர்ச்சக்கரத்தின், அச்சின் ஒலியைப் புன்னகையாகக் கொண்டதும், பலவண்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கடலைப் போன்று ஒலியெழுப்புவதும், வேகமாகச் செல்லும் குதிரைகளால் இழுக்கப்படுவதும், வலுவான பொன் அச்சுகளால் பளபளப்பாக இருப்பதும், கருடனைப் போலச் செல்வதும், சூரியக் கதிர்களுக்கு ஒப்பான கடிவாளங்களால் செலுத்தப்படுவதும், இந்திரனின் தேருக்கு ஒப்பானதும் சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதுமான தேரொன்றில் ஏறி அந்த நகரத்தைவிட்டு அவன் வெளியே வந்தான்.(2-6)

சிருகாலன், பகைவரின் தேர்களைத் தாக்கவல்ல முதன்மையான தேரில் ஏறித் எரிதழலை அணுகும் பூச்சியைப் போலக் கிருஷ்ணனை நோக்கிச் சென்றான்.(7) கூராக்கப்பட்ட ஆயுதங்களுடனும், கவசம், பொன்மாலைகள், வெள்ளுடை, உஷ்ணீஷம் {தலைப்பாகை} ஆகியவற்றுடனும், கையில் வில்லுடனும், சீற்றமிகு கண்களுடனும் கூடிய மன்னன் சிருகாலன், மின்னலின் குணங்களுடன் கூடிய தன் வில்லை மீண்டும் மீண்டும் சுழற்றினான். கோபத்தில் காற்றைக் கக்கிக் கொண்டும், எரிதழல்களைப் போன்ற பிரகாசத்துடனும், ஆபரணங்களின் காந்தியால் எரிந்து கொண்டும் இருந்த அவன், மலைகளில் முதன்மையான சுமேருவைப் போன்ற தேரில் காணப்பட்டான்.(8-10)

அவனது முழக்கங்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும் அச்சத்தால் பீடிக்கப்பட்ட பூமாதேவி அவனுடைய கனத்தில் மூழ்கினாள்.(11) குடிமுதல்வனைப் போலவும், மலையின் அவதாரம் போலவும் அணுகி வரும் அழகிய சிருகாலனைக் கண்டு வாசுதேவன் {கிருஷ்ணன்} துன்புறாமலிருந்தான்.(12) போரிடும் விருப்பம் கொண்ட சிருகாலன் படிப்படியாகப் பெருஞ்சினமடைந்து, வேகமாகச் செல்லும் தேரின் துணையுடன் வாசுதேவனை அணுகினான்.(13) சுகமாக அமர்ந்திருக்கும் வாசுதேவனை {கிருஷ்ணனைக்} கண்ட சிருகாலன், மலையை நோக்கிப் படையெடுக்கும் மேகங்களைப் போல அவனை நோக்கி விரைந்தான். சற்றே சிரித்த வாசுதேவன், அவனுக்குப் போரில் சரியான பதிலைத் தர வேண்டுமெனத் தனக்குள் சொல்லிக் கொண்டான். அப்போது, மதங்கொண்ட யானைகள் இரண்டுக்கிடையில் காட்டில் நடப்பதைப் போல அவர்களுக்கிடையில் அங்கே ஒரு பயங்கரப் போர் மூண்டது.(14,15)

சக்தி வாய்ந்தவனும், போரில் விருப்பம் கொண்டவனும், தன் நிலையில் செருக்கடைந்தவனுமான சிருகாலன், போரில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணனிடம் அறியாமையில், "ஓ! கிருஷ்ணா, கோமந்த மலையில் தலைவனில்லாத மூட மன்னர்களின் பலவீனமான படைக்கு நீ செய்ததை {அழிவை ஏற்படுத்தியதை} நான் கேள்விப்பட்டேன். போரில் அனுபவம் இல்லாதவர்களும், பரிதாபத்திற்கு உரியவர்களும், பயனற்றவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள் அடைந்த தோல்வியையும் நான் கேள்விப்பட்டேன்.(17,18) எனினும், உலகின் பேரரசன் என்ற கண்ணியத்தில் நிலைத்திருப்பவனான எனக்கு முன்பு நீ காத்திருப்பாயாக. போர்க்கலையில் நீ திறன் பெற்றவனல்ல. உன்னை நான் தாக்கினால் நிச்சயம் நீ தப்பி ஓடுவாய்.(19) நீ தனியனாக இருக்கிறாய்; நானோ படையுடன் இருக்கிறேன்; எனவே, இவ்வகையில் உன்னுடன் நான் போரிடக்கூடாது. வா, நான் உன்னோடு தனியாகப் போரிடுகிறேன்; வேறு பலவீனர்களால் பயனேது? நாமிருவரும் போரில் ஈடுபடுவோம், நியாயமாக நடக்கும் அப்போரில் நம்மில் ஒருவன் மரணத்தைச் சந்திக்கட்டும்.(20,21) ஓ! கிருஷ்ணா, நீ கொல்லப்பட்டால் இவ்வுலகில் நானே வாசுதேவன். நான் கொல்லப்பட்டால் {அவ்வாறு, வாசுதேவனாக} நீ மட்டுமே இருப்பாய்" என்றான் {சிருகாலன்}.(22)

சிருகாலனின் அந்தப் பேச்சைக் கேட்டு, "நீ விரும்பியவாறு என்னைத் தாக்குவாயாக" என்று பொறுமையுடன் சொல்லிவிட்டுத் தன் சக்கரத்தை ஏந்தினான்.(23) அப்போது போர்க்களத்தில் கோபத்தால் மதியிழந்தவனும், அற்ப ஆற்றலைக் கொண்டவனுமான சிருகாலன், கணைவலையைக் கிருஷ்ணன் மீது ஏவினான்.(24) பலம்வாய்ந்தவனான சிருகாலன், கதாயுதத்தையும், பல்வேறு ஆயுதங்களையும் கிருஷ்ணன் மீது பொழிந்தான். கிருஷ்ணன், எரிதழல்களால் மறைக்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் இரக்கமில்லாமல் தாக்கப்பட்டாலும் அங்கே மலைபோல அசைவற்று நின்றிருந்தான்.(25,26) இவ்வாறு அவன் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட கோபத்தால் நிறைந்தான். அவன் சக்கரத்தை ஏந்தி சிருகாலனின் மார்பின் மீது ஏவினான்.(27) அந்தச் சுதர்சன சக்கரமானது, பெரும்பலம்வாய்ந்தவனும், போரில் அச்சமற்றவனும், செருக்கில் வளர்பவனும், எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுவந்தவனுமான சிருகாலனைக் கொன்றுவிட்டு மீண்டும் தன் தலைவனின் கைக்குத் திரும்பியது. சக்கரத்தால் இதயம் பிளக்கப்பட்ட சிருகாலன், நொறுங்கி விழும் மலையைப் போல உயிரையும் இன்பத்தையும் இழந்து உதிரம்பெருகி கீழே விழுந்தான்.(28,29) இடியால் தாக்கி வீழ்த்தப்பட்ட மலையைப் போல மன்னன் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட படைவீரர்கள் இதயம் கலங்கினார்கள், மன்னன் இறந்ததால் தப்பி ஓடவும் செய்தார்கள்.(30) சிலர், தங்கள் தலைவன் இறந்ததன் விளைவால் உண்டான துயராலும், கவலையாலும் பெரிதும் பீடிக்கப்பட்டவர்களாக நகருக்குள் {கரவீரபுரத்திற்குள்} நுழைந்து அங்கே அழத் தொடங்கினர்.(31) சிலர், வீழ்ந்துவிட்ட தங்கள் மன்னனைக் கைவிட இயலாமல், மங்கலச் சடங்குகளைச் செய்து, துயர் நிறைந்த இதயங்களுடன் அங்கே அழுது புலம்பத் தொடங்கினர்.(32)

தாமரைக் கண்ணனும், பகைவரைக் கொல்பவனும், வெள்ளிக் கைப்பிடி கொண்ட சக்கரத்தால் அலங்கரிக்கப்பட்ட விரல்களை உடையவனுமான கிருஷ்ணன், அங்கே கூடியிருந்த மக்களுக்குப் பாதுகாப்பை அறிவித்து, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற குரலில், "அஞ்சாதீர். அஞ்சாதீர்" என்றான்.(33,34) சிருகாலனின் குடிமக்களும், அமைச்சர்களும் இவ்வாறு கிருஷ்ணனால் தேற்றப்பட்டும், சிகரங்கள் வீழ்ந்த மலையைப் போல மார்பில் காயத்துடன் பூமியில் விழுந்து கிடக்கும் தங்கள் மன்னனைக் கண்டும் பரிதாபமாகக் கண்ணீர் சிந்தத் தொடங்கி, அவனுடைய மகனைப் போலக் கவலையில் நிறைந்தனர்.(35-38) சிருகாலனின் ராணிகளும், அவர்களது மகன்களும் கம்மும் ஒலியுடன் கூடிய குடிமக்களின் அழுகையைக் கேட்டு அழுது கொண்டே நகரிலிருந்து வெளியே வந்தனர்.(39) போர்க்களத்திற்கு வந்த அவர்கள், அரசத்தகுதி கொண்ட தங்கள் கணவன் வீழ்ந்து கிடக்கும் அவல நிலையைக் கண்டு தங்கள் கைகளால் தங்கள் மார்புகளை அடித்துக் கொண்டு பரிதாபமாக அழத் தொடங்கினர்.(40) அந்தப் பெண்கள் தங்கள் மார்புகளை அடித்தும், சுருள்மயிரை இரக்கமின்றிப் பிய்த்துக் கொண்டும் கம்மிய குரலில் அழத் தொடங்கினர். பயங்கரமான துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களும், கண்கள் நிறைந்த கண்ணீருடன் கூடியவர்களுமான அவர்கள், முரட்டுத்தனமாகக் கையாளப்பட்ட கொடிகள் வேருடன் சாய்வதைப் போலத் தங்கள் கணவனின் உடலில் விழுந்தனர்.(41,42) கண்ணீர் நிறைந்த ராணிகளின் கண்கள், நீரைப் பிரிந்த தாமரைகளைப் போல ஒளிர்ந்தன.(43) இவ்வாறு தங்கள் கணவன் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட அவர்கள், மார்பில் அடித்துக் கொண்டும், அவன் செய்த செயல்களைப் பேசிக் கொண்டும் பரிதாபமாக அழத் தொடங்கினர்.(44)

அதன் பிறகு அந்தப் பெண்கள், அழுதுகொண்டிருந்த சிறுவன் சக்ரதேவனைத் தங்கள் கணவனின் அருகே அழைத்து இரு மடங்காக உரக்க அழுது,(45) "ஓ! வீரரே, உம்முடைய மகனான இந்தச் சிறுவன் ஆற்றல்மிகுந்தவனாக இருப்பினும், நிர்வாகவியலில் தேர்ச்சி பெறாதவனாக இருக்கிறான். நீரில்லாத போது இவன் தன் தந்தையின் மதிப்பை எவ்வாறு அடைவான்?(46) ஓ! தலைவா, உமது துணையை அனுபவிப்பதில் நாங்கள் நிறைவடையவில்லை. ஒரே நேரத்தில் எங்கள் அனைவரையும் விதவைகளாக விட்டுச் சென்றால் நாங்கள் என்ன செய்வோம்?" என்று புலம்பினர்.(47)

சிருகாலனின் அழகிய ராணியான பத்மாவதி, அழுது கொண்டே தன்னுடன் மகனை அழைத்துக் கொண்டு வாசுதேவனை {கிருஷ்ணனை} அணுகி, "ஓ! வீரா, உன் போர்த்தொழிலால் கொல்லப்பட்ட மன்னனின் {சிருகாலனின்} மகன் இவன். இவன் உன்னைத் தஞ்சமடைகிறான்.(49) இவனுடைய தந்தை உனக்குப் பணிந்து உன் ஆணையை மேற்கொண்டிருந்தால் இவ்வாறு ஒரே அடியில் வீழ்ந்திருக்க மாட்டார்.(50) தீயவரான இந்த மன்னர், உன்னுடன் நட்பு பாராட்டியிருந்தால், உயிரிழந்தவராகப் பூமியின் பரப்பில் தஞ்சமடைந்திருக்க மாட்டார்.(51) ஓ! வீரா, ஓ! பாவமற்ற கிருஷ்ணா, இறந்து போன உன் நண்பரின் குலத்தைத் தழைக்கச் செய்பவனான அவரது மகனை உன் மகனைப் போலே பாதுகாப்பாயாக" என்றாள் {சிருகாலனின் மனைவி பத்மாவதி}.(52)

பேசுபவர்களில் முதன்மையான யதுகுலக் கிருஷ்ணன், சிருகாலனுடைய ராணியின் {பத்மாவதியின்} சொல்களைக் கேட்டு மென்மையாக, "ஓ! ராணி, இந்தத் தீய ஆன்மாவோடு எமது கோபமும் போனது. நிலை மீண்டவர்களாக யாம் இவனது நண்பர்களானோம்.(54) ஓ! கற்புமிக்கப் பெண்ணே {பதிவ்ரதையே}, அருள்நிறைந்த உன் சொற்களால் என் கோபம் தணிந்தது; சிருகாலனின் மகனான இவன் {சக்ரதேவன்} நிச்சயம் என் மகனைப் போன்றவனே.(55) இவர்களுக்குப் பாதுகாப்பை அறிவித்து, இவனை மன்னனாக நீராட்டப் போகிறேன் {அபிஷேகம் செய்யப் போகிறேன்}. புரோகிதர், அமைச்சர்கள், குடிமக்கள் ஆகியோரை அழைத்து இவனைப் பரம்பரை அரியணையில் அமர்த்துவாயாக" என்றான்.(56)

அதன்பிறகு, புரோகிதர்கள், அமைச்சர்கள், குடிமக்கள் அனைவரும் பட்டாபிஷேகம் நடத்துவதற்காக ராமன், கேசவன் ஆகியோரின் முன்பு தோன்றினர். பலம்வாய்ந்தவனான ஜனார்த்தனன், அந்த இளவரசனை {சக்ரதேவனை} அரியணையில் அமரச் செய்து தெய்வீக நீரை அவன் மீது தெளித்தான். கிருஷ்ணன், சிருகாலனின் மகனை கரவீர நகரத்தில் நிறுவிய அன்றே அங்கிருந்து புறப்பட விரும்பினான்.(57-59) தேவர்களின் நகருக்குள் புகும் வாசவனை {இந்திரனைப்} போலவே போரில் அடையப்பட்ட குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றான்.(60)

அற ஆன்மா கொண்டவனும், பகைவரை ஒடுக்குபவனுமான சக்ர தேவன், தன் அன்னையுடனும், சிறுவர்கள், முதியவர்கள், இளம்பெண்களின் தலைமையிலான குடிமக்களுடனும் சேர்ந்து, போரில் பயங்கரனான சிருகாலனை வண்டியில் வைத்து, மேற்குத் திசையில் தொலைவாகக் கொண்டு சென்று, தன் தந்தைக்கான ஈமச் சடங்குகளை விதிப்படி செய்தான்.(61-63) இறந்து போன மன்னனின் பெயரைச் சொல்லி, அவனது சார்பாக நீர் காணிக்கை செலுத்தி, ஆயிரக்கணக்க ஈமக் கொடைகளையும் அளித்தான்.(64) மன்னன் சக்ரதேவன், இவ்வாறு தன் தந்தையுடைய மரணத்தின் விளைவாக உண்டான மனக்கவலையுடன் நீர்ச் சடங்கைச் செய்து தன் நகருக்குள் {கரவீரபுரத்திற்குள்} நுழைந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(65)

விஷ்ணு பர்வம் பகுதி – 100 – 044ல் உள்ள சுலோகங்கள் : 65
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்